தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (2)

நமது முன்னோர் அழகுக் கலைகளை எவ்வாறு போற்றி வளர்த்தார்கள் என்பதைக் காண்போம். இவற்றை ஆராய்வதற்கு முன்னர், முத்தமிழ்ப் பேராசிரியர் அருள்திரு.விபுலானந்த அடிகளார், தமது யாழ் நூலிலே அழகுக் கலைகளின் பொதுவான சில இலக்கணங்களைக் கூறியுள்ளதை எடுத்துக்காட்டுவது சிறப்புடையதாக இருக்கும். அவை பின்வருமாறு:

இயற்றமிழ்

"அகரமுதல் னகரவிறுவாயாகிய முப்பதும், சார்ந்து வரன் மரபினவாகிய மூன்றும் என்னும் முப்பத்து மூன்று எழுத்துக்களைத் தொழிற்படுத்துதலினாலே, இயற்றமிழானது பொருள் பொதிந்த சொற்களை ஆக்கி, அவை கருவியாகப் பாரகாவியங்களையும் நீதிநூல்களையும் வகுத்து, இம்மை மறுமைப் பயனளிக்கின்றது."

இசைத்தமிழ்

"சரிகமபதநி என்னும் ஏழு ஓசை கருவியாக இசைத் தமிழானது ஏழ்பெரும் பாலைகளை வகுத்து, அவை நிலைக்களமாக நூற்றுமூன்று பண்களைப் பிறப்பித்து, அவை தமது விரிவாகப் பதினோராயிரத்துத் தொண்ணூற்றொன்று என்னுந் தொகையினவாகிய ஆதியிசைகளை யமைத்து, இம்மையின்பமும் தேவர்ப் பரவுதலானெய்தும் மறுமையின்பமும் பெறுமாறு செய்கின்றது."

நாடகத் தமிழ்

"நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்னும் மெய்ப்பாடுகளை நிலைக்களமாகக் கொண்டு, உள்ளத்துணர்வினாலும், உடலுறுப்பினாலும், மொழித்திறனாலும், நடையுடையினாலும் அவை தம்மைத் தொழிற்படுத்தி, இருவகைக் கூத்து, பத்து வகை நாடகம் என்னுமிவற்றைத் தோற்றுவித்து, நாடகத் தமிழ் உள்ளத்திற்கு உவகையளிக்கின்றது."

ஓவியம்

"நேர்கோடு, வட்டம், முக்கோணம் ஆகிய மூன்று மூலவடிவங்களினின்று தோன்றிய உருக்கள் எண்ணிறந்தன. எல்லா வகையான வர்ணங்களும் அமைந்த அழகிய படங்களை அச்சியற்றுவோர் பயன்படுத்தும் நிறங்கள் மஞ்சள், சிவப்பு, நீலம் என்னும் மூன்றுமேயாம்.

இவ்வாறு ஆராயுமிடத்து, கண்ணினாலும், செவியினாலும், உள்ளத்தினாலும் உணர்ந்து இன்புறற்பாலவாய், அழகுக்கலையுருக்களெல்லாம் ஒருசில மூலவுருக்கள் காரணமாகத் தோன்றி நின்றனவென்பது தெளிவாகின்றது.

உருக்களை ஆக்கிக்கொள்ளும் முறையினைக் கூறும் நூல்கள் பொதுவியல்புகளை வகுத்துக் காட்டுவன. புலவன், இசையோன், கூத்தன், ஓவியன் என்ற இன்னோர், தமது சொந்த ஆற்றலினாலே, நுண்ணிய விகற்பங்களைத் தோற்றுவித்துச் செம்மை நலஞ் சான்ற உருக்களைப் பெருக்குதலினாலே அழகுக் கலைகள் விருத்தியடைகின்றன.

இவ்வாறு நோக்குமிடத்து, புத்தம் புதிய உருவங்களைப் படைத்துத் தருதலே கவிஞர் முதலிய அழகுக் கலையோர் இயற்றுதற்குரிய அருந்தொழில் என்பது புலனாகின்றது. மரபு பட்டு வந்த உருவங்களிற் பயின்றோர் நுண்ணுணர்வுடையராயின், புதிய உருவங்களை எளிதின் அமைப்பர். முன்னிருந்து இறந்துபட்ட உருவங்களை ஆராய்ந்து கண்டறிதற்கும் அத்தகைய பயிற்சியும் நுண்ணுணர்வும் வேண்டப்படுபவேயாம்."1

இவ்வாறு அடிகளார், அழகுக் கலைகளின் பொது இலக்கணத்தை விளக்கிக் கூறினார். நிற்க.

இனி, தமிழ்நாட்டிலே நமது முன்னோரால் வளர்க்கப்பட்ட பழைய அழகுக்கலைகளைப் பற்றித் தனித்தனியே ஆராய்வோம்.

–கலை வளரும்…

1- யாழ்நூல், பக்கம் 361, 362.

About The Author