சேலைகளின் மாநாடு (1)

சிஎஸ்டி (சத்திரபதி சிவாஜி டெர்மினஸ்) ரயில் நிலையத்தில் இனிப்பில் மொய்க்கும் ஈ போல மக்கள் நெருங்கிக் கிடந்தனர். நடப்பவர்கள் ஒருவர்மேல் ஒருவர் மோதாமல் போக கடும் முயற்சியில் தோற்றுப்போய்க் கொண்டிருந்தனர். நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் பிடிக்க கூடியிருந்த தமிழ்க் கூட்டம் கூச்சலிட்டபடி அங்குமிங்கும் பரபரப்பாய்த் திரிந்தது. ரயிலில் பயணம் செய்ய இருப்பவர்களுக்கு மூன்று மடங்கு வழியனுப்ப வந்தவர்களின் கூட்டம். தாங்கள் பொறுப்பானவர்கள் என்றும் அனுபவஸ்தர்கள் என்றும் காட்டிக்கொள்ள தொண்டைகிழியக் கத்திக் கொண்டிருந்தனர் சிலர். சாமான்களை வைப்பதிலிருந்து பயணத்தின்போது குடிக்க தண்ணீர்பிடிப்பது வரை எல்லாம் இந்த உரக்கக் கத்தியவர்களின் சத்தத்தாலேயே நடந்துமுடிந்தது.

மேரியையும், பார்வதியையும் வழியனுப்ப ஒருவரும் வரவில்லை. அது நல்லது என்றே நினைத்தார்கள். மேரியும், பார்வதியும் ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்றாய்ப் படிக்கத் துவங்கினார்கள். வாரயிறுதிகளிலும் பண்டிகை நாட்களிலும் பரிட்சைக் காலங்களிலும் ஒன்றாகவே இருந்தனர். இருவர் குடும்பமும் நெருங்கிய உறவினர்களைப் போல் பழகிவந்தது. பட்டப்படிப்பை ஒரே கல்லூரியில் முடித்த இருவரும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றி வருகின்றனர்.

மேரிக்கு ஒரு அக்காவும் ஒரு தங்கையும் உண்டு. அக்காவின் திருமணத்திற்காகத்தான் தனது தோழியுடன் தங்கள் சொந்தஊர் போய்க்கொண்டிருக்கிறாள். பார்வதியுடன் செல்வது மேரிக்கு அத்தனை சந்தோஷம். குடும்பத்தில் மற்ற அனைவரும் ஏற்கனவே ஊருக்குப் போய்விட்டிருந்தனர்.

வண்டியில் ஏறி தங்கள் இருக்கை எண்களைக் கண்டுபிடித்து சாமான்களைக் கீழே வைத்தார்கள். மூன்றுபேருமே பெரிதாய் ஒரு மூச்சு விட்டபடி ‘உஷ்ஷ்” என்று அமர்ந்தார்கள். மேரிக்கு தோள்ப்பட்டை இறங்கிவிடும் போல் இருந்தது. பெட்டியில் மக்கள் ஏறியும் இறங்கியும் கொண்டிருந்தார்கள்.

”எப்ப ஊர் போய்ச் சேருவோம்?” பார்வதி துப்பட்டாவை தலைக்கு மேலாக தூக்கி மடியில் போட்டபடி கேட்டாள். ” நாளைக்கு நைட்டு ஊருக்குப் போயிடலாம்” என்றாள் மேரி. குளோரி பிளாட்பாரத்தின் பரபரப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். ”

குளோரி ஜுஸ் வேணுமா? பாரு, உனக்கு? ” என்று மேரி தோள்ப்பையில் டிக்கெட்டை பத்திரப்படுத்தியபடி கேட்டாள். இருவரும் மறுத்துவிடவே மேரி இருக்கைக்குக்கீழே குனிந்து பெட்டிகளை சரிபார்த்தாள்.

ரயில் கிளம்பியது. வேகம் பிடித்தது. ‘தாதர்’ ரயில் நிலையம் நின்று கிளம்பியது. ‘தானே’ ரயில் நிலையம் தாண்டியதும் மும்பை நகர எல்லையைக் கடந்ததை போல் உணர்ந்தனர் அந்த மூவரும்.

”கல்யாணத்தில் என்ன டிரஸ் போட்டுக்குவ?” கேட்டாள் பாரு ஏற்கனவே பலமுறை பேசி அலுத்த விஷயம். அதனால் வெளியில் பார்த்தபடியே ”சாரி” என்று பதிலளித்தாள் மேரி. ஆழ்ந்தசிந்தனையில் கழுத்துச் சங்ககிலியில் சிலுவையை உதட்டில் வைத்துக் கொண்டிருந்தாள். எப்பொழுதுமே மேரிக்கு சேலை கட்டிக்கொள்ளப் பிடித்தது இல்லை ஆனால் சமீபமாக அவளுக்கு அது மட்டுமே அதிகம் பிடிப்பதாய் உணர்ந்தாள். ”நானும் சேலை கொண்டு வந்திருக்கிறேன். பட்டுதான் ஆனால் ஜாக்கெட்தான் பிரச்சனை சரியான மேட்ச் இல்லை. இதற்கு மேட்சான ஜாக்கெட் சின்னதாகிப் போச்சு”.

மேரி பார்வையைத் திருப்பி உதட்டில் குறுநகையோடு ”ஜாக்கெட் சின்னதாகல நீதான் குண்டூசாகிட்ட”என்றாள். குளோரியும் இவர்கள் பக்கம் திரும்பி சிரித்தாள்.

”உனக்கு சேலை கட்டத் தெரியுமா?” பார்வதி கேட்டாள். மேரி சீட்டில் சம்மணமிட்டு அமர்ந்தபடி ”கட்டுவேன் ஆனால் கொசுவம் மடிக்கத் தெரியாது. புள்ளத்தாச்சி மாதிரி இடுப்புப் பக்கம் உப்பிடும்” என்றாள். அவளது முகம் முழுவதும் பூரிப்பு பரவிக்கொண்டிருந்தது. பார்வதியும் தனது வலதுகாலை இருக்கையில் ஏற்றி மார்போடு வைத்தபடி பேசத் தயாரானாள்.

”எனக்கும் அப்படித்தான். நம்ம அம்மாவெல்லாம் தினம் சேலை கட்டுறாங்க போர் அடிக்காதா?” பார்வதி.

மேரி ”தினம் கட்டுறத விடு. அதக் கட்டிக்கிட்டே தூங்கிப் போறாங்க. நெனைச்சாலே கஷ்டமா இருக்குப்பா.”.

‘அய்யோ பங்சன், பார்டின்னு கொஞ்சநேரம் கட்டினாலே எப்படா அவுத்து கடாசலாமுன்னு இருக்கு” என்று முகம்சுளித்தாள்.

”லேகின் குச்பி போல்! சாரி கட்டினா அழகா இருக்கு” என்றபடி பார்வதி அவசரமாய் தான் கடைசியாய் சேலை கட்டிக்கொண்டு அழகாய்த் திரிந்ததை நினைத்துப் பார்த்தாள்.

”அழகாத்தான் இருக்கு ஆனா ஃபிரியா இல்லை. அதைக் கட்டிக்கிட்டா, பின்னாடி பிதுக்கிக் கிட்டு தெரியும். வயிறு கொள்ளிக் கண்ணன்களுக்கு எக்ஸிபிட் ஆயிடும். ஓயாத வேலையா மாராப்ப மேல இழுத்துக்கிட்டே இருக்கணும். அத நெனைச்சாதான் கடுப்பா இருக்கு” என்றாள் மேரி.

குளோரிக்கு இவர்கள் பேச்சில் எந்த ஆர்வமும் இல்லை. குளோரிக்கு சேலைகள் என்றால் நிறையப் பிரியம் கூட. மிகச் சிறுவயதில் சடைபின்னும் ரிபனை ஜட்டியில் சொறுகிக் கொண்டு சற்றே நீளமான குச்சியையோ பலகையையோ குழந்தையாக இடுப்பில் வைத்துக்கொண்டு பச்சை இலைகளை சோடாமூடியால் வட்டமாய் வெட்டி அதை ரொட்டியாக்கி எதிர்வீட்டு ராபர்ட்டுடன் விளையாடியது கனவாய் நினைவில் இருந்தது. இன்னமும் அக்கம் பக்கங்களில் பிள்ளைகள் விளையாடுவதைக் கண்டிருக்கிறாள். ஆறாம் வகுப்பில் படிக்கையில் பெரியமனுஷியாகி விட்டாலும் அம்மா குளோரியை அரைச்சேலை, அதாவது தாவணி பாவாடை, கட்டிக் கொள்ள அனுமதிக்கவில்லை.

அக்காவின் திருமணம் முடிந்ததும் இவளுக்கு முறையாக பூப்புனித நீராட்டு விழா வைக்கப்போவதாகத் தெரிவித்தாள்.
அக்கா மேரியின் தாவணி பாவாடைகளை குளோரி கட்டிக் கொண்டதுண்டு. ”எவனோட ஓடிப்போக இப்பவே தயாராகிக்கிட்டு இருக்க?" என்ற அம்மாவின் குத்தல்வார்த்தைகள் இவளை நிர்வாணமாக்கி விட்டிருக்கிறது பலமுறை. சின்னப் பெண்ணாக இருந்தாலும் நல்ல விபரம் குளோரிக்கு. வீட்டில் நைட்டியும் வெளியில்போக சுடிதார்செட்டும் என மாறி மாறி தோலுரித்துக் கொள்வாள்.

எதிர்வீட்டு மகாலட்சுமியக்கா கட்டம்போட்ட காட்டன்புடவை கட்டிக்கொள்ளும் போதெல்லாம் ஒரு ஆண்பிள்ளையைப் போல் அப்படி ரசித்திருக்கிறாள். மகா அக்காவுடன் வெளியில் சென்றால் ஆண்கள், பெண்கள் என அத்தனை பேரின் மூக்கு முடிகளும் கருகி உதிர்வதை அவர்கள் விடும் பெரு மூச்சின் போது கண்டிருக்கிறாள்.

பசுமைகளை மிரட்டியபடி உரக்க கத்திக்கொண்டு குன்றுகளையும் மலைகளையும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது ரயில். உள்ளிருக்கும் இவர்கள் பேச்சை நிறுத்திவிட்டு வெளியில் பார்க்கலானார்கள். ரயிலை நிறுத்திவிட்டு பூமி ஓடிக்கொண்டிருப்பது போல் இருந்தது.

ஊர் வந்துசேர்ந்து விட்டார்கள். மேரி ஊர் எல்லையை பச்சைவண்ணத்தில் இருக்கும் ஒரு பங்களாவில் ”சாந்தி இல்லம்” என்ற தமிழ் எழுத்துகளைக் கண்டவுடன் முடிவுசெய்து விடுவாள். கடந்தமுறைகள் வரும்போது ஏற்பட்ட பழக்கம் இந்தமுறையும் தமிழ் எழுத்துகளைக் கண்டவுடன் உற்சாகமானாள். பார்வதிக்கும் குளோரிக்கும் அந்த உற்சாகம் பரவியது. மூன்று பெண்களின் மேனியும் புத்தம்புது பூவாய்ப் புன்னகைத்தது.

வேன் ஒன்று பிடித்து தங்கள்ஊர் வந்துசேர்ந்தனர். இரவு ஒன்பது மணியாகி இருந்தது. ஊர்மக்களில் பெரும்பாலானோர் தூங்கிப்போனதற்கு அடையாளமாய் அங்குள்ள அமைதி இருந்தது. ஒருசில வீடுகளில் தமிழ் சானலில் விளம்பரங்களின் சத்தம். மும்பையில் கேபிள் தொலைக்காட்சியில் தமிழ் விளம்பரங்களை கண்டுகேட்டு ரசித்திருந்தாலும் இங்கு தமிழ்ச்சத்தம் அதிகம் ரசிக்கும்படியாய் இருந்தது.

(தொடரும்)

About The Author