தருணம் 12.1

அற்பஜீவிகள்

–மலர்மன்னன்

கதையின் முன்பாதி: தருணம் 12

அதற்காகவே காத்திருந்ததுபோல் கும்மிருட்டு ஆவேசத்துடன் அவன் மீதும் அவனைச் சூழ்ந்தும் கவிந்தது. மேஜையைத் தடவி அதன் இழுப்பறையைத் திறந்தான். உள்ளே கையை விட்டு, தீப்பெட்டியோ, மெழுகுவர்த்தியோ தட்டுப்படுகிறதா என்று துழாவினான். எதுவும் கிடைக்கவில்லை. அவசரத் தேவைக்காகத் தயாராய் எப்போதும் மேஜை இழுப்பறையில் ஒரு தீப்பெட்டியும் மெழுகுவர்த்தியும் போட்டு வைத்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

தீப்பெட்டிக்காகவும் மெழுகுவர்த்திக்காகவும் இருட்டில் அலைய முடியாது. விளக்கு தானாக வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான். அமைதியாக நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டான். விளக்கு மீண்டும் எரியத் தொடங்குவதை எதிர்நோக்கி அவன் அண்ணாந்திருக்கையில் மூலை முடுக்குகளிலிருந்து நிதானமாக சரசரவென்ற சப்தம் கேட்கலாயிற்று. சற்றைக்கெல்லாம் மேஜை மீதுள்ள காகிதங்களிலிருந்தும் அதே மாதிரி ஓசை வந்தது. பூச்சிகள் இருள் சூழ்ந்த தெம்பில் மறுபடியும் தலைகாட்டத் தொடங்கிவிட்டன சகஜமாய் என்று நினைத்துக்கொண்டான். சப்தம் மெல்ல மெல்ல அதிகரித்தது. தன்னைச் சுற்றி நாலாபுறங்களிலிருந்தும் பூச்சிகள் கிளம்பி வருவதாய் உணர்ந்தான். திடீரென்று ஒரு பூச்சி அவன் முகத்தில் மோதி மடியில் விழுந்தது. மடியிலிருந்து விறுவிறுவென்று மார்பில் ஏறிச் சட்டைக்குள் புகுந்தது. அவன் அவசரமாக எழுந்து சட்டையை உதறினான். அதற்குள் கால்வழியே சில மொலுமொலுவென்று மேலேறி வந்தன. கால்களை மாற்றி மாற்றி வேகமாக உதறிக்கொண்டான். பூச்சிகள் மேலே ஏறி வருவது நிற்கவில்லை. நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளி அவசரமாய் வெளியே வந்தான். வந்த வேகத்தில், மேஜை இடுப்பில் இடித்து உயிர் போகிற மாதிரி வலித்தது. இடுப்பெலும்பைப் பிடித்துக்கொண்டு பல்லைக் கடித்தபடி தள்ளாடியபோது பின்னங்கழுத்தில் எதுவோ ஊர்வது போலிருந்தது. சட்டென நிமிர்ந்து அங்கு துடைத்துவிட்டுக் கொண்டான். விரலிடுக்கில் ஒரு பூச்சி சிக்கி நசுங்கியது. தண்ணீர் தெளிக்கிற மாதிரி விரல்களை உதறினான். உதறிய விரல்களிலேயே இன்னொன்று தொத்தி ஏறியது.

கண்ணுக்குப் புலனாகாத எதிரி தன் மீது தாக்குதல் தொடுத்திருப்பதாகத் திடீரென்று நினைத்துக் கொண்டான். திருப்பித் தாக்க வழியில்லை என்றும் உணர்ந்தபோது முதல் தடவையாக பயமும் திகைப்பும் தோன்றின. ஒரு கணம் குழப்பத்துடன் பிரமித்து நிற்கையில் தன்மீது முன்னும் பின்னும் ஒன்று, இரண்டு, பத்து என நிறைய நிறையப் பூச்சிகள் திரும்பத் திரும்ப ஏறுவது போலிருந்தது. பூச்சிகள் திட்டமிட்டே தன்னைத் தாக்கிப் பழி தீர்த்துக்கொள்ளும் ஆவேசத்துடன் அப்படி மொய்ப்பதாக நிச்சயம் உண்டானபோது மண்டைக்குள்ளேயே ஒரு பூச்சி புகுந்து குடைவது போலிருந்தது. தலையை வேகமாக உலுக்கிக் கொண்டான்.

இருட்டில் மூர்க்கத்தனமாய்ப் பறந்து வந்த ஒரு பூச்சி அவன் நெற்றியில் விசையுடன் மோதியது. இனியும் இங்கிருப்பது உசிதமல்ல என்று உள்மனம் மிரட்டியது. உடனே எச்சரிக்கையடைந்தவனாய் அங்கிருந்து கிளம்பி விட எத்தனித்தான். இருளில் வழி புலப்படாத போதிலும், பழக்கங் காரணமாக அறைவாசல் இருக்கும் திக்கை அனுமானித்து வேகமாய் நடந்தான். ஆனால், பாதை சிறிது பிசகிவிட்டது. சுவர் ஓரம் கிடந்த சோபாவில் கால் இடறிக் குப்புற விழுந்தான். உடம்பில் எங்கெல்லாமோ வலி கண்டது. மார்புக்கடியில் நசநசவென்று பல பூச்சிகள் நசுங்குவதை உணர்ந்தான். திடுக்கிட்டு எழுவதற்குள் முதுகில் சில பிலுபிலுவென்று ஓடின. ஒரு பூச்சி தன் மூக்கினுள் நுழைய முயற்சி செய்வதாய்த் தோன்றியது. பதறிப் போனவனாய் மூக்கைக் கசக்கி விட்டுக்கொண்டு எழுந்தான். மேலும் மேலும் பூச்சிகள் தன்னை நோக்கிப் படையெடுத்து வருவது போலிருந்தது. இருளில் ஒவ்வொரு பூச்சியும் ராட்சத வடிவங்கொண்டது. உயிராசையின் தவிப்பில் குருட்டுத்தனமாய்த் தாவி அறை வாசலை அடைந்தான். கதவைத் திறந்து வெளிப்பட்டு, மாடிப்படிகளில் தடதடவென்று ஏறினான். பூச்சிகள் விடாமல் பின் தொடர்வதாய்த் தோன்றியது. முன்னிலும் வேகமாகப் படிகளில் ஏறி மாடிக்குப் போய்ச் சேருவதற்குள் சுவரிலும், கைப்பிடியிலும் மோதுண்டு முழங்கை, கால், முட்டி, மூக்கு என்று பல இடங்களில் சிராய்த்துவிட்டது. மாடியறைக்குப் போய்ச் சேர்ந்த பிறகுதான் ஒருவாறாக அவனுக்கு பத்திர உணர்வு மீண்டு, நிதானம் வந்தது. இருப்பினும் சிறிது அச்சத்துடன் திரும்பிப் பார்த்தான். இருளில் மாடிப்படிகள் நிசப்தமாய் இருந்தன. நிம்மதியடைந்தவனாய் சுவரில் சாய்ந்து கொண்டு நீளமாக சுவாசிக்கலானான். தனக்கு மிஞ்சி எதுவும் நடந்துவிடாது என்று தைரியங்கொண்டான். எதுவும் நடக்காத மாதிரி சர்வ சாதாரணமாகக் கட்டிலை நோக்கி நடந்தான்.

படுக்கையில் அவன் மனைவி நிச்சிந்தையாக உறங்கிக் கொண்டிருந்தாள். பொழுது விடிந்ததும் இந்த அனுபவம் பற்றி இவளிடம் சொன்னால் தன்னை எப்படியெல்லாம் பரிகசிப்பாள் என்று எண்ணினான். அவனுக்கே சிரிப்பு வந்துவிட்டது.

ஓடிவந்த அவசரத்தில் விளக்கைப் போட்டது போட்டபடியே வந்துவிட்டது நினைவுக்கு வந்தது. மின்சாரம் வந்ததும் விடிய விடிய விளக்கு அனாவசியமாக எரிந்துகொண்டிருக்கும். போய் அணைத்துவிட்டு வரலாமா என்று ஒரு கணம் யோசித்தான். ஆனால் திரும்பவும் கீழே போவதற்கு -பயமாகத்தான் இருந்தது.

–சந்திப்போம் வேறொரு தருணத்தில்…

About The Author