ஜன்னல் வழியே போட்டால் என்ன..?

"என்னப்பா ரமணீ!" என்ற குரல் கேட்டு நிமிர்ந்தேன். செக்கச் சிவந்த மேனியும் மேல் துண்டுமாக – கண்ணன் சார்தான்!

"நல்ல பையனைப் போட்டிருக்கேப்பா நீ!"—குரலில் எகத்தாளம்!

எனக்குத் திடுக்கென்றது. "என்ன சார் ஆயிடுச்சு?"

"என்ன ஆச்சா..? வேலைக்கு வந்த முதல் நாள் நல்லவன்போல காலைல அஞ்சு மணிக்குள்ளே பேப்பரை வீசி எறிஞ்சுட்டுப் போயிட்டான். அப்புறம் நானும் பாக்கறேன். தினம் ஏழரை, எட்டு மணிக்குத்தான் வர்றது!"

"ஸாரி, ஸார்! நான் அவன்கிட்ட கண்டிப்பாச் சொல்லறேன்; ஏழைப்பட்ட பையன். நல்லவன்தான். ஏதோ படிப்புச் செலவுக்காக நம்ம கடையிலே வெச்சுருக்கேன்!"

மறு நாள் குணாளன் வந்தான். விசாரித்தேன். பயந்துவிட்டான். தொட்டிக்குள் இருக்கும் தங்க மீன் மாதிரி வாயை மூடி மூடித் திறந்தான். பிறகு சொன்னான், "அந்தத் தெருவிலே கண்ணன் சார் ஒருத்தர் வீட்டுக்குத்தான் பேப்பர் சப்ளை செய்கிறோம். அதனாலே மற்ற தெருவுக்கெல்லாம் போட்டுவிட்டு திரும்பி வருகிற வழியில் அவர் வீட்டுக்குப் போட்டேன். மன்னிச்சுக்குங்க சார்!" என்று.

இனிமேல் புகாருக்கு இடம் கொடுக்கமாட்டான். கெட்டிக்காரப் பையன்!

மூன்று நான்கு தினங்கள் வரை ஒன்றும் புகார் இல்லை.

"க்கூம்.."

என்னத்தைச் சொல்ல? எதிரில் நிற்பது கண்ணன் ஸாரின்றி வேறு யார்?

"என்ன ரமணீ! ஒண்ணும் லாயக்குப்படாது போல இருக்கே?"

"என்ன ஸார்!"

"பேப்பர் போட்டிருக்கிற லட்சணத்தைப் பார்த்தியா? தினமும் இதே மாதிரிதான்! கொஞ்சம் நனைந்திருக்கும். போனால் போகுது.. சின்னப் பையன்னு விட்டுட்டேன்! இன்னிக்கு ஒரேயடியா இப்படி நனைஞ்சிருக்கு."

"அடடே! எப்படி ஸார் நனைஞ்சுது?"
 
"ஜன்னல் வழியே உள்ளே போட வேண்டியதுதானே பேப்பரை! ‘டொக் டொக்’குனு சாக்கடைகிட்டே போட்டுவிட்டுப் போய் விடுகிறான்."

குணாளனை விசாரித்தேன். ‘அமுக்’கென்று இருக்கிறான். அந்தத் தெருவில் ஒரே வீட்டுக்காகப் போவது அவனுக்கு ஆதாயம் இல்லாமல் இருக்கிறது. அதற்காக அந்த வாடகையைக் கழற்றிவிடப் பார்க்கிறான் .பளீர் என்று ஒன்று கன்னத்தில் வைத்து விட்டேன், ஆத்திரம் தாங்காமல்.

மறுநாள் விடியற்காலை. சைக்கிளில் பேப்பரைக் கட்டிக்கொண்டு நானே வீடு வீடாகக் கிளம்பி விட்டேன்.

கண்ணன் சார் வீடு.

"சார், பேப்பர்!" என்று குரல் கொடுத்தபடி திறந்து கிடந்த ஜன்னல் வழியாகப் பேப்பரை விட்டெறிந்-

அட, கண்ணராவியே!

கண்ணை மூடிக் கொண்டே பேப்பரை எறிந்துவிட்டு சைக்கிளை மிதித்தேன் வேகமாக..!.

சின்னப் பையன். அதுதான் கூச்சப்பட்டிருக்கிறான்.

என்னதான் கணவன் மனைவி என்றாலும் இப்படியா?

(நன்றி: குமுதம் 30.8.1973)

About The Author