டிஸ்லெக்ஸியா பற்றிய உண்மைகள்

டிஸ்லெக்ஸியா என்றால் என்ன?

‘டிஸ்லெக்ஸியா’ என்பது ஒரு கிரேக்க மொழிச் சொல்லாகும். ‘தெளிவற்ற பேச்சு’ என்பது இதன் தமிழாக்கம். மொழியோடு சம்பந்தப்பட்ட இந்தக் கோளாறு வாழ்நாள் முழுக்க இருக்கும். இந்தக் கோளாறு உள்ளவர்கள் வாசிக்கவும், எழுத்துக்களையும், அவற்றிற்குரிய உச்சரிப்புகளையும் சம்பந்தப்படுத்திப் பார்க்கவும் சிரமப்படுவார்கள். இதற்கான அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபடலாம். இது ஒரு மனநோய் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

டிஸ்லெக்ஸியா எதனால் ஏற்படுகிறது?

இதற்கான காரணம் இன்னும் சரியாகத் தெரியவில்லை. பரம்பரை இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். மூளையின் வளர்ச்சியும், செயல்பாடும் மாறுபட்டிருப்பது இதற்கு ஒரு காரணமாக இருந்தாலும், இது ஒருவருடைய அறிவுத் திறனையோ கற்கும் ஆர்வத்தையோ பாதிக்கும் காரணிகளாக இல்லை என ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. மொழியோடு சம்பந்தப்படாத விஷயங்களில் இவர்கள் பெரும்பாலும் படு திறமைசாலிகளாக இருக்கிறார்கள்.

டிஸ்லெக்ஸியாவுக்கு என்ன சிகிச்சை?

இந்தக் கோளாறை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விடுவது இன்றியாமையாதது. கேட்பது, பார்ப்பது, தொடுவது போன்ற பல்வேறு புலன்களைப் பயன்படுத்தி மொழியை கற்றுக் கொள்ள அவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கலாம். இந்த மாணவர்கள் பலருக்கு தனி கவனம் தேவைப்படுகிறது. அப்போதுதான் அவர்களுடைய புரிந்து கொள்ளும் சக்திக்கு ஏற்ப அவர்களால் கற்றுக் கொள்ள முடியும். பள்ளியில் வருகிற பிரச்சினைகள் அவர்களுடைய மனதை பாதிக்கலாம். அதை சமாளிக்க அவர்களுக்கு உதவி தேவைப்படலாம். கடின முயற்சியெடுத்து, தனிப்பட்ட விதமாகச் சொல்லிக் கொடுக்கும்போது, இந்த மாணவர்கள் நன்கு வாசிக்கவும், எழுதவும் கற்றுக் கொள்வார்கள்.

பொதுவான அறிகுறிகள் :

* தமது வகுப்பு மாணவர்களைப் போல, எழுத, படிக்க முடியாமல் தடுமாறுவார்கள்.
* சோம்பேறி என்றோ, "இன்னும் அதிகமாக உழைக்க உன்னால் முடியும்; ஆனால் நீ உழைப்பதில்லை" என்று சொல்லும் வண்ணம் இருப்பார்கள்.
* சில சமயம் நல்ல பொது ஞானம், அறிவு உள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால் எந்தத் தேர்வும் நன்றாக எழுத மாட்டார்கள். அதே சமயம் கேள்விகள் கேட்டால் நன்றாக பதில் சொல்வார்கள்.
* தாழ்வு மனப்பான்மை கொண்டவராகவும், தனியே இருப்பதை விரும்புவராகவும் இருப்பார்கள்
* நல்ல தொழில் திறமை கொண்டிருப்பார்கள். பாடுவது, ஓவியம் வரைவது போன்ற கலைகளில் அல்லது கருவிகளில் (Mechanics) தேர்ச்சி உடையவராக இருப்பார்கள்.
* பகற்கனவு காண்பவராக இருக்கக்கூடும்.
* நல்ல படங்களுடன் கூடிய பாடங்கள், தானாகவே செய்யும் சோதனைகள் மூலம் கற்றல் இவற்றில் நல்ல தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களின் சிந்தனை படங்களாலும்பார்க்கக்கூடிய விளக்கங்களாலும் மேலும் நுணுக்கம் பெறுகிறது.

பார்வை, படித்தல், மற்றும் எழுத்துப் பிழைகள்:

* படிக்கும் போது தலை வலிப்பதாகவும் தலை சுற்றுவதாகவும் சொல்வார்கள்.
* எழுத்துக்கள், எண்கள், சொற்கள் இவற்றில் பல குழப்பங்கள் இருக்கும்.
* திரும்பத் திரும்ப வரும் சொற்களில் குழப்பம், மாறி வரும் எழுத்துக்களின் தடுமாற்றம், எழுத்துக்களை மாற்றிப் படித்தல் இவை சாதாரண நிகழ்வுகள்.
* கண்களில் குறை இருப்பதாக சொல்வார்கள். ஆனால் கண்களிலோ பார்வையிலோ ஒரு குறையும் இருக்காது

கேட்டல், பேசுதல்:

அதிக நேரம் கேட்பதுபோல உணர்வார்கள், சொல்லாததை சொன்னதாகவோ சின்ன சின்ன சப்தங்கள் கூட கவனத்தை சிதைக்கக் கூடியதாக உணர்வார்கள். அதிக மன அழுத்தம் இருப்பின் தவறுகள் அதிகம் செய்வார்கள். மேலும், முழுமையான வாக்கியங்கள் அமைக்க மிகவும் கஷ்டப்படுவார்கள்.

அவர்களின் குறைகளை சரியாகக் கண்டறிந்து, சரியான முறையில் கற்றுவித்தால் சமுதாயத்தில் சிறப்பானதொரு இடத்தைப் பிடிப்பார்கள்.

About The Author

4 Comments

  1. P.Balakrishnan

    இத்தகைய மாணவர்களுக்குத் தகுந்த பயிற்சி அளிப்பதில் அரிமா சங்கங்கள் முனைப்புடன் சேவை செய்கின்றன. – அரிமா இளங்கண்ணன்

  2. suganthi

    என் மகனுக்கும் இதைபோன்ற அரிகூரிகள் இருகிற்து மேலும் விவரங்கள் அரிய
    ஆவலாக உள்ளேன்
    சுகந்தி

  3. k.vigneshvaran

    Iam a clinical psychologist we are treating this cases with special care and attention.we also give counselling for both parents and childrens in madurai kindly contact us in 09789574143

Comments are closed.