தருணம் (7.1)

பொழுது விடியட்டும்

கண்ணன் மகேஷ்

இதன் முன்பாதி: தருணம் (7.1)

வாரிச் சுருட்டி எழுந்தது மெய்கண்ட தம்பிரான். "இத்துடன் மாநிலச் செய்திகள் முடிந்தன" என்று ஏதோ ரேடியோ சத்தம் காதில் விழ, ‘இப்படியா தூங்கினேன்’ என்று வெட்கப்பட்டது. அக்கம் பக்கத்தில் யாருமே இல்லை. பட்டம் ஏற்பு விழாவிற்குத் தன்னைத் தேடப் போகிறார்களே என்றும் பதைத்தது. அவசரமாகச் செங்கல்லைத் தட்டி வாயைக் குழப்பி, குளப்படியில் இறங்கி, "சிவோஹம்!… சிவோஹம்!…" என்று நீரில் மூழ்கி எழுந்தது.

நேற்றிரவு திருச்சி முதலியார் என்ன சொன்னான்? வழக்கம்போல மெய்கண்ட சாமி பாயைச் சுருட்டிக் கக்கத்தில் இடுக்கித் திண்ணையில் படுக்கப் புறப்பட்டது. "ஹூக்கும்…" என்று மெலிதாக இருமல். திருச்சி முதலியார் பவ்யமாக வாயைக் கையால் பொத்தி நின்றார். "சாமி, மற்ற மடத்து சன்னிதானங்கள் கூடிப் பேசினதை இப்ப கேட்டேன். உங்களைத்தான் நாளை இங்கே சன்னிதானமா முடிசூட்டப் போறாங்களாம்…"

இரவே முதலியார் தகவல் சொன்னதும் போதும், தூக்கம் இன்றி இரவு முழுவதும் தவித்ததும் போதும். இந்த ஒட்டுக் கேட்கிற பயல்களின் காதுகளை ஒட்ட நறுக்கணும்.

"காபி வேணுமா சாமி?" என்று மடத்து ஆபிஸ் சிப்பந்தி ஒருவன் கையில் பிளாஸ்க்கோடு படிக்கட்டில் நின்றான்.

‘அட, சன்னிதானத்திற்குரிய மரியாதை ஆரம்பம்’ என்று சாமியின் மனம் குதூகலித்தது. என்றாலும் ‘காக்கா பிடிக்கிறான், இடம் குடுக்கக் கூடாது’ என்றும் தோன்றியது. காபியும், கீபியும் அவஸ்தை கொடுக்கலாம். பட்டாபிஷேகம் செய்ய மற்ற மடாதிபதிகள் கூப்பிடுகிறபோது, "ஒரு நிமிஷம் இருங்க, தோட்டத்துக்குப் போயிட்டு வந்துட்றேன்…" என்று சொல்ல முடியுமா? இன்று முழுவதும் உபவாசமாய்த்தான் இருந்தால் போச்சு. எவ்வளவு பெரிய பதவியை ஆண்டவன் எதிர்பாராமல் தூக்கிக் கொடுக்கிறான்! இறைவா நன்றி, நன்றி என்று கண்கள் கசிந்து "சிவசிவா, சிவசிவா" என்று விபூதியைக் குழைத்து உடம்பெங்கும் பூசியது.

அந்த ஆள் இன்னும் நின்றான்.

"வேணாம் போடா."

"என்னது, டாவா? சாமி ரொம்ப மிதப்புல இருக்கு. இப்பவே சன்னிதானம்னு நினைப்பு" என்று முனகி அவன் போனான்.

மெய்கண்ட சாமி இன்னொன்றையும் நினைத்தது. சன்னிதானத்தின் அருகிலேயே இருந்து எப்போதும் பணிவிடை செய்யும் ஆளுக்கு ஒடுக்கம் என்று பெயர். இந்த ஒடுக்கத்தானிடம் சன்னிதானம் எச்சரிக்கையாக இருக்கணும். யாராவது சன்னிதானத்தின் பதவி மீது கண் வைத்து விட்டால், "தீத்துரு, நா ஒன்னைக் கவனிச்சுக்கறேன்…" என்று ஒடுக்கத்திடம் ஒப்பந்தம் செய்துகொள்வார்கள். அவனும் கால், கை அமுக்குகிற சாக்கில் உயிர்நிலை பீஜங்களைப் பிசைய ஆரம்பித்து விடுவான். "ஐயையோ" என்று சன்னிதானம் அலற, "அரகரா, சிவசிவா" என்று இவன் பெரிதாக அலற, இருவித சத்தங்களும் மாறி மாறி மூடிய கதவின் உட்புறம் கேட்கும். சற்றுப் பொழுதில் எல்லாம் அடங்கிவிடும். மூடிய கதவுகளை விரியத் திறந்து ஒடுக்கம் கதறுவான். "ஐயையோ, ஓடியாங்கோ! அரகரா சிவசிவான்னு கத்திக்கிட்டே நம்ம சன்னிதானம் பரிபூர்ணம் ஆயிட்டுது…" இப்படி எல்லாம் முன்பு இதே மடத்தில் நடந்திருக்கிறது.

சொக்கேசன் சந்நிதி சென்று, சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய விரைந்தது மெய்கண்ட சாமி.
அப்போது வாத்திய முழக்கங்களுடன், பெருந்திரள் கூட்டம் அவரை இடித்துத் தள்ளி சந்நிதியில் நுழைந்தது. மற்ற பெரிய மடத்து சன்னிதானங்கள் ஆரவாரத்துடன் வந்தனர்.

"வெலகு, வெலகு. புதுப்பாட்டம் சுவாமிகள் வராங்க" என்று எவனோ கத்த,மெய்கண்ட சாமிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இன்னொரு தடவை அப்படிக் கத்தமாட்டானா என்றிருந்தது. ஏன் இந்த ஜனங்கள் கொஞ்சமும் மரியாதை இல்லாமல் தன் மீது வந்து விழுகிறார்கள்?

"ஏ மெய்கண்டாரே, ஒமக்கு மூளைக் கலக்கமா? ஏன் இப்படி நடூல ஓட்றீர்?" என்று ஒரு தம்பிரான் கேட்டது.

இன்னும் சற்று நேரத்தில் எனக்குப் பட்டாபிஷேகமடா மடையா என்று நினைத்து அவரைத் தீவிழி விழித்தது மெய்கண்ட சாமி.

பூஜைகள் – தீபாராதனை – ஓதுவார் பாடல்கள் – கற்பூர ஆரத்தி. ஆகா, ஆகா… என்று கண்மூடி நின்றது மெய்கண்ட சாமி. கண்களில் நீர் பெருகி ஓடியது. ‘இறைவா, என்னே உன் கருணை… என்னைப் போய் மகா சன்னிதானமாய்…’

எல்லாம் முடிந்தது. அமைதி.

பெரிய மடாதிபதி ஒருவர் கணீரென்று, "இறைவன் ஆக்ஞைபடியும், குரு திருவருளாலும் இம்மடத்தின் 36வது சன்னிதானமாக ………………ஐ ஏகமனதாகத் தேர்ந்தெடுத்துள்ளோம்”" என்றார்.

பெரிய மடாதிபதி என் பெயரையா சொன்னார்கள்? அப்படித்தான் இருக்க வேண்டும். கண்மூடி, தடால் என்று கீழே சாய்ந்தது மெய்கண்ட சாமி.

‘அடடா, மகா சன்னிதானம் விழுந்துட்டாங்க, தூக்கு…’ என்று பரபரப்புடன் தன்னைத் தூக்க வருவார்கள் என்றும் நினைத்தது.

ஆனால் மடத்து ஆபீஸ் சிப்பந்திகளான விடலைப் பையன்களுக்கு ஒரே சிரிப்பு.

"அடேடே, மெய்கண்டாரைப் பிடியும் ஓய்! செஞ்சு வெச்ச விருந்தை எல்லாம் ருசி பாக்காம கண்ணை மூடிடப் போறாரு."

"முந்திக்கறாருப்பா! நாம யாரும் நமஸ்காரம் பண்றதுக்குள்ள, புது சன்னிதானத்திற்கு முதல் நமஸ்காரம் இவருதா இருக்கணுமாம்!"

மெல்ல எழுந்து, உட்கார்ந்த வாக்கில் கண்களைத் திறந்தார் மெய்கண்ட சாமி.

"இந்த மடத்தின் தம்பிரான்களில் நல்ல படிப்பாளியும், பக்தி சிரத்தை உள்ளவரும், இருக்குமிடம் தெரியாமல் அடக்கமாக இருப்பவருமான பொன்னுத் தம்பிரான், மகா சன்னிதானம் ஆக சாலப் பொருத்தம்" என்று மற்றொரு மடாதிபதி வழிமொழிந்தார்.

கைகூப்பிய பொன்னுத்துறவி நின்றார். ஒரு மடாதிபதி, அவர் தலையில் குடம் நீரைக் கவிழ்த்தார். மற்றொரு மடாதிபதி தங்க நாணயங்களைப் புதிய சன்னிதானத்தின் தலையில் குடம் குடமாகக் கவிழ்த்தார் (கனகாபிஷேகம்).

கோலாகலத்துடன் பொன்னுத் துறவி அந்தக் கூடம் விட்டகன்றார். எல்லாருமே கலைந்து சென்றுவிட்டனர். அபிஷேக ஜலம் ஓடி, தரை முழுவதும் ஈரம். அந்த ஈரத்தில் அப்படியே உட்கார்ந்திருந்தார் மெய்கண்ட சாமி. துணி எல்லாம் ஈரம்.

நீண்ட நேரம் அந்தக் கூடத்தில் தனியே உட்கார்ந்திருந்தார். கூடத்திற்கு வெளியே விருந்து சாப்பாட்டிற்குக் கூட்டம் அலை மோதியது. தாடியை வருடியபடி நடராசனைப் பார்த்தார் மெய்கண்டார். ‘இது எத்தனாவது திருவிளையாடல் அப்பா?’

(அடுத்த இதழில் தருணம் 8 – தி.ஜானகிராமன்)

About The Author