ஜாக் எனும் மனித மிருகம் (4)

மூன்று கடிதங்கள்


யூதர்களை யாரும் பழி சுமத்த முடியாது (The Juwes are the men that will not be blamed for nothing) என்ற பொருளில் கிறுக்கப்பட்டிருந்த சுவரின் கீழே ஒரு போலிஸ்காரர் காவலுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்; அதை ஃபோட்டோ எடுக்கும் வரை யாரும் அழித்துவிடக்கூடாது என்பதற்காக.
இதற்குள் போலிஸ் அதிகாரிகள் ஸ்மித்திற்கும் வாரனுக்கும் உள்ளேயே புகைந்துகொண்டிருந்த பகை பெரிதாகி, கொழுந்துவிட ஆரம்பித்தது. போலிஸ் கமிஷனர் வாரன் சுவரில் கிறுக்கப்பட்டிருந்த வாசகத்தை உடனே அழித்துவிட வேண்டும் என்று கட்டளையிட்டார். இல்லையென்றால் இதனால் யூதர்களுக்கு எதிராகப் பெரிய கலகம் ஏற்படும் என்று அதற்கு ஒரு நொண்டிச்சாக்குக் கூறினார். கொலையை விசாரித்துக் கொண்டிருந்த போலிஸ்காரர்கள், ‘ஃபோட்டோ எடுக்கும் வரையிலாவது அதை அழிக்கக்கூடாது’ என்று அழிப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். ஆனால், வாரன் அவர்கள் ஆட்சேபங்களையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு, தானே அந்த இடத்திற்குச் சென்று, அவரே, தன் கைகளினாலாலேயே கிறுக்கப்பட்டிருந்த வாசகங்களை அழித்தார். ஒரு துப்பறியும் அதிகாரி, அப்போது வாரனிடம் "இது விசாரணையை பாதிக்கக்கூடும். நீங்கள் பெரிய தவறு செய்கிறீர்கள்" என்று மனம் கசந்து சொன்னார்.

இது வாரன் செய்த பல தவறுகளில் ஒன்று. ஏற்கெனவே, ஊடகத்தைச் சேர்ந்தவர்களைத் தன் அருகில் நெருங்க விடாமல், அவர்களது கேள்விகளுக்கு விடை சொல்லாமல் இருந்ததால் அவர் மேல் ஊடகங்கள் வெறுப்பாக இருந்தன. அவர்களைத் தங்கள் அருகாமையில் நெருக்கமாக வைத்திருப்பதை விட்டுப் பகையாளிபோல் நடந்து கொண்டார்.

இந்தக் கொலையை விசாரிக்கும் அதிகாரிகள் யாரும் ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவும் போட்டிருந்தார். இரண்டு போலிஸ் நாய்கள் கொலையாளியின் தடங்களை மோப்பம் பிடித்து அறிய வந்தபோதும் அவர் எந்த ஒத்துழைப்பும் கொடுக்காமல் நடந்து கொண்ட விதம் விசித்திரமாக இருந்தது. மோப்ப நாய்களால் எந்தத் தடயத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. "மோப்ப நாய்களை வரவழைத்த அன்று கடும் மூடுபனி இருந்தது. அதனால்தான் அவற்றால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை" என்றுதான் இன்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.
இதுவரை நடந்த கொலைகளிலிருந்து ஒன்று நிச்சயமாகத் தெரிந்தது. கொலைகாரன் யாராக இருந்தாலும் அவன் குறிப்பிட்ட தேதிகளில்தான் கொலைகளைச் செய்கிறான் என்பது தெளிவாயிற்று. நிக்கோலஸ் கொலை 31 ஆகஸ்டில் நடந்தது. சாப்மன் கொலை நடந்தது செப்டம்பர் எட்டாம் தேதி. மூன்றாவது நாலாவதாகப் பலியான ஸ்ட்ரைட், எட்டோஸ் இருவரும் செப்டம்பர் 30ஆம் தேதி கொல்லப்பட்டார்கள். இந்தக் கணக்குப்படி அடுத்த கொலைகள் அக்டோபர் 8ஆம் தேதியும் 31ஆம் தேதியும் நடந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி ஒன்றும் நடக்கவில்லை. அக்டோபரில் எந்தக் கொலையும் இல்லாமல் அமைதியாகச் சென்றது. ஏன் அடுத்த கொலையை அவன் திட்டப்படி செய்யவில்லை? அவனுக்கு ஏதாவது தடை இருந்ததா? அல்லது, தான் பின்பற்றப்படுகிறோம் என்று ஜாக்கிரதையாக இருந்தானா? சொல்ல முடியவில்லை.

ஒருவேளை ‘தன் கொலைகளால் எல்லாரும் பயத்தின் உச்சியில் இருக்கிறார்கள். எங்கே சிவப்பாக இருந்தாலும் அது ரத்தமோ என்று அச்சப்படுமளவுக்குச் செய்துவிட்டோம். எப்போது என்ன நடக்குமோ என்ற பயம் தொடரட்டும்’ என்று நினைத்தானோ என்னவோ? ஆனால், அவன் மனதிற்குள் அவன் நிச்சயித்திருப்பான், அடுத்த கொலை பற்றியும் அதற்கான தேதியையும்.
ஊடகங்களும் பொது மக்களும் போலிசாரின் நடவடிக்கைகளைப் பலமாக விமரிசிக்க ஆரம்பித்தார்கள். பலத்த கண்டனங்கள் போலிசுக்கு எதிராக எழுந்தன. கமிஷனர் அலுவலகத்திற்கு, எப்படி கொலையாளியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று யோசனை சொல்லிப் பல கடிதங்கள் வந்து குவியத் தொடங்கின. கொலைகாரன் எப்படியிருப்பான் என்று அவன் அடையாளங்கள் பற்றியும் கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. போலிஸ்காரர்கள் விலைமாதராக வேடமிட்டுச் சென்றால் பிடித்துவிட முடியும் என்று கூடச் சில ‘கருத்து கந்தசாமிகள்’ சொன்னார்கள். எல்லாரும் பொதுவாகச் சொன்ன கருத்து "போலிஸ்காரர்கள் ரோந்து வரும்போது தாடியுடன் செல்லக் கூடாது. முகத்தை சுத்தமாகச் சவரம் செய்து கொள்ள வேண்டும்" என்பது.

"எஃகு உறை அணிய வேண்டும். கழுத்தில் உலோகக் கவசம் இருக்க வேண்டும். அதில் மின் கம்பிகள் இருந்தால் நல்லது. கொலையாளி கழுத்தை நெரிக்க வரும்போது மின் அதிர்ச்சியினால் நிலை குலைந்த்து விடுவான்" என்பதுபோலவும் பல யோசனைகள். இப்போதும் கைவசம் மிச்சம் இருக்கும் கடிதங்கள் பலவற்றில் அன்றைய கமிஷனர் குறுக்குக் கோடிட்டு, "இந்த ஆள் சுத்த பைத்தியக்காரனாக இருக்க வேண்டும்" என்று எழுதியிருப்பதைக் காணமுடியும்.

வந்த பல நூற்றுக்கணக்கான கடிதங்களில் மூன்று கடிதங்கள் கவனத்தை ஈர்த்தன. முதல் இரண்டு கடிதங்கள் மத்திய செய்தி அலுவலகத்திற்கு வந்தவை. இந்தக் கடிதங்கள் ரொம்ப முக்கியமாகக் கருதப்படுவதற்குக் காரணம் இருக்கிறது. இவை உண்மையான கடிதங்களா அல்லது போலியா என்று இன்றும் ஐயங்கள் இருந்துதான் வருகின்றன. ஆனாலும் அதுவரை பெயர் தெரியாமலிருந்த ஒரு கொலைகாரன் இன்று அழைக்கப்படும் ‘ஜாக்’ எனும் பெயரில் அறிய வந்தது இந்தக் கடிதங்கள் மூலம்தான்! முதல் கடிதம் செப்டம்பர் 25ஆம் தேதி என்று குறிப்பிடப்பட்டு 27இல் தபால் முத்திரையிட்டு அனுப்பப்பட்டிருந்தது. 28ம் முத்திரையிட்டு அனுப்பப்பட்டிருந்தது.

"டியர் பாஸ்!" என்று ஆரம்பித்திருந்த அந்தக் கடிதத்தில்,"போலிஸ், என்னை நெருங்கி விட்டதாகவும், எப்போதும் பிடிக்கலாம் என்றும் கதை சொல்வதைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். என்னை யாரும் நெருங்கவில்லை. அவர்கள் தங்களை சாமர்த்தியமானவர்களாகக் காட்டிக் கொண்டு ‘நாங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். கூடிய விரைவில் பிடித்து விடுவோம்’ என்று பேட்டி கொடுக்கும்போதெல்லாம் நான் எனக்குள் சிரித்துக் கொள்வேன். நான் உடலை விற்பவர்களை விட்டு வைக்க மாட்டேன். நான் அவர்கள் உடலைக் கிழித்துக் கொல்லாமல் ஓயமாட்டேன். நான் கடைசியாகச் செய்த கொலை பிரமாதமாக அமைந்தது. அந்தப் பெண்மணி கூச்சலிடக் கூட நான் வாய்ப்புக் கொடுக்கவில்லை. எப்படி போலிசால் என்னைப் பிடிக்க முடியும், பார்க்கலாம்! நான் இந்த வேலையை விரும்பிச் செய்கிறேன். மறுபடியும் தொடர்வேன். என்னுடைய வேடிக்கை விளையாட்டுக்களைக் கூடிய விரைவில் நீங்கள் எதிர்பார்க்கலாம். நான் கடைசியாகச் செய்த கொலையில் ரத்தப் பகுதியை ஜிஞ்சர் பீர் பாட்டிலில் வைத்து அந்த ரத்தத்தினால் இந்தக் கடிதத்தை எழுத நினைத்தேன். ஆனால், அது கோந்துபோலக் கெட்டியாகி விட்டது – உபயோகப்படுத்த முடியவில்லை. அதனால் சிவப்பு மையே போதும் என்று அதில் எழுதுகிறேன்.

ஹா… ஹா! அடுத்தமுறை நான் வேலையை முடித்த பிறகு அந்தப் பெண்ணின் காதை மட்டும் வெட்டிப் போலிஸ் அதிகாரிகளுக்கு அனுப்புகிறேன். ஜாலியாக இருக்கும் இல்லையா? நான் அடுத்த வேலையை முடிக்கும் வரை இந்தக் கடிதத்தை அப்படியே வையுங்கள்; அடுத்த காரியத்தை முடித்த பிறகு வெளியிடலாம்.

என்னுடைய கத்தி நன்றாகக் கூர்மையாக இருக்கிறது. சந்தர்ப்பம் கிடைத்தால் நான் இப்போதே என்னுடைய வேலையை ஆரம்பிக்க வேண்டும்!

வாழ்த்துகள்
உங்கள் உண்மையான
ஜாக் தி ரிப்பர்

(ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. என்னை இப்போது டாக்டர் என்று சொல்கிறார்கள்! ஹா… ஹா!)"

இரண்டாவது கடிதம் ஒரு தபால் அட்டை. அக்டோபர் 1 என்று தேதியிடப்பட்டிருந்தது. அதில் முதல்நாள் இரவு நடந்த இரட்டை (கொலை) சம்பவம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில்,
"நான் உங்களுக்கு முன்னால் எழுதிய கடிதம் ஒன்றும் விளையாட்டில்லை பாஸ்! இந்தத் துடுக்கு ஜாக்கின் கைவரிசையை நாளைக்குப் பார்ப்பீர்கள். இந்த முறை நீங்கள் பார்ப்பது இரட்டை சம்பவங்கள். முதல் ஆள் கொஞ்சம் கத்த ஆரம்பித்தாள். நினைத்தபடி முடிக்க முடியாமல் போய்விட்டது. காதுகளை வெட்டிப் போலிசுக்கு அனுப்ப நேரம் கிடைக்கவில்லை. அடுத்த காரியத்தை முடிக்கும் வரை நான் சொன்னபடி முதல் கடிதத்தை வெளியிடாததற்கு நன்றி!
ஜாக் தி ரிப்பர்."

மூன்றாவது கடிதம்தான் அதிபயங்கரமானது. அந்தக் கடிதம் ஒயிட் சாப்பல் கண்காணிப்புக் குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்த லஸ்க் என்ற அதிகாரிக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதனுடன் இணைப்பாக, கொல்லப்பட்ட காதரின் எட்டோசின் சிறுநீரகத்தின் ஒரு பகுதியும் அனுப்பப்பட்டிருந்தது! ‘நரகத்திலிருந்து’ என்று பொருத்தமாக எழுதி அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்திலிருந்த வரிகள்:

"திரு லஸ்க் அவர்களுக்கு, நான் கொலை செய்த ஒரு பெண்ணின் சிறுநீரகத்தில் பாதியைப் பாதுகாத்து வைத்து உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன். மற்ற பாதியை நான் வறுத்துச் சாப்பிட்டு விட்டேன். ரொம்பச் சுவையாக இருந்தது. நீங்கள் இன்னும் கொஞ்சம் காத்திருந்தால் நான் உபயோகித்த அந்த ரத்தக் கறை படிந்த கத்தியை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

திரு லஸ்க் அவர்களே! உங்களால் முடிந்தால் என்னைப் பிடியுங்கள்!"

–தொடர்வான்…

About The Author