டேவிட் – இசை விமர்சனம்

விக்ரம் – ஜீவா இணைந்து நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம். படத்தின் முன்னோட்டம் பளிச்செனவும், வண்ணமயமாகவும், ஈர்க்கும் இசையுடனும் இருக்கிறது. இயக்குநர் பெஜோய் நம்பியாருக்கு இது இரண்டாவது படம். படத்தில் மொத்தம் ஐந்து இசையமைப்பாளர்கள். நம் ஊர் அனிருத் உட்பட.

வாழ்க்கையே

படத்தின் தீம் பாடல். இசை, சற்றே எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதத்தில் தொடங்கி அதைப் பூர்த்தியும் செய்கிறது. வாழ்க்கையில் எல்லாம் மாயையே என்னும் எல்லாருக்கும் தெரிந்த கருத்தையே அழகான பாடலாக்கியிருக்கிறார்கள். சித்தார்த் பஸ்ரூர் பாடியிருக்கிறார்.

வருத்தமாக இருக்கிறதா? இந்தப் பாடலைக் கேளுங்கள், வாழ்வின் அர்த்தம் புரியும்!

"எல்லாம் இங்கே பிரம்மையே!
எல்லோருமே ஒரு பொம்மையே!
எதுவும் இல்லை அட உண்மையே!
கையில் மிச்சம் ஒரு கோப்பையின் வெறுமையே!" – நிதர்சன வரிகள்

கனவே கனவே

இந்தப் பாடலுக்கு இசை அமைத்து, பாடவும் செய்திருக்கிறார் அனிருத். பிரிந்த காதலையும் அதனால் ஏற்பட்ட பாதிப்பையும் பேசும் பாடல். அனிருத்தின் குரல் பாடலுக்குக் கச்சிதப் பொருத்தம். இதைக் கேட்கும்பொழுது நிச்சயம் உங்கள் பிரிந்த காதல் நினைவுக்கு வரத்தான் செய்யும், நீங்கள் காதலித்திருந்தால்.

"கடவுளும் பெண் இதயமும் இருக்குதா இல்லையா" – வலியின் வரிகள்.

மனமே

வாழ்க்கைத் தத்துவம் போதிக்கும் பாடல். இசைச் சேர்ப்பு ஆஹா! தற்கால நிலைப்பாட்டை மிகச் சரியாகக் காதுக்குக் கொண்டு வருகிறது. கார்த்திக் இதைப் பாடியுள்ளார். நிச்சய வெற்றியை இதற்கு எதிர்பார்க்கலாம். ஒவ்வொரு வரியையுமே வர்ணித்து எழுதலாம். ஆனால், இங்கே அதற்கு இடம் போதாது.

"யுத்தம் என்பதில் இரத்தம் என்பது தர்மம்தானடா!
பேயும் தெய்வமும் மனிதா உனது பயமேதானடா!"

"பாதை மாறும்போது நெஞ்சில் அச்சம் தேவையில்லை
ஒரு மன்னன் மரித்தபோது அங்கே புத்தன் தோன்றினானே!" – உத்வேகமூட்டும் வரிகள்.

இரவினில் உலவவா

நரேஷ் அய்யர் – ஸ்வேதா பண்டிட் இணைந்து பாடியிருக்கும் டூயட். மெல்லிதாக மனதை வருடிச் செல்லும் பாடல். முதல் முறையே மனதைக் கட்டிப் போடுகிறது.

"சிரிப்பினில் வதைப்பதும்
சிணுங்கலில் துவைப்பதும்
தவிப்பினைக் கொடுப்பதும் ஏனோ?" – ஏக்க வரிகள்.

தீராது போகப் போக வானம்

புரியாத உச்சரிப்புடன் ஆரம்பிக்கும் பாடல், சிறிது நேரத்தில் தமிழுக்குத் தடம் மாறுகிறது. நிகில் கார்த்திக், ஜாய் சாந்தி பாடியிருக்கிறார்கள். கேட்கும்போதே இனம் புரியாத ஈர்ப்பு மனதில் தொற்றிக் கொள்கிறது. கவலையே வேண்டாம் என்பதுதான் பாடலின் கருப்பொருள். முடிவில் வரும் கர்நாடக இசையின் சேர்ப்பும் ரசிக்கும் ரகம்.

"புதுப் புதுக் கனவில் இளமை துள்ளும் இங்கே
அழகானதே யாவும்!"

மச்சி மச்சி

ராக் பேண்ட் இசைதான் பாடல் முழுவதும். அதிரும் இசை, பேஸ் (Bass), கிடார், டிரம்ஸ் ஆகியவை செவி அதிர ஒலித்தாலும் நம்மிடமும் ஒரு துடிப்பை ஏற்படுத்துகின்றன. தன்னம்பிக்கை தூவுகின்றன.

மரிய பித்தாசே

விக்ரமுடன் இணைந்து இசையமைப்பாளர் ரெமோ ஃபெர்ணாண்டஸ் பாடியுள்ள பாடல். குறும்பு தெறிக்கும் வரிகள், அதற்கு ஏற்ப ஒலிக்கும் கருவிகள் எனப் பாடல் செவிகளை ஈர்க்கிறது. சில போதைத் தத்துவங்களும் பாடலில் அடக்கம்.

படத்தில் ஒருவர் மீனவர், மற்றொருவர் கிதார் இசைக் கலைஞர். இருவருக்கும் நரம்பு சம்பந்தப்பட்ட தொழில் முன்னவருக்கு மீன் வலை, பின்னவருக்குக் கிதார். அதனாலோ என்னவோ நரம்பிசைக் கருவிகளின் தாக்கம் பாடல்களில் அதிகம் தெரிகிறது. 2013 – இன் முதல் இசை ஆல்பம், நல்ல ஆல்பம்.

டேவிட் – கேட்க வைப்பான்.

About The Author