தமிழுக்கு முதலிடம் – லூர்து நகர் திருத்தலத்தில் ! (1)

லூர்து நகர் – மேலை நாடுகளின் வேளாங்கண்ணி! பிரான்சு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் பிரனி மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள சிற்றூர். பரி (Paris) நகருக்கு அடுத்தபடியாக சுற்றுலாப் பயணிகள், திருப்பயணிகள் அதிகம் வந்து போகும் இடம். உலகின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் மக்கள் இங்கே வந்து கூடுகின்றனர். வேளாங்கண்ணியைப் போலவே சாதி, மதம், இன பேதங்களைக் கடந்து மக்கள் திரளாக இங்கு வருவதற்குக் காரணங்கள் இரண்டு.

முதல் காரணம் – 150 ஆண்டுகளுக்கு முன்னர் மசபியல் என்ற குகையில் அன்னை மரியாள் பெர்னதெத் சுபிரு (Bernadette SOUBIROUS) என்ற சிறுமிக்குப் பதினெட்டு முறை காட்சி தந்தது. இரண்டாம் காரணம் – அதன் பின் இன்று வரை அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் எண்ணற்ற புதுமைகள்.

இதுவரை 7000க்கும் மேற்பட்ட புதுமைகள் நடைபெற்றுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், கத்தோலிக்கத் திருச்சபை இவற்றில் 67 புதுமைகளை மட்டுமே அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. இவைகளும் கடுமையான சோதனை, பரிசோதனை, மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தப்பட்டே இவை புதுமைகள்தாம் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆவணங்களை எந்த ஆராய்ச்சியாளரும் எந்த மருத்துவரும் பார்வை இடலாம்.

அங்கே அன்னை மரியாள் காட்சி தந்த 150 ஆம் ஆண்டை இந்த ஆண்டு சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். 2007ஆம் ஆண்டு, திசம்பர் 8 ஆம் தேதி முதல் இந்த ஆண்டு தெசம்பர் 7 ஆம் தேதி வரை இந்தக் கொண்டாட்டங்கள் தொடருகின்றன. கடந்த ஆண்டு இந்தக் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைக்கும் பெருமை உரோமில் இருக்கும் நம் இந்தியக் கர்தினால் பெரும் பேரருட் பெருந்தகை இவான் டையஸ் (Ivan Cardinal Dias) ஆண்டகைக்குக் கிடைத்தது. திருத்தந்தை பாப்பரசர் 16 ஆம் ஆசீர்வாதப்பர், இவரைத் தம் திருத்தூதராக அனுப்பி வைத்தார்.

அது முதல், ஒவ்வொரு மாதமும் உலகில் உள்ள பல மொழி, இனத்தவருக்கு வாய்ப்புகள் வழங்கி அந்தந்த இனம் மொழிகளில் வழிபாடு நடத்த லூர்து திருத்தலப் பேராலயப் பேராயம் அழைப்பு விடுத்தது. அத்தகைய அழைப்பைப் பெறும் பேறு உலகளாவிய தமிழர்களுக்குக் கிடைத்தது. ஆகஸ்ட் 8, 9, 10 தேதிகள் நமக்காக ஒதுக்கப்பட்டன. இம்மூன்று நாட்களிலும் முதல் மரியாதை நம் தமிழுக்கே! முக்கிய நிகழ்ச்சிகளில் தமிழர்க்கே முதலிடம்.

இவற்றை முன்னின்று நடத்தித் தரும் பொறுப்புகள் பரியில் உள்ள இந்தியத் தமிழ்க் கத்தோலிக்க ஞானகத்திடமும் (Aumônerie Catholique Tamoule Indienne) இலங்கைத் தமிழ்க் கத்தோலிக்கப் பணியகத்திடமும் (Aumônerie Catholique Tamoule Sri Lankasie) ஒப்படைக்கப்பட்டன. இவ்விரு ஞானகத்தின் தலைவர்களும், பொறுப்பாளர்களும் பலமுறை ஒன்று கூடிப் பேசி, விவாதித்து முடிவுகள் எடுத்தனர். இக்கூட்டங்களில் கலந்துகொள்ள லூர்து திருத்தலப் பேராலயத் தமிழ்த் திருப்பயணிகள் பொறுப்பாளரான அருட்தந்தை ழோசெ அன்தோனியோ என்ற இத்தாலியர் பல முறை லூர்து நகரில் இருந்து பரிநகர் வந்து சென்றார். தமிழ்த் திருப்பயணிகள் உதவிக்காக லூர்து திருத்தலத்தில் அருட்தந்தை அன்புராசா OMI என்ற இலங்கைக் குரு நியமிக்கப்பட்டார்.

ஆகஸ்ட் 8 ஆம் நாள் காலை, உலகளாவிய தமிழர்கள் – கிறித்துவர்கள், கத்தோலிக்கர்கள், இந்துக்கள், முகமதியர்கள் லூர்து நகரில், ‘ஒரே உடலும் ஒரே உயிருமாய்’ ஒன்று கூடினர். பிரான்சின் பல பகுதிகளில் வாழும் இந்திய, இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்லாமல், இங்கிலாந்து, செருமனி, சுவிசு… போன்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை உள்ள பல நாடுகளில் இருந்தும் தமிழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

காலை 9 மணிக்குத் தொடக்கத் திருப்பலி ஆடம்பர பவனியோடு தொடங்கியது. இலங்கைத் தமிழ்க் கத்தோலிக்கப் பணியகத்தின் தலைவர் அருட்தந்தை அமலதாஸ் OMI அவர்கள் தலைமையில், அருட்தந்தை ழோசே அன்தோனியோ, இந்தியத் தமிழ்க் கத்தோலிக்க ஞானகத்தின் தலைவர் அருட்தந்தை ஜெர்மானுஸ் முத்து முன்னிலையில் பல குருக்கள் புடை சூழக் கூட்டுத் திருப்பலி முழுக்க முழுக்கத் தமிழில் நடைபெற்றது. இதில் மறையுரை ஆற்றியவர் இந்திய ஞானகத்தின் முன்னாள் தலைவர் அருட்தந்தை முனைவர் ஜோசப் வலான்டின். தற்பொழுது அமெரிக்காவில் பணியாற்றும் இவர் இந்த விழாவுக்காகச் சிறப்பு வருகை தந்திருந்தார்.

திருப்பலி தொடக்கத்தில் நம் ஊர் வழக்கப்படி குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. திருப்பலிப் பாடல்களை இலங்கைத் தமிழ் மக்கள் அழகாகப் பாடினர். திருமதி நிர்மலா செல்வநாயகம் என்ற இலங்கை சகோதரி organ வாசிக்க இந்தியத் தமிழர்களான திரு சேர்ழ் போன்பப்பா கித்தாரும், திரு மத்தியாஸ் போர் தபேலாவும் வாசித்தனர். சின்ன எழுந்தேற்றத்தின் (doxology) போது, பாடற்குழுவினர் அஞ்சலி பாட்டுப் பாட, இலங்கை இளம் பெண்கள் மூவர் அழகாக ஆரத்தி எடுத்தனர். பாடற்குழு, திருவழிபாட்டுக் குழுவுக்குப் பொறுப்பாளராகச் செயல்பட்டவர் இலங்கைத் தமிழர் திரு சில்வெஸ்தர்.

இவ்வண்ணம் சிறப்பாக நடந்தேறிய திருப்பலி நிறைவு பெறும் முன் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, தமக்கே உரிய நகையும் சுவையும் கலந்த முறையில் வெண்கலத் தொனியில் அறிவிப்புகள் வழங்கியதை அனைவரும் ரசித்தனர். இத்தகைய அறிவிப்புகளும் மக்களின் ரசிப்பும் மூன்று நாட்களும் தொடர்ந்தன.

மதியம் 3 மணி அளவில் மரியன்னை கருத்தரங்கு தொடங்கியது. கருத்தரங்குக்குப் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ தலைமை தாங்கி, வழக்கம் போல் மெல்லிய நகைச்சுவை இழையோட கருத்தரங்கை நடத்திச் சென்றார். கருத்தரங்கில் உரையாற்றிய திருமதி சகாயம் ழான் பென்ழாமென் அன்னை மரியைப் பற்றிய பல தகவல்களைச் சிறப்பாக எடுத்துரைத்தார். மரி அன்னையின் திருநாமங்களையும் அவற்றின் பொருள்களையும் நன்கு விளக்கினார். மரியாளின் மனித குணங்களையும், புனித மாண்புகளையும் அழகாக விளக்கினார்.

அவரைத் தொடர்ந்து உரையாற்றிய திருமதி லூசியா லெபோ, லூர்து நகரில் அன்னை மரியாள் கொடுத்த 18 காட்சிகளையும் விளக்கித் திருப்பயணத்தின் நோக்கங்களையும் சிறப்பாக எடுத்துரைத்துப் பாராட்டு பெற்றார். முன்னிலை வகித்த அருட்தந்தை முனைவர் ஜோசப் வலான்டின் இரு மகளிரின் உரைகளை அலசி அவற்றின் நுட்பங்களைப் புலப்படுத்தினார். கருத்தரங்கில் ஏராளமான திருப்பயணிகள் கலந்துகொண்டனர். கருத்தரங்கு நிறைவுக்குப் பின் ஒப்புரவு திருவருட் சாதனம் (confession) வழங்கப்பட்டது. இரவு 9 மணிக்குத் திவ்விய நற்கருணை ஆராதனை பக்தியுடன் நடந்தேறியது.

மறுநாள் காலை 9.45 மணிக்குக் கெபியில் ஆடம்பரத் திருப்பலியை இந்திய ஞானகத் தந்தை ஜெர்மானுஸ் முத்து குருக்கள் புடைசூழ நிறைவேற்றினார். திரு செர்ழ் போன்பப்பா தலைமையில் இயங்கிய இந்தியத் தமிழ்ப் பாடற் குழுவினர் வருகைப் பாடலைப் பாட 10 இந்திய, இலங்கைத் தமிழ்த் தம்பதியர்கள் கையில் அகல்விளக்கு ஏந்தி பவனி வந்தனர். விழாவுக்குரிய பெரிய வத்தி ஒன்றைத் திருமதி ஒதில் கியொன் என்ற தமிழ்ப் பெண் ஏந்தி வர, இந்துத் தம்பதி டாக்டர் சுரேஷ் ராமசாமியும் அவர் துணைவியும் உடன் வந்தனர்.

இந்திய, இலங்கை ஞானகங்களின் பதாகைகள், வேளாங்கண்ணி அன்னையின் படம் தாங்கிய கொடி, இலங்கை மடுமாதாவின் உருவம் பொறித்த பதாகை, இங்கிலாந்து நாட்டில் இயங்கிவரும் இலங்கை ஆன்மிகப் பணியகத்தின் கொடி முதலியனவும் பவனியில் கலந்துகொண்டு வலம் வந்தன. வண்ணமயமாக விளங்கிய இப்பவனி தமிழர்களை மட்டும் அல்லாது பிற நாட்டவர்களையும் கவர்ந்ததில் வியப்பில்லை! தலையா, கடல் அலையா என்று கேட்கும் அளவுக்குக் கூட்டம் நிரம்பி வழிந்தது.

முதல் வாசகத்தை இந்தியத் தமிழர் திரு கலைச்செல்வன் மிகச் சிறப்பாக உரத்த குரலில் படித்தார். அவர் போலவே, நற்செய்தியை (Gospel), இந்தியத் தமிழர் தியாக்கோன் மரியூஸ் பெசோன் அருமையான குரலில் எடுப்பாகப் படித்தார். இங்கிலாந்தில் இலங்கை ஆன்மீகப் பணியகத்தின் தலைவர் அருட்தந்தை யூஜின் பிரான்சிஸ் மிக உருக்கமாக மறையுரை ஆற்றினார்.

காணிக்கை பவனியில் மக்கள் பலரும் மலர்ச்செண்டுகளைக் காணிக்கையாக அளித்தனர். சின்ன எழுந்தேற்றத்தின்போது (doxology) இந்தியப் பாடற்குழு அழகாக அஞ்சலி பாடலைப் பாட, இந்திய இளம் பெண்கள் மூவரும், இலங்கை இளம் பெண்கள் மூவரும் சேர்ந்து ஆரத்தி எடுத்த காட்சி அனைவரையும் கவர்ந்தது. இவை யாவற்றையும் ‘Jour du Seigneur’ என்ற தொலைக்காட்சி நிலையத்தினர் படம் பிடித்ததோடு, கலந்துகொண்ட பலரையும் பேட்டியும் கண்டனர். திருப்பலி நிறைவுக்குப்பின் அகில உலக தமிழ் மக்கள் யாவரும் பேராலய முகப்பில் நின்று ஒரே குழுவாகப் படம் பிடித்துக்கொண்டனர்.

(மீதி அடுத்த இதழில்)

About The Author

3 Comments

  1. Father A.Francis

    அன்புள்ள தமிழ்த் தோழர்களே,
    தீந்தமிழ்ப் பாக்களால் லூர்து நகரில் இறைவனுக்குப் புகழ் மாலைச் சாற்றிய செய்தி எனது நெஞஜத்தில் இன்பத் தேனாகப் பாய்கின்றது. இதனை முன்னின்று நடத்திய அனைவருக்கும் எனது பராட்டுக்கள்.
    வாழ்க தமிழ். வளர்க தமிழர்.

  2. Gilbertarulthas

    இவ் தகவல்லை நன் புத்தகத்தில் அல்லது பத்திரிகைஜில் எளூதலாமா?

Comments are closed.