தைவான் – சில தகவல்கள்!

உலகில் மொத்தம் எத்தனை நாடுகள் இருக்கின்றன? இது பலருக்குக் குழப்பமான சங்கதி!
195 என்று பலர் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இது தவறு!

நீங்கள் தாய்வான் என்ற நாட்டைக் கணக்கில் எடுக்காவிட்டால் உங்கள் விடை சரிதான். அமெரிக்கா, சீனா உட்படப் பல நாடுகள் அதைத் தனிநாடாகக் கணிப்பதில்லை. அலுவல்ரீதியான அங்கீகாரமும் இல்லை. ஆனால், தாய்வான் ஒரு தனிநாடாகத்தான் இயங்கி வருகிறது.
எனவே சரியான விடை 196!

வீட்டிலிருந்து ஓடிப் போன பிள்ளையாக, ஊதாரியாகத்தான் தாய்வானைச் சீனா கருதுகின்றது. தன் நாட்டிலிருந்து பிய்த்தெடுக்கப்பட்ட ஒரு மாகாணமாகவே தாய்வானைச் சீனா நோக்கி வருகின்றது. ஆனால், 100க்கும் மேற்பட்ட உலகநாடுகள் தாய்வானுடன் அலுவல்ரீதியான இராஜாங்க உறவைக் கடைப்பிடித்து வருகின்றன.

தாய்வான் இன்று வரை ஐக்கிய நாடுகள் சபையில் இணையவில்லை. (வத்திக்கான் (Vatican), கொஸ்ஸோவா ஆகியவை கூட).

தாய்வான் பற்றி மேலும் சில வரிகள்…

Formosa என்ற பெயர் ஞாபகத்தில் இருக்கின்றதா? தாய்வான் என்று இன்று அழைக்கப்படும் குட்டித்தீவுக்குப் போர்த்துக்கேயர்கள் (Portuguese) வைத்த பெயர்தான் இது. தாய்வான் நீரிணைக்குக் (strait) குறுக்காக உள்ள இந்தத் தீவு, வடக்கில் கிழக்குச் சீனக் கடலைக் கொண்டிருக்கின்றது. 1949இல் வெடித்த உள்நாட்டுக் கலவரத்தின் பின்னர், தன்னைப் பிரித்துக் கொண்டு தாய்வான் தனிநாடாகியது.

இந்தக் காலத்திலிருந்து, தாய்வானும் சீனாவும் பல இழுபறிகளைக் கடந்து வந்து, கடந்த பெப்ரவரி மாதம் (2014) அமைச்சர்கள் மட்டச் சந்திப்பு அளவில் இராஜாங்க உறவுகள் வளர்ந்துள்ளன. இரு நாடுகளும் முறுகல் நிலையைத் தவிர்த்துக் கொள்ள விரும்புவதை இந்த முக்கிய மாநாடு வெளிப்படுத்தி இருக்கின்றது.

தாய்வானின் பொருளாதாரம் பலம் வாய்ந்ததாக உள்ளது. கணினிகள், மின்னியல் சாதனங்கள், துணிமணிகள், ரப்பர் (Rubber) உற்பத்தி என்று இந்நாடு ஏற்றுமதியில் அமர்க்களப்படுத்துகின்றது.
எங்கே பார்த்தாலும், தப்பியோடி வருபவர்களிடையே ஒரு வெறியும் வேகமும் வந்து விடுவதை உணர முடிகின்றது. எதையாவது பெரிதாகச் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் அவர்களிடம் தவறாமல் தொற்றிக் கொள்கின்றது.

தூரப் போவானேன்? எங்களையே (இலங்கைத் தமிழர்களையே) இதற்கு நல்ல உதாரணமாக எடுத்துக் கொள்ளலாமே!

About The Author