திருக்குறளும், வாழ்வியலும் (2)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

நாம் பேசும் சொற்கள் பல இருந்தாலும், அவற்றுள் பயனளிக்கக் கூடிய சொற்களை மட்டும் தேர்ந்தெடுத்துப் பேச வேண்டும். பேசும் சொற்களில் பயனில்லாத சொற்களை ஒரு போதும் சொல்லக் கூடாது என்கிறார்.

நாள்தோறும் நாம் உபயோகப்படுத்தும் சொற்களில் மட்டும் அல்லாமல் ஒருவன் தன் மனம் – மொழி – மெய் ஆகியவற்றாலும் துன்பத்தை ஏற்படுத்தக் கூடாது என பின்வருமாறு நவிழ்கிறார்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.

சக மனிதனுக்கு கெடுதலைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் நினைத்துப் பார்க்கக் கூடாது. அப்படி நினைத்தால், அதை செய்ய நினைத்தவனுக்கு கேடு விளைவிக்க அறம் நினைக்கும்.

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.

துன்பங்கள் விளைவிக்கும் தீய செயல்களை, தன்னை வருத்துதலை விரும்பாத ஒருவன், தீமைகளைப் பிறர்க்கு முதலில் அவன் செய்யாமல் இருக்க வேண்டும்.

அனைவரது வாழ்விலும் இயல்பாக நிகழக்கூடிய துன்பம் வரும்போது எவ்வாறு அதை வெல்ல வேண்டும் என்பதை,

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.

தனக்கு ஏற்படும் துன்பத்தை ஒருவன் இன்பமாக கருதிக் கொண்டால், அவனை அவனுடைய பகைவரும் விரும்பி ஏற்கும் நிலை ஏற்படும்.

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்

நமக்கு துன்பம் வரும்போது மனதிற்குள் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்துன்பத்தை எதிர்த்து நிற்கும் வலிமை பெறும்போது ஏற்படும் அம்மனதின் மகிழ்ச்சியைப் போன்று எதுவும் இல்லை.

துன்பத்தை துச்சமாக நினைத்து, அதை மகிழ்வுடன் ஏற்றால் நம் வாழ்வு மகிழ்வுடன் அமையும் என்பதை மட்டுமல்லாமல் நாம் மேற்கொண்ட செயலில் எவ்வளவு துன்பம் ஏற்பட்டாலும் இடைவிடாமல் முயற்சி செய்தால் நாம் செய்யும் செயலில் வெற்றி பெறலாம் என்பதை,

இன்பம் விழையான் வினை விழைவான் தன்கேளிர்
துன்பந் துடைத்தூன்றும் தூண்.

ஒருவன் தன்னுடைய இன்பத்தைப் பற்றிக் கவலைப்படாமல், தான் மேற்கொண்ட செயலை செய்து முடிக்க முயற்சி செய்வானானால், அவன் தன்னுடைய சுற்றத்தவர்களின் துன்பங்களை நீக்கி அவர்களை நிலை நிறுத்தும் தூணாவான்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.

தான் மேற்கொண்ட முயற்சியில் சிறிதும் தளர்வு இல்லாமலும், தாம் மேற்கொண்ட செயலில் தொடர்ந்து முயற்சி செய்பவர்கள் தோல்வியை, இயற்கையாக ஏற்படும் பண்பறிவின் அடிப்படையில் வெளிப்படும் முனைப்புத் தன்மை காட்டி புறங்காட்டி ஓடச்செய்வார்.

நாம் எத்தகைய துறையில் முயன்று வென்றாலும், அல்லது வெற்றி பெற முயன்று கொண்டிருந்தாலும், அவனுக்கு நல்ல பண்பு மிக முக்கியம் என்பதை,

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.

விளையாட்டிற்காகக் கூட ஒருவரை இகழ்தல் என்பது ஒருவனுக்கு துன்பத்தைத் தருகிறது. உலக இயல்பு அறிந்து நடக்கும் நல்லவர்கள் உடன் வாழும் மக்களிடையே பகைமை உணர்வு தோன்றும் காலத்திலும் கூட, பண்புடன் நடந்து கொள்வார்கள்.

நயனோடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்பு பாராட்டும் உலகு

நீதியையும் நன்மையையும் விரும்புவதனால் தனக்கும், பிறர்க்கும் பயனுடையவனாய் விளங்குபவனின் உயர்ந்த பண்புகளை, உலகத்தார் போற்றிக் கொண்டாடுவார்கள் என்கிறார்.

******

கி.பி மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிறகு திருக்குறள் தொகுக்கப்பட்டாலும், அதன்பின் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகுதான் அதன் உரைகள் நமக்குக் கிடைத்தன. திருக்குறள் முழுவதும் சொல்லப்படும் பொதுக்கருத்து அறம் என்பதால் மனித வாழ்வுக்கு அறம் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. உலக மக்கள் தங்கள் வாழ்க்கையில் தொல்லைகளையும் துயரங்களையும் வென்று மகிழ்ச்சியுடன் வாழவும், இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழவும், மனித மனதினை செம்மைப்படுத்தி, வாழ்வை மேம்படுத்தும் விதத்தில் திருக்குறள் அமைந்துள்ளது.

About The Author

1 Comment

Comments are closed.