தருணம் (2.1)- சீவன்

வாழ்க்கையில் சில நாட்கள், சில பொழுதுகள், சில மணிகள், சில விநாடிகள் கூட – முகூர்த்த வேளைகளாக மீதி வாழ்க்கை முழுவதிலுமாய் நினைவுகூர்கிற அளவில் அழுத்தமான பதிவுகளாக, தழும்புகளாகவோ அல்லது நல்வாசனைகளுடனோ நிலைத்து விடுகின்றன. துரும்படியில் பானை படுத்திருந்து திடீரென்று எழுந்து வந்தாப்போல அந்தக் கணங்கள், வாழ்க்கையின் திசையைத் திருப்பி விடுவதுமான சந்தர்ப்பங்களும் உண்டு. மகத்தான அந்தத் தருணங்களை, நித்தியத்துவம் பெற்றுவிடுகிற அந்த நிகழ்வுகளைக் கண்டுகொண்ட, உள் தரிசனப்பட்ட படைப்புகள் வாசிக்க அற்புதமான தனித்தன்மையான அனுபவங்கள்தான். அத்தகைய காத்திரம் மிக்க படைப்பாளிகள் மாத்திரம் அல்ல, அதை வாசிக்க வாய்க்கிற வாசகர்களும் அதிர்ஷ்டசாலிகள்தான்.

– எஸ்.ஷங்கரநாராயணன்

சீவன் —கந்தர்வன்

கூழுப்பிள்ளைக்கு ஒரு வாரமாகவே மனது சரியாயில்லை. விரட்டி விரட்டிப் பார்த்தும் இந்தக் கிறுக்குப் பிச்சைக்காரன் மறுபடி மறுபடி கோயிலடியில் வந்து படுத்துக் கொள்கிறான். நிற்கவே பயப்பட வேண்டும். அந்த இடத்தில் போய் இவன் நீட்டி நிமிர்ந்து படுத்துக் கொள்கிறான்.
ஊருக்கு வெளியே அத்துவானமாய்ப் பரவிக் கிடக்கிறது அந்தப் பொட்டல். நடுவில் ஆகாயத்தில் வளர்ந்த ஒற்றை அரசமரம். அதன் கீழ் ஆயுத பாணியாய் முனியசாமி சிலையும் அருகில் கடல் போல் கிடக்கும் ஊருணியின் நீரும் யாருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும்.

அந்தப் பெரிய பொட்டலுக்கு யாரும் ‘வேறு’ காரியங்களுக்குச் சென்றதில்லை. எதற்காகவும் யாரும் அரசமரத்தின் ஒரு கொழுந்தைக் கூடப் பறித்ததில்லை. சாமி கண்ணெதிரே உள்ள பத்தடி நிலத்தில் யார் காலும் பட்டதில்லை. கைதான் படும்; எடுத்து நெற்றியில் பூச.

இந்த ஊரும் சுற்று வட்டாரங்களும் முனியசாமி மேல் எவ்வளவோ பயமும் பக்தியுமாயிருந்து வருவது இந்தக் கிறுக்குப் பிச்சைக்காரனுக்குப் புரிய மாட்டேனென்கிறது. சட்டை வேட்டியெல்லாம் கிழிந்து நாறி சீலைப்பேன் பத்திய பயல் பயமில்லாமல் அங்கே போய்ப் படுப்பதும் பொட்டலில் அங்கிங்கென்றில்லாமல் எங்கும் போவதும் வருவதும் நடக்கக் கூடியதில்லை. எல்லாம் இந்த இளவட்டப் பயல்கள் சேர்ந்து கொடுத்த இடம்.

ஒரு மாதத்திற்கு முன் எங்கேயோ கிடந்து இந்த ஊருக்கு வந்து சேர்ந்தான் கிறுக்கன். வெயில் வந்து வெகு நேரத்திற்குப் பின் கோயிலடியிலிருந்து எழுந்து ஊருக்குள் வருவான்.

அலுமினியத் தட்டெடுத்து வீடு வீடாய்க் கஞ்சி கேட்பான்.

"கஞ்சி" என்று ஒரு சத்தம் போட்டுவிட்டு வாசலில் உட்கார்ந்து விடுவான். கஞ்சி ஊற்றவேண்டும்; அப்புறம்தான் எழுந்திருப்பான். ரொம்ப வீடுகளில் அந்நேரத்திற்குக் கஞ்சி இருக்காது. நீராரத் தண்ணீரைச் சொர சொரவென்று ஊற்றிப் பொம்பிளைகள் அவனை ஏமாற்றுவார்கள். தட்டில் என்ன விழுந்தது என்பதைப் பார்த்தறியத் தெரியாது. தட்டில் என்னமாவது விழுந்ததும் எழுந்து அடுத்த வீட்டிற்குப் போவான். "கஞ்சி" என்று சொல்லிக் கொண்டே மறுபடியும் உட்கார்ந்து விடுவான்.
கையில் என்ன கொடுத்தாலும் வாங்குவதில்லை. எல்லாம் தட்டில்தான் போடவேண்டும். ஒருநாள் கந்துப்பிள்ளை வீட்டிற்கு டவுனிலிருந்து விருந்தாளிகள் வந்ததால் இட்லி சுட்டுக் கொண்டிருந்த வேளை; கிறுக்கன் "கஞ்சி" என்று வந்து உட்கார்ந்து விட்டான். கந்துப்பிள்ளை சம்சாரம் இருந்தால் குடுக்கக்கூடிய பொம்பிளை. ரெண்டு இட்லியைச் சட்னியில் பெரட்டி எடுத்து வந்தது. கிறுக்கன் முன்னாலிருந்த தட்டில் அநேக பொம்பிளைகள் ஏமாற்றி ஏமாற்றி நிறைய நீராரத் தண்ணீரை ஊற்றியிருந்தார்கள் போல; தட்டில் தண்ணீர் அலை அடித்தது. கந்துப்பிள்ளை சம்சாரம் ரெண்டு இட்லிகளையும் கிறுக்கன் முகத்திற்கு நேரே நீட்டியது. கிறுக்கன் கையை நீட்டவில்லை; தட்டைக் காண்பித்தான். கந்துப்பிள்ளை சம்சாரத்திற்குச் சங்கடமாய்ப் போய்விட்டது.

"கையிலே வாங்கிக்க. பொம்பிளைகளுக்கு ஒம் மேலெ எரக்கம் பொத்துகிட்டு வந்து ஊருணித் தண்ணிய ஊத்தி விட்டிருக்காக" என்றது.

மறுபடியும் கிறுக்கன் தட்டைக் காண்பித்து விட்டுப் பேசாமல் உட்கார்ந்து விட்டான். கந்துப்பிள்ளை சம்சாரம் ஒன்றும் தோன்றாமல் கொண்டு வந்த ரெண்டு இட்லிகளையும் தட்டுத் தண்ணீருக்குள் போட்டுவிட்டுப் போனது. சட்னியில் ஒட்டியிருந்த கடுகும் இட்லிகளும் நீராரத் தண்ணீரில் மிதந்தன.
தட்டு நிறைந்ததும் கோயிலடிக்கு நடக்கையில் இளவட்டக் கூட்டம் கிறுக்கனை வழி மறிக்கும். ஒரு ஆள் பீடி கொடுக்கும். கிறுக்கன் கையால் வாங்க மாட்டான், தட்டில் போட வேண்டும். நீராரத் தண்ணீரில் பீடி அசிங்கமாய் மிதக்கும். எடுத்துத் துடைத்துக் காதில் சொருகிக் கொள்வான். சமயத்தில் காய வைத்து மடியிலிருந்து தீப்பெட்டி எடுத்துப் பற்ற வைப்பான்.

ஒரு நாள் மடியிலிருந்து தீப்பெட்டியை எடுத்தான். குச்சியில்லை. இளவட்டங்களைப் பார்த்தான். ஒரு ஆள் தீப்பெட்டியை அவன் கைக்கு நேரே நீட்டி "இதையாச்சுங் கையிலே வாங்கிக்க" என்றான்.
கிறுக்கன் கையை நீட்டவில்லை. தட்டை நீட்டினான். தீப்பெட்டி நீராரத் தண்ணீரில் மிதந்தது. சட்டென்று எடுத்து ரெண்டு ஓரங்களையும் தேய்த்து விட்டுப் பற்ற வைத்தான். இளவட்டங்கள் என்னென்னவோ செய்து பார்த்தும் கிறுக்கனின் கை நீளவில்லை. தட்டுத்தான் நீண்டது.
கிறுக்கனுக்கு நாற்பது வயதிற்கு மேல் இருக்கும். பேச்சு கொஞ்சம்தான். அதுவும் முன் பின்னாய்க் குழறிக் குழறி வரும். கிட்ட வந்தால் ஏழூரு நாத்தம் நாறும். ஒரு நாள் இளவட்டங்களும் ஊர் ஆள்களுமாய்ச் சுற்றித் தெகத்திக் கொண்டுபோய் ஊருணிக்குள் முங்கவிட்டார்கள். ஒரு முங்கோடு தண்ணீரிலிருந்து வெளியே வந்து ஈரத்தோடு தரையில் உட்கார்ந்தான். கிழிந்த சட்டையையும் வேட்டியையும் களையச் சொல்லி எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. அப்புறம் யாரும் அவனைக் குளிக்க வைக்கவில்லை.

இருட்டு நேரத்தில் கோயில் பக்கமாய் நடந்து செல்ல எளகின மனசுக்காரன் எவனாலும் முடியாது. இருட்டில் முனி நடமாடத் தொடங்கி விடும். யார் எதிர்ப்பட்டாலும் திரும்ப நின்று பிடரியில் அடிக்கும். ரத்தம் ரத்தமாய்க் கக்கிச் சாவான். பொம்பிளைகள் ராத்திரிகளில் ஒக்காந்து ஊர்க்கதை உலகக்கதைகளையெல்லாம் பேசுவார்கள்; ஒரு பேச்சாவது முனியசாமி மகிமையைப் பற்றிப் பேசாமல் மகாநாடுகள் முடிவதில்லை. வாய்பார்க்க வரும் நண்டு சுண்டுகளுக்கு அவைகளைக் கேட்டு நெஞ்சுக் குலை நடுங்கும்.

ஒரு சமயம் பண்ணந்தையிலிருந்து ஒரு நடு வயது ஆள் மொட்டைவண்டி நிறைய நெல்லை ஏற்றிக் கொண்டு இந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தான். கோயில் பாதையில் முனி நடமாட்டம் இருக்கும் என்பதைத் தெரியாத ஆள் அண்டை அசலில் உண்டா? சாவடிப் பாதையில் வண்டியை ஓட்டிக் கொண்டு போயிருக்கலாம். சுத்துப் பாதையில் போவானேன் என்று கோயில் பாதையில் ஓட்டிக் கொண்டு வந்தான். கோயில் நெருங்க அருவமா ஏதேதோ தென்படவும் ஆளுக்கு அடிவயிறு கலங்க ஆரம்பித்துவிட்டது. வெரட்டிக் கொண்டு ஓடிவிடலாம் என்று மாட்டுவாலை முறுக்கியிருக்கிறான். நாலுகால் பாய்ச்சலில் வண்டி வந்துகொண்டிருக்கிறது.

ஒரு சொடக்குப்போடும் நேரத்தில் கோயிலைத் தாண்டி விடலாம். ஆனால் திடீரென்று இரண்டு மாடுகளும் எதையோ பார்த்து மிரண்டு திமிறிப் பூட்டாங் கயிற்றை அறுத்துக்கொண்டு தறிகெட்டு ஊருணிப்பக்கம் ஓடின. வண்டிக்காரன் ஏறிட்டுப் பார்த்தான். மேக்கால் அந்தரத்தில் நிற்கிறது. வண்டியிலிருந்து இறங்கியிருக்கிறான். என்ன பார்த்தானோ ஏது பார்த்தானோ, முழிச்சது முழிச்சபடி வாயிலிருந்து கட்டிக் கட்டியாய் ரத்தம் கக்கிக் கிடந்தான்.

கீழ வீட்டு வள்ளி அம்மாச்சி கண்ணால் பார்த்தது இது. ஒரு நாள் காளாங்கரைப் பக்கம் வெறகு பொறுக்கப் போயிட்டு வரும்போது பொழுது அடையத் தொடங்கிவிட்டது. ‘இன்னுந்தான் இருட்டலையே; பொழுது மசமசவென்ற நேரந்தானே; கோயில் பாதையிலேயே போய் விடலாம்’ என்று ஓட்டமும் நடையுமாய்த் தலையில் விறகுக் கட்டோடு வந்து கொண்டிருந்தாராம். கோயிலுக்கு நேரா வரும்போது ‘கறுப்பா’ என்னமோ ஒண்ணு வழியை மறைத்திருக்கிறது. இது முனியப்பாதான் என்று வள்ளி அம்மாச்சிக்கு அனுமானம். கும்பிடக்கூடக் கை வரவில்லை. கும்பிட்டிருந்தால் ஒரு வேளை அது தன் பாதையில் போயிருக்கும்.

கும்பிடுவோமென்று கையைத் தூக்கினால் கை இரும்பாய்க் கனக்கிறது. எதிரே அது மலைபோல் நிற்கிறது. ஒரு பாக்குக் கடிக்கிற நேரம்தான். சடாலென்று தலை குப்புற விழுந்து விட்டது அம்மாச்சி. கோயில் காரியமாய் வந்த கூழுப்பிள்ளைதான் தூக்கி நிறுத்தி விபூதி பூசிக் கூட்டி வந்தார். பத்து நாள் படுக்கையில் கிடந்து சௌகரியம் ஆனது.

சுருள் காத்து எப்போதாவது சுழற்றிச் சுழற்றி அடிக்கும். புள்ளைகளை அந்தப் பக்கம் போகக்கூடாதென்று பொம்பிளைகள் பிடித்து வீட்டிற்குள் நிறுத்திவிடுவார்கள். முனியப்பா வேட்டைக்குப் போய்விட்டுத் திரும்பி வருகிறார் என்று மெதுவான குரலில் சொல்வார்கள்.
மழை ‘சோ’வென்று கொட்டும். முனியப்பா எச்சி துப்புகிறார் என்பார்கள் பொம்பிளைகள்.
நடுச்சாமத்தில் தெருத் தெருவாய் நாய்கள் ஓங்கிக் குலைக்கும். திண்ணையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பார்கள். தூக்கி வாரிப்போட்டு எழுந்து பார்ப்பார்கள். ஆள் நடமாட்டம் இருக்காது. முனியப்பாதான் காவல் சுற்று வருகிறார் என்று சொல்லிக்கொண்டு படுப்பார்கள்.

சின்னஞ் சிறிசுகள் இவைகளைக் கேட்டுக் கேட்டு உடம்பெல்லாம் பயத்தோடு தூங்குவார்கள். அநேகமான பிள்ளைகளின் சொப்பனங்களில் முனியப்பா வானத்திற்கும் பூமிக்கும் கன்னங்கரேலென்று பெரிய வாய்திறந்து பெரிய பெரிய அரிவாள்களுடன் வருவார். உச்சமான நேரங்களில் முழித்துக் கொள்வார்கள். வெளியில் போய் ஒதுங்கி விட்டு வர அம்மாக்களை எழுப்பி அழுவார்கள்.

அப்படிப்பட்ட துடியான தெய்வம் கூழுப்பிள்ளை குடும்பம் ஒன்றிற்குத்தான் கட்டுப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். கூழுப்பிள்ளையின் வம்சப் பெயரே முனியசாமிதான்.
பரம்பரை பரம்பரையாக அவர்களுக்குப் புஞ்செய் அதிகம். ஆய்க்குடிக் காட்டில் பாதி அவர்களுக்குத்தான். கேப்பைதான் காடு முழுவதிலும் அதிகமாய்க் கண்டு முதலாகும். அநேகமாய் இரண்டு வேளையாவது அவர்கள் வீட்டில் கூழ்தான். இது பழக்கத்தில் ஆகிக் கல்யாண வீடுகளில் வடை பாயாசத்தோடு சாப்பிட்டு விட்டு வந்தால் கூட வீட்டிற்கு வந்ததும் ஒரு கட்டிக் கூழைக் கரைத்துக் குடித்தால்தான் அந்த வீட்டு ஆள்களுக்கு வயிறு நிறைந்தது போலிருக்கும். ஊரிலேயே அவர்கள் வீட்டு ஆள்களுக்கு மட்டும் நெஞ்சுக்குக் கீழே பானையைச் சாத்தி வைத்ததுபோல் வயிறு இருக்கும். வெகு ஆள்கள் இந்த அதிசயங்களைப் பார்த்து விட்டுத்தான் ‘கூழுப்பிள்ளை வீடு’ என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். ஆனால் யார் என்ன பெயர் வைத்துக் கூப்பிட்டாலும் அவர் பத்திரங்களில் ‘முனியசாமி’ என்றுதான் எழுத்துக் கூட்டிக் கையெழுத்துப் போடுவார்.

முனியசாமியை இங்கே கொண்டு வந்ததே அவர்கள் வீடுதான். கூழுப்பிள்ளையின் தாத்தனுக்குத் தாத்தனுக்குத் தாத்தன் வேட்டையில் மிச்சமான பிரியம் உள்ளவராம். வேட்டையாடிக் கொண்டே போனவர் காட்டுக்குள் பாதை மாறி ஆப்பனூர்க் காட்டுக்கே போய் விட்டாராம். இருட்டில் சுற்றிச் சுற்றி வந்திருக்கிறார். நெருக்கமான காட்டில் வழி புலப்படவில்லை. பசியும் களைப்புமாய் நட்ட நடுக் காட்டில் விழுந்து தூங்கிக் கொண்டிருந்தார். பளபளவென்று பொழுது விடியும் நேரத்தில் யாரோ தன்னைத் தொட்டுப் பெயர் சொல்லிக் கூப்பிட்டதுபோல் தோன்றி எழுந்திருந்தார். அப்போதுதான் முனியப்பா அவர் கண்ணுக்குத் தென்பட்டிருக்கிறார்.

–தொடரும்…

About The Author