தருணம் (7)

வாழ்க்கையில் சில நாட்கள், சில பொழுதுகள், சில மணிகள், சில விநாடிகள் கூட முகூர்த்த வேளைகளாக, மீதி வாழ்க்கை முழுவதிலுமாய் நினைவுகூர்கிற அளவில் அழுத்தமான பதிவுகளாகத் தழும்புகளாகவோ நல்வாசனைகளுடனோ நிலைத்து விடுகின்றன. துரும்படியில் யானை படுத்திருந்து திடீரென்று எழுந்து வந்தாப்போல அந்தக் கணங்கள், வாழ்க்கையின் திசையைத் திருப்பி விடுவதுமான சந்தர்ப்பங்களும் உண்டு. மகத்தான அந்தத் தருணங்களை, நித்தியத்துவம் பெற்றுவிடுகிற அந்த நிகழ்வுகளைக் கண்டுகொண்ட, உள் தரிசனப்பட்ட படைப்புகள் வாசிக்க அற்புதமான தனித்தன்மையான அனுபவங்கள்தான். அத்தகைய காத்திரம் மிக்க படைப்பாளிகள் மாத்திரம் அல்ல, அதை வாசிக்க வாய்க்கிற வாசகர்களும் அதிர்ஷ்டசாலிகள்தான்.

பொழுது விடியட்டும்

கண்ணன் மகேஷ்

‘சுரீல்’ என்று காலில் கடித்த கொசுவைப் பட்டென்று அடிகொடுத்து அதற்கு சிவபதவி கொடுத்தார் மெய்கண்ட சுவாமி. அப்படியும் ‘கீ’ என்று செவி அருகே கொசு பாடியது. தலைக்கு மேல் சுவர்க் கடிகாரம் ஒரு முறை அடித்தது. மணி பன்னிரண்டரையோ, ஒன்றோ, ஒன்றரையோ?
தூக்கம் வரவில்லை. எழுந்து அமர்ந்தார். இரவு முழுவதும் தூக்கம் வராமல் அவதிப்பட வேண்டியதுதான். முன்கூட்டி ஏன் அந்தத் தகவலைத் தெரிந்து கொண்டோம்? நாளை காலையில் எல்லோருக்கும் தெரிகிறபோது நமக்கும் தெரியக் கூடாதோ!

‘சர்’ என்று பொடியை நாசியில் ஏற்றினார். எதிர்த் திண்ணையில் படுத்திருந்தப் பொன்னுப் பண்டாரமும் எழுந்து அமர்ந்து, “சாமி, எனக்கும் பொடி” என்றது.

இவருக்கு எரிச்சல். அடே, என்னை யார் என்று நினைத்தாய்? இந்த ஒரு ராத்திரிதான் நானும் உன்னைப் போல ஒரு தம்பிரான். பொழுது விடிந்தால்…. விடிந்தால், நினைக்கவே சந்தோஷமாக இருக்கிறது. நான் இந்தப் பெரிய மடத்திற்கும், இதன் லட்சக்கணக்கான சொத்துக்களுக்கும் மகா சந்நிதானம். இப்படி, பண்டாரங்கள் எல்லாம் நாளை என்னை நெருங்கிப் பொடி கேட்க முடியுமா?
"என்ன சாமி, பொடி கொடுக்க இவ்வளவு கிராக்கியா? இதுக்கே இப்படி. தப்பித் தவறி நீர் சன்னிதானம் ஆயிட்டா அவ்வளவுதான் போலிருக்கு." என்று கிண்டலில் இறங்கியது பொன்னுத் துறவி.

இவனிடம் என்ன பேச்சு என்று மெய்கண்ட சாமி பொடி டப்பியை எதிர்த் திண்ணையில் விட்டெறிந்தது. இந்த ராத்திரி ஏன் இப்படி நத்தையாக ஊர்கிறது? சீக்கிரம் விடியாதா?
மெய்கண்ட சுவாமி எழுந்து, மடத்து வாசலுக்கு ஒன்றுக்கு இருக்கச் சென்றது. எவனோ இவருக்கு முன்னால் அங்கே உட்கார்ந்திருந்தான். உட்கார்ந்த நிலையில் திரும்பி, "என்ன, சாமிக்குத் தூக்கம் வல்லியா? நீ ஒரு தண்டசாமி, உங்கிட்ட பீடிக்கு வத்திப்பொட்டி கிடையாது" என்றான்.
யார்? யானைப் பாகன் வேலு நாயரா? பொழுது விடியட்டும்டா பயலே…

இந்தப் பெரிய மடத்தின் கிளை மடங்களில் ஒன்றில், ஒரு பெரிய கோவிலில் தம்பிரானாகத்தான் மெய்கண்ட சுவாமி இருந்து வந்தார். இவர் கண்டதெல்லாம் மாதம் பிறந்தால் முப்பது ரூபாய் அலவன்ஸ், காலையில் இட்லி, கடுங்காப்பி, மதியம் தவசிப் பிள்ளை சமைக்கும் சுவை இல்லாத சாப்பாடு. இரவு மறுபடி இட்லி, வருடத்திற்கு இரண்டு கல்லாடை (காவி வேட்டி). தீட்சை பெற்றபோது சந்நிதானம் கொடுத்த ஒரு சவரன் பவுன் வேடம் (காது வளையம்). சாதாரணமாக இருக்கும்போது சாயம்போன துணியில் காணப்படுவார். பிரமுகர்கள் கோவிலுக்கு விஜயம் செய்தால் புதிய காவித் துணி இடுப்பிலும், பாகையாகத் தலையிலும் ஏறும்.

மகா சந்நிதானம் கோவிலுக்கு வந்து சுவாமிக்கு தூப தீப ஆராதனைகளைத் தன் கையாலேயே செய்யும்போது, தம்பிரான் சன்னிதானத்திற்குப் பின்னால் நின்று கை விசிறியால் விசிற வேண்டும். உற்சவத்தின்போது சுவாமி புறப்பாட்டை முன்னின்று துவக்கி வைக்க வேண்டும். சுவாமி ஆற்றங்கரை மண்டபத்தில் இருந்தது என்றால், சுவாமியின் வீதி உலாவைத் துவக்கி வைக்கக் காவி முண்டாசுத் தம்பிரான், முன்னால் ஒருவன் எரியும் தீவட்டி பிடித்துச் செல்ல, ஆற்றங்கரைக்கு நடந்து செல்வது ஓர் அழகு. கற்பூர தீபாராதனைக்குப் பிறகு, குருக்கள் பச்சை வாதாம் இலைகளில் மடித்துத் தந்திருக்கும் விபூதி குங்குமப் பிரசாதங்களை, குழுமிய நபர்களில் பெரிய மனுஷாள் நான்கைந்து பேருக்கு மட்டும் தம்பிரான் தன் கைபடக் கொடுப்பார். மற்ற நாட்களில் ஆன்மிகப் புத்தகங்களில் குறிப்பு எடுத்து, சன்னிதானம் அனுமதி பெற்றுச் சில ஆன்மிகக் கூட்டங்களில் சொற்பொழிந்து –

இவ்வளவுதான் ஒவ்வொரு தம்பிரான் வேலையும். இப்படியே சிவசிந்தனையும், சவசவ சோறுமாகத் தன் வாழ்நாள் முழுவதும் ஓடிவிடும் என்றுதான் மெய்கண்ட சுவாமி நினைத்திருந்தது.
முன்தினம் மதியம் தனது தலைமை மடத்திற்கு வந்ததும் ஒரு தற்செயல் நிகழ்ச்சிதான். தெரிந்த பணக்கார நண்பர் ஒருவர் – இலக்கியங்களில் ஆர்வம் உள்ளவர் – அபிதான சிந்தாமணி என்கிற கலைக் களஞ்சிய நூல் தலைமை மட நூல் நிலையத்தில் இருந்தால் வாங்கித் தரும்படி கேட்டார் – பார்த்துவிட்டுத் தரத்தான். அவரின் காரில் இதுவும் புறப்பட்டு வந்தது.

நூல் நிலையத்தில் நுழைந்து, நின்றவாக்கில் டிக்ஷனரி ஆஃப் தாட்ஸ், நேருவின் உலக சரித்திரம், விதுர நீதி, யஜுர் வேதம் என்று புறப்படும்போது –

திடீரென்று மடத்தில் பரபரப்பு. ஆறு சூப்ரண்டுகளும் எண்ணற்ற குமாஸ்தாக்களும் குறுக்கே, நெடுக்கே ஓடினார்கள்.

வயதான குமாஸ்தா திருச்சி முதலியாரை மெய்கண்ட சாமி அழைத்து விபரம் கேட்க –
சாதாரணமாக இந்த முதலியார் படு இடைவெட்டுப் பேர்வழி. தாலி கட்டி இரண்டு, கட்டாமல் நாலு மனைவி வைத்திருப்பவர். ஷோக் பேர்வழி. பேச்சில் கிண்டலும், எகத்தாளமும் எப்போதும் உண்டு. இருந்தும் அப்போது தன் விளையாட்டு வாலை எல்லாம் சுருட்டி வைத்து,"சாமி, காசி யாத்திரை போன நம்ம சந்நிதானம் பரிபூர்ணம் (மரணம்) ஆயிட்டுதுன்னு தந்தி வந்தது. பாடியை விமானத்திலே கொண்டு வர ஏற்பாடு நடக்குது…"

கேட்டதும், ‘திக்’ என்றது. கூடவே, அடுத்துப் பட்டம் ஏறப் போகும் அதிர்ஷ்டசாலி யாரோ என்றும் தோன்றியது. அதை உடனே வாய்விட்டுக் கேட்பதும் அநாகரிகம்.

"யார் கண்டது சாமி? அடுத்த சந்நிதானம் நீங்களாகவே கூட இருக்கலாம்" என்றார் இவரைக் காரில் ஏற்றி வந்த செல்வர். இவருக்கு அந்த நிமிடம் வரை அந்த ஆசை எல்லாம் இல்லை.

"அட, சும்மா இருங்க ஐயா! சன்னிதானம் ஆவ எனக்கு ஏது அருகதை? யார் காதுலயாவது பட்டா, ஏதாவது திரிச்சுப் பிரசாரம் பண்ணப் போறாங்க…" என்று அந்த நேரம் ஏதோ சொல்லி நண்பரின் வாயை அடைத்துவிட்டாலும், இவர் மனதின் ஒரு மூலையில் –

மடத்து நிலங்கள் பயிரிடும் குடியானவ ஆண்களும், பெண்களும், ஊர் ஜனங்களும் "ஐயோ சாமி, மவராசா, போயிட்டியா?" என்று வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஓவென்று அழுதபடி மடத்தினுள் நுழைந்தனர். தமிழ் மகாநாடுகளும், ஆன்மிகக் கூட்டங்களும் நடத்தும் நீண்ட கூடத்தில் கூட்டம் நிறைய ஆரம்பித்தது.

மாவட்ட கலெக்டரும், போலீசும், இலாகா அதிகாரிகளும், ஜீப்பிலும் காரிலும் வந்தனர். கருவூலம், நெல் களஞ்சியம் இன்னும் முக்கியங்களை சீல் வைக்கணுமாம்.

கார்களிலும், வேன்களிலும் வேறு மடங்களின் சன்னிதானங்களும், இம்மடத்தின் பல்வேறு ஊர்களின் சிப்பந்திகளும், தம்பிரான்களும் வந்து குழுமினர்.

மடத்தின் எல்லா மூலை முடுக்குகளிலும் இரவு பகல் பாராமல் மின்விளக்குகள் எரிந்தன. ஓதுவார்கள் மைக்கில் தேவாரம், திருவாசகம் பாடினர். மடத்து ஆபிஸ் சிப்பந்திகள் பரபரப்புடன் அலைந்தனர். பெரிய அண்டா, குண்டான்களைக் கோட்டை அடுப்பில் ஏற்றுவதும், இறக்குவதுமாக தவசிப்பிள்ளைகளுக்கு வியர்வை வழிந்தோடியது.

பந்திக் கட்டில் யாரோ, "என்னய்யா, முதல்ல ரசத்தை விட்ற? சாம்பார் இல்லியா?" என்று கேட்க, "சூ, சூ! சும்மா இருங்க! இந்த மடத்து சம்பிரதாயம் இப்படித்தான். முதல்ல ரசம். அப்புறம்தான் சாம்பார், மோர்…" என்று யாரோ அடக்கினார்கள்.

ஹூம், என்ன பொல்லாத சம்பிரதாயம்? நான் பதவி ஏற்றால் இந்தச் சின்ன விஷயங்களை எல்லாம் மாற்றிவிடுவேன், என்று நினைத்து, பொடியை நாசியில் ஏற்றினார் மெய்கண்ட சாமி.

இந்த குரு பரம்பரையில் பட்டம் ஏறினால் மெய் கண்டாரின் வரிசை எண் முப்பத்தி ஆறு. முப்பத்தி ஐந்துதான் நேற்று காசியில் இறந்து, விமானத்தில் கொண்டு வந்து இன்று இந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த முப்பத்தி ஐந்திற்கு நல்ல மனசு இல்லை. இதமான பேச்சாளி இல்லை. எவரையும் நாவால் சுட்டுவிடும். ஒருமுறை சந்தித்தவர்கள், இனி எப்போதுமே சந்திக்க வரக்கூடாது என்கிற முடிவோடுதான் திரும்பிப் போவார்கள். "உனக்கு ஒரு வாரம் எங்க மடத்தில் தங்கவெச்சு சோறு போட்டேனே" என்று சொல்லிக் காட்டிவிடும்.

தன்னிடம் கைநீட்டி சம்பளம் பெறும் எவரையும், தன்னைவிடப் பெரியவரானாலும் ‘டா’ போட்டுப் பேசும். தமிழ் வருடப் பிறப்பன்று "டே சிவாச்சாரி, பஞ்சாங்கம் வாசிடா…" கிழ குருக்கள் பஞ்சாங்கம் வாசிக்கிறார்.

இந்த மடத்தின் தேவாரப் பள்ளி ஆசிரியர் தேவராஜ ஓதுவார். இவர் என்றால் மாணவர்களுக்குக் குலை நடுங்கும். பிரம்பெடுத்து இரக்கமின்றி விளாசி விடுவார். முப்பத்தி ஐந்து மாணவனாக இருந்தபோது இவரிடம் உதை வாங்கி, பள்ளியையும் ஊரையும் விட்டு ஓடிப்போனவர்தான். வாலிபப் பருவத்தில் தம்பிரானாக இம்மடத்திற்கே வந்தார். காலப்போக்கில் சன்னிதானம் ஆகிவிட்டார்.
ஒருநாள் முப்பத்தி ஐந்தின் எதிரே தேவராஜ ஓதுவார் வந்து நின்றார். தலை வழுக்கை. உடம்பு ஒடுங்கிப் படு கிழமானவர். வர இருக்கும் மகள் திருமணத்திற்கு முன்பணம் கேட்க யோசனை. எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்று தயக்கம்.

"என்னடா தேவராஜா, எங்க வந்தேடா? என்ன சேதி? நீ இப்படி எல்லாம் வரப்பட்டவன் இல்லியேடா?" என்றார் 35.

சாட்டையடி பட்டதுபோல ஓதுவார் அதிர்ச்சி அடைந்து, "ஒண்ணுமில்ல, சும்மா வந்தேன்" என்று திரும்பி விட்டார்.

ஒரு சமயம் ஒரு வியாபாரியும், இந்த மடமும் சேர்ந்து பக்க நகரத்தில் பாதிப் பாதி செலவில் ஒரு திருமண மண்டபம் கட்டுவதாகப் பேச்சு. வியாபாரி இருபத்தையாயிரம் ரூபாயோடு 35ஐப் பார்க்க வரும் வழியில், கடைத்தெருவில் பணத்தைப் பிக்பாக்கெட்டிடம் பறிகொடுத்தார். சன்னிதானத்திடம் வந்து நடந்ததைச் சொல்லிக் கதறினார். முப்பத்தி ஐந்து அமைதியாக, "நீர் அந்தப் பணத்தை நியாயமான வழியில் சம்பாதிக்கலை போலும். அதான் திருடு போயிட்டுது" என்றார்.

வியாபாரிக்கு வந்தது கோபம். "யோவ், வாயை மூடுய்யா! நீ எல்லாம் ஒரு சன்னிதானம். இப்படி நீ எல்லாரையும் புண்படுத்தவேதான், எவனும் மடத்துக்கு ஒழுங்கா குத்தகை குடுக்கறது இல்ல. இன்னும் படுமட்டமாத்தான் போகும். 34 அருளாட்சிக் காலத்துல அவனவனும் தேடி வந்து சந்தோஷமா நெல் அளந்தான். கூடமெல்லாம் நெல். இடம் காணாமத் தெருவுல எல்லாம் கொட்டி வெச்சிருப்பாங்க. இறக்கி வைக்க ஆள் பத்தாம நெல் மூட்டை வண்டி வண்டியா நிக்கும். அது சன்னிதானமா, நீ…" முப்பத்தி ஐந்து நீண்ட நேரம் தலை நிமிரவில்லை.

அந்த 34 மாதிரி தாமும் நடந்து மக்கள் மனதில் தெய்வமாக நிலைக்க வேண்டும் என்று நினைத்தது மெய்கண்ட சாமி. 34இன் அருள் ஆட்சியில் சில நிகழ்ச்சிகள்:

ஒரு சமயம் மடத்து வயல்களில் நடவு வேலை குறித்த வேகத்தில் நடக்கவில்லை. இரண்டு வேளை மடத்து சாப்பாடு போட்டும் இவ்வளவு மெத்தனமா என்று மடத்தின் ஒரு சூப்ரண்டு கெட்ட வசவுகளாய்க் கொட்டிவிட்டார். தவசிப் பிள்ளைக்கு என்ன கோபமோ? சாம்பாரில் உப்பு, உரைப்பில்லை. ரசம் வெந்நீராய் ஓடியது. கூட்டு சகிக்கவில்லை. கடன் இழவே என்கிற சமையல். குடி படைகள் எல்லாம், "தூ! தூ! சாப்பாடா இது" என்று தொடவே மறுத்துவிட்டனர். மடத்துச் செலவுக் கணக்கில் மட்டும் அரிசியும், பருப்பும், எண்ணெயும் ஏகமாய் –

வேலை சரிவர நடக்கவில்லை என்கிற தகவல் சன்னிதானத்திற்கு எட்டி, காரியஸ்தரை வரச் சொல் என்று உத்தரவாகியது. காரியஸ்தரும் எரிச்சலில் இருந்தார். சாம்பார் வாளியை ஒரு கையில் எடுத்துக் கொண்டார். அரை வேக்காட்டு சாதம் மற்றொரு வாளியில். மனதின் வேகம் காலில் தெரிந்தது. தட், தட் என்று நடந்து…

"ஆமா, இந்த வேகாத சோத்தையும், சுவை இல்லாத சாம்பாரையும் சாப்பிட்டு விவசாயி நாலு நாள்ல 500 வேலி நிலம் பயிரிட்டுருவானா…" என்றபடி சன்னிதானம் எதிரே வாளிகளை வைக்க நினைத்த காரியஸ்தர், ‘தடால்’ என்று கீழேயே போட்டுவிட்டார்.

சாதம் சன்னிதானத்தின் கால்களில் விழுந்தது. சாம்பார் முகத்தில் தெறித்தது. காரியஸ்தர் வெலவெலத்தார்.

34இன் முகத்தில் முறுவல். எவ்வளவு பசி இருந்தால் இந்த மனிதர் இப்படி வேகமாய் வந்திருக்க வேண்டும் என்று அதன் சிந்தனை ஓடியது. "டேய்" என்று ஆட்களை அழைத்தது. உடனே ஓடி, பக்க ஊரின் நல்ல ஓட்டலில் நூற்றைம்பது பேருக்கான முதல் தர சாப்பாட்டை (தயிர், ஸ்வீட்டுடன்) வேனில் வரவழைத்து, "எல்லோரும் மொதல்ல சாப்பிடுங்கப்பா. அப்புறம் வேலை பார்த்தாப் போதும்."

இன்னொரு சமயம், கூடத்தில் நெல் வண்டியிலிருந்து நெல்லை அளந்து கொட்டுகிறார்கள். யாரோ அன்பர், பெட்டி பெட்டியாக ஆப்பிள்களைக் கொடுத்திருந்தார். தவசிப்பிள்ளை ஆப்பிள் அல்வா கொஞ்சம் செய்து – சுவை பார்த்த 34, "நல்லா இருக்குடா, அவ்வளவு ஆப்பிளையும் அல்வாப் பண்ணுடா" என்றது.

அல்வா தயாராகி சன்னிதானத்தின் முன் வைக்கப்பட்டது. "நெல் பயிரிடும் ஆளுங்களைக் கூப்பிடு. வரிசையா உக்காத்தி குடு. ஏழை சாப்பிடணும், மனசு குளுந்து வாழ்த்தணும்டா."

"நல்லாருக்கு சாமி" – ‘சம்சாரிகள்’ கையை நக்கினர்.

"டே, அவனுக்கு இன்னும் ரெண்டு கரண்டி போடுடா!"

பொங்கல், குரு பூஜை, நவராத்திரி, தீபாவளி எல்லா விசேடங்களிலும் புதுத் துணிகள் கொடுக்கும். கேட்டவர்களுக்கும், கேளாதவர்க்கும் நூறு ரூபாய் நோட்டாய்க் கசக்கி எறியும். எந்த ரூபாய் நோட்டானாலும் கசக்கித்தான் கையில் திணிக்கும்.

ஓர் இரவு பதினொரு மணிக்கு குமாஸ்தா திருச்சி முதலியாரை அழைத்து, "டேய், இப்போ ஜாம் தின்னா செரிக்குமா?"

"ராத்திரி பதினொரு மணிக்கு இப்படி ஒரு கேள்வியா? கொடுத்தால்ல செரிக்குமா, செரிக்காதான்னு சொல்ல?…"

ஸ்பெஷல் ஜாம் டின்கள் வந்திருந்தன. ஒரு ரூபாய் நாணயத்தை ஸ்பூனாய் உபயோகித்து எடுத்து, எடுத்து "முழுங்குடா முழுங்கு" என்று முதலியாரின் வாயில் இட்டது. டின் காலி.

"இன்னும் திம்பியாடா?"

"உக்கும்! குடுக்கக் காணுமாம். கேக்கறதப் பாரு!"

இன்னொரு டின்னும் காலி.

"சாமி, நா மட்டும் தின்னாப் போதுமா? இன்னும் நாலு டின் குடுத்தா வீட்ல உள்ளவங்களுக்கும்…"

"அடி செருப்பால! இவன் தின்னதுமில்லாம வீட்டுக்காமே, வீட்டுக்கு…" என்றாலும் 34இன் கண் ஜாடையில் முதலியாருக்கு 4 டின் ஜாம் சாங்ஷன்.

"சாமி வெறும் ஸ்வீட்தானா? தொண்டை எல்லாம் என்னவோ பண்ணுது. அரை கிலோ மிக்சர் இருந்தா நல்லா இருக்கும்…"

"இருக்கும். இருக்காதா பின்னே? டேய், இவனைக் கவனி" என்று சன்னிதானம் உத்தரவிட, ஒரு தட்டு நிறைய மிக்சர் முதலியார் முன் வைக்கப்பட்டது.

"போறுமாடா?"

"எப்படி சாமி போறும்? தொண்டை எல்லாம் காறுது. சூடா அரைப்படி பால் கெடைச்சா எதமா இருக்கும்…"

"பார்றா, பால் வேற வேணுமாம்."

பாலும் கொடுக்கப்பட்டது.

"டேய், இந்தக் காசையும் முழுங்கேண்டா?" என்று ஸ்பூனாக உபயோகித்த ஒரு ரூபாயையும் திருச்சி முதலியாரின் மடியில் விழச் சுண்டியது சன்னிதானம்.

"உக்கும். தூக்க மாட்டாமத் தூக்கி ஒரு ரூபாய் குடுக்கறதப் பாரு! இருவத்தி அஞ்சு ரூபான்னாலும் சந்தோஷமா முழுங்கலாம்."

"நிஜமா முழுங்குவியாடா?"

"காசை முதல்ல தளர்த்துங்க சாமி. முழுங்கிக் காட்றேனா இல்லியா பாருங்க."

"டே, இருவத்தி ஒரு ரூபா கொண்டா!"

கொண்டு வந்து வைத்த நாணயங்களில் இரண்டு மூன்றை வாயில் போட்டுக் கொள்ள, "டேய், டேய்" என்று பதறி 34 அவரின் குரல்வளையைப் பிடித்தது. "முழுங்கி வெச்சு உயிரை உட்டுடாதே! பணத்தை எல்லாம் எடுத்துக்கிட்டு ஓடு."

இப்படி அனுபவங்கள் நிறைய பேருக்கு அந்த சன்னிதானத்திடம் உண்டு. கொடுத்து மகிழ்ந்த ஒரே சன்னிதானம் அதுதான். மறுபக்கம் நித்யகல்யாண சாமியாகவும் இருந்தது. ஆனால், செய்த தான தர்மங்கள் மற்றும் கோவில்களின் கும்பாபிஷேகங்களில் அந்த லீலா வினோதங்களை யாருக்கும் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தோன்றவில்லை. அது பரிபூர்ணம் ஆனபோது "கலியுகக் கர்ணா, போயிட்டியே" என்று ஊர் உலகம் எல்லாம் கண்ணீர் விட்டது.

பெண்கள் விஷயம் மட்டும் நமக்கு வேணாம். தானும் பட்டத்துக்கு வந்து 34 போலவே பெருந்தன்மையாக நடந்து எல்லோர் மனதிலும் நீண்ட காலத்திற்கு தெய்வமாய் விளங்க நினைத்து உறங்கிப் போயிற்று மெய்கண்ட சாமி.

விடிந்தது.

–தொடரும்…

About The Author