தலைவியின் உடன்போக்கும் செவிலித்தாயின் உளநிலையும்

(சென்ற வார தொடர்ச்சி)

உடன்போக்கில் (வீட்டை விட்டு) சென்ற மகளைத் தேடிச் செல்கின்ற செவிலித்தாய் வழியில் கண்ட செடி, கொடிகளிடமெல்லாம் புலம்பும் நிலையும் இலக்கியத்தில் காட்டப்படுகிறது. அகநானூற்றுப் பாடல் ஒன்றில் செவிலி வயக்கொடியிடம் தன் வருத்தத்தைச் சொல்வதாகப் பாடல் உண்டு. அதனை,

"வாடினை – வாழியோ, வயலை! – நாள்தொறும்
பல்கிளைக் கொடிகொம்பு அலமர மலர்ந்த
அல்குல் தலைக்கூட்டு அம்குழை உதவிய
வினைஅமை வரல்நீர் விழுந்தொடி தத்தக்
கமஞ்சூல் பெருநிறை தயங்க முகந்துகொண்டு
ஆய்மடக் கண்ணள் தாய்முகம் நோக்கிப்
பெய்சிலம்பு ஒலிப்பப் பெயர்வனள் வைகலும்
ஆரநீர் ஊட்டிப் புரப்போர்
யார்மற்றுப் பெறுகுவை? அளியை நீயே" (அகநானூறு – 384)

என்ற அடிகள் விளக்குகின்றன.

உடன்போக்குச் சென்ற தலைவியைத் தேடி வழி நெடுகச் செல்கிறாள் செவிலித்தாய். அப்படிச் செல்லும்பொழுது கண்டோர் அவளை நோக்கி, தலைவன் தலைவியின் பெருமையைக் கூறி, ‘வருந்தாதே’ எனச் சொல்லும் பாடல்கள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன.

"பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும், மலைக்குஅவைதாம் என்செய்யும்?
நினையுங்கால் நும்மகள் நுமக்குஆங்கு அனையளே!

சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்செய்யும்?
தேருங்கால் நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே!

ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என்செய்யும்?
சூழுங்கால் நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே" (கலித்தொகை – 8)

என்று கலித்தொகைப் பாடல் செவிலித்தாயை வழியில் கண்டோர் கூற்றினை வெளிப்படுத்துகிறது. இதில், "நாங்கள் அவர்கள் இருவரையும் கண்டோம். ஆண்மையின் அழகெல்லாம் ஒன்று சேர்ந்த ஓர் இளைஞனும் சென்றதைக் கண்டோம். அணி புனைந்த மடவாளின் தாயே! நீர் இனி மன அமைதியோடு நும் வீட்டுக்குச் செல்லுக! மணப்பொருள் பலவும் கூட்டிய நறும் சந்தனம், தம் உடம்பில் பூசிக்கொள்ளுமிடத்து அல்லாது, மலையில் பிறந்தாலும் அம்மலைக்கு என்னதான் நன்மை செய்யும்? அது போலத்தான் உன் மகளும். கடலில் முத்துக் கிடைத்தாலும் கடலுக்கு என்ன பயன்? அது அணிந்து கொள்பவருக்கே பயனைத் தரும். உன் மகளும் அப்படித்தான்! யாழில் எழும் இனிய இசை அதை மீட்டுபவர்களுக்கல்லாமல், யாழுக்கு என்ன செய்யும்? உன் மகளும் அது போன்றவள்தான்! ஆகவே நீ வருந்தாமல் செல்வாயாக" என்று கூறுகின்றனர்.

இவ்வாறு உடன்போக்கிலே சென்றுவிட்ட மகளுக்காக வருந்துகிற செவிலித்தாய் குறித்துப் பல பாடல்கள் இலக்கியங்களில் அமைந்துள்ளன. ஆனால், தந்தையின் உணர்வுகள் என்ன என்பது பற்றி எங்கும் குறிப்புகள் இல்லை. பெரும்பாலான பாடல்களில் தாய் உடன்போக்காய்ச் சென்றுவிட்ட மகளின் காதலை எதிர்க்காமல், அவள் தன்னை விட்டுப் பிரிந்து போய்விட்டாளே என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தும் நிலையே காட்டப்படுகிறது.

நற்றிணையில் தலைவி உடன்போக்கு மேற்கொண்டதற்குச் செவிலி வருந்தி, தன் ஆற்றாமையை வெளிப்படுத்துவது குறிப்பிடப்படுகிறது.

"ஒருமகள் உடையேன் மன்னே! அவளும்
செருமிகு மொய்ம்பின் கூர்வேல் காளையொடு
பெருமலை அருஞ்சுரம் நெருநல் சென்றனள்!" (நற்றிணை – 148)

என்ற பாடலில், "நான் பல பெண்களைப் பெற்றவளும் அல்ல. ஒரே ஒரு மகளைப் பெற்றவள். அவளோ வலிமை கொண்ட, கூர்மையான வேலைக் கொண்டு போர் செய்யும் இளைஞனோடு காதல் கொண்டு என்னைப் பிரிந்து உடன்போக்காய்ச் சென்றுவிட்டாள். அவளுக்காக வருந்தும் என்னிடத்தே அவள் உடன்போக்குச் சென்றது சரியானது, ஆகவே உன் துயரத்தைத் தாங்கிக்கொள் என்கிறீர்களே? அது என்னால் தாங்குவதற்கு இயலுமா? அழகுப் பாவையான என் மகள் விளையாடி மகிழ்ந்த திண்ணையையும் நொச்சி வேலி சூழ்ந்த இடத்தையும் நினைப்பேன். நினைத்தால் என் உள்ளம் கொதிக்குமே! நான் என்ன செய்வேன்!" என்று பிரிந்து போன மகளின் அருமை பெருமையை நினைத்துப் புலம்பும் தாயையும் அதனைப் பொறுத்துக் கொள்ளச் சொல்கிறவர்களையும் காணலாம்.
இவற்றின் மூலம் சங்க இலக்கியங்கள் உடன்போக்கை அங்கீகரிப்பதை அறிய முடிகிறது.

அக்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்போக்கு என்ற நிகழ்வு இன்றளவும் மக்களிடையே வழக்கத்தில் உள்ளது. காதலனோடு போக விரும்பியவள் தன் தாய், தந்தை, தோழிகளை விட்டு, வீட்டை விட்டு வெளியேறுவதும் அவர்களைப் பெற்றோர் தேடுதலும் போன்ற முறைகள் சங்ககாலம் தொடங்கி இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

உடன்போக்கு மேற்கொண்ட தலைவியை எண்ணி அவள் குடும்பத்தினர் வருந்தும் நிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் தலைவியின் நிலைகண்டு செவிலித்தாய்க்கு ஏற்படும் உணர்வு நிலை, உள்ள நிலைப்பாடுகள், கண்டோர் அவளுக்கு எடுத்துக் கூறும் கருத்துகள் எல்லாம் தாய் அன்பின் மகத்துவத்தைத் தெளிவாக்குகின்றன.

About The Author