தலைவா – இசை விமர்சனம்

‘தலைவா!’ இரண்டு விஜயும் இணையும் படம்! இதற்கு இசை அமைத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். பலத்த எதிர்பார்ப்பிற்கு இடையில் வெளிவந்திருக்கும் இதன் பாடல்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியிருக்கின்றனவா எனப் பார்ப்போம்!

தமிழ்ப் பசங்க

மைக்கேல் ஜாக்சனின் பிரபல ஆல்பத்தின் இசையை நினைவூட்டும் பீட்டுகள்! தமிழின் பெருமை பேசுவதாக நினைத்துத் தமிழ் வதை செய்திருக்கிறார்கள். பென்னி தயாளின் குரல் நன்றாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் தமிழ் ராப் வரிகள் பாடலின் மதிப்பைக் குறைக்கின்றன.

பாடலிலிருந்து ஒரு துளி:

எங்கள் தெருக்கூத்திலும், எங்கள் எசப்பாட்டிலும்
மெல்லிசைகள் துள்ளி வரும் வா வா வா!

யார் இந்த சாலையோரம்

ஜி.வி தன் மனைவி சைந்தவியுடன் பாடியிருக்கும் பாடல். அழகான மெலடி. பாடியிருப்பவர்கள் இருவரும் காதலர்கள் என்பதால் பாடலில் கூடுதல் காதல் தெரிகிறது. இடையிசையும் கவனிக்க வைக்கிறது. நிச்சய வெற்றி இதற்கு உறுதி.

பாடலிலிருந்து ஒரு துளி:

நேற்று நான் பார்த்ததும் இன்று நீ பார்ப்பதும்
நெஞ்சம் எதிர்பார்ப்பதும் ஏனடி?

வாங்கண்ணா! வணக்கங்ணா!

தனுஷ், சிம்பு வரிசையில் காதல் தூற்றும் பாடலைப் பாடி ஆடியிருக்கிறார் விஜய். குரல் தவிர்த்து மற்றவை ‘அடிடா அவள’ எனப் பின்னோக்கி நம்மை இழுத்துச் செல்கின்றன. நா.முத்துகுமார் எழுதியிருக்கிறார். சிறப்பாக ஏதும் இல்லை. இருந்தாலும் கேட்க முடிகிறது.

பாடலிலிருந்து ஒரு துளி:

ஹிட்லரு டார்ச்சரெல்லாம் ஹிஸ்டரி பேசுதுணா
இவளுக டார்ச்சரெல்லாம் யாருமே பேசலணா

சொல் சொல்

இதுவும் காதல் பாடல்தான். விஜய் பிரகாஷ், அபய், மேகா ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். மென் பீட்டுகள் ஒலிக்க, குரல்தான் பெருவாரி இடத்தைப் பிடிக்கிறது. விஜய் பிரகாஷின் குரலைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டார் ஜி.வி. வரிகள் அருமையாக இருக்கின்றன. ஆனால், இசையில் பெரிய ஈர்ப்பு இல்லை. இருந்தும், வெற்றி அடைய வாய்ப்புள்ள பாடல்.

பாடலிலிருந்து ஒரு துளி:

என் பேரில் உந்தன் பேரினைச் சேர்க்க ஆசை வந்ததே!
உன் தோளில் எந்தன் தோள் வந்து சாய நேரம் வந்ததே!

தலைவா தலைவா!

மீண்டும் மைக்கேல் ஜாக்சனை நினைவுபடுத்துகிறார் ஜி.வி. 90களில் வெளிவந்த ஹீரோயிசப் பாடல்களின் சாயலில் ஒலிக்கும் இதை ஹரிஹரண், பூஜா பாடியிருக்கிறார்கள். விஜயின் ரசிகர்களுக்கு வேண்டுமானால் பிடித்துப் போகலாம்.

மொத்தமாகப் பார்த்தால் ஒரே ஒரு மெலடி மட்டும்தான் சொல்லிக் கொள்ளும்படியிருக்கிறது. “என்னாச்சு ஜி.வி?” என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

தலைவா! – இன்னும் உழைத்திருக்கலாம்.

About The Author