தவறான பாதைகள்

"சுபா பைத்தியமாட்டம் பேசாதே. கொஞ்சநாளாக உன் போக்கு சரியில்லை. இப்போ குண்டை தூக்கிப் போடுறே!"

"நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். என் காலத்தை இப்படியே ஓட்ட முடியாதும்மா."

"ஏண்டி இன்னிக்கோ நாளைக்கோ உட்கார்ந்திடப்போற உன் மகளோட எதிர்காலத்தை நினைச்சுப் பாத்தியா?"

"நல்லா யோசிச்சுட்டேன். இன்னும் காலம் கடத்த நான் தயாரில்ல."

"நீ இப்படி பண்ணினா உன் தம்பி தங்கச்சியோட கல்யாணம் என்னவாகும்? இதெல்லாம் முடியட்டும். அப்புறம் பாத்துக்கலாம்."

"இனியும் யோசிச்சு காலம் கடத்த விரும்பல்ல. அவங்களுக்கு கல்யாணமானா என் நிலைமை இன்னும் மோசமாகத்தான் போகும். எனக்கு புது வாழ்வு தந்து மகளையும் காப்பாத்த தயாரா இருக்காரு அவர்."

"அடிப் பாவி மகளே. காலேஜ்லே படிக்கிறப்ப ஓடிப்போயி தாலி கட்டிப் புள்ளைய பெத்துக்கிட்டே. அப்புறம் அவன் கொடுமை தாங்காமே இங்கே வந்து வாழாவெட்டி ஆனே. கவலை தாங்காமல் ஹார்ட் அட்டாக்கில் உன் அப்பவை போய்ச்சேர வச்சு என்னைத் தனி மரமாக்கிட்டே."

"பழைசைக் கிளறாதே. நடக்கப் போறத பேசு."

"என்னடி உன் இஷ்டத்துக்குப் பேசறே? பத்து வருஷத்துக்கு முன்பே மறுகல்யாணத்துக்கு சந்தர்ப்பம் வந்தப்போ மகளை கரை ஏத்தினா போதும் இந்த எழவெல்லாம் வேணாமுண்னே. இப்போ மக வயசுக்கு வர சமயத்துலே தங்கச்சி கல்யாணம் கூடி வர்றப்போ இதென்னடி கூத்து? என்னையும் தின்னுட்டு இவங்களை அனாதை ஆக்கப் பாக்கிறியா?"

"உனக்குச் சொல்லி புரிய வைக்க முடியாது. நாளைக்கே கிளம்பப் போறோம்."

பதிலுக்குக் காத்திராமல் சுபாஷிணி அறைக்குள் புகுந்து, தூங்கிக் கொண்டிருந்த மகள் அனுசா அருகில் உட்கார்ந்தாள். சிறிது நேர சிந்தனைக்குப் பின் செல்லை எடுத்து தினேஷிடம் பேசினாள். எதிர் முனையில் ‘எல்லா ஏற்பாடுகளும் செஞ்சாச்சு. கார் ஐந்தரைக்கு வந்துடும். கோவிலுக்குப் போய் காரியத்தை முடிச்சுடலாம். எல்லாம் கொஞ்ச நாளில் சரியாகிடும். அனுசாவை அப்பாவுக்கு மேல் கவனிச்சுக்குவேன். டோண்ட் ஒர்ரிடா…’ என்று சொல்ல, அம்மாவால் ஏற்பட்ட பயம் விலகியது. செல்லில் அலாரம் செட் செய்து விட்டுத் தூங்கிப் போனாள்.

சுபாஷிணி கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது ராகிங் செய்த சீனியர் மிதுனே காதலனாகி விட்டான். தந்தை தலை முழுக, அவனுடன் ஓடிப்போனாள். மிதுனின் தந்தை நாடகமாடி மகனை இழக்க விரும்பாமல் ஒருதலையாக மணமுடித்து வைக்க செல்வந்தர் வீட்டு மருமகள் ஆனாள். விரைவில் தாயானாள். மிதுன் அப்பாவின் பிசினசை கவனிப்பதில் மும்முரமானான். அவளின் மேல் காமமும், காதலும் மறைந்து அவனுக்கு காசின் மேல் காதல் வர, அப்பா நாடகத்தின் அடுத்த கட்டத்துக்குச் சென்றார்.

மாமனார் மாமியார் கொடுமை ஆரம்பித்தது. அமுதம் விஷமாக, அதிர்ந்து போனாள். கணவன் கண்டு கொள்ளாமல் அப்பா அம்மா பக்கம் சாய்ந்து விட்டான். நாட்கள் யுகமாக நகர அனுசா வந்து கொஞ்சம் ஆறுதல் தந்தாள். அதுவும் நிலைக்க முடியாமல் அடுத்தக் கட்டம் ஆரம்பம் ஆனது.

அவளுக்கும் ட்ரைவர் கன்னியப்பனுக்கும் தொடர்பு இருப்பதாக செட்டப் செய்து அவனை நம்ப வைத்தார்கள். அடி, உதை, திட்டு அன்றாட நிலையாகி டைவர்ஸ் பெற தாய் வீட்டுக்கு விரட்டப் பட்டாள். அவள் கோலத்தைக் கண்ட தந்தை மனம் மாறி அடைக்கலம் தந்தார். ஆனால் கவலை மனதை அரித்து இரத்த அழுத்தம் உடலைக் கெடுத்து அவரை இறைவனடி சேர வைத்து விட்டது. அம்மா விதவை ஆகி மகளையும் பேத்தியையும் கரை சேர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டாள். அதிகாலை செல் அலாரத்துக்கு முன் எழுந்து விட்டாள் சுபா. குளித்து ஒப்பனை முடித்து மகளை எழுப்பி விட்டாள். ஒரு மாத காலமாக அவள் கொடுத்த பயிற்சி அந்த பிஞ்சு மனத்தை வரப் போகும் அப்பா பற்றி புரிந்தும் புரியாமலும் ஆக்கி வைத்திருந்தது. அவளும் சுறுசுறுப்பாகி குளித்து வந்து ரெடியாகி விட்டாள். ஆளுக்கொரு சூட்கேசுடன் ரெடியாகி ஜன்னல் வழியே காரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அம்மாவுக்கு எழுதி வைத்த கடிதம் மேஜைமேல் மின் விசிறியின் காற்றால் படபடத்துக் கொண்டிருந்தது. சுபாஷிணியின் திட்டம் தெரியாத அம்மா. தம்பியும், தங்கையும் ஹாலைத் தாண்டி இருந்த அறையில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
தினேஷ் அனுப்பிய கார் வந்தது. தானியங்கிக் கதவைத் திறந்து மகள் முன்னே வர, தாய் கதவை மூட, பெட்டிகளை ட்ரைவர் காரில் வைத்தான். மன உறுதி கலையாமல் இருக்க விரைவாக மகளை இழுத்துக் கொண்டு காரில் ஏற, அது நீலாங்கரை நோக்கி பறந்தது.

முதல் காதலில் ஏற்பட்ட வடு மாற கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்து கால் செண்டரில் வேலை பார்த்தாள். காலம் மனக் காயங்களை ஆற்றி விட யதார்த்த வாழ்க்கையைப் பார்க்க மனம் சலனமடைந்தது. பாய், கேர்ள் ப்ரண்ட்ஸ் செய்யும் லூட்டிகள் அவள் புலன்களை உசுப்பி விட்டன. இளமை இவைகளைப் பார்த்து ஏங்க வைத்தது. பலர் அவள் உடலுக்காக நட்பு என்ற போர்வையில் நெருங்கி வந்தார்கள். மகள் இருப்பதை அறிந்தவுடன் உடலை மட்டும் விரும்பினார்கள். தன்னைப் போல் தவிக்கும் ஒருவன் தனக்கும் மகளுக்கும் வாழ்வு கொடுத்து காப்பாற்றும் ஆத்மாவை தேடி அலைந்தாள். அந்த சமயத்தில் தினேஷ் அவள் வாழ்வில் கபடமாக நுழைந்தான்.

வெளி உலகத்துக்கு கால் செண்டர் காண்டீன் மேனேஜர். ஆனால் உல்லாசம் தேடி அலையும் செல்வந்தர்களுக்கு இளம் பெண்களை ஏற்பாடு செய்யும் ஈனத்தொழிலை செய்து வருபவன். மாறிவரும் கலாசாரமும் அதற்கு நல்ல வாய்ப்பை தந்திருந்தது. அவனுடைய தேனான பேச்சும், நடை உடை பாவனைகளும் சுபாஷிணியை எளிதில் கவர வைத்து விட்டது. அவளுடைய பி‎ன்னணியைத் தெரிந்து கொண்டு கதை அளந்தான். மானசீகமாக காதலித்து திருமணம் செய்தவள் பெற்ற மகளோடு இன்னொருவனிடம் மும்பை ஓடி விட்டதாக கதை அளக்க ‘தனக்காகவே தினேஷை கடவுள் படைத்திருக்கிறார்’ என்று நம்பினாள்.

நட்பு காதலானது. வரம்பு மீறும் சந்தர்ப்பங்கள் வந்த போதெல்லாம் கண்ணியம் காப்பது போல் நடித்தான். அவள் மகுடிக்கு ஆடும் பாம்பானாள். மறுவாழ்வு தேடிக்கொள்ளப் போவதை வீட்டில் எதிர்த்தார்கள். தம்பி தங்கைக்காக பொறுமை காக்கச் சொன்னதும் அறிவிழந்த நிலையில் சிந்திக்கத் தோன்றவில்லை. இன்று அவனை கோவிலில் வைத்து திருமணம் செய்ய மகளோடு புறப்பட்டும் விட்டாள்.

கார் நீலாங்கரை பங்களாவுக்கு வந்து நின்றது. சில பெரியவர்கள், பலதரப்பட்ட சிங்காரிகளோடு தினேஷ் அவர்களை வரவேற்றான். அங்கு நிலவிய சூழ்நிலையால் பூரித்துப் போனாள்.

"வாடா என் செல்லம். இனி நான்தான் உன் செல்ல அப்பா."

"நீதான் என் மருமகள் சுபாஷிணியா? ட்ரஸ்சிங் ரூம்லே போயி நல்லா அலங்காரம் பண்ணிக்கோ. இன்னும் ஒரு மணி நேரத்திலே கிளம்பினா திருநீர்மலை கோவில் போக சரியாக இருக்கும்."

அங்கு கிடைத்த வரவேற்பு அவளை திக்குமுக்காடச் செய்தது. அகமும் முகமும் மலர அலங்காரம் செய்து கொள்ள அறைக்குள் நுழைந்தாள். அவளைத் தொடர்ந்து ஒப்பனைக்காரியும் சென்று உதவினாள். புதுமணப் பெண்ணாக வெளிவந்ததும் பேந்தப் பேந்த முழித்தபடி தனியாக நின்ற மகளைப் பார்த்துக் கேட்டாள்:

"என்ன செல்லம், என்ன ஆச்சு? எப்படியோ இருக்கே?"

அடுத்த அறையில் பலர் பலவிதமாக பேசி சிரித்துக் கொண்டிருந்த ஒலிகள் கேட்டன. போர்டிகோவில் அலங்கரிக்கப்பட்ட கார் தெரிந்தது. அம்மாவை ஒதுக்குப் புறமாக கூட்டிப் போய் காதில் கிசுகிசுத்தாள் மகள்.

"அம்மா, என்னென்னமோ பேசுறாங்க. தினேஷ் மாட்டையும், கன்னுக்குட்டியையும் பிடிச்சுட்டு வந்துட்டானாம். ரெண்டும் ஜோரா இருக்காம். இந்த மாதிரி கன்னுக்குட்டிதான் சேட்டுக்கு வேணுமாம். நீ மூணாவது மாடாம். நம்ம ரெண்டு பேராலே காசு கொட்டப் போகுதுண்ணு சொல்றாங்கம்மா."

சுபாஷிணிக்கு உண்மை நிலை அறிய தலையில் இடி விழுந்தது போல் ஆனது. பெண்களை வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டங்களை செய்தியாக படித்தது நினைவுக்கு வந்தது. பெண்மை விழித்துக் கொள்ள அசாத்திய தைரியமும் சாதூர்யமும் வந்தன. அலங்காரத்தை கலைத்தாள். கொல்லைப் புறவழியாக மகளை இழுத்துக் கொண்டு மெயின் ரோட்டுக்கு ஓட்டமும் நடையுமாக வந்தாள். அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி ஏறி வீட்டுக்கு விரைந்தாள்.

மகளின் கடிதத்தைப் படித்து கதி கலங்கிப் போய் இருந்த சமயம் வாசலில் வந்து நின்ற ஆட்டோ சப்தம் கேட்டு அம்மா திறந்தாள். அவிழ்த்து விட்ட கன்று தாயிடம் ஓடுவது போல் சுபாஷிணி அம்மா காலில் விழுந்து கதறினாள்.

"என்னை மன்னித்து விடம்மா. இரண்டாவது தடவை தவறான பாதையில் சென்று பாவக்குழியில் விழ இருந்த எங்களை கடவுள் கடைசி நேரத்தில் காப்பாற்றி விட்டார். இனி நீங்கள்தான் எல்லாம்."

பாசமுடன் மகளை அணைத்து அன்னை ஆறுதல் அடைந்து கண்ணீர் விட்டாள்.

*****

About The Author