தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே!

குழந்தைகள் உறங்கும் அழகைப் பார்த்திருக்கிறீர்களா? அதை ஒப்பிட உலகில் வேறேனும் உண்டா எ‎ன்ன?

பெரும்பாலான பெற்றோருக்குத் தங்கள் குழந்தைகளை தூங்க வைப்பதற்குள் போதும் போதுமெ‎ன்றாகி விடும். அவர்களை உறங்க வைப்ப‎தென்பது ஒன்றும் இமாலயத்தை நகர்த்தும் முயற்சி அல்ல… அவர்களது / நமது வழக்கமான நடவடிக்கைகளில் சிற்சில மாற்றங்கள் செய்தால் போதும்.

குழந்தைகள் உற‎ங்கும் நேரம்

குழந்தைகள் உண்மையிலேயே களைப்பாயிருந்தபோதிலும் உறங்க மறுப்பது – இயல்புதான். விழித்திருந்து அதிகம் அறிய விரும்புவதும், எதையும் தவறவிடக்கூடாது என்ற பரபரப்பும்தான் இதற்குக் காரணம்

சிலர் அதிக நேரம் உறங்குவர்; சிலர் குறைந்த நேரமே உறங்குவர். இது அவரவரின் உடல் தேவைக்கேற்ப மாறுபடும். சராசரியாக, ஒரு ஐந்து வயது குழந்தைக்கு பதினோரு மணி நேர உறக்கம் தினமும் அவசியம்.

உங்கள் குழந்தை உறங்கும் நேரத்தையும், படுக்கைக்குச் செல்லும் நேரத்தையும் நீங்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். பதினோரு மணி நேரம் உறங்குவதைப் போல அமைத்துக் கொள்ளுங்கள். உதாரணத்துக்கு உங்கள் குழந்தை காலை 7 மணிக்கு எழுவதாய் இருந்தால் உறங்கும் நேரம் இரவு 8 மணியாக இருக்க வேண்டும்.

உறங்கும் நேரத்தை தினமும் மாற்றாமல் ஒரு குறிப்பிட்ட நேரத்தை கடைபிடித்தல் நல்ல உறங்கும் பழக்கத்தை ஏற்படுத்தும். உறங்கும் நேரத்தை அமைதியாகவும் சாந்தமாகவும் அமைத்துக் கொள்ளவும்.

உறங்கச் செல்லும் மு‎ன்

7.30 மணியளவில் அவர்களுக்கு இதமான சூட்டில் பால் அருந்தக் கொடுங்கள். பின்பு நீங்களோ அல்லது உங்கள் துணைவரோ நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொள்ளுங்கள்; பல் துலக்கச் சொல்லுங்கள்; கழிவ¨றக்குச் சென்று வரச் சொல்லுங்கள்.

அவர்களது படுக்கையை அவர்களுக்குப் பிடித்த மற்றும் மிருதுவான பொம்மைகளைக் கொண்டு அலங்கரியுங்கள். சிறியதாகவும் மனதுக்கு சுகமானதுமாக ஒன்றிரண்டு கதை சொல்லுங்கள்; அதிர்ச்சி தரக்கூடியவற்றைத் தவிர்க்கவும். இது உறங்கும் வேளை என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.

இரவு 8 மணிக்கு விளக்குகளை அ¨ணத்து, குழந்தையை இறுகத் தழுவி முத்தம் கொடுத்துப் பழகுங்கள். இந்நேரம் நீங்கள் அறையில் இருப்பது அல்லது அகல்வது உங்கள் குழந்தையின் நினைவில் நிற்பதைப் பொறுத்தது. கண்களைக் கூசாத சிறிய வெளிச்சமும், வெளிச்சமின்மையும் உறக்கத்தைக் கொணரும். ஒலியும், அசைவும் அங்கு ஏதோ முக்கியமான செயல்கள் நிகழ்வது போன்ற எண்ணத்தை தூண்டி விழித்திருக்கும் ஆவலைத் தூண்டும்.

குழந்தைகளுடன் கிச்சு கிச்சு மூட்டுவது, ஓடிப் பிடிச்சு விளையாடுவது போன்ற துடிப்பான செயல்களை மாலை வேளைகளிலேயே முடித்துக் கொண்டு,

கதைகள் படிப்பது, jigsaw விளையாடுவது, பொம்மைகளைக் கொண்டு படுக்கையை அலங்கரிப்பது போன்றதுமான மென்மையான செயல்களில் இரவு நேரத்தில் ஆர்வம் செலுத்துங்கள்.

கணினி மற்றும் கணினி சம்பந்தமான விளையாட்டுக்களை தவிர்க்கவும். அவை தூக்கத்தைக் கலைக்கலாம்.

உறங்கும் வேளை மந்திரம்

"கண்ணா உறங்குடா", "செல்லமில்ல" என்று கெஞ்சுவதும் கொஞ்சுவதுமாக இல்லாமல் இது "தூங்கற நேரம்", "போர்வையை போர்த்திக்கோ", "கண்களை இருக்க மூடிக்கோ" என்று கூறுவதை வழக்கமாகக் கொளளுங்கள். கெஞ்சலும், கொஞ்சலும் உங்கள் குழந்தையை விழித்திருக்க உதவி செய்து உறக்கத்தைக் குறைக்கலாம். உங்கள் மொத்த குடும்பமும் இந்த வேளையில்தான் உறங்கும் என்பதை உங்கள் குழந்தை உணரும்படி செய்யுங்கள்.

உறங்குவதற்கான படுக்கைகள்

ஒரு இடத்தில் உறங்கி மற்றொரு இடத்தில் விழிப்பது அதிர்ச்சி ஊட்டுவதும், தொடர்பற்றதாகவும் தோன்றும் அல்லவா? இருப்பினும் பெரும்பாலான குழந்தைகள் இருந்த இடத்திலேயே தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே உறங்கிப் போவார்கள். பின்னிரவில் ஏதேச்சையாக விழித்து திரும்ப உறங்கச் செல்வதைவிட ஒருவிதமான அச்சத்தின் பேரில் உங்களைத் தேடி வருவார்கள். இதுவே தூக்கத்தில் நடக்கும் பழக்கத்துக்கு அடிப்படையாக அமையலாம்.

இரவு முழுவதும் உங்கள் குழந்தை எங்கே எவ்வித அச்சமுமின்றி உறங்குமோ அந்த இடத்தை தேர்ந்தெடுங்கள். இது தூக்கத்துக்கும், தூங்கும் இடத்திற்குமான ஒருவித சம்பந்தத்தை ஏற்படுத்தி ஒரு ஒழுங்கினை ஏற்படுத்தும்.

குழந்தைகள் அவர்கள் படுக்கைக்கு சென்று உறங்க மறுத்தால் என்ன செய்யலாம்? இங்கேதான் நீங்கள் அதீத பொறுமையுடன் நடந்துகொள்ள வேண்டும். அவர்கள் புதிய பழக்கத்தை ஏற்கத் தயாராக இல்லாத போதும், புதிய பழக்கத்தை நடைமுறைப் படுத்துவதில் உறுதியாக இருந்து பழகுங்கள். பலன் நிச்சயம்.

குழந்தைகள் படுக்கைக்குச் சென்று படுத்தவுடன் அப்படியே உறங்கிப் போவார்கள் என்று சொல்லுவது கடினம்தான். எக்காரணத்தைக் கொண்டும் அநாவசியமாக அவர்கள் படுக்கையைவிட்டு அகலாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள், கழிவறைக்குப் போவதை தவிர. குடிக்க தண்ணீர் அருகாமையில் இருக்குமாறு உறுதி செய்யுங்கள்.

திடீரென அவர்களுக்கு பசிப்பது போன்ற உணர்வு தோன்றலாம். "அது என்ன?", "இது எப்படி?" போன்ற கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் உறங்கும் வேளையில் பதில் சொல்வதைத் தவிர்க்கவும். படுக்கை அறையில் அவர்களுக்குத் தேவையானது அனைத்தும் இருக்கிறதா என்பதை உறுதி செய்துவிட்டு, தேவைப்பட்டால் அறையை விட்டு வெளியேறி விடுங்கள்.

துயிலெழும் நேரம்

துயில் எழும் வேளையில் குழந்தையிடம் அன்பு பொங்க விளையாட நேரம் ஒதுக்குங்கள். பகல் நேரம் பெற்றோரின் அன்பு கிடைக்காத பெரும்பாலான குழந்தைகள் இரவு நேரம் உறங்காமல் கூட விழித்திருப்பர். இக்காரணம் கொண்டு உங்கள் குழந்தை உறங்க சிரமப்பட்டால், கூடுதலாக சிறிது நேரம் அவர்களுடன் உறங்கும் வேளையில் செலவிடுங்கள்.

ஒரு வாரமோ இரண்டு வாரமோ சிரமம் பாராமல் நீங்கள் எடுத்த முயற்சியில் இருந்து நழுவாமல் இருந்தீர்கள் என்றால் பலன் நிச்சயம். எல்லோருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டதன் நிம்மதி நிலவும்.

About The Author