தர்மசங்கடம்

காரைக்குடியில் வசித்து வந்த ராகவனின் மகள் குடும்பம் திருச்சியில் உள்ள பெல் கம்பெனியின் குடியிருப்பில் இருந்தது. அங்கு அடிக்கடி போய் வரும் போது மருமகனின் ஆத்ம நண்பன் அனந்துவின் பரிச்சயம் அவருக்குக் கிடைத்தது. அனந்துவும் அவன் மனைவி ஸ்ரேயாவும் மனம் திறந்து பேசுவதை ராகவன் மிகவும் ரசிப்பார். அவர்கள் வாதத்தில் வேடிக்கையோடு அர்த்தமும் இருக்கும். ஒரு முறை கார் பற்றிய விவாதத்தில் கலந்து கொண்டார்.

"மாமா, இவர் மானேஜர் ஆகப் போறார். இருக்கும் வசதிக்கு ஃபோர்டு ஐகான் காரே வாங்கி அனுபவிக்கலாம். ஆனா கொல்லன் பட்டறைக்குப் போற ஃபியட் காரேஜில் தூசியோடு தூங்குது."

ராகவன், அனந்துவைப் பார்க்க அவன் சிரித்துக் கொண்டே பதில் கொடுத்தான், "மார்னிங் வாக்கிங் போல அஞ்சு நிமிஷத்திலே கம்பெனிக்கு நடந்தே போயிடலாம். வச்சிருக்கிற ஹோண்டா பைக்குக்கே வேலையில்லே. கார் அலவன்ஸ் மூவாயிரம் கிடைப்பதால் வாங்கிப் போடச் சொன்னாங்க."

"அப்படிப் பாத்தா மானேஜர் வேலையே அதிகமாச்சே. வசதி இருக்கிறப்போ வாழ்க்கையை அனுபவிக்கலாமே. இப்போ இல்லாமே காசிக்குப் போற வயசிலே முடியுமா மாமா?"

"அனந்து ஸ்ரேயா சொல்றதிலே நியாமும் அர்த்தமும் இருக்கே. இப்போதான் ஏகப்பட்ட வசதிகள் வந்தாச்சே. குழந்தைகள் ரெண்டு இருக்கு. நாற்பதைத் தாண்டலே. பாம்பை மிதிக்கிற வயசுலே புதுக் கார் வாங்கி அனுபவிக்கலாமே"

"இல்லேன்னு சொல்லலை மாமா. நாலு நாளைக்கு அது நல்லா இருக்கும். அப்புறம் ஷெட்டில் தூங்கும். யானையை வாங்கிக் கட்டிப் போட்ட மாதிரிதான்."

"ட்ரைவரைப் போட்டால் போச்சு. இவரும் ஓட்ட வேண்டியதில்லை. காரும் சுத்தமாக இருக்கும். இவருக்கும் மனசுக்குள்ளே ஆயிரம் ஆசை இருக்கு"

"சரி சரி. சாமியாருக்கே ஆசையிருக்கிறப்போ எனக்கு இருக்காதா?"

"அப்போ ஏன் அதை மனசிலே போட்டு வச்சிருக்கே அனந்து? ஸ்ரேயா சொல்றாப்லே இதைத் தள்ளி விட்டுட்டுப் புதுசா வாங்கிடு."

"நீங்க வந்தது நல்லதாப் போச்சு. இதில் உங்க உதவியும் தேவைப்படுது."

"சொல் செய்யறேன். அதை விட எனக்கு என்ன வேலை?"

"என்னைப் போல் இங்கு கார் அலவன்ஸ் வாங்கறதுக்குன்னே நிறையப் பேர் ஓட்டை உடைசலை வச்சிருக்கா. இங்கே வித்தா அடி மாட்டு விலைக்குத்தான் கேப்பாங்க. பேரம் பேச எனக்கு அனுபவமும் இல்லே. காரைக்குடியிலே ட்ரை பண்ணுங்களேன் மாமா."

ஸ்ரேயா மனதில் மத்தாப்பு எரிய அதன் பிரகாசத்தை முகத்தில் பார்த்தார் ராகவன். கார் பற்றிய அனுபவம் இல்லாவிட்டாலும் வசதி படைத்தவர்களைத் தெரியும். தமது திருச்சி விஜயம் ஒரு நல்ல காரியத்தைச் சாதிக்கப் போவதை உணர்ந்தார். விரைவில் ஏற்பாடுகள் செய்வதாக நம்பிக்கை கொடுத்து விடை பெற்றார்.

காரைக்குடி ஆராய்ந்த பொழுது அதிர்ச்சி உண்டாயிற்று. அனைவரும் பல மாடல்களில் புதுப்புதுக் கார்களாக வைத்திருப்பது தெரிந்தது. காலம் மாறி வீட்டுக்கு ஒரு புதுக் காராக இருக்கும் யதார்த்த நிலையை ராகவன் கண்டார். ஆழம் தெரியாமல் காலை விட்டதை உணர்ந்தாலும் முயற்சியைக் கைவிடவில்லை. கார் ப்ரோக்கர்களை அணுகினார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்லி ராகவனின் ஆர்வத்தைக் குறைத்தார்கள். கடைசியாக ஒரு புரோக்கர், "சார், திருச்சி திருவெறும்பூர் பக்கத்தில் பெல் கம்பெனி குவார்ட்டர்ஸ் இருக்கு. அங்கே உள்ள ஆபீசர்கள் கார் அலவன்ஸ்க்காக பழைய கார்களை வாங்குவதாகக் கேள்விப் பட்டேன். அங்கே ட்ரை பண்ணுங்க. கட்டாயம் பார்ட்டி கிடைக்கும்." என்றதும் ராகவன் மனதுக்குள் சிரித்துக் கொண்டார்.

About The Author

2 Comments

Comments are closed.