திரிகூடப்ப ராசப்ப கவிராயருடன் 60 வினாடி பேட்டி

(கேள்விகள் கற்பனை, பதில்கள் குற்றாலக் குறவஞ்சி நூலிலிருந்து)

1. அன்பரே, ‘ஆயிரம் கண் போதாதடி வண்ணக் கிளியே, குற்றால அழகை நாமும் காண்பதற்கு வண்ணக் கிளியே’ என்று சினிமாவில் பாடுவதற்கே உங்கள் குற்றாலக் குறவஞ்சிதான் காரணமோ?

வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பர்
கமன சித்தர் வந்து வந்து காய சித்தி விளைப்பார்
தேன் அருவி திரை எழும்பி வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக் காலும் தேர்க் காலும் வழுகும்
கூனல் இளம் பிறை முடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மழையே

2. குற்றால மலையில் செண்பகா தேவி என்றும் ஒரு அருவி உண்டாமே?

செழுங் குரங்கு தே மாவின் பழங்களைப் பந்தடிக்கும்
தேன் அலர் சண்பக வாசம் வான் உலகில் வெடிக்கும்

3. உங்கள் நாட்டின் சிறப்பு என்ன?

"மாதம் மூன்றும் மழை உள்ள நாடு
வருடம் மூன்று விளைவுள்ள நாடு
வேதம் மூன்றும் பலா உள்ள நாடு"

"ஓடக் காண்பது பூம் புனல் வெள்ளம்
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்"

4. ஏ, குறத்தி, உனக்கு குறி சொல்லி அனுபவம் ஏதேனும் உண்டா?அல்லது இந்த மலை மட்டும்தான் உனக்குத் தெரியுமா?

வஞ்சி மலை நாடு கொச்சி கொங்கு
மக்கம் மராடந் துலுக்காணம் மெச்சி
செஞ்சி வட காசி நீளம் சீனம்
சிங்களம் ஈழம் கொழும்பு வங்காளம்
தஞ்சை சிராப்பள்ளிக் கோட்டை தமிழ்ச்
சங்க மதுரை தென் மங்கலப் பேட்டை
மிஞ்சு குறிசொல்லிப் பேராய்த் திசை
வென்று நான் பெற்ற விருதுகள் பாராய்

5. உங்கள் கதாநாயகி வசந்தவல்லியின் அழகைக் கொஞ்சம் சொல்லுங்கள்.

இருண்ட மேகம் சுற்றிச் சுருண்டு
சுழி எறியும் கொண்டையாள்
ஏறி ஆடி நெஞ்சைச் சூறையாடும்
விழிக் கெண்டையாள்
அறிவை மயக்கும் ஓரு கருவம் இருக்கும்
மங்கைப் பருவத்தாள்
கரும்பு போல் இனித்து மருந்து போல்
வடித்த சொல்லினாள்
பழகும் வடிவி தங்கி அழகு
குடிகொளும் முகத்தினாள்
துடிக்குள் அடங்கி ஒரு பிடிக்குள்
அடங்கும் சின்ன இடையினாள்
அன்ன நடையில் ஒரு சின்ன
நடை பயிலும் நடையினாள்
வெடித்த கடல் அமுதை எடுத்து
வடிவு செய்த மேனியாள்
வீமப் பாகம் பெற்ற காமப்
பாலுக்கு ஒத்த சீனியாள்

6. பலே, பலே, கேட்டாலே வசந்தவல்லியைப் பார்க்கவேண்டும் போல் இருக்கிறதே. முக்கூடற் பள்ளுவில் வருமே ‘ஆற்று வெள்ளம் நாளை வரத் தேற்றுதே குறி, மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ வீசுதே, நேற்றும் இன்றும் கொம்பு சுற்றி காற்றடிக்குதே, கேணி நீர்ப்படு சொறித் தவளை கூப்பிடுகுதே’ என்று. இப்படி இயற்கைப் பாடல் ஏதேனும் உண்டா?

காடை வருகுது கம்புள் வருகுது
காக்கை வருகுது கொண்டைக் குலாத்தியும்
மாடப் புறாவும் மயிலும் வருகுது
மற்றொரு சாரியாய்க் கொக்குத் திரள் எல்லாம்
கூடலை உள்ளாக்கிச் சைவம் புறம்பாக்கிக்
கூடும் சமணரை நீடும் கழுவேற்ற
ஏடெதிர் ஏற்றிய சம்பந்த மூர்த்திக்கன்று
இட்ட திரு முத்தின் பந்தல் வந்தாற்போல
வெள்ளைப் புறாவும் சகோரமும் ஆந்தையும்
மீன்கொத்திப் புள்ளும் மரங்கொத்திப் பட்சியும்
கிள்ளையும் பஞ்ச வர்ணக் கிளிக் கூட்டமும்
கேகயப் பட்சியும் நாகணவாய்ச்சியும்
உள்ளானும் சிட்டும் வலியானும் அன்றிலும்
ஓலஞ்செய் தேகூடி நாலஞ்சு பேதமாய்த்
துள்ளாடும் சூல கபாலர் பிராட்டியார்
தொட்டாடும் ஐவனப் பட்டாடை போலவே.

7. ஏதோ உங்கள் மலையில் அகத்திய முனிவர் 500 யாகங்களைச் செய்தாராமே

அஞ்சு நூறு மகம் கண்ட நாடு
அநேக கோடி யுகங் கண்ட நாடு
…………..
செஞ்சொல் மாமுனி ஏகிய நாடு
செங்கண் மால் சிவன் ஆகிய நாடு

8. ஏ, குறத்தி உன்னுடைய குலத்தின் பெருமை என்ன?

ஒரு குலத்தில் பெண்கள் கொடோம் ஒரு குலத்திற் கொள்ளோம்
உறவு பிடித்தாலும் விடோம் குறவர் குலம் நாங்கள்

9. அது சரி, குற்றால மலை என்ன அப்படிப் பெரியதா?

கொல்லி மலை எனக்கிளைய செல்லிமலை அம்மே
கொழுநனுக்குக் காணி மலை பழனி மலை அம்மே
எல்லுலவும் விந்தை மலை எந்தை மலை அம்மே
இமய மலை என்னுடைய தமையன் மலை அம்மே
சொல்லரிய சாமி மலை மாமி மலை அம்மே

தாயே போதும்,போதும், போகிற போக்கைப் பார்த்தால் ஆல்ப்ஸ், ஆண்டீஸ் எல்லாவற்றையும் சொந்தம் கொண்டாடவீர் போல இருக்கே. நன்றி. நல்ல பாட்டுகளைக் கேட்டோம்.

About The Author