திருக்குறள் உணர்த்தும் உரிமைகள்!

வள்ளுவர் வாழ்ந்த சமுதாயத்தில் பொதுவுடைமை, ஜனநாயகம் போன்ற கருத்துக்கள் தழைத்தோங்காத காலம். தனியுடைமை தத்துவத்தை ஏற்றுக் கொண்ட சமுதாயம். அத்தகுச் சமுதாயத்தில் வளமையும் வறுமையும், ஏற்றமும் தாழ்வும் இருந்தது இயல்பே. வறுமையின் பிடியில் சிக்கி, பசியும் அதனால் ஏற்பட்ட இறத்தலும் இருந்துள்ளது. இச்சீர்கேட்டினை எண்ணி மனம் வெதும்பிய வள்ளுவர் தமது திருக்குறளில் நல்குரவு, இரவு, இரவச்சம் ஆகிய அதிகாரங்களைப் படைத்துள்ளார்.

ஒரு சாரார் வளமுடன் வாழும் நிலையில், மற்றொரு சாரார் பிச்சை எடுத்து உண்ணும் நிலையும் உள்ளதல்லவா? அதற்குக் காரணமாக விதியை நொந்து கொள்ளுகிறோம்! இறைவனைச் சாடுகிறோம்!

திருவள்ளுவர் இந்நிலைக்கு இறைவனும், விதியும் காரணமென்றால், அவ்விறைவன் எதற்கு என்று நினைத்துச் சாபமிடுகிறார்!

"இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகு இயற்றியான்" (குறள் 1062)

பிச்சையெடுத்துதான் உயிர் வாழ வேண்டும் என்ற நிலையில் உயிர்களைப் படைத்திருந்தால், அப்படிப் படைத்தவனே இந்த உலகிற்கு வந்து பிச்சையெடுப்பவரைப்போல தானும் அலைந்து திரிந்து கெட்டுப் போகட்டும் எனச் சபிக்கிறார்!

இக்குறள் நமக்கு உணர்த்தும் உண்மை சமுதாயத்தில் எல்லோரும், எல்லாமும் பெற்றுச் சமமாக வாழும் உரிமை உள்ளது என்பதே.

பொருளாதார ஏற்றத் தாழ்வு, அதனால் ஏற்படும் வறுமை, அதன் விளைவாய் இரத்தல் ஆகியவை கொடுமை. அவையற்ற சமுதாயமே மனிதனை உயர்த்த முடியும் என்ற கருத்தை உணர்கிறோம்.

பொருளாதார உரிமை:

பொருள் தேடும் உரிமை, அதனைப் பாதுகாக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு எனத் தெளிவாக்குகிறது திருக்குறள். அப்படிப் பொருள் தேடுவது அறவழியில் அமைய வேண்டும் என வலியுறுத்துகிறது.

வினைத்தூய்மை என்ற அதிகாரத்தில் கூறுகிறார் திருவள்ளுவர் :

"அழக்கொண்ட எல்லாம் அழப்போம்; இழப்பினும்
பிற்பயக்கும் நற் பா லவை" (குறள் 656)

பிறர் வருந்தும்படி ஒருவன் அடைந்த பொருள் அனைத்தும், பெற்றவன் வருந்தி அழும்படி அவனை விட்டுப் போய்விடும். நல்ல வழியில் வந்த பொருள் தொலைந்தாலும் பின்னர் நன்மையே தரும். பொருளாதார உரிமை அனைவருக்கும் உண்டு – அதற்காக அடுத்தவர் உரிமையை மீறுவது தவறு; அற வழியல்ல; பிறரை வஞ்சித்துப் பொருள் சேர்ப்பது ஏற்புடையது இல்லை; கண்டனத்திற்குரியது.

"ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை" (குறள் 656)

தன்னைப் பெற்ற தாய் பசியால் வாடுவதைப் பார்த்து மனம் வருந்தி வேதனைப்படும்பொழுதுகூட, சான்றோர்கள் பழிப்பதற்குக்குக் காரணமான இழிந்த செயல்களை செய்யக் கூடாது.

அறமற்ற வழியில் அநியாயமாகப் பொருள் சேர்த்தல் தவறு என்று உணர்த்தி, சரியான முறையில் பொருளீட்டும் முறைதனை உணர்த்துவதால் லஞ்சமற்ற, சுரண்டலற்ற சமுதாயத்திற்கு வள்ளுவப் பெருந்தகை வழி காட்டுகிறார்!

கொடுமை தவறு :

உலக மனித உரிமைகள் பிரகடத்தின் 5-ம் பிரிவு கூறும்: "எவரையும் சித்திரவதை செய்யக்கூடாது. கொடூரமாக, மனிதத் தன்மையற்றுக் கேவலமாக நடத்தக்கூடாது. கேவலமான தண்டனைக்கு உட்படுத்தக்கூடாது" என்று. அரசு குடிமக்களை கண்ணோட்டமின்றி வருத்தக்கூடாது. அவர்கள் ஆற்றாது அழுத கண்ணீரே கொடுங்கோல் அரசைத் தேய்க்கும் படையாக அமையும். எனவே அரசன் நேர்மையான முறையில் தன் குடி மக்களைக் காத்து ஆட்சி செய்ய வேண்டுமென்று திருவள்ளுவர் எச்சரிக்கிறார்.

"அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீற் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை" (குறள் 555)

கொடுங்கோல் ஆட்சியினால் துன்பப்பட்டுத் தாங்க முடியாமல் மக்கள் குமுறி அழும் கண்ணீரே அழிந்த ஆட்சியை அடியோடு அழிக்கும் ஆயுதமாகும்.

(தொடரும்)

About The Author