தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (17)

சோழர் பிரதிமைகள்

பஞ்ச லோகத்தினாலே பிரதிமை உருவங்களைச் செய்யும் வழக்கம், பிற்காலச் சோழர் காலத்தில் ஏற்பட்டது. தஞ்சாவூர்ப் பெரிய கோயில் சாசனம் ஒன்று, கோயில் அதிகாரியாயிருந்த ஆதித்தன் சூரியன் என்னும் தென்னவன் மூவேந்த வேளான் என்பவன் அக்கோயிலிலே இராஜராஜ சோழன், அவன் அரசி உலகமாதேவி ஆகிய இருவருடைய செப்புப் பிரதிமையுருவங்களைச் செய்து வைத்த செய்தியைக் கூறுகிறது. அது வருமாறு:

"ஸ்ரீ உடையார் ஸ்ரீ ராஜராஜீஸ்வரம் உடையார்க்கு ஸ்ரீகார்யஞ் செய்கின்ற பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூர்யனான தென்னவன் மூவேந்த வேளான் ராஜராஜீஸ்வரம் உடையார் கோயிலில் பாண்டு இருபத்தொன்பதாவது வரை எழுந்தருளுவித்த செப்பு பிரதிமங்கள்…"

"பாதாதிகேசாந்தம் ஒரு முழமே நால்விரலரை உசரத்து இரண்டு திருக்கையுடையராகக் கனமாக எழுந்தருளுவித்த பெரிய பெருமாள் பிரதிமம் ஒன்று. இவர் எழுந்தருளி நின்ற ஐய்விரலே இரண்டு தோரை உசரத்து பத்மம் ஒன்று. இதனொடுங்கூடச் செய்த ஒன்பதிற்று விரற் சம சதுரத்து ஐய்விரலே ஆறுதோரை உசரத்து பீடம் ஒன்று."

"இருபத்து இருவிரலே இரண்டு தோரை உசரத்து இரண்டு திருக்கையுடையராகக் கனமாக எழுந்தருளுவித்த இவர் நம்பிராட்டியார் ஒலோகமாதேவியார் பிரதிமம் ஒன்று. இவர் எழுந்தருளி நின்ற ஐய்விரல் உசரத்து பத்மம் ஒன்று. இதனோடுகூடச் செய்த ஒன்பதிற்று விரற் சம சதுரத்து ஐய்விரலே இரண்டு தோரை உசரத்து பீடம் ஒன்று."1

இச்சாசனத்தில் கூறப்படும் பெரிய பெருமாள் என்பது இராஜராஜ சோழரைக் குறிக்கிறது. ஒலோகமாதேவியார் என்பது இராஜராஜனுடைய அரசியின் பெயர்.

திருக்காளத்திக் கோயிலில் இருந்த மூன்றாங் குலோத்துங்கன் பிரதிமையுருவம் செப்பினால் செய்யப்பட்டது. இது இவ்வரசன் இளைஞனாக இருந்தபோது செய்த பிரதிமையுருவம். இவ்வரசனுடைய மற்றொரு பிரதிமையுருவம் காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோயில் உட்கோபுரத்துக்கு அருகில் இருக்கிறது. இது கற்சிலையால் செய்யப்பட்டது. காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் இருந்த இவ்வரசனுடைய சுதையுருவம் இப்போது அழிந்துவிட்டது.

வேறு பிரதிமைகள்

விஜயநகரத்து அரசர் கிருஷ்ணதேவராயரின் செப்புப் பிரதிமையுருவம் திருப்பதிக் கோயிலில் இருக்கிறது. இவருடைய கற்சிலைப் பிரதிமையுருவம் சிதம்பரம் கோயிலில் இருக்கிறது. தஞ்சாவூர், மதுரை இவ்விடங்களில் அரசாண்ட நாயக்க மன்னர்களின் பிரதிமையுருவங்களும், கம்பநாடர், அப்பைய தீக்ஷிதர் முதலியவர்களின் பிரதிமையுருவங்களும் தமிழ் நாட்டு வெவ்வேறு கோயில்களில் காணப்படுகின்றன. தென்னாட்டுப் பிரதிமையுருவங்களைப் பற்றி ஆங்கிலத்தில் நூல்கள் உள்ளன. ஆனால், அவையும் விரிவாகக் கூறவில்லை. தமிழ் நாட்டுப் பிரதிமையுருவங்களைப் பற்றித் தமிழிலே விரிவாக ஒரு நூலேனும் இதுவரையில் எழுதப்படாதது வருந்தத்தக்கது.

அலங்காரம் ஏன்?

கோயில்களிலே வணங்கப்படும் சிற்ப உருவங்களைப் பற்றி ஒரு செய்தி கூறவேண்டும். கல்சிற்ப உருவங்களும் செம்புச் சிற்ப உருவங்களும் ஆன தெய்வத் திருவுருவங்களுக்கு வேஷ்டி, சேலை முதலிய துணிகளை உடுத்தி வருகிறார்கள். இது அநாவசியமானதும் தவறானதும் ஆகும்.

வேஷ்டி, சேலை முதலிய ஆடைகளைச் சிற்ப உருவத்தில் அமைத்துச் சிற்பிகள் அவ்வுருவங்களை அமைத்திருக்கிறார்கள். சிற்பிகள் அவ்வுருவங்களை நிர்வாணமாக, அம்மணமாக அமைக்கவில்லை. அப்படி இருக்க, அச்சிற்ப உருவங்கள்மேல் துணிகளை உடுத்தி விகாரப்படுத்துவது அச்சிற்பங்களின் இயற்கையழகை மறைத்து விடுவதாகும். நடராசர், சோமஸ்கந்தர், சுப்பிரமணியர், சிவகாமசுந்தரி, பெருமாள், கணபதி, பூதேவி, ஸ்ரீதேவி முதலிய சிற்பங்கள் உள்ளது உள்ளவாறே காணும்போது எவ்வளவு அழகாகக் காணப்படுகின்றன! அவற்றிற்குத் துணிகளை உடுத்திப் பார்க்கும்போது, அவற்றின் அழகு கண்ணுக்குப் புலப்படாமல் போய்விடுகின்றது.

இச்செயல், வேண்டுமென்றே அவற்றின் அழகை மறைத்து, அவற்றை விகாரப்படுத்துவதைப் போலக் காணப்படுகிறது.

(அடுத்த இதழிலிருந்து – ‘ஓவியக்கலை!’)

________________________________________
1. No.98,pp.154-155.S.I.I. Vol.II

About The Author