டிராகனின் முத்து (2)

"ஆமாம், நாம் அரிசியை விற்கலாம்", என்றான் அவனின் நண்பன்.

அன்றிரவு, இருவரும் ஸியாவ்வின் வீட்டுக்குள் புகுந்தனர். இருட்டில் சுற்றும் முற்றும் பார்த்தனர். அரிசி ஜாடியைத் தேடினர்.

"யாரது?", என்று கேட்டார் அம்மா. படுக்கையை விட்டு எழுந்து சமையலறைக்குள் போனாள். பெரிய ஆயுதங்களைக் காட்டி, "மரியாதையாக டிராகன் முத்தை எங்களிடம் கொடுத்து விடு", என்று மிரட்டினர்.

"முடியாது."

ஸியாவ் கண்களைத் துடைத்துக் கொண்டே சமையலறைக்குள் வந்தான். "ஸியாவ் சீக்கிரம், முத்தை நீர் வாளிக்குள்ளிருந்து எடுத்து விடு", என்றாள் அம்மா. திருடர்கள் இருவரும் வாளியின் மீது பாய்ந்தர்கள். ஸியாவ் வெறித்தான். அம்மா புத்திசாலி. அவன் அரிசி ஜாடிக்கு அருகில் ஓடிப் போய் முத்தை எடுத்துக் கொண்டான்.

"ஹேய், இங்க கொடுடா", என்று திருடர்கள் துரத்தினர்.

"முடியாது", என்று சொல்லிக் கொண்டே ஸியாவ் முத்தை வாயில் போட்டு விழுங்கினான்.

"ஸியாவ்!", என்று அம்மா அலறினாள்.

ஸியாவ்வுக்கு வயிறு வலித்தது. நடுங்கிக் கொண்டே முழுங்காலிட்டான். "ஸியாவ்! மகனே", என்று சொல்லி அம்மா அழுதாள். "டிராகன் முத்து விஷம் கொண்டதாச்சே", என்று வருத்தத்துடன் அழுதாள்.

ஸியாவ் அழுது கொண்டே அம்மாவைப் பார்த்தான். வயிற்றில் இருந்த நெருப்பு கால் கைகளுக்குப் பரவியது. வாய், தொண்டை என்று பரவி மண்டையை எட்டியது. கைகளைப் பார்த்தான். அவனின் தோல் பச்சையாகவும் செதில்கள் நிறைந்ததாகவும் மாறிக் கொண்டிருந்தது. "அம்மா, நான் ஒரு டிராகனாக மாறிக் கொண்டிருக்கிறேன்."

அம்மா கதறிய படியே அவனை வெளியே கூட்டிக் கொண்டு போனாள். தரையில் விழுந்து கண்களை மூடிக் கொண்டான். வலி அவனைத் தின்றது. குரல்களையும், இசையையும் இடியோசையையும் கேட்க ஆரம்பித்தான்.

பிறகு ஒரே நிசப்தம்.

கண்களைத் திறந்து பார்த்தான். வலி மறைந்து போயிருந்தது. சுற்றிலும் வண்ணங்கள் மின்னின. வானம் தெளிந்திருந்தது. கீழே பார்த்தான். தரையே இல்லை. டிராகனாகியிருந்த ஸியாவ் இறக்கைகளை ஆட்டிக் கொண்டு நெருப்பை உமிழ்ந்து கொண்டு மேலே அந்தரத்தில் இருந்தான்.

"ஸியாவ்", என்று அம்மா கூப்பிட்டாள். அவள் ஒரு புள்ளியாகத் தெரிந்தான். அவன் அவளை நோக்கிப் போனான். அவளோ கத்தினாள் பயத்தில். அவளைச் சுற்றி இருந்த கூட்டத்துடன் சேர்ந்து ஓடினாள்.

"அம்மா கொஞ்சம் நில்லுங்கள்", என்று சொல்ல முயற்சித்தான் ஸியாவ். வாயிலிருந்து சொற்கள் வரவில்லை. வெறும் நெருப்புக் கங்குகள் தான் வெளியேறின. வானில் மேலே பறந்தான். அங்கே மற்ற டிராகன்கள் இருக்கக் கண்டான். அவனுக்காக சிரித்தபடியே காத்திருந்தனர்.

"கூத்தாடிக் கொண்டாடு. நீ இப்போது ஒரு டிராகன்", என்றன.

அவனும் ஆடினான். கண்களில் மட்டும் தனிமைத் துயரின் கண்ணீர் உருண்டோடியது. அவனின் இறக்கைகள் சேர்ந்து அடித்துக் கொண்டு இடியோசை எழுப்பின.

மழை பொழிய ஆரம்பித்தது.

கீழே, புற்கள் முளைத்தன. பச்சைப் பசேலென்ற புற்கள். ஆனால், அவற்றை வெட்ட தான் அங்கு இல்லை என்றும் அம்மாவுடன் இனி பேச முடியாது என்றும் ஸியாவ் வருந்தினான்.

கூட்டமாய் நின்றிருந்த மக்கள், "உன் மகன் மழை கொண்டு வந்து நம் எல்லோரையும் காப்பாற்றி விட்டான்", என்றனர். மகிழ்ச்சியில் குதித்தனர்.

சோர்ந்து போய் நீரில் கிடந்தான் ஸியாவ். "எங்களோடு வா. அங்கே ஒரு புதிய உலகம் இருக்கிறது உனக்கு", என்று மற்ற டிராகன்கள் கூப்பிட்டன. அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டே ஸியாவ் போனான் அவர்களுடன். கூட்டத்திற்குள் அம்மாவைக் கடைசியாக ஒரு தரம் பார்த்துவிடத் துடித்தான்.

ஒவ்வொரு முறை அவன் திரும்பிப் பார்த்துக் கை அசைக்க முயற்சிக்கும் போதும் ஆற்றங்கரையில் அவனின் இறக்கை சிக்கிக் கொண்டது.

"வருகிறேன் அம்மா."

"போய் வா, என் சின்ன முத்தே", என்றாள் அம்மா மிகுந்த சோகத்துடன்.

சீக்கிரமே முழுவதும் மறைந்து போனான். ஊருக்குப் போகும் வழியில் ஆற்றின் அவனால் ஏற்பட்டிருந்த இருபத்தெட்டு வளைவுகளைத் தவிர அம்மாவுக்கு ஒரு சிறந்த ஒரு மகன் இருந்தான் என்பதற்கான ஒரு சிறு தடயமும் இல்லை.

(முடிந்தது)

(‘மீன்குளம்’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author