சேலைகளின் மாநாடு (2)

வீடு வந்துசேர்ந்ததும் மேரியின் அம்மா கல்யாண ஏற்பாடுகள் காரணமாக உண்டான அசதியில் திண்ணையில் படுத்துக்கிடந்தாள். சலசலப்பு கேட்டதும் எழுந்துகொண்டாள் ” மேரி, வந்திட்டிங்களா? பார்வதி, அப்பா எப்படி இருக்காங்க? என்னடி குளோரி? ” என்று மூவரையும் மாறிமாறிப் பார்த்தாள் சாமான்களை வாங்கிவைத்தாள்.

‘"அம்மா, ரெஜினா அக்காவை எங்கே?” என்று குளோரி வீட்டிற்குள் எட்டிப்பார்த்தாள். பல்பு வெளிச்சத்தில் வீடு மஞ்சளாக தெரிந்தது. இருளின் அடர்த்தியை அந்த பல்பு வெளிச்சத்தால் ஒன்றும் செய்யமுடியவில்லை. உள்ளேயிருந்து கலைந்த தலையுடன் ரெஜினா வந்தாள் ”அக்கா எப்படியிருக்க?” என்று குளோரி குதித்தாள். ”நல்லா இருக்கேன். மேரி நீ எப்படி இருக்க? ஹை பார்வதி வா வா, எங்க ஊரு எப்படி இருக்கு?” என்றாள் காய்ந்த உதடுகளில் புன்னகை தவழ.
 
”இப்பதான் ஊருக்குள்ள வந்திருக்கேன் பார்த்திட்டு சொல்றேன். நான் சொன்னமாதிரி உங்க கல்யாணத்திற்கு வந்திட்டேன் பார்த்தீங்களா?” என்று சிரித்தாள்.

”சரி சரி, சாப்பிட்டுப் படுங்க. காலையில பேசுங்க” என்று அம்மா கொட்டாவிவிட்டு திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்தாள்.
”சாப்பிட என்னக்கா இருக்கு?” குளோரி கேட்டாள். ”சாம்பார் வச்சிருக்கேன். சோறு இருக்கு அப்பளம் பொரிச்சு தர்றேன்” என்று ரெஜினா கிளம்பினாள்.

மூன்று பேரும் சாப்பிட உட்கார்ந்தார்கள் ரெஜினா பரிமாறினாள். பார்வதியின் வற்புறுத்தலில் ரெஜினாவும் சாப்பிட உட்கார்ந்தாள். படுக்கையில் அக்காவின் அருகில் படுப்பதற்கு மூவரும் போட்டிபோட்டுக் கொண்டு இடம்பிடித்தார்கள். அக்கா மும்பையில் அனைவர்பற்றியும் விசாரித்துக் கொண்டிருந்தாள் ”அக்கா, மாப்பிள்ளை எப்படி உனக்குப் பிடிச்சிருக்கா? பார்வதி கேட்டாள். ‘‘அதெல்லாம் அப்புறம் பேசலாம் இப்ப தூங்குங்க” என்றாள் ரெஜினா.

”முகூர்த்தப் பட்டு எடுத்திட்டாங்களா?” மேரி அக்காவிடம் கேட்டாள். பார்வதி மேரியின் முதுகில் சாய்ந்தபடி கேட்டுக் கொண்டிருந்தாள்.

”ம்ம். எடுத்திட்டாங்களாம்.”

”என்ன கலரு?”

”தெரியல?”

”உன்னக் கூட்டிட்டுப் போகல?”

”இல்ல. அம்மாமட்டும் போச்சு”

”எவ்வளவு விலையாம்?”

”தெரியல. சரி படுங்கடி அதைபத்தி காலையில பேசலாம். சேலையைத்தான் கல்யாணத்தன்னைக்கு பார்க்கப்போறியே” என்று அக்கா தூங்கத் தயாரானாள். சேலைப்பேச்சு முடிந்தது. அவ்வப்போது கேள்விகள் பதில்கள் என சத்தம் குறைந்துகொண்டே வந்தது. இறுதியாக சுவர்க்கோழி மட்டும் சிலிசிலித்துக் கொண்டிருந்தது.

*************************

ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருக்கையில் யாரோ பாதங்களை வருடுவதுபோல் இருந்தது. முதலில் கால்களை மேலுக்கு இழுத்தவள் மீண்டும் அவ்வாறு நடக்கவே கண்களைத் திறந்தாள். பக்கத்தில் மூவரும் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள். எதிரில் இருந்த உருவத்திற்கு கிரீடமாய் தலை முழுக்க சுருள்மயிர் அடர்ந்து இருந்தது. கண்கள் மெல்லிய இருட்டில் மின்னிக்கொண்டு பிரகாசமாய் இருந்தது. கீழுதட்டின் சிகப்பு பளிச்சென்று இருந்தது. அவளுக்கு அடிவயிற்றில் கூச்சமும் தொண்டையில் வறட்சியும் அதிகரித்தது. உடல்முழுக்க பயத்துடன் எழுந்து அவன் பின்னால் நடந்தாள்.

கொல்லையில் வாழைமரத்துக்குப் பின்னால் உள்ள திண்ணை அருகே போய்த் திரும்பினாள். மிக அருகிள் நின்ற அவன் அவளை அணைத்துக் கொண்டான். குதிகால்களை அந்திரத்தில் தூக்கி அவனது இடுப்போடு தனது இடுப்பையும் சேர்த்தாள். இருவர் உருவமும் சிதைந்து போய்விடும் அளவுக்கு இறுக்கினார்கள். எத்தனைநாள் ஏக்கமோ. இன்னும் எத்தனைநாள் ஏங்க வேண்டுமோ. இருவரும் பேசிக்கொள்ளவில்லை ஆனால் அவர்களது மூச்சுக்காற்று பெருங்கூட்டத்தின் கூச்சலாய்க் கேட்டது.

அதற்குள் ”ஏண்டி! பம்பாய்க்காரிங்களா! எந்திரிங்கடி! புள்ளைங்களைப் பாக்கலாமுன்னு விடியாக்காலையிலேயே வந்துபார்த்தா. இவளுக சூத்த நெட்டுக்கிட்டு தூங்குறாளுவ?” என்று பாக்கியம் கிழவி அலாரம் அடித்தாள்.

மேரியும் பார்வதியும் எழுந்துகொண்டனர். அக்கா ஏற்கனவே எழுந்துபோய் விட்டிருந்தாள். குளோரிக்கு முழிப்பு வந்துவிட்டாலும் கண்களின் எரிச்சலால் படுத்தே கிடந்தாள். ” ஏண்டி, குளோரியா இது, ஆளே மாறிப் போய்ட்டாங்குறேன்” என்றாள் பாக்கியம் பாட்டி. ”பாட்டி இது என் பிரெண்டு பார்வதி. குளோரி இங்க கிடக்குது பார். ஏய் குளோரி எழுந்திரிடி…. எழுந்திரிடி” என்று அவளது உடலை உலுக்கினாள் மேரி. காலைக்கடன்களை முடித்துவிட்டு. சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் ஊர்சுற்றினார்கள். பார்வதிக்கு மும்பைக்கு ஃபோன்செய்ய வேண்டியிருந்தது. எஸ்டிடிஃபோன் ஊருக்கு எல்லையில் இருந்தது. நடந்தேபோய் ஃபோன் செய்துவிட்டு வந்தார்கள். மாலைத் தேனீருக்கான நேரம். வீடெங்கும் கல்யாணப் பரபரப்பு தெரிந்தது.

”ஹைய்யா! கல்யாணத்துக்கு துணியெல்லாம் ரெடியாகி வந்திட்டு” குளோரி துள்ளினாள். வீடு முழுவதும் பெண்கள் கூட்டம் போல் இருந்தது. பாக்கியம் பாட்டி வெற்றிலை இடித்துக் கொண்டிருந்தாள். அனைவரும் சேலைகளையும் இதர துணிமணிகள் மற்றும் சீர்வரிசைப் பொருட்களையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பாக்கியம் பாட்டி ஜாக்கெட் அணியாமல் சேலைமட்டும் கட்டியிருந்தாள். ”ஏன் பாட்டி இப்படி ஜாக்கெட் போடம சேலைமட்டும் கட்டுனா அசௌகரியமா இல்லையா?” மேரி கேட்டாள்.

”என்னத்த மாட்டிக்கிட்டுப் போனாலும் உன் தாத்தாங்காரன் எல்லாத்தையும் அவுத்துருவாண்டி.” பாட்டியின் பதிலுக்கு அனைவரும் சத்தமின்றி சிரித்தனர்.

”ஏய் கிழவி! சின்னபுள்ளைககிட்ட என்ன பேசுற?“ என்று முகம்மாறினாள் எலிசாபெத் அண்ணி.

”யார்டி சின்னப்புள்ள, இவளா? இவவயசுக்கு நான் பத்துபுள்ள பெத்து பத்தாவது புள்ளைக்கு சடங்கும் கழிச்சிட்டேண்டி. கண்ணுக்கு தெரியாதாம் கருத்தமுடி அவுத்துப்பாத்தா யம்மாடி!-ங்கிற கதைதான்.” பாட்டி பாக்கை உரலில் போட்டு இடித்தாள்.

”எத்தனை சேலை எடுத்த?” மேரியின் சித்தி பாத்திமா மேரியின் அம்மாவிடம் கேட்டாள்.

‘‘முப்பத்திரெண்டு சேலை, நாற்பது ஜாக்கெட்டு. இருவது பேண்ட் சட்ட ஜோடி” என்று ஒவ்வொரு விரலாய்த் திறந்தாள்.

”முகூர்த்த பட்டு எடுக்க நீ போனியாக்கா?” பாத்திமா.

”போனேன். நல்லாத்தான் இருக்குது. பார்டர் கொஞ்சம் சின்னது. கலரு இவளுக்கு பொருத்தமாத்தான் இருக்கு” என்று கொஞ்சம் தயங்கினாள்.

”என்ன கலரு?” மேரி கேட்டாள்.

”ஹை… பெரியவங்க பேசுறப்ப குறுக்க கேட்காத போடி!” அக்கா விரட்டினாள்.

”கலரு நல்ல கலருதான். நம்ம செசி கல்யாணத்துக்கு உடுத்திருந்தாள்ல அந்த கலருதான் அதே டிசைனு”

” என்னக்கா நீ! அந்தக் கலரு நம்ம புள்ளைக்கு சரிவருமா? அது கட்டுண அன்னைக்கே பல்ல காட்டிடும். ஒருதரம் துவைச்சா அது கதை சுத்தம் பின்ன மடிச்சு பெட்டியில வச்சுக்கிட்டு கிடைக்கிறத கட்டிக்கிட்டு அலைய வேண்டியதுதான். பேருக்குத்தான் முகூகூர்ர்ர்ர்த்தப்பட்டு ஒண்ண்ண்ணூம் இருக்காது.” மிகக் கடுமையானாள் பாத்திமா சித்தி.

”சேலையே வேண்டாம் சனியா சோலி அக்காவுக்கு சூப்பரா இருக்கும்" என்றாள் பார்வதி.

”அது என்னடி டிரஸ்சு?” என்றாள் பாக்கியம் பாட்டி.

”அது மார்டன் டிரெஸ்சு பாட்டி வயசுப் புள்ளைங்க போடுறது. உனக்குத் தெரியாது?” என்றாள் குளோரி.

”கண்டதையும் போட்டு அவன் காணாதத மறைக்காதீங்கடி கத்திக்கிட்டு போயிட்டான்னா. கதை கூடிவராது. ஒத்த ஆடைக்கே முனகுறவன் ஆம்புள, பத்து ஆடையும் பட்டன் வச்சு தைச்சாக்க பரதேசம் போவாண்டி, அந்த பட்டாளன், அவன் பறந்தோடி போவாண்டி முட்டாளே!” என்று பாட்டி பாடினாள். வெற்றிலை உரலில் தாளமும் போட்டுக்கொண்டாள்.

(தொடரும்)”

About The Author