திருவண்ணாமலை ஸ்ரீ பச்சை அம்மன்

திருவண்ணாமலையில் ரமணாஸ்ரமம் அருகே இருக்கிறது ஸ்ரீ பச்சை அம்மன் கோயில். இதே போல் ஒரு பச்சையம்மன் கோயில் பாண்டிசேரியிலும் இருக்கிறது. சென்னையிலும் திருமுல்லைவாயில் என்னும் இடத்திலும் இந்தப் பச்சை அம்மன் குடி கொண்டிருக்கிறாள்.

சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு திண்டிவனத்தின் அருகே நெய்க்குப்பி எனும் கிராமத்தில் ஸ்ரீ பச்சை அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இங்குள்ள அம்மனின் அழகைச் சொல்லி முடியாது. அருள்மிகு மன்னார் ஸ்வாமி சிவபெருமானும் அங்கு அருள் புரிகிறார். அவர்களுக்குக் காவல் புரிய வரிசையாக ஏழு முனிவர்கள் நிற்கின்றனர். அதில் முதல் இடம் வகிப்பது பச்சை அம்மனின் சகோதரர் திருமால்தான். வாழ்முனி என்கிற பெயரில் நிற்கிறார்.

ஏன் திருமால் வாழ்முனியாக மாறவேண்டும்? யார் இந்தப் பச்சை அம்மன்? அதற்கான புராணக் கதை இதோ…

சிவனும் பார்வதியும் கைலாயத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது சிவன் பார்வதியிடம் தன் கண்கள் இரண்டும் சூரிய சந்திரர்கள் என்று கூற, ஆச்சரியமடைந்த பார்வதி சிவனின் கண்களை விளையாட்டாகப் பொத்தினாள். உடனே உலகெங்கும் இருள் சூழ்ந்தது. தேவலோகத்தில் தேவர்கள் பயந்தனர். சிவன் தன் நெற்றிக் கண்ணைத் திறந்து ஒளி வழங்கினார். பார்வதி தன்னுடைய இந்த சிறுபிள்ளைத்தனமான விளையாட்டால்தானே இத்தனை விபரீதம் வந்து விட்டது என்று வருந்தி, இதற்குப் பிராயச்சித்தம் செய்ய அனுமதி கொடுக்கும்படி சிவபெருமானைக் கேட்டு கொண்டாள். அவரும் ஸ்ரீ காஞ்சி நகருக்குச் சென்று பச்சை அம்மனாக கம்பைக் கரையில் அமர்ந்து சிவபூஜை செய்யச் சொன்னார் .

பச்சை அம்மன் முதலில் காசி சென்று கங்கையில் நீராடி அங்கு தவம் இயற்றிய பின் காஞ்சி வந்தாள். அங்கு மணலினால் சிவலிங்கம் பிடித்து அதற்கு ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் எனப் பெயர் சூட்டி முறையாகப் பூஜையைத் தொடங்கினாள். சிவனும் இதை ரசித்தார். பின் கொஞ்சம் விளையாடிப் பார்க்கலாம் என்று தன் சடையில் இருக்கும் கங்கையை அவிழ்த்து விட்டார். அவ்வளவுதான்! கங்கை நீர் வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடி லிங்கத்தை நோக்கிப் பாய்ந்து வந்தது. தன்னை வெள்ளம் அடித்துக் கொண்டு போகுமே என்று எண்ணாமல் இந்த லிங்கத்தை அப்படியே தன் இரு கைகளை வளைத்து ஆலிங்கனம் செய்து கொண்டாள் அம்மன். அவள் பக்தியைப் பார்த்து சிவபெருமான் வெள்ளத்தை இரு பிரிவாக்கி ஓட விட்டார். சிவலிங்கத்திற்குச் சேதம் வராமல் அதைச் சுற்றியபடியே கங்கை ஓடினாள். தான் பிடித்த மணல் லிங்கத்திற்குச் சேதம் வராமல் இருப்பதைப் பார்த்து பச்சை அம்மன் என்ற பார்வதி மேலே பூஜையைத் தொடர்ந்தாள்.

பூஜையும் தவத்துடன் முடிய சிவபெருமானும் ரிஷப வாகனத்துடன் அங்கு தோன்றினார். பின் காஞ்சியிலேயே பங்குனி உத்திரம் அன்று அவளைத் திருமணம் செய்து கொண்டார். பார்வதியும் சிவனிடம் இனி அவரைப் பிரியாதிருக்க அவரது இடது பாகத்தில் இணைந்து விட தனக்கு அருள் புரியுமாறு வேண்டினாள். அதற்குச் சிவபெருமான், திருவண்ணாமலையிலுள்ள கௌதம முனிவரின் ஆஸ்ரமத்திற்குச் சென்று அவர் உதவியுடன் பூஜை செய்து வருமாறும் அந்தப் பூஜை முடிந்ததும் தன் இடது பாகத்தை அளிப்பதாகவும் கூறினார். பச்சை அம்மனும் அவரது சொல்படி திருவண்ணாமலைக்குக் கிளம்பினாள்.

அப்போது அவள் தங்கப் பல்லக்கில் அமர்ந்து இரு புதல்வர்கள் கணபதி, சுப்பிரமண்யம், கால பைரவர், சிவகணங்கள் புடை சூழ, திருமகள் வந்து சாமரம் வீச பவனி வந்தாள். நடுவில் ஒரு இடத்தைப் பூஜைக்காகத் தேர்ந்தெடுத்துப் பூஜையும் செய்ய ஆரம்பித்தாள். அங்கு தண்ணீர் வசதி இல்லை. ஆதலால் சிவகுமாரனை அழைத்து பூஜை நடக்கும் இடத்தின் மேல் வாழைப் பந்தல் போட வேண்டுமெனவும், அருகிலிருக்கும் மலைப்பகுதியில் இருந்து பூஜைக்குத் தண்ணீர் கொண்டு வருமாறும் பணித்தாள்.

அவள் சொல்படி முருகனும் அண்ணன் கணபதியுடன் சேர்ந்து கொண்டு வாழைப் பந்தல் அமைத்தார். பின் நீர் எடுக்க மலைப் பகுதிக்குச் சென்றார். அங்கு நீர் நிலை எதுவும் இல்லாதது கண்டு தரையில் தன் வேலாயுதத்தை எய்தார். அது ஊன்றிய இடத்திலிருந்து நீர் வர ஆரம்பித்தது. அது சிவப்பு நிறத்திலிருக்க, முருகப் பெருமான் ஸ்தம்பித்து நின்றார். பின் தாயிடம் போய் நடந்ததைச் சொன்னார். பச்சை அம்மனும், "உன்னால் ஏழு பிராமணர்களுக்கு சாப விமோசனம் கிடைத்து விட்டது. அவர்கள் சிறுவயதில் செய்த தவறுகளுக்குப் பிராயச்சித்தம் தேடி பிரம்மாவை நோக்கித் தவம் செய்தனர். அப்போது பிரம்மா தோன்றி இந்த சாப விமோசனம் கிடைக்கச் செய்தார். உன் அம்பு அவர்களது தலைகளைக் கொய்துவிட்டதாலேயே அந்த மலையிலிருந்து இரத்தம் நதி போல் வந்தது. இனிமேல் அங்கு தெளிந்த நீர் கிடைத்துவிடும்” என்றாள். இந்த ஆறுதான் சேயாறு என்ற பெயரில் இன்றும் ஓடுகிறது. சேய் என்பது முருகனைக் குறிக்கும். அவள் பூஜை செய்த இடம் இன்றும் ‘வாழைப்பந்தல்’ என்ற பெயரில் இருக்கிறது.

அம்பாள் பூஜையை நடத்த விடாமல் தடங்கலும் வந்தது. மூன்று தீய சக்திகள் தோன்றி பூஜைக்கு இடைஞ்சல் செய்தன. ஆகாச வீரனான ஒருவன் சிவலிங்கத்தைத் திருடிக் கொண்டு ஆகாயத்தில் பறந்து போனான். இரண்டாவது பாதாள வீரன். இவன் பூஜை சாமக்கிரியைகளை எடுத்துக் கொண்டு பாதாளத்தில் புகுந்தான். மூன்றாவதாக அக்னி வீரன். இவன் வாழைப் பந்தலையும் பூஜை நடக்கும் இடத்தையும் எரித்தான்.

பச்சை அம்மன் மிகவும் கவலையுடன் அமர, அவளது தமையன் திருமால் கருட வாகனத்தில் அவளிடம் வந்தார். பின் தன் சகோதரிக்கு உதவ ஆறு முனிவர்களைக் காவலுக்கு வைத்தார். ஏழாவது முனியாக தானே வேஷம் போட்டுக் கொண்டு ‘வாழ்முனி’ என்ற பெயருடன் காவலுக்கு வந்தார். மூன்று வீரர்களையும் பிடித்து சிறையில் அடைத்தார். எல்லா பொருட்களும் மீட்கப்பட்டுப் பூஜை சிறப்புடன் தொடர்ந்து நடந்து இனிதே முடிவடைந்தது.

பின் ஈசன் சொன்னது போல் திருவண்ணாமலையில் கௌதம ஆஸ்ரமம் சென்று தங்கி அங்கும் தவம் புரிய, சிவபெருமான் ரிஷப வாகனத்தில் வந்து அவளை அடைந்து தனது உடலின் இடது பாகத்தை அளித்தார். அர்த்த நாரீஸ்வரர் என்ற பெயரில் அங்கு அருள் புரிந்து வருகிறார்.

நெய்க் குப்பி கிராமத்தில் வாழ்முனியுடன் செம்முனி, கருமுனி, வாடமுனி, வேதமுனி, முத்து முனி மற்றும் கொடு முனி ஆகிய ஆறு முனிவர்கள் இருக்கின்றனர். பச்சை அம்மனின் எதிரே சிங்கமும் பலிபீடமும் உள்ளது. இந்தக் கோயிலின் நுழைவாயிலில் கணபதியும் முருகனும் அமர்ந்து அருள் புரிகிறார்கள்.

கோயிலின் வெளியே அரச மரமும் வேப்ப மரமும் இணைந்து இருக்க , அதன் கீழே ஒரு மேடை அமைக்கப்பட்டுள்ளது. அங்கும் அரச மரத்தடி கணபதி அமர்ந்திருக்கிறார். உடன் நாகலிங்கமும், நாககிருஷ்ணனும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. கோயிலுக்கு வேண்டிய தண்ணீர் கோயில் கிணற்றிலிருந்து கிடைக்கிறது. அந்த நீரினால்தான் அபிஷேகம் செய்கின்றனர். அக்னி மூலையில் பிரசாதம் செய்யும் அறை உள்ளது. உள் பிரகாரத்திலே அழகிய நந்தவனம் கண்ணிற்குக் குளிர்ச்சியும் மனதிற்கு இன்பமும் அளிக்கிறது.

திருமணம் நடக்க, குழந்தைச் செல்வம் பெற, தோஷங்கள் நீங்க மக்கள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர் . ஆலயத்தின் சுவரில் பல வண்ணப் படங்கள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. எல்லாம் தேவி புராணத்திலிருந்து சித்தரிக்கப்பட்டவை. ஸ்ரீ அன்னபூரணி, காயத்திரி தேவி, காமதேனு பசு ஸ்ரீவாராகி, ஸ்ரீ வைஷ்ணவி, நாகங்கள், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என்று பல சித்திரங்கள் வரையப்பட்டு எல்லோரையும் கவருகின்றன.

பச்சை அம்மனின் ஆசிகள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

About The Author

3 Comments

  1. Narasingam

    மிக அருமையன செய்தி படித்து அரிந்ததில் மகிழ்ச்சி.

  2. lakshmi

    புகைப்படத்துடன் விமர்சனம் செய்யதால் இன்னும் உபயோகமாக இருக்கும்

  3. balachandran

    மிக அருமையான விளக்கம். எங்கள் குலதெய்வமும் ஸ்றீ பச்சை அம்மனே ஆகும். அம்பாளின் ஸ்தலம் வடலூர் அருகே ஆபத்தானபுரம் என்ற ஊரிலும் அமைந்துள்ளது. அங்கு உள்ள வாழ்முனியின் மிக ப்ரம்மாண்டமான சிலையை அழகி படதில் ஒரு பாடலில் காண்பித்துள்ளனர்.

Comments are closed.