ஜா தீ (1)

எல்லாம் கனவு போல, நம்பமுடியாத வேகத்தில் நடந்தன. லலிதாவுக்கு எத்தனையோ இடம் பார்த்து, ஒன்றும் சரியாய்த் திகையாத நிலையில், திடுதிப்பென்று இந்த வரன் அமைந்தது. அமெரிக்காவில் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் வல்லுநராக இருக்கும் அனந்தராமனின் ஜாதகம் வந்ததும், பொருந்தியதும், பெண்ணின் புகைப்படத்திலேயே திருப்திப்பட்டு, ஆ அந்தச் சிவந்த செர்ரித் தேன் சுமக்கும் உதடுகள்! ஜாதகம் பொருந்தியாச்சு, இனி உதடுகள் பொருந்த வேண்டும்… அவன் சம்மதம் சொன்னதும், பத்து நாளில் அவன் தமிழ்நாடு வந்து இரண்டே வாரம் இருக்கப் போவதான நிலையில், லலிதாவின் திருமணம் வீட்டிலேயே, வாசல் பந்தல் போட்டு, என்று ஏற்பாடுகள் துவங்கியதும்… லலிதாவுக்கு திடீரென்று வானத்துக்குத் தூக்கப்பட்டாப் போல, திகைப்பாய் ஆனந்தத் திணறலாய் இருந்தது.

தோழிகளின் பொறாமைப் பார்வை அவளுக்குக் கிளுகிளுப்பாய் இருந்தது. இனி ‘தத்காலில்’ பாஸ்போர்ட், விசா என்று அப்பா அலைந்து திரிந்து அவளை மாப்பிள்ளையுடன் அனுப்பி வைக்க வேண்டும். இன்னும் என்னென்ன சிரமம் இருக்கோ, ஈஸ்வரா, என்று அவர் அலுத்துக்கொண்ட அலுப்பில் பெருமிதம் வழிந்தது.

வண்டல்மேடு அருமையான ஊர். ஜனங்கள் நல்ல ஒற்றுமையுடன், ஒருவருக்கொருவர் மட்டு மரியாதையுடன் பழகி வந்தார்கள். யார் வீட்டுக்கு விருந்தாளி வந்தாலும், ஊரில் அதைப் பற்றிப் பேசினார்கள், விசாரித்தார்கள். லலிதாவுக்கு அமெரிக்க மாப்பிள்ளை, அதுவும் எளிய கல்யாணம் போதும் என்று சொன்ன அனந்தராமன் அமைந்ததும், ஊரே அவளது அதிர்ஷ்டத்தை மெச்சியது. எல்லாரும் அவளிடமே அனந்தராமனின் புகைப்படம் வாங்கிப் பார்த்தார்கள்.

ஒரு மாமி வெட்கத்தை விட்டு, மாப்பிள்ளைக்குத் தம்பி யாரும் உண்டா என்று விசாரிக்கிறாள்! லலிதா ஊர்க் கதாநாயகி இப்போது.

அவளைச் சுற்றி வந்த சைக்கிள் இளைஞர்கள் அவளைப் பார்த்து வாயைப் பிளந்தார்கள்.
முன்பெல்லாம் அவர்கள் சைக்கிளில் மணியடித்தால் படபடப்பாய் இருக்கும். இப்போது எரிச்சல் வந்தது. போங்கடா வேலை வெட்டி இல்லாதவனுகளா, என்று தோன்றியது போலும். தற்போது அங்கே அவளது ஒவ்வோர் அசைவும் கொண்டாடப்பட்டது. எல்லாரும், ஒவ்வொரு நாள் காலண்டர் தேதி கிழிக்கும்போதும், இன்னும் லலிதா கல்யாணத்துக்குப் பத்து நாள் இருக்கு, ஒன்பது நாள் இருக்கு என்று கழித்தார்கள்.

நிகழ்ச்சிகள் தெளிவான அளவில் புரியுமுன்னே ஊரில் மாற்றங்கள் நிகழ்ந்தன.
பஞ்சாயத்துத் தேர்தலில் சிற்சபேசன் தோற்றுப் போயிருந்தார். பொது வாழ்வில் வெற்றி தோல்வி, கஷ்ட நஷ்டங்கள் சகஜந்தான் என்று வெளியே புன்னகையுடன் அவர் சொல்லிக் கொண்டிருந்தாலும், உள்ளூரக் காயம் பட்டிருந்தார் அவர். பொதுப் பிரச்சனை என்று நாலு பேர் உட்கார்ந்து விவாதிக்கும்போது, தன்னை வெற்றி கொண்ட சபாபதியின் செல்வாக்கு ஓங்கி விடாதபடி அவர் பேசி வந்தார். அவரை வாதத்தில் மடக்குவதிலும், மேலடி அடிப்பதிலும், அவர் அத்தனை சாமர்த்தியசாலி அல்லர் என்று எல்லார் முன் நிறுவுவதிலும் சிற்சபேசனின் கவனம் எல்லார்க்கும் புரிந்தது. ஆட்கள் தன்னைப் போல இருகட்சி நிலைக்கு வந்து கொண்டிருந்தார்கள். எல்லாம் நீறுபூத்த நெருப்புப் போல இருந்தது.

ஒரு நல்ல நாள் பார்த்து, அப்பா லலிதாவின் கல்யாணப் பத்திரிகையை மதுரை போய் அச்சுக்குக் கொடுத்து விட்டு வந்தார். "நிகழும் மங்களகரமான நடப்பாண்டில், பகவத் கிருபையையும், ஸ்ரீ பரமாச்சார்யாள் அனுகூல அனுகிரகத்துடனும்…" பட்டுப் புடவை எடுக்கக் குடும்பக் கும்பலாய்ப் போய் வந்தார்கள். லலிதா இயல்பாகவே நல்ல சிவப்பு. அழகு. மாப்பிள்ளைக்குத் தந்த படத்தில் உதட்டுச் சாயப் பளபளப்பு வேறு! (அமெரிக்க மாப்பிள்ளைன்னா பின்னே!) அவளுக்கு எந்த வண்ணமும் பாந்தமாய்ப் பொருந்தும். ஊருக்கு வந்து அந்தப் புடவைகளை லலிதா தோழிகளுக்குக் காட்டியபோது, அவள் முகத்தில் பெருமை வழிந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் திகட்டியது அவளுக்கு. முன்னே பின்னே தெரிந்திராத, பார்த்திராத அந்த, கன்னப் பச்சை, எலெக்ட்ரிக் ஷேவ், அனந்தராமன் மேல் அவள் காதல் கொண்டிருந்தாள். உள்ளத் தடுமாற்றத்தில் அன்றாட அலுவல்களில் அநேகத் தவறுகள் செய்தாள். சிரிப்புச் சிரிப்பாய் வந்தது.

வாசல் அடைத்துப் பந்தல் போட வேண்டும். நெல் மூட்டையை வண்டியில் ஏற்றி எடுத்துக் கொண்டு போய் அரைத்து விட்டு வர வேண்டும். சமையலுக்கு வைதீஸ்வரன் இருக்கவே இருக்கிறார். கரண்டியை அவர் பிடித்தால் காரண்டி! ஊரே மணக்கும். பக்கத்து வீடு, எதிர் வீடு என்று எல்லாரிடத்திலும், வரும் ஆட்கள் தங்க என்று இடம் கேட்டிருக்கிறது. சிற்சபேசனின் வீட்டு மாடி பெரியது. மாடியிலேயே நெல் புழுக்கி உலர்த்துவார். அங்கேயும் பந்தல் போட்டுக் கொண்டால் மாப்பிள்ளைப் பார்ட்டி ராத்தங்க, சீட்டுக் கச்சேரி, பாட்டு, கூத்து என்று கொண்டாட வசதி.
அவரிடம் கேட்டு விட்டு, சபாபதியிடம் கேட்காமல் எப்படி என்று அப்பா சபாபதியிடமும் இட வசதி கேட்டிருந்தார். சமையல் வேலைகளை அவர் வீட்டுப் பின்கட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று ஏற்பாடு.

ஆட்கள் வருவதும் போவதுமாய் லலிதா வீடு அமர்க்களப்படுகிறது. அனந்தராமனின் உறவுக்காரர்கள் வந்து கொண்டே இருந்தார்கள். திருமாங்கல்யத்தில் ஒன்று பெண் வீட்டிலும், இன்னொன்று மாப்பிள்ளை வீட்டிலும் போடவேண்டும். கிரஹப்பிரவேசப் புடவையும் மாப்பிள்ளை வகை. அவளது அளவு ஜாக்கெட் வாங்கிப் போக, திருமாங்கல்யத்தைக் காட்டிப் போக, மாப்பிள்ளையின் மோதிரத்துக்கு விரல் அளவு தர என்று யாராரோ வந்து போனார்கள். அவளது கல்யாணம் ஊர்ப் பேச்சாய் ஆகியிருந்தது. ரயில்வே ஸ்டேஷன் குதிரை வண்டிக்காரன் அந்தக் கல்யாணம் பற்றி அறிந்திருந்தான். யாரைப் பார்த்தாலும் புன்னகையுடன் தலையாட்டி வரவேற்கிறாள் லலிதா. வாயே வலிக்கிறாப் போலிருந்தது. அப்பா காபி கொண்டு வா என்று சொன்னால் கூட எதோ ஞாபகத்தில் வந்தவர்களை நமஸ்கரிக்கிறாள்! காலம் தன் மந்திரக் கோலால் உலகத்தை ஆனந்தமயமாக்கி விட்டிருக்கிறது.

நீ அழகி! நீ அதிர்ஷ்டக்காரி! – என தேவதைகள் சிலீர் சிலீரென்று பூமாரி பொழிகிறார்கள். பாரதிராஜா நம்மூர்ப் பெண்களை ரொம்பத்தான் கெடுத்து விட்டிருக்கிறார்! அவள் ரேடியோவைத் திருப்பினால், குழாய்த் தண்ணியாட்டம் அவளுக்காகவே காதல் பாட்டுகளாகக் கொட்டியது வானொலி!
பிரச்சினை சின்னத் தீப் பொறியாய்க் கிளம்பியது; இங்கே அல்ல, நந்தன்குடியில். உறவு முறையில் ஒரு கல்யாணம் என்று சிற்சபேசன் போயிருக்கிறார்.

ஜாதிக்காரர்கள் பத்திருபது பேர் கூடிய நிலையில், கேளிக்கை கொண்டாட்டங்களுக்குக் குறைவில்லை. அவர்கள் ஜாதியிலேயே சிற்சபேசனின் பங்காளி, தாயாதிமார்கள் கொஞ்சம் வசதியானவர்கள்… சட்டசபையில் ஓர் அமைச்சர் உட்பட, அவர்கள் ஜாதிக்குப் பெரிய அந்தஸ்து இருந்தது நந்தன்குடியில். ஜாதிக்காய் மணத்துக் கிடந்தது நந்தன்குடி !

இத்தனை பெரிய மனிதர்கள் சேர்ந்த பின், பாட்டில் உடைக்காமல் எப்படி? சிவகுருவுக்குத் தீர்த்தம் உள்ளே போனால், அவர் ஆளே மிதப்பார். அப்போதிருந்து ஆளே, பேச்சே புது தினுசாகி விடும். அமைச்சரைப் பார்த்து, அவர் கொஞ்சம் எகத்தாளமாய்த்தான் ஆரம்பித்தார். "ஏம்ப்பா நீலகண்டா, நீ அமைச்சராயி நம்மாளுகளுக்கு என்னா செஞ்சே, ஷொல்லு பாப்பம்?" அமைச்சர் பதில் சொல்லாமல் புன்னகையுடன் கொஞ்சம் வறுவலை எடுத்து மெல்ல ஆரம்பித்தார். உறவு ஜனம் ஸ்… ஸ்ஸென்று அடக்க முயன்றார்கள். அவருக்கு அது பாம்பு சீறும் சத்தமாய்ப் பட்டது. நானே பாம்பு, என உற்சாகங் கொண்டார் சிவம். "அட சும்மாருங்கப்பா! அவனவன் பதவிக்கு வந்த நாலே நாள்ல தன் ஜாதிப் பெயரால் மாவட்டம் பிரிக்கிறான். மூதாதையருக்கு சிலை வைக்கிறான். அவங்க பேர்ல பஸ்சு விடறான்… நம்மாளு என்னா செஞ்சிருக்காரு? அட அவரு செய்யாட்டி, செய்ய வைக்க வேணாம்? என்னாவே நாஞ் சொல்லுறது?…"

"அட, விட்ருவமா மாப்ள?" என்றார் அமைச்சர் புன்னகையுடன். "எல்லா ஏற்பாடும் நடந்திட்டிருக்கு காதுங் காதும் வெச்சாப்ல. மத்த ஜாதிக்காரன் முந்திக்கு முன்னால் நாம் அதிரடியா ஏதாச்சிம் முடிவெடுப்பம். அத்த இப்ப பகிரங்கமாச் சொல்லக்கில்ல முடியாது. ஆச்சிங்களா?"

"என்ன, பயமாப்பா உனக்கு? நம்ம ஜாதிக் கூட்டத்துலயே ரகசியம்ன்றே? தம்பி… வீரத்துக்குப் பேர் போன பரம்பரை நம்மதுடா! எதையும் தைரியமா ஒப்பனோளி ஓப்பனாச் செய்யணும், சொல்லணும். நீ சொல்றே, ரகசியமாச் செய்யின்னு. ஏன் அவனவன் ஜாதில இப்பிடி ரகசியமாப் பிளான் போட மாட்டானுகளா?" மடக்கி விட்ட எகத்தாளத்துடன் சிவகுரு அடுத்த ரவுண்டு கட்டினார்.

ஒரு மனநிலையில் சிற்சபேசனுக்கு அந்த யோசனை சரியாய்ப்பட்டது. "அண்ணன் சொல்றது சரிதான்" என்று அவர் மசால் முந்திரி சிப்ஸைக் கையில் எடுத்து வாயில் மொறுமொறுத்தார். "ஒரு காலத்துல நம்ம ஒவ்வொருத்தன் கையிலயும் கத்தி இருந்தது. என்ன இருந்தது?… கத்தி! நம்மளக் கண்டாலே அவனவன் நடுங்குவாப்ல. தலையுதறி விலகிப் போவாப்ல. எல்லாப் பெருமையும் போச்சு இப்ப…" சொல்லுமுன் அழுது விடுவார் போலிருந்தது.

"நம்ம மூதாதை வீரன் கூத்தபிரான் பேர்ல உடனே பஸ்சு விடச் சொல்லணும். என்ன சொல்றீங்க?"
அமைச்சர், "பொறுங்க பொறுங்க கண்மணிகளா! நிதானம் ரொம்ப முக்கியம்" என்று ஆரம்பிக்குமுன், சிவகுரு "என்னத்த நிதானம் பிரதானம்னுகிட்டு? ஈன ஜாதிப் பயல்… அவன் பேரென்ன, குமாரசாமி… போன வாரம் வந்து தன் ஜாதிக்காரன் பேர்ல பஸ்சு ஓட விட்டுட்டுப் போயிட்டான்… எங்க? இங்க… நம்ம ஜாதிக்காரன் அதிகம் இருக்கிற ‘இந்த’ ஏரியாவுல… நமக்கு மான ரோஷம், சூடு சொரணை, எதுவுமே இல்லன்னு நினைச்சிட்டாப்லியா? என்ன கேவலப் பொழப்பாப் போச்சு! ஏன் இப்பிடித் தாழ்ந்து போயிட்டம்?… அதும் நம்மட்ட ஒரு அமைச்சரை வெச்சிக்கிட்டு!…" சிவகுருவுக்கு அவமானத்தில் உடல் கூசித் துடித்தது.

"ஆமப்பா, எனக்குக் கூட அது ரொம்ப இதுவாப் போச்சு…" என்று புதுக் குரல் வந்தது. குரல்கள் வந்தன. அமைச்சர் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதாகி விட்டது. நான் வாயைத் திறந்தாலே சிவகுரு மூர்க்கமாகி விடுகிறார், அது ஒரு மன நிலை என்று புரிந்தது. அட நாயே, இந்த அமைச்சர் பதவிக்கே நான் பட்டபாடு, திண்டாடிப் போச்சு. உனக்கு என்னா தெரியும் அரசியல் பத்தி? பேசவன்ட்டான்… என்று ஆத்திரம் உள்ளே உருமிக் கொண்டிருக்க, குளிர்கண்ணாடி வழியே சாதுவாய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறார். நான் ஒரு அமைச்சர் என்கிற மட்டு மரியாதை கிடையாது? இதுங்க பாட்டுக்குத் திட்டம்ன்றாங்க, தீர்மானம்ன்றாங்க… ஹ்ரும்… என உள்ளே காந்தியது. குடலில் மிளகாய்ப் பொடி தூவி விட்டாப் போல… பேசாமல் எழுந்து கொண்டார். இதுக்கு மேல் இங்க நிக்கப்படாது என எச்சரித்தது உள்ளுணர்வு. "நீ துரோகின்னு எங்களுக்குத் தெரியும் டோய்!" என்றார் சிவகுரு எழுந்து வேட்டி கட்டிக் கொண்டே.

இருபதாந் தேதி கல்யாணம். அனந்தராமன் கலிஃபோர்னியா சிலிக்கன் வளாகத்தில் இருந்து பதினெட்டாந் தேதி கிளம்பி, பதினெட்டாந் தேதியே சென்னை விமான நிலையம் வருகிறான். லூப்தான்ஸா. ஓர் ஓட்டலில் தங்குகிறான். அவனது உறவினர்கள் வீட்டில் யாரையும் தொந்தரவு செய்ய விருப்பம் இல்லை. மூன்று பல் – ட்ரைடென்ட் – நட்சத்திர அந்தஸ்து ஓட்டல். அன்றைக்கு இரவே, நேரே காரில் வண்டல்மேட்டுக்கே வந்து விடுகிறான்.

ஐயோ சென்னையில் இருந்தே காரிலா, எனக் கிருஷ்ணவேணி ஆச்சர்யப்பட்டாள். அவள் ரயிலே பார்த்ததில்லை. ஆமாமா, நம்மூர் பஸ்சும் புழுதியும் பார்த்தா, ஆள விடுன்னு அவரு ஓடிருவாரு. தோழிகள் கலகலவென்று சிரிக்கிறார்கள். மாமாவைக் கல்யாண ஏற்பாடுகளைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு, அப்பா மாப்பிள்ளையை அழைத்து வரச் சென்னை போகிறார். கல்யாண மேடையில் வைக்க என்று ஓர் ஏர் கூலர் சொல்லியிருக்கிறது. மாப்பிள்ளை என்னதான் எளிமையான கல்யாணம் போதும் என்று சொன்னாலும், எனக்குன்னு ஒரு கௌரவம், ஆசை எல்லாம் இருக்கே என்றார் அப்பா. கிருஷ்ணவேணி அதைக் கேட்டுப் பெருமூச்சு விடுகிறாள். அவங்கய்யா, கல்யாண முகூர்த்தத்திலேயே போட ஒப்புக் கொண்ட நகை போடவில்லை. பெரிய தகராறாகி விட்டது.

நந்தன்குடியில் பஸ் மறியல் அமைதியாக நடந்தது. அது குறித்து சிவகுருவுக்கு வருத்தந்தான். அத்தோடு மறியலுக்குப் பிறகு முதலமைச்சரிடமிருந்து அறிவிப்பு ஏதும் வராததில் ஆத்திரம் வந்தது அவருக்கு. அவரு இஷ்டப்பட்டாலும் நம்மூர் கூமுட்ட ஒண்ணு இருக்கே… அவன் விட்டிருக்க மாட்டான். "பாரும்வே! நம்ம ஜாதி முன்னேறாததுக்கு நாமளேதான் காரணம்… பாத்துக்கிட்டீரா?"
வண்டல்மேட்டில் விவகாரம் சூடு பிடிக்குமுன் சபாபதி சிற்சபேசனை வந்து பார்த்தார்.

"இந்த பந்த் கிந்த்லாம் வேணாம்வே! நாம ஒண்ணுக்குள்ள ஒண்ணு. ஒத்துமையா இருக்கோம்…" என்று ஆரம்பித்தார். சிற்சபேசனுக்கு அவர் வந்து தன்னைப் பார்த்ததே மூளைக் கொதிப்பாய் இருந்தது. மாட்னாண்டா ஆசாமி. அதுவும் தனியே வந்து தணிந்து பேசுறான். "ஒம்ம ஜாதிக்கு பஸ்சு ஓடுதா இல்லியாவே?" சபாபதி அவரைப் பார்த்தார், பேசவில்லை ஒன்றும். "பின் ஏன் பேசமாட்டீரு? பொத்தீட்டுப் போரும்…" சபாபதி வேறு ஏதோ சொல்ல வந்தவர், தனக்குக் கிடைத்த மரியாதையைக் கண்டு வெதும்பி, "ஒம்ம ஒரு மனுசனா மதிச்சிப் பேச வந்தேம் பாரும். என் புத்தியச் செருப்பாலடிக்கணும்…" என்றபடி அவமானத்துடன் வெளியேறினார்.

"பந்த் நடக்கப்டாது பாத்துக்கங்க" என்றார் சபாபதி தன் சகாக்களிடம்.

"தேவையான கட்டை, கத்தி, ஆயுதம் எது வேணாலும் வெச்சிக்கிடலாம். இந்த பந்த் நடந்தா அது நமக்குதான் கேவலம். நாம தேர்தல்ல ஜெயிச்சவக. நாம பணிஞ்சி போக முடியாது. அந்த அவுசாரி பெத்த பய, என்னா ஆட்டம் ஆடுறான்!… எல்லாம் அவங்காளுங்க குடுக்கற தெம்பு. இல்லாட்டி நாய காலை ஒடிச்சிருவேன். எனக்கு என்னா சப்போட் இருக்கு, நம்மாளுங்க கிட்ட?" என்று கண் சிவக்க நிறுத்தினார். கூட்டம் உணர்ச்சி வசப்பட்டிருந்தது. பறக்கும் படை. ஜாதிச் செம்மல்கள்! சபாபதி ஆத்திரமாய்ப் பேசினார்.

"நீங்கல்லாம் கல்யாணம் கருமாதின்னு வந்து வந்து தின்னத்தான் லாயக்கு."

"அப்டியில்லங்க. நாமளும் மேலடி அடிச்சிப் போனா ஊரு ரெண்டாயிரும்னு, ஒரு இதுதாங்க."

"அடேய்! ஆட்டு மடிலேர்ந்து பாலை இல்ல, ரத்தத்தை உறிஞ்சின வம்சம் நம்ம வம்சம். இப்பிடிக் கழுதை தேஞ்சி கட்டெறும்பாட்டம் ஆயிட்டீங்களே…" என அவர் உசுப்பேற்றினார். எப்படியும் இந்த பந்த்தில் சிற்சபேசனா, சபாபதியா தெரிந்தாக வேண்டும் போலிருந்தது.

"பாத்துக்கிருவம் ஐயா! அவன் வாலாட்டிப் பார்க்கட்டும். ஆஹாங், உங்ககிட்டியே செருப்பெடுத்துக் காட்டீர்க்கான்னா, அவனை சும்மா விடப்டாது. நாளைக்கு நீங்க ஒண்ணும் சொல்லண்டாம். நாங்க பாத்துக்கறோம்."

அப்பா ஒருநாள் முன்னதாகவே சென்னை புறப்பட்டுப் போனார். மறுநாள் பந்த் என்றார்கள். பந்த் என்றால் அடுத்து விபரீதம் இருக்கும் என அப்பா எதிர்பார்க்கவில்லை. சிற்சபேசன் எடுத்துச் சொன்னபோது, அப்பா "அது சரிதான்" என்று புன்னகைத்தார்.பந்த் சுமுகமாக இல்லை.

–முடிவு அடுத்த வாரம்...

About The Author