தீந்தமிழ் இசை அருவி ஹரிணி (2)

இதன் முன்பாதி: தீந்தமிழ் இசை அருவி ஹரிணி

பாடகி ஹரிணி அவர்களுடன் ஒரு நேர்முகம். கடந்த வாரத் தொடர்ச்சி…

திரை இசை பாடுவதற்குக் கர்நாடக இசை அடிப்படைத் தேவையா?

கர்நாடக இசை என்றில்லை,- ஹிந்துஸ்தானி அல்லது மேற்கத்திய இசையில் அடிப்படை இருந்தால் அது ஒரு வசதிதான். சங்கீதத்தைப் பற்றிய அடிப்படையில்லாமல் பாடுவதற்கும் அதைப் பற்றித் தெரிந்து பாடுவதற்கும் வித்தியாசமுண்டு.,

உங்கள்ளது கணவர் திப்புவும் ஒரு பின்னணிப் பாடகர் – உங்கள் கல்யாணம் காதல் கல்யாணமா? அவரை எப்போது சந்தித்தீர்கள்?/

நாங்கள் முதலில் ஆஸ்திரேலியாவில் ஒரு இசை நிகழ்ச்சியின் போது சந்தித்தோம். அப்புறம் இரண்டு முறை சந்தித்திருப்போம்;- பழக்கமானது ஆஸ்திரேலியாவில்தான்.- அப்போதே எங்களுக்குள் ஒரு அபிப்பிராயம் விழுந்து விட்டது;- ஒருவரை ஒருவர் விரும்புகிறோம் என்று. நான் பாபாவின் மீது மிகுந்த பக்தி கொண்டவள். அவர் குடும்பத்திலும் பாபாவை வணங்குபவர்கள்;- இதுவே எங்கள் உறவுக்கு ஒரு பாலமாக இருந்தது. இரண்டு பேரும் தமிழ் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் எங்கள் வீடுகளிலும் பிரச்சினை இல்லை. எங்கள் திருமணம் புட்டபர்த்தியில் சத்ய சாய்பாபாவின் முன்னால் அவரது ஆசியுடன்ந்தான் நடை பெற்றது..

இரண்டு பேரும் ஒரே இசைத் துறையைச் சேர்ந்தவர்கள். அதனால் உங்களுக்குள் பிரச்சினைகள் வருவதுண்டா?

பிரச்சினைகள் ஒன்றும் கிடையாது; நமது பார்வைதான் அனைத்துக்குமே காரணம். ‘நீ பெரியவனா நான் பெரியவனா?’ என்ற மனப்பான்மை ஏற்பட்டு உறவில் விரிசல் உண்டாகாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். எங்களுக்குள் போட்டி உண்டு; ஆனால், பொறாமை இல்லை. அவர் இரண்டு மணி நேரம் பிராக்டிஸ் செய்தால் நான் நாலு மணி நேரம் பிராக்டிஸ் செய்வேன். இப்படித்தான், நான் விருது வாங்கும்போது அவர் பாராட்டுவார்; ‘ஆலங்குயில்’ பாட்டு ரிகார்டிங்போது எனக்கு மிகவும் ஜலதோஷம், திணறல். எனக்குச் சரியாகப் பாடிய திருப்தியே ஏற்படவில்லை. ஆனால் அவர், பாட்டை முதலிலேயே கேட்டுவிட்டு, "இந்தப் பாட்டிற்கு உனக்கு மாநில விருது கிடைக்கும்" என்றார். அது போலவே கிடைத்தது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருக்க வேண்டும். இரண்டு பேரும் பாடகர்களாகவே இருப்பதால் தொழில்ரீதியாகப் பிரச்சினை இருக்காது. எப்படிக் கணவன் மனைவி இரண்டு பேரும் டாக்டராக இருந்தால் ஒருவரது கஷ்டத்தை மற்றவர் புரிந்து கொள்வார்களோ, அப்படி நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். முன்பெல்லாம் எனக்கு இரவு பதினொரு மணி வரை பாடல் பதிவு இருக்கும். இப்போது மாலை ஆறு மணிக்கு மேல் நான் ஒத்துக் கொள்வதில்லை. பெண் பாடகர்களை சீக்கிரம் அனுப்பி விடுவார்கள். ஆனால், ஆண் பாடகர்கள் கூப்பிட்ட நேரத்தில் போகவேண்டும்; இரவு மூன்று மணி கூட ஆகிவிடும். இந்தத் தொழில் கஷ்டத்தை ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டால் வாழ்க்கை சுலபமாக இருக்கும்.

வெளிநாட்டுப் பயண அனுபவம் பற்றிச் சொல்லுங்களேன்!

சீனா, ஜப்பான் தவிர அநேகமாக மற்ற எல்லா நாடுகளுக்கும் போயிருக்கிறேன். ஐந்தாறு வருஷம் முன்னால் இருந்த மாதிரி இப்போதெல்லாம் பாடகர்களுக்கு வெளிநாடுகளில் அவ்வளவு வரவேற்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது யூடியூபில் போட்டு பட்டனைத் தட்டிவிட்டால் எல்லாப் பாடல்களையும் பார்க்க முடிகிறது. முன்பெல்லாம் பாடகர்களை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. கம்ப்யூட்டரில் பட்டனைத் தட்டினால் கிடைக்கும் என்ற இன்றைய சூழல் அன்று இல்லை. இன்னும் நட்சத்திர இரவு போன்ற நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு இருக்கிறது. அதில் பாட்டும் ஒரு அம்சமாக இருக்கிறது.
முன்பெல்லாம் பின்னணிப் பாடகர்கள் நின்ற இடத்தில் நின்றபடியே ஆடாமல் அசையாமல் பாடுவார்கள். ஊடகங்களும் போட்டிகளும் வளர்ந்துள்ள நிலையில், பாடகர்களும் நடிகர்களைப் போல டிரஸ் செய்து ஆடிப் பாட வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், இதெல்லாம் எத்தனை நாளைக்கு நிலைத்து நிற்கும் என்று தெரியவில்லை. பாடகர்களுக்குப் பாடும் திறமைதான் முக்கியம். மற்றவையெல்லாம் அடுத்தபடிதான். ஆட்டத்தோடு பாடும் திறமையும் சேர்ந்திருந்தால் பாராட்ட வேண்டும். பாட்டுப் போட்டி என்ற பெயரில், தேவையில்லாமல், பாடுபவர்களது அப்பா அம்மாவைப் பேட்டி காண்கிறார்கள். அவர்கள் நடப்பதை, பேசுவதைப் படம் எடுக்கிறார்கள். இதற்கெல்லாம் என்ன அவசியம் என்று தெரியவில்லை.

நீங்கள் வாங்கிய விருதுகள்…?

இரண்டு முறை மாநில விருது வாங்கியிருக்கிறேன். அயல் நாடுகளில், ‘சிறந்த பாடகி’ விருதுகள் பெற்றிருக்கிறேன். இன்னும் பிலிம்ஃபேர் விருதெல்லாம் பெறவில்லை. விருதுகளுக்காகப் பாடுவதில்லை என்றாலும் விருதுகள், பாடுபவர்களுக்கு, ‘இன்னும் நன்றாகப் பாடவேண்டும்’ என்ற ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கின்றன.

சித்ரா அம்மா, "எனக்குப் பிறகு ஒரு நல்ல பாடகி" என்று பல பேட்டிகளில் என்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். ஹரிஹரன் சாரோடு இலங்கையில் ஒரு நிகழ்ச்சி செய்தபோது, ‘பம்பாய்’ படத்தில் சித்ரா அம்மாவும் ஹரிஹரனும் பாடிய ‘உயிரே’ பாட்டை அவருடன் நான் பாடினேன். பாட்டு முடிந்ததும் அவர் என்னைப் பாராட்டி, ரசிகர்களிடம், "நான் நன்றாகப் பாடியிருக்கிறேன்" என்று சொல்லி இன்னும் ஒருமுறை கைதட்டி உற்சாகப்படுத்தச் சொன்னார். ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா ஆகியோர் என்னைப் பாராட்டியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பாராட்டை வார்த்தைகளால் கூடச் சொல்லத் தேவையில்லை. பாடல் முடிந்ததும் அவர்கள் தங்கள் கண்களை உயர்த்தி நம்மைப் பார்க்கும் பார்வையிலேயே அவர்களது ரசிப்பையும் பாராட்டுதல்களையும் புரிந்து கொள்ளலாம். ரஹ்மான் சார், "கடின உழைப்பை விடாதீர்கள்! ‘கத்துக்கணும்’ என்கிற ஆர்வம் இருந்துகொண்டே இருக்கணும்" என்பார். ‘கடல்’ படத்தில் நான் பாடிய, வைரமுத்து சாரின், ‘மூங்கில் தோட்டம்’ பாட்டைக் கேட்டுவிட்டு அவர் என்னிடம், "இன்னும் பத்து வருஷங்களுக்கு இதை நான் மறக்க முடியாது" என்றார். இவையெல்லாம் ஒரு பாடகருக்குக் கிடைக்கக்கூடிய மிகப் பெரிய அங்கீகாரங்கள்.

அவர்களையெல்லாம் பார்க்கிறபோது "அவர்களுக்கு எல்லாம் கிடைச்சிருக்கு. அதனால் அவர்கள் திருப்தியாக இருக்கிறார்கள்" என்று மற்றவர்கள் சொல்வார்கள். ஆனால், அப்படியில்லை; அவர்கள் திருப்தியாக இருப்பதால் அவர்களுக்கு எல்லாம் கிடைக்கிறது என்பதுதான் உண்மை!

எதிர்காலத்தில் உங்கள் இலக்கு…?

இறுதி வரை இசையோடு வாழ வேண்டும்! பக்திப் பாடல்கள், ஆல்பங்கள் நிறையச் செய்திருக்கேன். இப்போது நேரமில்லாததால் ஆல்பங்கள் பண்ணுவதில்லை. எதிர்காலத்தில் கர்நாடக சங்கீதத்தில் ஆல்பம் பண்ண வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது.

இன்னும் பல ஆண்டுகள் இசையோடும் இசைபிரியாக் கணவரோடும் நலமுடன் வாழ வாழ்த்தி ஹரிணி அவர்களிடமிருந்து விடைபெறுகிறோம்!

About The Author