ஞானத் தழல்

காலை உதயத்துக் கன்னி உஷை
கையில் ஒளிக்கிண்ணம் தாங்குதல்போல்
பாலன்னம் ஏந்தி நடந்து சென்றாள்
பாவை சுஜாதையள் அன்பின் உரு!
சீலன் சித்தார்த்தன் மகா முனிவன்
சிற்றின்பச் சிறைமீளப் புறப்பட்டவன்,
ஞாலப் படைப்பிதன் தத்து வத்தின்
ஞானம் தெளிந்ததால் கண் விழித்தான்!!

மக்கள் குலத்தினர் உற்று வரும்
மரணம் பிணிபசி மூப்பி வற்றின்
துக்கத் தொடர்ச்சியைப் போக்கு தற்காய்
தூயன் துறவறம் பூண்டு வந்தான்!
சுக்கெனக் காய்ந்துடல் வீற்றிருக்கச்
சுரந்திடும் உள்ளத் திரக்கத் தினால்
பக்குவ மாகப்பா லன்னத்தினைப்
பாவை பரிவுடன் ஊட்டி விட்டாள்!!

அன்னை மகவினுக் கூட்டுதல் போல்
ஆசையுடன் அவள் ஊட்டு கையில்
அன்ன முடன்மகா போதத் தையும்
அண்ணல் பெருந்தகைக் கூட்டிவிட்டாள்!
இன்னல் உண்மை; அதன் காரண மாம்
இன்னலின் உற்பத்தி தானும் உண்மை;
இன்னல் அதன்பலன் இன்னற் பரம்பரை
இதுவும் ஒரு உண்மை; ஆத லினால்,

இந்தத் தொடர்ச்சியின் கோடியிலே
இன்னல் களுக்கோர் நிவாரணமும்
வந்திடல் நிச்சயம் என் றுணர்ந்தான்;
வாஞ்சை பெருக்கெடுத் தோடியது!
மந்திரம் ஒன்றுதான் வைய கத்தில்
மானுடர் உய்ந்திடும் மார்க்கம் தரும்;
அந்தச் சொல் அன்பென் றவன் உணர்ந்தான்
அன்புயிர்; ஆண்டவன் அன்புரு; அன்புலகு!

உண்மை உணர்ந்திடப் பற்பல வாய்
ஓடிக் களைத்தபின் அங் கமர்ந்தான்,
பெண்மை வடிவத்தில் சத்தியமும்
பிரேமை உருக் கொண்டு ஞானத் தினைத்
தண்மைக் கரங்களால் ஊட்டியதும்
தாய் ஜகன்மோகினி ஈஸ்வரிதான்!
கண்மணி போன்றவள் மைந்தன் புத்தன்
காரிருள் போக்கிடும் ஞானத் தழல்

போதி விருட்சத் தடியினிலே
போதத்தை உண்டவன் பின்ன ரெங்கும்
போதித்தான் அன்புச் சமயத் தினை!
போகத்தில் ஆழ்ந்திட்ட மாந்தரெல்லாம்
சாதி ஒன்றே அது சத்தியம் தான்;
சாத்திரமும் ஒன்று அன்பின் மறை;
போதும் இனி அல்லல் ஏதுமில்லை!
போயின யாவும் எனத் தொடர்ந்தார்.

About The Author