தரணி போற்றும் கிரிக்கெட் தாரகை

மராத்திய மண் தந்த கிரிக்கெட் தாரகை (நட்சத்திரம்) – சச்சின் ரமேஷ் டென்டுல்கர் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். கடந்த 14.11.2013 அன்று ஆடி முடித்த தனது இறுதி ஆட்டத்துடன் 34,357 ஓட்டங்களை மொத்தமாகக் குவித்து, கிரிக்கெட் போட்டியிலிருந்து விடைபெற்றிருக்கின்றார்! கிரிக்கெட்டில் தனியோர் ஆட்டக்காரரின் உச்சக்கட்டச் சாதனை இது!

இந்தியக் குடிமக்களுக்கான உயர்பெரும் விருதாகிய ‘பாரத ரத்னா‘ விருது டென்டுல்கருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய அணியை வென்ற சில மணி நேரங்களிலேயே இந்தச் செய்தி வெளியிடப்பட்டது. இந்த விருதைப் பெறும் முதல் விளையாட்டு வீரர் இவர்தான்; அதுவும் இளம் வயதில் (40 வயது)!

சச்சின் இறுதியாக விளையாடியது அவரது 200ஆவது டெஸ்ட் போட்டி. 16 வயதில் தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடி 24 வருடங்கள் கழித்து இந்த 200ஆவது டெஸ்ட் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கட்டில் இவர் எடுத்த மொத்த ஓட்டங்கள் 15,921! 2500 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தில் இருப்பவர், இன்றும் ஆட்டத்தைத் தொடரும், மாஜி ஆஸ்திரேலிய அணித் தலைவர் ரிக்கி பான்டிங்.

மும்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட சச்சினின் தந்தை ஒரு மராத்திய நாவலாசிரியர். அவர் தனக்குப் பிடித்த இசையமைப்பாளரான சச்சின் தேவ் பர்மனின் பெயரை மகனுக்குச் சூட்டினார். 11 வயதிலேயே துடுப்பாட்ட மட்டையைப் பிடிக்கத் தொடங்கிவிட்ட இந்த அசாத்திய மனிதர் 16 வயதில் பாகிஸ்தானுக்கு எதிராகத் தனது முதல் டெஸ்ட் பந்தயத்தில் ஆடினார். இன்றைய நிலையில் பன்னாட்டுக் கிரிக்கெட் போட்டிகளில் 100 சதங்கள் அடித்துக் குவித்தவர் இவர் மட்டுமே. அது மட்டுமல்ல, ஒரு நாள் போட்டியில் முதல் இரட்டைச் சதம் அடித்ததும் இவர்தான். பன்னாட்டுக் கிரிக்கட் விளையாட்டுக்களில் 30,000 ஓட்டங்கள் தாண்டிய முதல் துடுப்பாட்டக்காரரும் இவர்தான்!

2002இல் உலகப் புகழ்பெற்ற கிரிக்கட் களஞ்சியம் Wisden Cricketers’ Almanack கிரிக்கட் உலகில் டொன் பிராட்மானுக்கு அடுத்த சிறந்த டெஸ்ட் வீராராக இவரைத் தெரிவு செய்தது. ஒரு நாள் ஆட்டங்களிலும் விவியன் ரிச்சார்ட்ஸை அடுத்து இவரையே அடுத்த சிறப்பான ஆட்டக்காரராக அறிவித்தது. இதுவரை கிரிக்கெட் உலகில் ஒளிர்ந்த 11 நட்சத்திர வீரர்களைக் கொண்டு ஓர் அணியை விஸ்டன் தெரிவு செய்தபோது, அதில் இடம்பெற்ற ஒரேயொரு இந்திய வீரர் சச்சின் டென்டுல்கர்!

இங்கிலாந்தின் யோர்க்ஷயர் மாவட்டம் 1992இல் முதற் தடவையாக ஒரு வெளிநாட்டு ஆட்டக்காரான சச்சினைத் தன் அணிக்கு எடுத்துக் கொண்டது. வெளிநாடுகளில் இருந்தோ அயல் மாவட்டங்களில் இருந்தோ கூட அதுவரையில் எந்தக் கிரிக்கெட் வீரரையும் தன் அணியில் சேர்த்துக் கொள்ளாதது யோர்க்ஷயர் குழு என்பது இங்கே குறிப்பிட வேண்டியது.

1994இல் தேசிய விளையாட்டுக்களில் அற்புதச் சாதனையாளர் என்பதற்காகச் சச்சினுக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. அடுத்து 1997இல், விளையாட்டு வீரர்களுக்கான இந்தியாவின் உயரிய விருதாகிய ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அவருக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து 1999இல் பத்மசிறீ, 2008இல் பத்ம விபூஷன் ஆகியவற்றைப் பெற்றவர், 2010இல் மேற்கிந்திய அணியின் அதிசிறந்த வீரர் ஒருவரின் பெயரால் வழங்கப்படும் Sir Garfield Sobers கேடயத்தையும் அடைந்தார். அந்த வருடத்தின் சிறப்பு ஆட்டக்காரர் என்ற கௌரவத்திற்கான கேடயத்தை பன்னாட்டுக் கிரிக்கட் அமைப்பான ICC இவருக்கு வழங்கிக் கௌரவித்தது. 2012இல் இந்திய நாடாளுமன்றத்தில் ராஜ்யசபாவில் இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இந்திய விமானப்படை 2012இல் ‘குரூப் காப்டன்’ என்ற கௌரவப் பதவியை இவருக்கு வழங்கிச் சிறப்பித்தது! இதோ, இப்பொழுது அனைத்துக்கும் உச்சமாக பாரத் ரத்னா விருதையும் அடைய இருக்கிறார்.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களாக வர்ணிக்கப்படும் நாடுகளுக்கு எதிராக இவர் விளாசிய சதங்களின் புள்ளி விவரத்தை இங்கே தருவது பொருத்தமாக இருக்கும்.

சாதனை மன்னன் வாழ்க்கை வரலாற்றில் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை.

கிரிக்கெட் உலகின் பிதாமகன் சர் டொனால்ட் பிராட்மன் அடித்த 29 சதங்களுக்கு இணையாகச் சச்சினும் 29 சதங்களை எட்டியதும், புகழ்பெற்ற கார் பந்தய வீரரான மைக்கேல் ஷூமேக்கரின் கையால் சச்சினுக்கு ஒரு புதிய Ferrari கார் பரிசளிக்க வேண்டுமென்று அந்த நிறுவனம் விரும்பியது. அப்போதைய நிதி அமைச்சர், சுங்கத் தீர்வு விதிக்காமல் இந்தக் காரைச் சச்சினுக்கு அளிக்க விரும்பினார். ஆனால், சட்டம் இடம் கொடுக்கவில்லை. பரிசாகக் கிடைத்தால் அப்படிச் செய்யலாம். அன்பளிப்பாகக் கிடைப்பதற்குச் சலுகை இல்லை என்றது சட்டம். எனவே, சச்சினுக்காகச் சட்டமே மாற்றப்பட்டது! இதற்காக ஒரு சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு, 2003 மே மாதம் சட்டம் மாற்றப்பட்டது. காரும் கொண்டுவரப்பட்டது. (ஏறத்தாழ 110,000 டாலர் தொகை வரி). இந்த நிகழ்வால் பெரிய சர்ச்சை கிளம்பியது. ஆனால் முடிவில், இந்தியாவின் Fiat கார் நிறுவனம் இத்தொகையைச் செலுத்திச் சச்சரவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இந்திய நாடாளுமன்ற மேலவையில் (ராஜ்யசபா) 2012ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் தேதியன்று 103 எனும் எண்ணுடைய ஆசனம் சச்சினுக்கு ஒதுக்கப்பட்டது இன்னொரு முக்கிய நிகழ்வு. ஜூன் மாதம் 4ஆம் திகதி இவர் சத்தியப் பிரமாணம் செய்து பதவியை ஏற்றுக் கொண்டார். இந்த விவகாரமும் சர்ச்சையைக் கிளப்பத் தவறவில்லை.

இந்த வரிசையில் அடுத்ததாக, இப்பொழுது பாரத ரத்னா விவகாரமும் சூடு பறக்கிறது!

டென்னிஸ், கால்பந்தாட்ட வீரர்களோடு ஒப்பிட முடியாவிட்டாலும், சச்சினின் சம்பாத்தியமும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்றுதான். Forbes சஞ்சிகையின் பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இவர் 51ஆவது இடத்தில் இருக்கின்றார். இவருடைய சொத்து மதிப்பு 160 மில்லியன் டாலர்கள். இந்திய விளையாட்டு வீரர்களிலேயே மிகவும் பணக்காரர் இவர்தான்.
தனது மனைவியாரின் தாயார் பெயரால் சச்சின் மும்பாயில் நடத்தும் ஓர் அமைப்பின் மூலம் வருடாவருடம் 200 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை அனுப்புவதும், நாடாளுமன்ற மேலவையில் உறுப்பினரானதும் புது தில்லியில் தனக்கென்று ஒதுக்கப்பட்ட பங்களாவை வரியிறுப்பாளர்களின் பணத்தை வீணடிக்கும் செயல் என்று கூறி ஏற்க மறுத்ததும் அவரது சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்துபவை!

கிரிக்கெட் உலகில் இதுவரை யாரும் அடையாத உச்சக்கட்டப் புகழை எட்டிய சச்சினின் சகாப்தம் நிறைவுற்றாலும் இதோ, 14 வயதுக்கு உட்பட்ட அணிக்கு விளையாடுவதற்காகச் சச்சின் டென்டுல்கரின் மகன் அர்ஜூன் டென்டுல்கர் மும்பாயில் இந்த வருடம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த ஜூனியர் தந்தையின் இடத்தைப் பிடிப்பாரா?… பொறுத்திருந்து பார்ப்போம்!

பெட்டித் தகவல்: நன்றி விக்கிப்பீடியா.

About The Author