தூரத்திலிருந்து பறந்து வந்த சிகரம் (2)

மணமகளின் முகத்திரையை உயர்த்துவதற்குக் கூட மணமகனுக்கு நேரமில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் மணமகள் கூச்சலிட்டாள். ‘கிறுக்கு’ பிக்கு மணமகளைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறார் என்று எதிர்பாராத திருப்பதைப் பார்த்து கிராம மக்கள் மிகவும் அதிர்ந்தனர். என்ன பட்டபகலில் இதென்ன அயோக்கியத்தனம்! மணமகனின் குடும்பம் மற்ற எல்லா வீடுகளிலிருந்தும் கடப்பாரைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு துரத்தினர். முழு பலத்துடன் "கிறுக்கு பிக்குவைப் பிடியுங்கள்", என்று கத்தியபடியே ஓடினார்கள்.

நண்பர்கள், உற்றார், உறவினர், அறிந்தவர், தெரிந்தவர், அறியாதவர், தெரியாதவர், முதியவர், இளையவர் என்று எல்லோரும் அந்தக் குடும்பத்தினரின் பின்னாலேயே கூச்சலிட்டபடியே ஓடினர். கிராமத்தின் கிழக்குக் கோடியில் வசித்த பணக்காரக் குடும்பம் மட்டுமே இவர்களுடன் சேரவில்லை. தங்கள் வளாகத்திலேயே நின்று கொண்டு, "ஒரு பிக்கு மணமகளைத் தூக்கிக் கொண்டு போவதென்றால்,…எத்தனை விநோதம்!", என்று வியந்த படியிருந்தனர்.

துறவி மிக வேகமாக ஓடினார். கிராமத்தினர் யாராலும் அவரைப் பிடிக்க முடியவில்லை. நண்பகலில் திடீரென்று துறவி நின்றார். மணப் பெண்ணைக் கீழே கிடத்தி விட்டு, விசிறியை எடுத்து வீசிக் கொண்டார்.

அப்போது, கோபத்துடன் ஓடிவந்த கூட்டம் துறவியைப் பிடித்துக் கொண்டனர். அவரை அடிக்க நினைத்த போது திடீரென்று மிகப் பேரோசையுடன் காற்று அடித்தது. வானம் கருத்தது. பூமி அதிர்ந்தது. ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்க்கவும் முடியவில்லை.

திடீரென்று, ஏதோ பெரிய பிரமாண்டமான பொருள் நிலத்தில் விழந்தாற் போல காதைச் செவிடாக்கிடும் ஓசை கேட்டது. கொஞ்ச நேரத்தில், கருமேகம் கலைந்து மறைந்தது. மீண்டும் பளீர் வெயில் அடித்தது. கிராம மக்கள் கிராமத்தில் ஒரு மலையைக் கண்டனர்.

அப்போது தான் மக்கள் துறவி சொன்னது உண்மை என்று புரிந்து கொண்டனர். அவர் ஒன்றும் கிறுக்கு இல்லை என்றும் கூட உணர்ந்து கொண்டனர். எல்லா உயிரையும் காப்பாற்றத் தான் அவர் மணப்பெண்ணைத் தூக்கிக் கொண்டு ஓடினார் என்று புரிந்து கொண்டார். துறவிக்கு நன்றி கூறினார்கள். "இதோ, இவளுக்குச் சொல்லுங்கள் உங்கள் நன்றியை. எனக்கு எதற்கு நன்றி?", என்றார் துறவி.

கிராமம் முழுவதும் மலைக்கு அடியில் புதைந்தது. வீடுகளற்றுப் போனார்கள் மக்கள். போக இடமும் இல்லாமல் போனது. மிகவும் சோகமாகி விட்டார்கள். எங்கே வாழ்வது என்று யோசித்த மக்கள் கண்ணீர் விட்டனர்.

"கவலையும் பதட்டமும் எதற்கு? நம் கிராம நிலத்துக்குச் சொந்தக்காரர் குடும்பத்துடன் புதைந்து இறந்து விட்டார். இப்போது வீடுகள் கட்ட ஒரு தடையும் இல்லை. நீங்கள் எல்லோரும் புது வீடுகளைக் கட்டிக் கொள்ளுங்கள்", என்றார்.

"அவர் சொல்வது உண்மை தான்!", என்று எல்லோரும் உணர்ந்து வியந்தனர். எல்லோரும் சிரித்தனர். அப்போது அவர், "இந்த மலை வேறு இடத்துக்குப் பறந்து போய் இதே போல ஆபத்தை விளைவிக்கும். ஆகவே, இந்த மலையை இங்கேயே இருக்க வைக்க வேண்டும். என்னிடம் ஒரு திட்டம் உண்டு. மலைச் சரிவில் நாம் 500 புத்தரின் உருவத்தைச் செதுக்கிப் பொருத்தி வைத்து விடுவோம். பிறகு, எடை அதிகமாகி மலையால் பறக்க முடியாது. எல்லோரும் உதவுவீர்களா?", என்று கேட்டார் துறவி.

"நீங்கள் சொல்வதைக் கேட்போம்", என்றனர் மக்கள். எல்லோரும் பணியை உடனே துவங்கினர். சுத்தியல்களும் உளிகளும் இயங்கின.

அப்போது, மலையால் பறக்க முடியவில்லை. அன்றிலிருந்து கிராமத்தின் ‘திரும்பிடும் ஆன்மா’ கோயிலின் முகப்பில் நின்றது மலை. மிகத் தொலைவிலிருந்து பறந்து வந்ததால், அது ‘தூரத்திலிருந்து பறந்து வந்த சிகரம்’ என்றும் அழைக்கப் பெறுகிறது.

(முடிந்தது)

(‘மீன்குளம்’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author