தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (25)

இசைப்பாணர்

பண்டைக் காலத்தில் தமிழ் நாட்டிலே இசைக்கலையில் வல்லவராயிருந்தவர் பாணர் என்னும் இனத்தவர். சங்ககாலத்திலே பாணர்கள், அரசர் சிற்றரசர் செல்வர் முதலியவர் இல்லங்களுக்குச் சென்று, இசைப்பாடல் பாடினர். ஆகவே, அவர்களால் போற்றப்பட்டார்கள். பாணருக்குப் புரவலர்கள் பொன்னையும் பொருளையும் வழங்கினார்கள். அக்காலத்தில் சமுதாயத்திலே உயர் நிலை பெற்றிருந்த பாணர், சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தாழ்ந்த நிலையை அடைந்து தீண்டப்படாதவர் நிலையில் தாழ்த்தப்பட்டனர்.

கி.பி 7ஆம் 8ஆம் 9ஆம் நூற்றாண்டுகளில் இருந்த பேர் பெற்ற இசைப்பாணர்கள், திருஞான சம்பந்தருடன் இசைப்பண் வாசித்த திருநீலகண்ட யாழ்ப்பாணரும், திருமால் அடியவரான திருப்பாணாழ்வாரும், வரகுண பாண்டியன் காலத்தில் இருந்த பாணபத்திரரும் ஆவர். கி.பி 10ஆம் நூற்றாண்டிலே இசைப்பாணர் மரபு அருகிவிட்டது.

தேவாரத் திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பியும் அபயகுலசேகர சோழமகாராசரும், அத்திருமுறைகளுக்குப் பண் அடைவு தெரியாமல் மயங்கிக் கடைசியில் திருஎருக்கத்தம்புலியூருக்குச் சென்றார்கள். ஏனென்றால், திருஎருக்கத்தம்புலியூரில்தான் திருநீலகண்ட யாழ்ப்பாணரின் பரம்பரையினர் வாழ்ந்திருந்தனர். இவர்கள் தேவாரத்திற்குப் பண்ணடைவு அமைக்கச் சென்றபோது, அவ்வூரில் அக்குலத்தில் இருந்தவர் ஒரு பெண்மணியே. அவ்வம்மையார் அமைத்துக் கொடுத்த பண்அமைப்புகளே இப்போது தேவாரத்தில் காணப்படுகிற பண் அடைவுகள்.

சில இசை நூல்கள்

பண்டைக் காலத்திலே இசைத்தமிழ் நூல்கள் இருந்தன என்று கூறினோம். அவற்றை இங்கு ஆராய்வோம். இசைப்பாட்டாகிய பரிபாடல்களையும் முதுநாரை, முதுகுருகு என்னும் நூல்களையும் முதற் சங்ககாலத்தில் இயற்றினார்கள் என்று இறையனார் அகப்பொருள் உரை கூறுகிறது. இவை இசைத்தமிழ் நூல்கள் என்று தெரிகின்றன.

அடியார்க்கு நல்லார், "இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை, பெருங்குருகும் தேவவிருடி நாரதன் செய்த பஞ்சபாரதீய முதலாவுள்ள தொன்னூல்களுமிறந்தன"1 என்று எழுதுகிறார். இவர் கூறுகிற பெருநாரை பெருங்குருகும், இறையனார் அகப்பொருள் உரை கூறுகிற முதுநாரை முதுகுருகும் ஒன்று போலும். இந்நூல்களைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரத்தில் சிற்றிசை, பேரிசை என்னும் இரண்டு இசைத்தமிழ் நூல்கள் கூறப்படுகின்றன. "என்னை? "அவர்களால் (கடைச்சங்கத்தாரால்) பாடப்பட்டன… எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும், சிற்றிசையும், பேரிசையும் என்று இத்தொடக்கத்தன” என்று வருவது காண்க. இந்த இசைத்தமிழ் நூல்களைப் பற்றியும் வேறு செய்திகள் தெரியவில்லை.

பஞ்சபாரதீயம்

இந்நூலை நாரதர் என்பவர் இயற்றினார் என்றும், இந்நூல் மறைந்துபோயிற்று என்றும் உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் கூறுகிறார்.2 நாரத முனிவர் வழிவந்தது தமிழ் நாட்டு இசைமரபு என்று கூறப்படுவதும் இங்குக் கருதத்தக்கது. இந்தக் கர்ணபரம்பரை வழக்கு, நாரத முனிவர் தமிழில் ‘பஞ்சபாரதீயம்’ என்னும் நூலை இயற்றினார் என்பதனாலும் உறுதிப்படுகிறது. சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளும், நாரதர் இசையைச் சிறப்பாகக் கூறுகிறார். என்னை?

"நாரத வீணை நயந்தெரி பாடல்"3 என்றும், "முதுமறைதேர் நாரதனார் முந்தை முறை நரம்புளர்வார்" என்றும், "குயிலுவருள் நாரதனார் கொளைபுணர்சீர் நரம்புளர்வார்" என்றும் கூறியது காண்க.4

நாரத முனிவர் வடமொழியிலும் ‘நாரத சிட்சை’ என்னும் நூல் இயற்றினார் என்றும், அதுவும் அழிந்து போயிற்று என்றும் கூறுவர்.

நாரதர் இயற்றிய பஞ்சபாரதீயத்திலிருந்து இசை இலக்கணச் சூத்திரம் ஒன்றை அடியார்க்கு நல்லார் தமது உரையில் மேற்கோள் காட்டுகிறார்.5

அச்சூத்திரம் இது:

"இன்னிசை வழிய தன்றி யிசைத்தல்செம் பகைய தாகும்
சொன்னமாத் திரையி னோங்க விசைத்திடுஞ் சுருதி யார்ப்பே
மன்னிய விசைவ ராது மழுங்குதல் கூட மாகும்

நன்னுதால் சிதற வுந்த லதிர்வென நாட்டி னாரே

என்பதனாற் கொள்க. இது பஞ்சபாரதீயம்."

இசை நுணுக்கம்

இந்நூலை இறையனார் அகப்பொருள் உரையாசிரியரும், சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரும் குறிப்பிடுகிறார்கள். அநாகுலன் என்னும் பாண்டியனுடைய மகன் சயந்த குமாரன் (சார குமாரன் என்றும் பெயர்) என்பவனுக்கு இசை கற்பிப்பதற்காக, சிகண்டி என்னும் முனிவர் இந்நூலை இயற்றினார் என்று அடியார்க்கு நல்லார் கூறுகிறார்.6 இசை நுணுக்கத்திலிருந்து நான்கு செய்யுள்களை அடியார்க்கு நல்லார் மேற்கோள் காட்டுகிறார்.7 அவர் மேற்கோள் காட்டும் செய்யுள்களில் ஒன்று இது:

"என்னை?

செந்துறை வெண்டுறை தேவபா ணியிரண்டும்
வந்தன முத்தகமே வண்ணமே – கந்தருவத்
தாற்றுவரி கானல் வரிமுரண் மண்டிலமாத்
தோற்று மிசையிசைப்பாச் சுட்டு

என்றார் இசை நுணுக்கமுடைய சிகண்டியாரென்க."

பஞ்ச மரபு

இந்த இசைத்தமிழ் இலக்கண நூலைச் செய்தவர் அறிவனார் என்பவர். இந்நூலை அடியார்க்கு நல்லார் தமது உரையில் குறிப்பிடுகிறார். இந்நூல் செய்யுள் ஒன்றையும் தமது உரையில்8 மேற்கோள் காட்டுகிறார். அச்செய்யுள் இது:

"என்னை?

செப்பரிய சிந்து திரிபதை சீர்ச்சவலை
தப்பொன்று மில்லாச் சமபாத – மெய்ப்படியுஞ்
செந்துறை வெண்டுறை தேவபாணி வண்ணமென்ப
பைந்தொடியா யின்னிசையின் பா

என்றார் பஞ்ச மரபுடைய அறிவனா ரென்னு மாசிரிய ரென்க."

பதினாறு படலம்

இந்த இசைத்தமிழ் நூலைச் சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர் தமது அரும்பதவுரையில் குறிப்பிடுகிறார்; அன்றியும், இந்நூலிலிருந்து ஒரு சூத்திரத்தையும் மேற்கோள் காட்டுகிறார்.9

"தெருட்ட லென்றது செப்புங் காலை
யுருட்டி வருவ தொன்றே மற்ற
வொன்றன் பாட்டு மடையொன்ற நோக்கின்
வல்லோ ராய்ந்த நூலே யாயினும்
வல்லோர் பயிற்றுங் கட்டுரை யாயினும்
பாட்டொழிந் துலகினி லொழிந்த செய்கையும்
வேட்டது கொண்டு விதியுற நாடி

என வரும். இவை, இசைத் தமிழ்ப் பதினாறு படலத்துள் கரணவோத்துட் காண்க."

–கலை வளரும்..
.

________________________________________
1. சிலப்பதிகாரம், உரைப்பாயிரம்.
2. சிலப்பதிகாரம், உரைப்பாயிரம்.
3. சிலம்பு., கடலாடு காதை.
4. சிலம்பு., ஆய்ச்சியர் குரவை ஒன்றன் பகுதி.
5. வேனிற் காதை, 29, 30 வரிகளின் உரை.
6. சிலம்பு., உரைப்பாயிரம்.
7. சிலம்பு., அரங்கேற்று காதை, 26ஆம் வரி உரையிலும், கடலாடு காதை., 35, 36ஆம் வரி உரையிலும்
8. சிலம்பு., கடலாடு காதை, 35ஆம் வரியில் வருகிற "மாயோன் பாணி" என்பதன் உரை.
9. சிலம்பு., கானல்வரி, "வார்தல் வடித்தல்……செவியினோர்த்து" என்பதன் அரும்பதவுரை.

About The Author