திரு திரு துறு துறு – இசை விமர்சனம்

‘கண்ட நாள் முதல்’ மற்றும் ‘கண்ணாமூச்சி ஏனடா’ எனும் திரைப்படங்களில் இயக்குனர் வி.ப்ரியாவிடம் பணிபுரிந்த நந்தினி தன்னுடைய முதல் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். ‘அஞ்சாதே’ என்ற ஹிட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அஜ்மல் ‘திரு திரு துறு துறு’ என்ற இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க, ரூபா கதாநாயகியாக அறிமுகமாகிறார். துறுதுறுப்பான இளைஞர்கள் நிறைந்த மென்மையான காதல் கதையாம். மணிஷர்மாவின் இசையில் அமைந்த பாடல்களை கமல்ஹாசன் வெளியிட்டு திரைப்படக் கலைஞர்களை வாழ்த்தினார். விழாவில் கலந்து கொண்ட கே.எஸ்.ரவிகுமார், கௌதம் மேனன் போன்ற பிரபலங்கள், தாங்கள் திருதிருவென்று விழித்த அனுபவங்களையும், துறுதுறுப்பாக செயல்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். சரி.. படத்தின் பாடல்களைக் அலசி விடுவோமே!

டாக்டர் மாப்பிள்ளை

‘எம்மாதிரியான மாப்பிள்ளை வேணும்’ என்று பெண்ணிடம் கேட்பது போல அமைந்திருக்கின்றது இப்பாடல். பெண்கள் போடும் கண்டிஷன்களையும், அவர்கள் மாப்பிள்ளைகளை படுத்தும் பாட்டைப் பற்றியும் எழுதியிருக்கிறார் கவிஞர் லலிதானந்த். ‘நீ ஒரு வைரஸ் கம்ப்யூட்டர், உனக்கெவன் தருவான் லவ் லெட்டர்’ போன்ற கிண்டலான வரிகள். ரஞ்சித்தும், நவீனும் பாடியுள்ளார்கள். தாளம் போட வைத்தாலும், வித்தியாசமான வரிகள் இருந்தும் பாடல் மனதில் ஏனோ பதிய மறுக்கின்றது!

அத்திரி புத்திரி

இப்பாடலில் ஆண்-பெண் இருவரும் சண்டையிடுகிறார்கள். ஆண் குரல் – ராஹுல் ரம்பியார், பெண் குரல் – ஜனனி. இருவரும் நன்றாகவே பாடியிருக்கின்றனர். பாடலின் மெட்டை எங்கேயோ கேட்டது போலவே இருக்கின்றது. இப்பாடலுக்கும் வித்தியாசமான வரிகளைத் தந்திருக்கிறார் லலிதானந்த். “ஷேவ் பண்ணவே சோம்பலோ, தாடியுடன் பார்க்கவோ காட்டுவாசி போலவே தோற்றம்” என்று அனைத்து ஆண் வர்க்கத்தையும் சண்டைக்கு இழுக்கிறார். கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமான வரிகளோ என்ற நினைப்புதான் வருகின்றது.

ஜில்லென வீசும்

கிடாரிங்கும் கீஸும் கலந்த மென்மையான ஆரம்பம். ஹரிசரணின் இனிமையான குரல்,  சைந்தவியுடன் சேர்ந்து ரீங்காரமிட, ஒரு நல்ல மெலடிக்கு தயாராகிறோம். அதனோடு அழகான பீட்ஸையும் சேர்த்துக் கொள்ளுங்கள். கவிதை நயத்துடன் வரிகளைத் தந்திருக்கிறார் லலிதானந்த். வாத்தியங்கள் அதிகம் இல்லாமல், ட்யூனை மட்டும் நம்பியிருக்கிறார் மணிஷர்மா. மனதிற்கு இதம் தரும் இசை.

திரு திரு விழியே

’இளமை பொங்கும்’ இன்னொரு பாடல். ஒரு வித்தியாசம் – இது ஒரு தாலாட்டுப் பாடல். மிக மிக வித்தியாசமான ஒன்று! ஆண்-பெண் ஒருவரை ஒருவர் தூங்க வைக்க முயற்சி செய்கின்றார்கள் போலும்! கூடவே ‘கொஞ்சிக் கொள்கிறார்கள்’ போலிருக்கிறது. ‘அஜிபுஜிபுஜிபா’ என்று பாடல் ஆரம்பிக்கின்றது. அதன் பிறகு வரும் வயலின் இசையும், கிடாரும், மணிஷர்மாவின் திறனுக்கு சான்றிதழ். இப்பாடலுக்குக் குரல் கொடுத்திருப்பவர்கள் கார்த்திக்கும் ரீடாவும். யுகபாரதி வரிகளை எழுதியிருக்கிறார். இப்படியும் ஒரு தாலாட்டுப் பாடலைக் கொடுக்க முடியுமா?!

தீம் இசை

ரஞ்சித்தும் சைந்தவியும் படத்தின் தீம் பாடலுக்கு குரல் கொடுத்திருக்கிறார்கள். ‘திருதிரு’வும் ‘துறுதுறு’வும் மாறி மாறி வருகின்றன. வர வேண்டாமா என்ன?. அதைத்தான் படத்தின் பெயராக வைத்தாகிவிட்டதே!! வயலின், கிடாரிங், கீஸ், பீட்ஸ் போன்ற எல்லா வாத்தியங்களையும் கேட்கலாம். இப்பாடலையும் லலிதானந்த்தான் எழுதியிருக்கிறார்.

படத்தின் தலைப்பிற்கிணங்க, எல்லாப் பாடல்களும் துறுதுறுவென்றே அமைந்துள்ளன. இருந்தும் கொஞ்சம் ’மெச்சூரிட்டி’ மிஸ்ஸிங் என்றே தோன்றுகிறது. பரவாயில்லை. ஒரு வேளை படத்தைப் பார்த்துக்கொண்டே பாடல்களைக் கேட்டால் இன்னும் நன்றாக இருக்குமோ, என்னவோ! பொறுத்திருந்து பார்ப்போம், நந்தினியின் திறமைகளை!

About The Author