தனிவழிப் பாதைகள் (1)

அவனுக்கும் அவளுக்கும் இடையே நேற்று நடந்த சண்டை புதிதில்லை. சமையல் செய்யும் அலமேலுவைக் கேட்டால் கதை கதையாகச் சொல்வாள். அவர்களது வாக்குவாதங்களைக் கடந்த பத்து வருஷங்களாகத் தினம் தினம் கேட்டு அலமேலுவுக்குப் பழகிவிட்டது. சிலருக்கு வேலை செய்யும்போது கேட்டுப் பழகிவிடும் ரேடியோ சங்கீதம்போல.

எதனால் சண்டை ஆரம்பிக்கிறது என்று அவளுக்குப் புரியாது. தமிழர்களாக இருந்தாலும் அவர்கள் முக்காலும் ஆங்கிலத்திலேயே பேசுவதும், முக்கியமாகச் சண்டைக் காலத்தில் தமிழே கலக்காத ஆங்கிலத்தில் கத்துவதும் அலமேலுவுக்குப் பெரிய குறை.

இங்கு வந்த பிறகு திருமணத்தில் இருந்த கொஞ்ச நஞ்ச ஆசையும் அலமேலுவுக்குப் போய்விட்டது. இளம்பிள்ளை வாதத்தினால் ஒரு கால் சூம்பியிருக்கவில்லையானால் தனக்கும் எல்லாரையும் போல் கல்யாணமாகி குழந்தை குட்டிகள் பிறந்திருக்கும் என்று அவள் சில சமயங்களில் நினைத்துக் கொள்வாள். ஆனால் இங்கு வருவதற்கு முன்பே அவளுள் ஒரு வீம்பு ஏற்பட்டுப் போயிருந்தது: ‘எவனுக்கும் நான் வேண்டாம்னா எனக்கும் ஒருத்தனும் வேண்டாம்.’

ஒரு வகையில் இந்த வீறாப்பு, மிகுந்த சுதந்திரத்தைக் கொடுத்தது. எந்த வம்பிலும் மாட்டிக் கொள்ளாமல் எட்டி நின்று உலகத்தை வேடிக்கை பார்க்க முடிந்தது. கிராமத்தில் புருஷன் பெண்சாதிச் சண்டைகளை அலமேலு நிறையப் பார்த்திருக்கிறாள். நாக்கில் நரம்பில்லாமல் சொல்லப்படும் வசவுகளில் கிட்டத்தட்ட ஓர் உற்சாகம் இருப்பதாகச் தோன்றும். விவஸ்தை இல்லாத ஜனங்க என்று சலிப்பு ஏற்படும். ஆனால் ஆங்கிலம் படித்தவர்கள், தில்லியில் ஆபீஸுக்குப் போகிறவர்கள், நாசூக்காக உடை உடுத்துபவர்கள் சண்டை போடுவார்கள் என்று தெரியாது.
ஐயோ! இவர்கள் பயங்கரமாகச் சண்டை போட்டார்கள். இவர்களது வாதப் பிரதிவாதங்கள் புரியாததால் யார்மேல் தப்பு என்று சொல்வது கடினம்.

‘என்ன விஷயம் எதுக்க இப்படி மாஞ்சு மாஞ்சு சண்டை போடறீங்க’ என்று கேட்க வேண்டும் என அலமேலுவுக்குப் பதைக்கும். ஆனால் கேட்கத் தயக்கமாக இருக்கும். படிக்காத கிராமத்தானுக்குச் சளைக்காமல் இவர்கள் சண்டை போட்டாலும், இவர்களிடம் கொல்லென்று எல்லாரிடமும், முக்கியமாக ஒரு சமையல்காரியிடம் கொட்டிவிடும் சரளம் இல்லை. எல்லாவற்றையும் இறுகப் பூட்டி, தங்களுடைய உள்ளாடைகளில் பதுக்கிக் கொண்டவர்கள் போல் வளைய வந்தார்கள். பெரிய வாக்குவாதம் நடந்து முடிந்திருக்கும்.

கூரை இடிந்து விழுந்துபோன திகைப்புடன் அலமேலுவும், ஏழு வயது பப்புவும், பன்னிரெண்டு வயது சுமியும் வளைய வருகையில் அவளும் அவனும் எதுவுமே நடக்காதது போல பளிச்சென்று அலங்காரம் செய்துகொண்டு அலுவலகத்திற்குக் கிளம்புவார்கள். இடையில் வரும் ஃபோன் கால்களுக்கு உற்சாகமாகப் பதில் சொல்வார்கள். எப்படித்தான் அப்படி ஒரு சிரிப்பு வருமோசெப்புக் காசுகளைக் கொட்டியது போல அவள் கலகலவென்று சிரிப்பதைப் பார்த்தால் இதே வாய் பத்து நிமிஷங்களுக்கு முன் அனலைக் கக்கியது என்று சத்தியம் செய்தாலும் மறுமுனையில் இருப்பவன் நம்ப மாட்டான்.

அவனும்தான் எல்லார் முன்னிலையிலும் தண்ணென்று இருப்பான். சுலபமாகச் சிரிப்பான். அந்தச் சிரிப்பைப் பார்க்கும்போது ‘ஆகா இவனைப் போல் உண்டா?’ என்றிருக்கும். ஏகப்பட்ட சினேகிதர்கள் இருவருக்கும். நினைத்த போது, நேரம் காலம் பார்க்காமல் கதவைத் தட்டி உள்ளே வருவார்கள். உரிமையுடன் "அலமேலு சாய் வேணும்" என்பார்கள்.

அவளும் அவனும் அவர்களும் நடுக் கூடத்தில் விடிய விடிய சிரிக்கச் சிரிக்கப் பேசிக் கொண்டிருப்பார்கள். அலமேலுவுக்கு அலுப்பு வராது. ஆளைக் கண்ட மாத்திரம் அவள் சிரித்த முகத்துடன் கோப்பைகளில் தேநீரை நிரப்புவாள்.

விருந்தினர்கள் கலைந்து அகன்றதும் மாயை விலகும். காலையில் மறுபடி தாட் பூட் சண்டை. ஈசுவரா! சேர்ந்து இருவரும் படுக்கும் கட்டிலில் ஏதானும் பூதம் இருக்கிறதா என்று அவளுக்குச் சந்தேகம். சத்தம் கேட்டு ஆடிக் காற்றில் நடுங்கும் துளிர் இலைகளைப் போல பப்புவும் சுமியும் மிரளுவது அவளுக்குப் புரியும்.

சில சமயங்களில் அந்த பாஷை புரியாத இரைச்சலைக் கேட்கும்போது உடம்பெல்லாம் ஜும்மென்று ஆகும். காளி கோவில் பூசாரிக்கு சாமி வருவதைப் போல உடம்பு ஆடும். அவள் கொல்லைக் கதவைத் திறந்துகொண்டு அங்க கம்மென்று இருந்த பவளமல்லிகை மரத்தைப் பார்த்தபடி அமருவாள் உள்ளே போரில் ஈடுபட்டிருக்கும் இருவரையும் யாராவது வேப்பிலை அடித்தால் நல்லது என்ற நினைப்புடன். இத்தனை பெரிய பட்டிணத்தில் பஞ்சாயத்து என்று ஒன்றும் இல்லாதது விசித்திரமாக இருந்தது.

ஊரில் இப்படித்தான் ஆறுமுக அண்ணாச்சியும், ரஞ்சிதம் அண்ணியும் பழி சண்டை போடுவார்கள். பிறந்த வீட்டுச் செல்லம் ரஞ்சிதம். பார்க்க மூக்கும் முழியுமாக லட்சணமாக இருப்பாள். புருஷனுக்கு வகையாக ஆக்கிப் போடுவதைவிட அக்கம் பக்கத்துச் சோதாப் பயல்களின் இளிப்புப் பேச்சை ரசித்துக்கொண்டு நிற்பாள். ‘ஊர் மேல மேயற கழுதை’ என்று அவள் முடியைப் பிடித்து இழுத்து அண்ணாச்சி அறைந்த அன்று ரோசத்துடன் பிறந்த வீடு சென்றுவிட்டாள். பஞ்சாயத்துக் கூடி சண்டையைத் தீர்த்து வைத்தது. ஆறுமுக அண்ணாச்சியை, ‘வயக்காடே கதின்னு நாள் முழுக்கக் கிடந்தியானா உன் பெண்ஜாதி புத்தி பேதலிச்சுத்தான் போகும்’ என்றது. ‘கடைசி வரை உன் கூட இருக்கப்போறது உன் புருஷன்தான் என்கிறதனாலே அவனைப் பகைச்சுக்காம ஒத்துமையா இருக்கறதுக்கு என்னல்லாம் செய்யணுமோ, அதைச் செய்யவேண்டியது உன் கடமை’ ன்னு ரஞ்சிதத்திற்குப் புத்தி சொல்லிற்று. ‘நா உசத்தி நீ உசத்தி என்கிற பேச்சு இங்க கூடாது. சேர்ந்து இழுக்க வேண்டிய வண்டி. நா என் வழி போறேன். நீ உன் வழி போன்னா வண்டி எதுக்கு?’

மந்திரம் போட்டது போல ரஞ்சிதம் ஆறுமுகத்திடம் திரும்பிச் சென்றது. அலமேலுவுக்கு அதிசயமாகத்தான் இருந்தது. பஞ்சாயத்துத் தீர்ப்பை யாராலயும் எதிர்க்க முடியுமா என்று பொதுவாக எல்லாரும் சொன்னாலும், பிறந்த வீட்டிலே ரஞ்சிதத்துடைய அண்ணன்மார்கள் அவளை இருக்க ஒட்டல்லை என்றார்கள் பெண்கள்.

பட்டிணத்தில் அப்படிப்பட்ட மாயமெல்லாம் நிகழாது என்று அலமேலு சொல்லிக் கொண்டாள். இங்கு எடுத்துச் சொல்ல ஆள் இல்லை. கேட்டுக் கொள்ளவும் ஆள் இல்லை. இத்தனை சினேகிதப் பட்டாளம் வருகிறதே, சிரித்துக் கும்மாளம் போடுகிறதே தவிர நல்லது பொல்லாது சொல்வதாகத் தெரியவில்லை.

(தொடரும்)

About The Author