‘சோளகர் தொட்டி’ புதினம் காட்டும் இனக்குழுச் சூழல் (1)

முன்னுரை

இலக்கியப் பொருண்மையும், சமுதாயமும் காலந்தோறும் மாற்றமடைகின்றன. இவ்வகை மாற்றங்களின் பொழுது இலக்கியம் தான் தோன்றிய கால சமுதாயச் சூழலைத் தன்னுள் கொண்டு விளங்குகிறது. அத்தகைய சூழலை இலக்கியப் படைப்பாளன், தான் ஒரு பார்வையாளனாகவோ, பங்கேற்பாளனாகவோ இருந்து கொண்டு பதிவு செய்கின்றான். எனவேதான் இலக்கியம் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி மனிதனின் வரலாற்றையும், வாழ்வியல் முறைகளையும், சமுதாயக் கருத்துருவாக்கங்களையும் வெளிப்படுத்திச் செம்மாந்த செவ்வியல் தன்மையைப் பெற்றுத் திகழ்கின்றது.

இலக்கியப் படைப்புக்களின் காலப்பகுப்பு முறையைக் காணும்பொழுது ஒவ்வொரு காலப்பகுப்பிலும் ஒவ்வொரு பொதுப் பொருள் காணப்படும். அந்த வகையில் பிற இலக்கிய வகைகளை விட இக்கால இலக்கியங்கள் சமுதாய நிலையை வெளிப்படையாகவும், சூழ்நிலை சார்ந்தனவாகவும் எடுத்துக் காட்டுகின்றன. இக்கால இலக்கியங்களுள் புதின இலக்கியம் இதற்குத் தக்க சான்றாக அமைகின்றது. இவ்வாறு எழும் புதின இலக்கியங்களுள் ஒரு சில புதினங்கள் ஒரு சில குறிப்பிட்ட இனத்தின் வாழ்வியல் முறைகளையும் பண்பாடு, பழக்க வழக்கங்களையும், பிற இனத்தைச் சார்ந்தவர்களால் ஏற்படும் இடையூறுகளையும் எடுத்துரைக்கின்றன. அவ்வகையில் ச. பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ என்னும் புதினத்தில் காணலாகும் இனக்குழுவான ‘சோளகர்’ என்னும் இனக்குழுவின் வாழ்வியலைச் சூழல் சார்ந்த கண்ணோட்டத்துடன் இக்கட்டுரை காண முற்படுகிறது.

இனக்குழு – விளக்கம்

இனக்குழு என்பதற்கு "பொதுவான மூதாதையரையும், மொழியையும், ஒத்த பண்பாட்டையும், வரலாற்றையும், பொதுவான நிலப்பரப்பையும் கொண்ட மக்கள்" என்று விளக்கமளிக்கிறது வாழ்வியல் களஞ்சியம். ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்குக் குடியேறும் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவைச் சார்ந்த ஒருவன் தன் ஊர், வாழுமிடம், தான் சார்ந்த கூட்டம் முதலான வழக்குகளையே விரும்பிப் பயன்படுத்துவதைக் காணலாம். எனவே, இனக் குழு என்பதற்கு மேற்கண்ட விளக்கம் பொருத்தமுடையதாக அமைகிறது.

பொதுவாக, மக்கள் தொகுப்பினுள் ஒவ்வொரு இட அமைவிற்கும் ஏற்றாற் போன்று தனித்தனி இனக்குழுக்கள் காணப்படுகின்றன. இவை தங்களுக்கென்ற தனித்த பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும் கொண்டுள்ளன. இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு இனமும் பல கால்வழிக் குழுக்களாகப் பிரிகின்றன. இரத்த உறவையும் சந்ததியின் தொடர்ச்சியையும் குறிக்கும் இக்குழுக்கள் குலம், கோத்திரம், கூட்டம், பரம்பரை, வகையறா, வம்சாவளி போன்ற பல சொற்களால் குறிக்கப்படுகின்றன. உதாரணமாக, கூட்டம் என்ற கால்வழி மரபு கவுண்டர் இன மக்களிடம் நிலவுகிறது. வகையறா என்ற கால்வழி மரபு வன்னியர் இன மக்களிடம் வழங்கி வருகிறது. இவ்வாறு ஒவ்வொரு இனக்குழுவும் பல கால்வழி மரபுக் குழுக்களாகப் பிரிகின்றன.

இனப்பகுப்பும் குழுப்பகுப்பும்

மேற்கண்ட மூன்று வகையினுள் உலக மக்களின் தொகுப்பினைப் பிரித்துக் காட்டுகிறார் மானிடவியல் அறிஞர் மிகையீல் நெஸ்தூர்ஹ் அவர்கள். இம்மூன்று வகையினுள்ளும் பல்வேறு இனக்குழுக்கள் இடம் பெறும், அவ்வினக்குழுக்களில் பல்வேறு கால்வழி மரபுக் குழுக்கள் இடம்பெறுகின்றன. இனக்குழுக்களில் இடம் பெறும் கால்வழி மரபினைப் பின்வரும் வரைபடம் மூலம் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

மேற்கண்ட வரைபடத்தில் கால்வழிக் குழுக்கள் என்பவை ஒரே இனத்திற்குள் பெரும்பாலும் இடம் பெறுகின்றன. ஆனால் சாதிய அமைப்புக் குழுக்கள் ஒவ்வொன்றும் ஒரு இனமாகக் கருதப்படுகின்றன. எனவே கால்வழிக் குழுக்களும் ஒரு பெரிய சாதி அல்லது இனத்திலிருந்தே பிரிகின்றன.

சோளகர் இன மக்கள்

சோளகர்கள் தமிழகத்தின் கர்நாடக எல்லைப்புற மலை கிராமங்களில் வாழும் கன்னடம், தமிழ் ஆகிய இரண்டும் கலந்து பேசும் பழங்குடியினர் ஆவர். இம்மக்களின் வாழ்வியலைப் பற்றியே சோளகர் தொட்டி புதினம் பேசுகின்றது. சோளகர்கள் தமிழகத்தின் பிற பகுதிகளில் எங்கும் அவ்வளவாகக் காணப்படவில்லை. ஆனால் ‘சோள நாயக்கர்’ என்ற ஒரு இனம் காணப்படுகிறது. ஆனால் இவ்விரண்டு இனத்திற்கும் இனத்தோற்ற முறையினால் எவ்விதத் தொடர்பும் காணப்படவில்லை. புதினம் காட்டும் சோளகர்கள் தமிழக அரசின் பழங்குடி இன ஒதுக்கீட்டுப் பட்டியலில் ‘சோலகா’ என்ற பெயரில் இடம்பெறுகின்றனர் (சான்று: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக் கையேடு) இம்மக்களிடம் கல்வியறிவு மிகவும் குறைந்த நிலையில் காணப்படுகிறது.

சோளகர் இன தொன்ம வரலாறு

ஒவ்வொரு இனமும் தனது இனத்தோற்றம் பற்றிய வரலாறு (அ) தொன்மம் சார்ந்த விளக்கங்களைக் கொண்டுள்ளது. அவ்வகையில் சோளகர்களின் இன வரலாற்றினைப் புதினம் எடுத்துரைக்கின்றது.

ஒரு காலத்தில் கொத்தேசால் மலையில் காரையன், பிள்ளையன் என்ற இரண்டு சகோதரர்களின் வழிவழியாகத் தோன்றியவர்களே இந்த சோளகர்கள் என்ற செய்தியினைப் புதினம் பின்வருமாறு எடுத்துரைக்கிறது.

தீய சக்தி கொண்ட ‘சாவண்ணா’ என்பவன் இவ்வுலகை ஆட்டிப் படைத்தான். அவனது கொட்டத்தை அடக்கும் பொருட்டு தெய்வ சக்தி மிக்க காரையன், பிள்ளையன் என்ற இருவரில் பிள்ளையன் என்பவன் தெய்வங்களின் துணைகொண்டு அரக்கன் சாவண்ணாவை அழித்தான். அன்று முதல் அவன் மாதேஸ்வரன் என்று அழைக்கப்பட்டான். எனவே, மாதேஸ்வரன் வழிவந்தவர்களில் புலால் உண்பவர்கள் சோளகர்கள் என்றும், புலால் உண்ணாதவர்கள் ‘லிங்காயத்துகள்’ என்றும் அழைக்கப்பட்டதாக இனத்தோற்றம் குறித்த தொன்மத்தினைக் காண முடிகின்றது. புதினம் வெளிப்படுத்தும் மேற்கண்ட தொன்மச் செய்தியினை மனித இனங்களைப் பற்றி ஆய்வு செய்த மானிடவியல் அறிஞர் எட்கர் தர்ஸ்டன் அவர்கள் தனது ‘தென்னிந்திய குலங்களும் குடிகளும்’ (தொகுதி 6) என்ற ஆய்வு நூலில் மிக விரிவாகத் தந்துள்ளார். எனவே, மேற்கண்ட தொன்மமானது வரலாற்றினைக் குறிப்பதுடன், இனக்குழுப் பிரிவினையும் எடுத்துரைக்கின்றது.

மக்களின் தோற்றம்

சோளகர்கள் 19-ஆம் நூற்றாண்டு காலகட்டங்களில் மலைப்பகுதியில் ஆடையில்லாமல் நிர்வாணமாய் வாழ்ந்து வந்ததாகவும், பின்னர் நாகரிக வளர்ச்சியின் காரணமாக இன்று இவர்கள் தடித்த நூலாடையினை ஆடையாக அணிந்துகொண்டும், கருத்த மேனியராகவும் சுருண்ட தலைமுடியினைக் கொண்டவர்களாகவும் உள்ளனர் என்று நாவலாசிரியர் குறிப்பிடுகிறார்.

வாழ்க்கை முறை

ஒவ்வொரு இனமும் தங்களுக்கான தனித்த வாழ்க்கை முறையினையும் நடத்தையையும் கொண்டுள்ளது. இவ்வகை வாழ்க்கை முறைகளில் கொண்டு கொடுத்தல், பகிர்வு, பொது நலம் பேணும் பண்பு, போன்றவை பொதுப் பண்புகளாகவும், இனம் சார்ந்த குறியீடு, வழிபாடு, நம்பிக்கை, பண்பாடு, தொழில் போன்றவை சிறப்புப் பண்புகளாகவும் அமைகின்றன. மேற்கண்டவற்றில் கொண்டு கொடுத்தலும் பகிர்வும் ஒரே மாதிரியான தன்மை கொண்டவை. இத்தகைய பண்புகள் உணவுப் பங்கீடு, வேலைப் பங்கீடு, போன்றவற்றில் முதலிடம் பெறுகின்றது. உணவுப் பொருள் அதிகமாகக் கிடைக்கப்பெறும் ஒருவர் அவரது கூட்டத்தைச் சார்ந்த பிறருக்குக் கொடுத்துதவுகின்றனர். இத்தகைய பண்பு இன்றும் ஒருசில இன மக்களிடையே நிலவுவதைக் காணலாம். இது குறிப்பாகப் பறையர் மற்றும் வண்ணார் இன மக்களிடம் காணப்படுகிறது. இது மரபு ரீதியாக வந்த ஒன்றாகும். மானிடவியலார் இதனை டார்வீனியக் கொள்கையின் வாயிலாக விளக்குவர். இதற்கு குருதி உறிஞ்சும் வௌவால்களையும், காக்கை முதலிய உயிரினங்களையும் தக்க சான்றாகக் கொள்வர்.

மேற்கண்ட பண்புகள் சோளகர் இன மக்களிடம் காணப்படுகிறது. தாங்கள் உற்பத்தி செய்த உணவுப் பொருட்களைப் பிறருக்குக் கொடுத்து உதவுதலைப் பின்வரும் நிகழ்வின் மூலம் அறியலாம். தொட்டி என்பது சோளகர்களின் குடியிருப்புப் பகுதியாகும். அந்தத் தொட்டியில் வாழும் அனைவரும் பெரும்பாலும் சோளகர்களாகவே உள்ளனர். இவர்கள் தங்களிடம் கிடைக்கும் பொருட்களைப் பின்வருமாறு பகிர்ந்தளிக்கின்றனர்.

தொட்டியில் மான்கறி விரும்புபவர்களுக்குத் தனித் தனிக் கூறாகக் கறியை எடுத்து வைத்தார்கள். முதல் கறிக்கூறு கிராமத்தின் விதவைப் பெண்ணுக்கு" (ப.18) என்று தொட்டியினர் பங்கிடும் முறையைப் புதினம் விளக்குகிறது. இரவு நேரங்களில் ஒன்றாக உறங்குவதும், ஒருவருக்குத் தீங்கு நேரும்போது அது அவர்களது தொட்டிக்கே உரிய தீங்காகக் கருதுவதும் இம்மக்களிடம் காணப்படும் பண்புகளுள் ஒன்றாகும்.

சோளகர்கள் தாங்கள் பயிர் செய்யும் முறையில் புதிய உத்தி முறையாக நிலச் சுழற்சி முறையினைக் கையாளுகின்றனர். வருடத்தின் இரண்டு பருவத்தில் ஒரு பருவத்திற்கு மட்டுமே ஒரு நிலத்தில் பயிர் செய்துவிட்டு அடுத்த பருவத்திற்கு அதனை வெற்று நிலமாக விட்டு விட்டு வேறு நிலத்தில் பயிர் செய்கின்றனர்.

உற்பத்தி செய்த தானியங்களை விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க பூமியில் பெரிய பள்ளம் தோண்டி அதனுள் தானியங்களை இட்டு வைக்கின்றனர். இவ்வாறு வெட்டப்படும் குழியானது குடிசை வாசலில் அமைக்கப் பெறுகின்றது.

"குடிசை வாசல் மண் தரையில் கெட்டியான பகுதியில் மூன்றடிக்கு நீண்ட பள்ளத்தைத் தோண்டினார்கள். பின், ஆழம் செல்லச் செல்லப் பள்ளத்தின் அகலத்தை அதிகரித்து ஒரு கிணறு போன்று தோண்டி மண்ணை எடுத்தார்கள். பதினைந்து அடிகளுக்கு மேல் பள்ளம் போன பின்பு, பள்ளத்தின் தரைப்பகுதி மண்ணை சதுர வடிவில் வெட்டி முழுதாக எடுத்தார்கள். முடிவில் அந்தப் பள்ளமானது தரையிலிருந்து பார்க்க கழுத்து சிறுத்து, சதுர வடிவில் பருத்த அடிப்பாகம் இருந்த ஒரு குடுவையைப் போல் இருந்தது.." (ப.78)

இவ்வாறு வெட்டப்படும் குழியானது தீயிட்டு சூடேற்றப்பட்டு மூன்று நாட்களுக்கு அந்த சூடு இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளப்பட்டு, பின்னர் பயன்படுத்தப்படுகிறது.

நம்பிக்கை

இவ்வினக் குழுவில் மழை பொய்த்துப் போன காலங்களில் பெண்கள் ஒன்றாகக் கூடி நிர்வாண பூசை நடத்தும் வழக்கம் உள்ளது. நிர்வாண பூசை செய்வதன் வாயிலாக மழை பொழியும் என இம்மக்கள் நம்புகின்றனர்.

"பெண்கள் தலையில் சுமந்த உணவுடன் வனத்தின் எல்லைக்கு அப்பால் சில தூரம் உள்ளே சென்று அங்கிருந்த உயர்ந்த தோன்றி மரத்தினைச் சுற்றித் தங்களின் உணவுகளை வைத்தார்கள். அந்த இடம் மரங்கள் அடர்ந்த இடம், பின் தங்களின் உடலிலிருந்த சேலைகளையும் உள்ளாடைகளையும் களைந்து அனைவரும் நிர்வாணமாக நின்றார்கள். அதன் பின்பு, அதே நிலையில் வானத்தைப் பார்த்து, "மழை பொழி தாயே!" என்று எங்கு சீர்குட்டைத் தெய்வத்தை வேண்டினார்கள். ஒருவர் மாறி ஒருவர் பாடினார்கள்" (ப.36) இவ்வாறான நிர்வாண பூசை நடத்தப்படும்போது ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இத்தகைய பூசைகளின் வாயிலாக மழை பெய்விக்க இயலும் என்ற நம்பிக்கை இம்மக்களிடையே காணப்படுகிறது.

(மீதி அடுத்த இதழில்)”

About The Author

2 Comments

  1. Mohandass

    The book review about this particular race is very nice to read and very good efforts are made to comment about the book. Eventhough we did not have any chance to read the original book, the review of the book helped me to have greater insight.

    Mohandass

Comments are closed.