தருணம் (9.1)

காத்துக் கொண்டிருக்கும் உல்லாசபுரி

கோபிகிருஷ்ணன்

என் கலவர சிந்தனையைக் குலைத்தது அவர் குரல். அந்த மீசைக்காரர் பட்டாளத்தில் பணி புரிந்தவர் என்றும் தான் தலைக்கவசம் அணிந்திருந்ததால்தான் அடையாளம் தெரியவில்லை என்றும் பாண்டு கூறினார். சற்றுக் கழித்து "வாழ்க்கை என்றால் அனைவரும் நண்பர்களாக இருக்க வேண்டும்" என்று ஒரு கொள்கை விளக்கத்தை முன் வைத்தார். ‘பரிச்சயத்தை மறுப்பவர்கள் கூடவா?’ என்று கேட்கத் தூண்டிற்று.

இந்த நிலையில் வாகனம் சொர்க்கபுரியை வந்தடைந்தது. நான் மனதில் உருவகித்திருந்த சொர்க்கபுரிக்கும் யதார்த்தத்தில் கண்ட சொர்க்கபுரிக்கும் நிரம்ப வேறுபாடுகள் இருந்தபடியால் நான் பதைத்துப் போனேன். அது ஒரு பிரமாண்டமான திருமண மண்டபம். நான் தயங்க, பாண்டு என்னை வலுக்கட்டாயமாக உள்ளே அழைத்துச் சென்றார்.

வைபவத்துக்கான நேர்த்தியான உடைகளை அணிந்துகொள்ளாமலிருந்ததால் நான் மிகவும் கூசியவாறிருந்தேன். அங்கு பாண்டு பல பெண்மணிகளுடன் வலிந்து பேசினார். தெரியாத சிலரிடம் தன்னை அமர்த்தலாக அறிமுகம் செய்துகொண்டார். நான் மாடிப்படி அருகில் ஒதுங்க, அவர் "என்ன ஓரமாக நிற்கிறீர்கள்? வாருங்கள்" என்று நடுவுக்கு வசதியான ஒரு பெரிய கூட்டு நாற்காலியில் சிறந்த ஜோடனைகளுடன் அமர்ந்திருந்த புதுமணத் தம்பதிகள் அருகில் என்னைக் கொண்டு சென்றார். மணப்பெண் தன் நெருங்கிய தோழி என்று ஆரம்பித்து அறிமுகப்படுத்தும் ஆயத்தங்களில் ஈடுபடலானார். மாப்பிள்ளை முகத்தில் லேசான அசௌகரியம் தோன்றி மறைந்ததை என்னால் பார்க்காமல் இருக்க முடியவில்லை. பிறகு, பாண்டு மணமகளுடன் தனக்கிருக்கும் அன்னியோன்யத்தைச் சுருக்கமாகத் தான் ஹாஸ்யம் என்று கற்பிதம் செய்து கொண்டவற்றுக்கிடையே விவரிக்க ஆரம்பித்தார். “அவள் எவ்வளவு அற்புதமானவள் என்று உங்களுக்குத் தெரிய நியாயமில்லை” என்றார். மாப்பிள்ளை முகத்தில் அந்தப் பாண்டு அதிகாரியாக பவனி வரும் நிறுவனத்தில் பணிபுரிபவள் என்பதை ஊகித்ததைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அவர் அதை நேரடியாகச் சொல்லியிருந்தால் பல அனாவசிய சந்தேகங்கள் என் மனதில் எழுந்ததைத் தவிர்த்திருக்க இயலும் என்று தோன்றிற்று. அவளை நோக்கிக் கைகூப்ப, அவள் தலையை மட்டும் ஒரு சிறு கணித அளவை நினைவுபடுத்தும் வண்ணம் மிக மிக லேசாக அசைத்தாள். எனக்கு அவமானம் பிடுங்கித் தின்றது. அவளது நேர்த்தியான ஒப்பனையும் என் சொந்த வாழ்க்கையில் கற்பனை செய்து கூடப் பார்க்கவியலாத விலையுயர்ந்த ஆடைகளும், என் சாதாரண உடைகளும் வியர்வை அப்பிய முகமும் தள வேறுபாட்டை உறுதிப்படுத்தின. வசதி படைத்த – இல்லாதப்பட்ட வர்க்க வித்தியாசம் துல்லியப்படுத்தப்பட்டது. நான் எவ்வளவு நேரம் அந்த ஒவ்வாத சூழலில் இருக்க நேரிடும் என்பது தெளிவாகவில்லை.

இப்பொழுது பாண்டு ஒரு பெரிய மனித தம்பதிகளை வயதான ஒருவருக்கு அறிமுகப்படுத்தினார். பெரிய மனிதர் ஒரு புகழ்வாய்ந்த மருத்துவர் என்பது தெரிய வந்தது. வயதானவர் மணமகளின் தகப்பனாராக இருந்தும் வைபவத்துக்கு வந்திருப்பவர்கள் பிறரால் அறிமுகப்படுத்தப்பட வேண்டிய நிலையில் இருந்ததால் அவரும் மகளும் சற்றுக் குறுகவேண்டிய நிலைக்கு ஆளானார்கள். பிறகு புகைப்பட சம்பிரதாயம் ஆரம்பித்தது. பாண்டு என்னைப் பிடித்திழுத்துச் சம்பிரதாயத்தில் கலந்துகொள்ள வைத்தார். இதற்குமேல் என்னால் அங்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை. விறுவிறுவென்று மாடியைவிட்டுக் கீழே வந்தேன். அப்படியே வீடு திரும்பி விடலாமா என்று நினைத்தேன் ஒரு கணம். ஆனாலும் பாண்டுவிடம் சொல்லிக்கொள்ளாமல் வருவது அவ்வளவு நாகரிகத்துக்குரிய செயலல்ல என்று தோன்றிற்று.

யாரோ எனக்காக எங்கோ பிரார்த்தனை நடத்தியிருக்க வேண்டும். சில மணித்துளிகளிலேயே பாண்டு படியிறங்கி வந்தார். "வாருங்கள், சாப்பிடலாம்! மணப்பெண்ணின் குடும்பம் விருந்துக்குப் பெயர் போனது" என்றார். சாப்பாட்டுக் கூடம் வெறிச்சோடிக் கிடந்தது. நேரம் அதிகமாகி விட்டிருந்தது. என் அவமான உணர்வு என்னை இன்னும் தின்றுகொண்டிருந்த நிலையில் விருந்தைத் திட்டவட்டமாக மறுக்கவேண்டி வந்தது. மண்டபத்தை விட்டு அகலுகையில் ஒரு சாத்துக்குடி கொண்ட ப்ளாஸ்டிக் பை என் கையில் திணிக்கப்பட்டது. அனிச்சையாக நான் அதைப் பெற்றுக் கொண்டிருந்திருக்க வேண்டும். என் பாதி பிரக்ஞை மனப்புழுக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்ததை உணர முடிந்தது.

வெளியில் வந்த பாண்டு தான்தான் அந்தப் பெண்ணுக்கு வேலை வாங்கிக் கொடுத்ததாகவும் தான் வரவேற்புக்கு வராதிருந்தால் அவள் மிகவும் துக்கப்பட்டுப் போயிருப்பாள் என்றும் கூறினார்.

மீண்டும் மோட்டார் சைக்கிள் கிளம்பிற்று. "நான் உங்களை வீடு வரை கொண்டு வந்து விடுகிறேன்" என்றார் பாண்டு மிகவும் ஆதுரத்துடன். என்னுடைய இருப்பிடம் வெகுதொலைவில் புறநகர்ப் பகுதியில் இருக்கிறது என்பதை நினைவுபடுத்தினேன். "என் நெஞ்சில் உரமும் இந்த வண்டியும் இருக்கும்வரை என் ஓட்டத்தை யாரும் தடைசெய்ய இயலாது" என்றார் பாண்டு. குரலில் உறுதி தூக்கலாகத் தெரிந்தது. அப்பொழுது வண்டி ஒருவழிப் பாதையில் வாகனங்கள் போகக்கூடாத திசையில் முன்னேறிக் கொண்டிருந்தது. பாண்டு உறுதியளித்தது போலவே காவல் துறையினர் யாரும் வண்டியை நிறுத்தவில்லை! அடுத்து வரும் பேருந்து நிறுத்தத்தில் என்னை விட்டுவிடுமாறு அவரை மன்றாட வேண்டி வந்தது. "என்னை நம்பியவர்களை நான் நடுத்தெருவில் விடுவதில்லை" என்று கூறியவாறே தெரு ஓரத்தில் தன் வாகனத்தை நிறுத்தினார் பாண்டு. நான் இறங்கிக் கொண்டேன்.

தரையில் காலூன்றியவாறே வாகனத்தில் அமர்ந்திருந்த பாண்டு தன் துறையின் முக்கியத்துவத்தைப் பற்றி விலாவாரியாகப் பேசலானார். கிட்டத்தட்ட ஒரு சொற்பொழிவு. அந்தத் துறையில் நான் ஒரு டிப்ளொமோ அவசியம் செய்ய வேண்டுமென்றும் எனக்கு அப்படி ஒன்றும் வயதாகி விடவில்லையென்றும் கூறியதுடன் படிப்பு முடிந்த கையோடு ஒரு சொர்க்கபுரி காத்திருக்கும் என்றும் உறுதியளித்தார். அவர் சொர்க்கபுரி என்ற வார்த்தையைப் பிரயோகித்ததும் எனக்கு வயிற்றைப் புரட்ட ஆரம்பித்தது. இதோடு இன்னொரு அசௌகரியமும் சேர்ந்து கொண்டதை உணர முடிந்தது. பாண்டு உரத்த குரலில் முழங்கிக் கொண்டிருந்ததால் பேருந்து வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்த பலர் அவரது நேயர்களானார்கள். அவர்கள் பாண்டுவுக்கு நடப்புக்கால மகான் பட்டத்தை மானசிகமாக வழங்கியிருக்கக் கூடும். அவர் பேசுவதை ஒரு கட்டத்தில்கூட என்னால் நிறுத்த இயலாத அல்லலில் என் பேருந்து வருவது சற்று தூரத்திலிருந்து தெரிந்தது. விடைபெறும் சடங்கு நிகழ்ந்தது. "தங்கள் ஓட்டம் தங்கள் வீடு வந்து சேர்ந்தவுடனேயாவது தடைபட வேண்டும்" என்று அவரை வேண்டிக் கொண்டேன். கையில் சாத்துக்குடிப் பை கனத்துக் கொண்டிருந்தது.

–தருணம் 10 – மு.தளையசிங்கம் அடுத்த இதழில்…

About The Author