தர்ட் க்லாஸ்

"எக்மோர் ஸ்டேஷனுக்குப் போறதுக்குக் கால்டாக்ஸி ஒண்ணு அமத்திக்கிருவோமா டேய்" என்று சித்தப்பா கேட்டதற்கு, "கால் டாக்ஸி போறாது சித்தப்பா, முழு டாக்ஸியே போவோம்" என்று நான் ஜோக் அடித்ததை ரசிக்காமல், சித்தப்பா முறைத்தார்.

ஏற்கனவே என் பேரில் அதிருப்தியாயிருக்கிறார். நான் தமாஷ் பண்ணியிருக்கக் கூடாது.

மத்யானந்தான் சிங்கப்பூரிலிருந்து ப்ளைட்டில் வந்தார். என்னை ஏர் போர்ட்டுக்கு வரவேண்டாமென்று சொல்லியிருந்தார். தானாகவே ஒரு டாக்ஸி பிடித்துக் கொண்டு ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்து விட்டார்.

சில மணி நேரம் என்னுடைய அறையில் ஓய்வு எடுத்துவிட்டு, ராத்திரி நெல்லை எக்ஸ்ரஸ்ஸில் ரெண்டு பேரும் திருநெல்வேலிக்குக் கிளம்புவதாய் ஏற்பாடு.

வந்தவர், "ஏ பாவி, என்ன டேய் ஒங்க மெட்ராஸ்ல வெயில் இந்தக் கொளுத்துக் கொளுத்துது!" என்று தாகத்துக்குத் தண்ணி கேட்டார்.

அப்போது தான் நான் அந்தத் தப்பைச் செய்தேன். கவனமில்லாமல், அந்த டம்ளரில் தண்ணீர் கொண்டு கொடுத்தேன்.

டம்ளரில் மேலே பொறித்திருந்த வாக்கியத்தைப் பார்த்து விட்டார். "என்னது டேய் இது?"

"எதக் கேக்கிக சித்தப்பா."

"தெரியாத மாறி கேக்கியே என்ன டேய்? இது கீதா கபேயில் திருடியதுன்னு இதுல எழுதியிருக்குல்லா, அதத்தாம்ல கேக்கேன்."

"அது… சித்தப்பா… இது என் ரூம் மேட்டோட டம்ளர் சித்தப்பா."

"ஒன் ரூம் மேட் படிக்யானா, இல்ல இப்படியொரு தொழில் செஞ்சுக்கிட்டு அலையுதானா?"

"நல்ல பையன் சித்தப்பா அவன். நம்ம ஊர்க்காரந் தான். புள்ளமார்ப்பையன். நல்லா படிப்பான்."

"அதெல்லாஞ் சரிதாண்டேய். களவாணிப் பயபுள்ளயா இருப்பாம் போலயிருக்கே."

"அது… சும்மா ஒரு த்ரில்லுக்காக செய்யறது சித்தப்பா… இந்த வயசுல எல்லாரும் செய்யறதுதான சித்தப்பா…"

"ஆமாண்டேய், நாங்கள்ளாம் இப்படித்தான் களவாண்டுக்கிட்டு அலஞ்சோமாக்கும்?"

"சும்மா ஜாலிக்கி இப்படிப் பண்ணுவான் சித்தப்பா. பெறவு, சத்தங்காட்டாமக் கொண்டுகிட்டுப் போய் எடுத்த எடத்துல வச்சிருவான்."

"மாட்டிக்கிட்டா எப்படியிருக்கும் தெரியும்லா? இந்த மாதிரிச் சேட்டக்காரப் பயகூடல்லாம் சேராத டேய். அவன எங்க, இங்ஙனதான் இருக்கானா?"

"இல்ல சித்தப்பா, ஸெமஸ்டர் முடிஞ்சி நேத்தே ஊருக்குக் கௌம்பிட்டான். நாந்தான் ஒங்களுக்காகப் பின்தங்கிட்டேன்."

"திரும்பி வந்தாம்னா, அவனக் களட்டி வுட்டுட்டு மறு சோலி பாரு. இல்லாட்டி நீ வேற ரூம்புக்கு மாறிக்க. என்ன டேய் நாஞ் சொல்றது?"

"ஆட்டும் சித்தப்பா" என்று சித்தப்பாவுக்கு ஒப்புக்கு ஒரு ஒப்புதல் அளித்துவிட்டுட் டாப்பிக்கை மாற்றினேன்.

"இந்தாங்க சித்தப்பா டிக்கட். நெல்லை எக்ஸ்ப்ரஸ். டிபாச்சர் ஏழு ப்பது. பஸ்ட் க்லாஸ்."
 
"ப்ஸ்ட் க்லாஸா? ஸெகண்ட் ஏஸில்ல டேய் எடுக்கச் சொன்னேன்?"

"அதவிட இது காசு கம்மி சித்தப்பா."

"அடக் கோட்டிக்காரா, பத்து இருவது கூட ஆனாலும் ஏஸி ஏஸி தானல. இந்த வேக்காட்ல திருநவேலி போய்ச் சேர்றதுக்குள்ள மனுசன் செத்து சுண்ணாம்பால்ல போயிருவான். சொன்னதச் செய்ய மாட்டிங்கியே, முந்திரிக் கொட்ட வேல பாக்கியே டேய்."

சித்தப்பாவுக்கு காசு மிச்சம் பிடித்துக் கொடுக்கிற முயற்சியில் அவரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டது தான் மிச்சம். பிறகு அவரிடம் பேச்சுக் கொடுக்கவில்லை.

ஒரு டாக்ஸியில் லக்கேஜை ஏற்றிக் கொண்டு ரெண்டு பேரும் எழும்பூர் வந்து சேர்ந்தோம். ஊருக்குப் போய் அப்பா அம்மா தங்கச்சிகளைப் பார்க்கப்போகிற சந்தோஷத்தோடு, வாழ்க்கையில் முதல் முதலாய் முதல் வகுப்பில் பிராயணஞ் செய்கிற உற்சாகமும் சேர்ந்து கொண்டது.

சித்தப்பா சொன்னது போல, ஸெகண்ட் ஏஸி என்றால் இன்னும் விசேஷமாய்த்தான் இருந்திருக்கும் போல. பரவாயில்லை, படிப்படியாய் முன்னேறுவோம்.

"ஏஸின்னா, அவனே பெட் ஸ்ப்ரட், பிளாங்க்கட், பில்லோ எல்லாம் குடுத்துருவான்" என்று சொல்லிக் கொண்டே சித்தப்பா அவருடைய பிரம்மாண்டமான ஸூட்கேஸைத் திறந்து ஒரு தலகாணியும் போர்வையும் எடுத்து லோயர் பர்த்தில் அவருடைய படுக்கையை ஒழுங்கு செய்து கொண்டார்.

"ஒனக்கு விரிச்சிப் படுக்க என்னமும் இருக்கா டேய்?"

"எனக்கு வேண்டாம் சித்தப்பா."

"சரி இந்தப் பில்லோவ வேணா தலக்கி வச்சிக்க."

விமானப் பயண அடையாளமாய் டாக் ஒன்று தொங்கிய தன்னுடைய ஹாண்ட் பாகேஜின் ஸிப்பைத் திறந்து சித்தப்பா ஒரு குட்டித் தலகாணியை எடுத்தார். "புதுசு டேய், அழுக்காக்கிராமப் பாத்துக்க" என்கிற வேண்டுகோளோடு அதை என்னிடம் தந்தார்.

சிக்கனமாய்க் கைக்கு அடக்கமான, அழகான, விசேஷமான மினி பில்லோ.

அதன் ஒரு முனையில், சின்னதாய் அழகாய் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் என்று.

(நன்றி :ஆனந்த விகடன்)

About The Author

1 Comment

  1. Sankaran

    சித்தப்புக்கு சான்ஸு கெடச்சா ப்ளேனோட சக்கிரத்தையே கிளப்பிட்டு வந்துடுவாக!

Comments are closed.