துர்க்கையின் ஒன்பது வடிவங்கள்

சக்தியின் கோலமான துர்கா தேவி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு தைரியம், துணிச்சல், நம்பிக்கை, அமைதி, சந்தோசம் போன்ற சகல சௌபாக்கியங்களும் கொடுத்து அருள் பொழிகிறாள். துர்கா தேவி தர்மத்தைக் காப்பதற்கும், தீமைகளை ஒழிப்பதற்கும் அந்தந்த காலகட்டத்தில் நவதுர்க்கைகளாக அவதாரம் எடுத்து அருள் புரிகிறாள்.

1. தக்ஷனின் மகள் சதிதேவி, சிவபெருமானின் முதல் மனைவி, தன்னுடைய கணவனைப் பற்றி இழிவாகப் பேசிய தந்தையின் வார்த்தைகளைத் தாங்க முடியாமல், அவர் நடத்திய யாக குண்ட அக்னியில் குதித்து சாம்பலானாள்.

சதிதேவி மீண்டும் இமயத்தின் மகள் ஷைலபுத்ரி தேவியாகப் பிறந்தாள். சக்தியின் மூலதாரத்தை அடக்கி ஆளும் ஷைலபுத்ரிதேவி சூலத்தை ஒரு கரத்திலும், தாமரையை இன்னொரு கரத்திலும், பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் மூவரின் சக்திகளை இணைத்து உருவாகிய காளையை வாகனமாகக் கொண்டு காட்சியளிக்கிறாள்.

ஷைலபுத்ரி தேவியை நவதுர்க்கையின் முதல் வடிவமென்று சொல்லாம். இவள் பார்வதி ஹேமாவதி என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறாள் .

2. பொறுமைக்கும், தவத்திற்கும் உரியவளான பிரம்மசரணி தேவி நவதுர்க்கையின் இரண்டாவது வடிவமாகும். பிரம்மசரணி தேவியைத் தவறாமல் பிரார்த்தனை செய்பவர்கள் ஞானத்தைப் பெறுகிறார்கள். தன்னை பூஜிப்பவருக்கு பிரம்மசரணி தேவி மன அமைதி , வளமான வாழ்க்கை , நிரந்தரமான சந்தோசம் ஆகியவைகளை அள்ளிக் கொடுக்கிறாள். இமயத்தின் மகளான இந்த தேவி மீண்டும் சிவபெருமானை மணந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டாள்.

இதற்காக பிரம்மசரணி தேவி பல்லாயிரம் ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தாள். ஆயிரம் ஆண்டுகளுக்கு காய்களையும் கனிகளையும் மட்டுமே உண்டு தவம் செய்தாள். அடுத்த நூறு ஆண்டுகளுக்கு இலைகளையும், தழைகளையும் உண்டு தவம் செய்தாள். மூவாயிரம் ஆண்டுகள் பிலவ மரத்தடியில் அமர்ந்து கொண்டு அவள் மீது விழுந்த பிலவ இலையை உணவாகக் கொண்டு கடுந்தவம் புரிந்தாள். அதன் பின் பல ஆண்டுகள் எதுவுமே உண்ணாமல், தண்ணீர்கூட அருந்தாமல் சிவபெருமானையே நினைத்து மனமுருகி பொறுமையோடு தவம் செய்தாள். அவள் செய்த கடுந்தவத்தைப் போற்றி பிரம்மா அவளுக்குக் காட்சி கொடுத்து, அவள் விரும்பிய வரத்தைக் கொடுத்து அருள் செய்தார். பொறுமையும் , தவவலிமையும் பெற்ற பிரம்மசரணி தேவி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அன்பைப் பொழிகிறாள்.

3. பத்து கரங்களில் ஆயுதங்களை ஏந்திய வண்ணம் , மூன்று கண்களோடு காட்சி கொடுக்கும் சந்திரகண்டா தேவி நவதுர்க்கையின் மூன்றாவது வடிவம். இந்த தேவி துணிச்சலோடும், தைரியத்தோடும் தீயவர்களை அழித்து, மணியைப் போன்ற தோற்றத்தையுடைய நெற்றியில் பாதி சந்திரனை வைத்துக் கொண்டு அவதாரம் எடுத்ததால் சந்திரகண்டா என்ற பெயரைப் பெற்றாள். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவதற்கும், பாவங்களைப் போக்குவதற்கும் மக்கள் இந்த தேவியை நாடிச் செல்கிறார்கள்.

4. பிரபஞ்சத்திற்கு வெப்பத்தைக் கொடுக்கும் குஷமந்தா தேவி நவதுர்க்கையின் நான்காவது வடிவம். . இவள் சூர்யலோகத்தில் வாசம் புரிகிறாள். கமண்டலம், வில், அம்பு, தாமரை, அமிர்தகலசம், சக்கரம், கதை, ஆகியவைகளை ஏழு கரங்களில் ஏந்தியபடி எட்டாவது கரத்தில் எட்டு சித்திகள், ஒன்பது நிதிகள் அடங்கிய ஜப மாலையோடு, சிம்மத்தை வாகனமாகக் கொண்டு திவ்யமாகக் காட்சி கொடுக்கிறாள். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நோயற்ற வாழ்க்கையைக் கொடுத்து அருள் புரிகிறாள்.

5. அசுரர்களை அழிப்பதற்கு அவதாரம் கொண்ட குமரன் அதாவது ஸகந்தனைப் பெற்றெடுத்த ஸ்கந்தமாதா தேவி நவதுர்க்கையின் ஐந்தாவது வடிவம். இவள் நான்கு கரங்களோடு சிம்மத்தை வாகனமாகக் கொண்டு தாமரையின் மேல் பத்மாசன கோலத்தில் அமர்ந்த வண்ணம் காட்சி கொடுக்கிறாள். ஒரு கரத்தில் ஸ்கந்தனை ஏந்திய வண்ணம், இருகரங்களில் தாமரையுடன், நான்காவது அருள் பொழியும் கரத்தோடு காட்சி தரும் ஸ்கந்தமாதாதேவி தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் நல்குகிறாள் .

6. ஒரு காலத்தில் காதா என்ற முனிவர் தனக்கு சக்திதேவி பெண்ணாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு தவம் செய்தார். அவருடைய விருப்பப்படியே துர்கா தேவி காத்யாயனி தேவியாக ஜனனம் எடுத்தாள். ஆறாவது வடிவமான இவள், யோகத்திற்கும், ஞானத்திற்கும் அதிதேவதை. தன்னை முழுமனதோடு பிரார்த்தனை செய்பவருக்கு விரும்பியதெல்லாம் அள்ளிக் கொடுக்கிறாள். காத்யாயினிதேவியை தினமும் வழிபடுபவர் பாவங்கள் விலகி மோக்ஷமடைகிறார்.

7. அசுரர்களை வதம் செய்து பிரபஞ்சத்தைக் காப்பதற்கு காலதாத்ரி தேவி நவதுர்க்கையின் ஏழாவது வடிவமாக அவதாரம் எடுத்தாள். பரட்டை முடி , கருத்தமேனி, மூன்று கண்கள், கழுதையின் மீது அமர்ந்தவாறு நெருப்பைக் கவசமாகக் கொண்டு கோபமான கோலத்தில் காலதாத்ரி தேவி காட்சி கொடுக்கிறாள். சுபாங்கி என்ற மற்றொரு பெயரைக் கொண்ட காலதாத்ரி தேவி தீமைகளை அழித்து, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நல்லாசிகள் தந்து அருள் புரிகிறாள் .

8. தூய உள்ளம், பொன்னிற மேனி , வெண்பட்டு ஆடை, ஜொலி ஜொலிக்கும் தங்க நகைகளோடு காட்சி தருபவள் நவ துர்க்கையின் எட்டாவது வடிவமான மகா கௌரியாகும்.

காளையை வாகனமாகக் கொண்டு உடுக்கை சூலத்தோடு காட்சி கொடுக்கும் மகாகௌரியின் மேனி காட்டில் தவமிருந்தபோது கருத்தது. சிவபெருமான் கௌரியின் மேனியை கங்கையால் சுத்தம் செய்ததாகவும், மீண்டும் மகாகௌரி பொன்னிறமேனியைப் பெற்றதாகவும் கதைகள் சொல்லுகின்றன. பக்தர்களின் குறைகள் தீர்த்து வைக்கும் மகாகௌரி என்றென்றும் சந்தோசத்தை அள்ளித் தருகிறாள்.

9. தியானம், யோகம், ஞானம் அனைத்துக்கும் உரியவளான சித்திதாத்ரி தேவி நவதுர்க்கையின் ஒன்பதாவது வடிவமாகக் காட்சி கொடுக்கிறாள். பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான், தேவர்கள் போற்றிப் பூஜிக்கும் சித்திதாத்ரி தேவி மனிதனுக்கு பரமாத்மாவை அறிய வைக்கிறாள். சகல சௌபாக்கியங்களும் அள்ளிக் கொடுக்கும் சித்திதாத்ரி தேவி பக்தர்களுக்கு மோட்சத்தைக் கொடுக்கிறாள்.

About The Author