தொலைந்து போன நட்சத்திர இளவரசி (2)

"சொல்லுங்கள் அப்பா, ஆணையிடுங்கள். உங்கள் மகள் உங்களின் பொன்னான வார்த்தைகளுக்குக் காத்திருக்கிறாள்."

"அங்கு பூமியில், ‘இனிய அமைதி’ நகரில் இருக்கும் மலையின் மீது ஒரு கோயில் உண்டு. அதில் ஸிங் வூ என்றொரு ஒரு பிச்சைக்காரர் வாழ்கிறார். அவர் மிகவும் முதியவர். வறுமையில் வாடுகிறார். கிழிந்த ஆடைகளுடன் இருப்பார். இருந்தும், தன் வாழ் நாள் முழுவதும் அவர் ஒரு சிறு பாவமும் செய்ததில்லை. இரவானதும், நீ கிளம்பு. கீழே பூமிக்குப் போய் நீ கிழவரை அடையாளம் காண். நான் இங்கிருந்து செலுத்திய மந்திரத்தில் அவர் ஒரு ஆழ்துயிலில் இருப்பார். அவரை எழுப்பு. அவருக்கு இளமையைக் கொடு. செல்வமும், பட்டும் கொடுத்து உன் கணவனாக ஏற்றுக் கொள். நீ தான் என் மகள்களிலேயே எனக்கு ஆகப் பிடித்தமானவள். ஆறு மாதங்களுக்குப் பிறகு நான் உன்னைக் கூப்பிட்டுக் கொள்வேன்."

"மின்னலென ஸூ ச்சீ பூமியை நோக்கி விரைந்தாள். அவளுடன் நூற்றுக் கணக்கில் தோழியர்களும் முதல் கட்டப் பயணத்தில் பங்கேற்றனர். இரவில் ஊரில் விழித்திருந்தவர்கள் பல நூறு நட்சத்திரங்கள் விழுந்தன என்று நினைத்துக் கொண்டனர். கோயிலும் நகரமும் ஒளி வெள்ளத்தில் இருந்தது. அங்கே படியில் பிச்சைக்காரக் கிழவர் தூங்கிக் கொண்டிருந்தார். ‘எழுங்கள் ஸிங் வூ, உங்களின் மணப் பெண் வந்திருக்கிறேன். பாருங்கள், நம் திருமணச் சோறு சாப்பிடவும் திருமண மதுவைக் குடிக்கவும் தயாராய் நிற்கிறேன்."

"ஸிங் வூ கண்களைத் துடைத்துக் கொண்டு பார்த்தார். யாரது என்னைப் போய் நையாண்டி செய்வது? என்று கூவினார் கிழவர். இத்தனை அழகிய பெண்ணா இந்த வீடில்லாத, உணவில்லாத அழுக்குப் பிச்சைக்காரக் கிழவனை மணப்பாள்? திருமண மதுவா?"

"எழுங்கள் ஸிங் வூ என்று சொன்னாள் நட்சத்திர இளவரசி. எல்லாம் மாறிப் போனது. நீங்கள் இப்போது ஒரு வாலிபர். மிகவும் பணக்காரர். இதோ, ஜேட் மாமன்னர் யு ஹுவாங்கே இதையெல்லாம் உங்களுக்காக அனுப்பியிருக்கிறார். நீங்கள் நல்லவராக இருந்ததற்கு பரிசாக."

"பிச்சைக்காரக் கிழவர் துள்ளி எழுந்தார். கனவோ என்று நினைத்தார். மிகவும் பலமுடனும் சுறுசுறுப்புடனும் தான் இருப்பதை உணர்ந்தார். கிழிந்த ஆடைகள் மறைந்திருந்தன. ஆகப் பணக்காரரின் ஆடையைப் போல எல்லாம் பட்டாடைகள்."

"இருவருக்கும் திருமணம் நடந்தேறியது. மிகவும் பெரிய மாட மாளிகையில் ஆறு மாதங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக செல்வந்தர் வாழ்க்கையை வாழ்ந்தனர்."

"ஒரு நாள் மதியம், நட்சத்திர இளவரசி தோட்டத்தில் பூப்பறித்துக் கொண்டிருந்தாள். அடுத்த வீட்டில் வாழ்ந்த ஒருவன் சுவரிலிருந்து எட்டிப் பார்த்தான். அவளின் அழகு அவனை மயக்கியது. அவளின் சருமம் நிலாவை விட வெண்மையாக இருந்தது. வேறு எதையும் நினைக்காமல் அவளையே நினைத்து கவிதைகள் புனைந்தான். வாதாம் பருப்பைப் போலிருந்த அவளின் கண்களையும் அல்லி மலர் போன்ற அவளின் பாதங்களையும் கூடப் பாடினான்.

"அவளைத் தனதாக்கிக் கொள்ள முடியா விட்டால் ஜேட் மாமன்னரை வழிபட்டு, காட்டு மழையை வேண்டுவான். மழை நகரையே வெள்ளத்தில் மூழ்கடிக்கும் என்றெல்லாம் யோசித்தான். ஸிங் வூவைச் சந்தித்து ஸு ச்சீயைத் தருமாறும், அவளுக்கு பதிலாக தன் மனைவியை எடுத்துக் கொள் என்று சொன்னான். ஏராளமான பணமும் தருவதாக வாக்குறுதி கொடுத்தான். ஸிங் வூவுக்குக் கோபம் வந்தது. அந்தத் தீயவனைத் துரத்தி அடித்தான்."

"ஸு ச்சீ அந்தத் தீயவனைப் பற்றி அறிந்தும் கோபப் படவில்லை. அவன் கொடுக்கும் பணத்தை ஏற்றுக் கொள்ள ஸிங் வூவிடம் சொன்னாள். எப்படியும் எனக்கு ஜேட் மாமன்னரிடமிருந்து அழைப்பு வந்தாயிற்று. நானோ இன்னும் சில தினங்களில் மேலுலகம் சென்று விடுவேன். இப்போது அவன் கொடுக்கும் பணத்தை நீங்கள் ஏற்க என்ன தடை என்று கேட்டாள் நட்சத்திர இளவரசி ஸிங் வூவிடம்."

"நான் அவன் மாளிகைக்குப் போனாலும் திருமணம் நடக்காது. ஆகவே, போய் அவனிடம் சரி என்று சொல்லுங்கள். தன் அன்பு மனைவியை இழக்க ஸிங் வூவுக்கு மிகவும் சோகமாகி விட்டது. உண்மையிலேயே ஜேட் மாமன்னரின் மகளாகவே இருந்தாள் என்றால், என்ன செய்வது. அவளை விட்டுப் பிரிய வேண்டியது தான் என்று நினைத்தான் ஸிங் வூ. வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டான். ஏற்பாடுகள் நடந்தன. நட்சத்திர இளவரசி மேலுலகை நோக்கிக் கிளம்பிடும் நாள் தான் நல்ல நாள் என்று முடிவானது. அன்று பக்கத்து வீட்டுக்காரன் எல்லா ஏற்பாடுகளையும் செய்தான். மிகச் சிறந்த சமையற்காரர்கள் அங்கே கூடியிருந்த விருந்தினருக்குச் சமைத்தனர். தோரணங்களும் கோலாகலங்களும் தடபுடல் பட்டன. வண்ண வண்ணப் பூக்கள் எங்கும் அலங்கரித்தன."

"நட்சத்திர இளவரசி ஏறி வந்த பல்லக்கு வீட்டு வாசலை அடைந்ததுமே இளவரசி இறங்கி ஓடி பின்கட்டில் இருந்த அறைக்குள் போய் கதவைச் சாத்திக் கொண்டு விட்டாள். விருந்தினர் மணப்பெண்னின் உருவத்தைக் காணக் காத்திருந்தனர். ஆனால், மணப்பெண் வரும் வழியைக் காணோம். ஒரு பணிப்பெண் போய் கதவைத் தட்டி பணிவாகக் கூப்பிட்டாள். அப்போதும், நட்சத்திர இளவரசி தனக்கு உடம்பு சரியில்லை என்றும் அதனால் விருந்தினர் உண்டு களித்து மகிழட்டும் என்றும் இரவு உணவின் போது தானும் வந்து சேர்ந்து கொள்வதாகவும் சொல்லி விட்டாள்."

"மதியம் கரைந்து மாலை மறைந்து இரவும் வந்தது. ஏராளமான வண்ணச் சீன லாந்தர்கள் மின்னின. சமையலறையிலிருந்து உணவுப் பதார்த்தங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டே இருந்தன. நட்சத்திர இளவரசி பணிப் பெண்ணைக் கூப்பிட்டு தான் தயார் என்றும் இசைஞர்கள் சிறப்பாக வாசிக்கட்டும் என்றும் சொன்னாள். விருந்தினர் எல்லோருமே ஆச்சரியத்தில் விழி விரித்தனர். சிவப்புப் பட்டாடையில் தலையில் தரித்திருந்த கிரீடத்தில் ஏழு நட்சத்திரங்கள் மின்னின. நட்சத்திர இளவரசியின் முகத்தில் இருந்த கடுமை தான் எல்லோரையும் பயமுறுத்தியது. மணமகனிடம் போய், "உனக்கு உன் அழகிய மனைவி போதவில்லையோ, பக்கத்து வீட்டுக்காரனின் மனைவியைத் திருடப் பார்க்கிறாயா? முட்டாளே, ஜேட் மாமன்னரின் செல்ல மகளான நட்சத்திர இளவரசியையே திருட உனக்கு என்ன துணிச்சல்? என் அப்பா மிகுந்த கோபத்தில் இருக்கிறார். உன் முட்டாள் தனத்துக்கு தண்டனை கொடுக்க என்னிடம் ஆணை இட்டிருக்கிறார்", என்றாள்."

"சொல்லிக் கொண்டே தன் இரு கைகளையும் தட்டினாள். தீயவனான மணமகன் புகையைப் போல மாயமாய் மறைந்து போனான். மாளிகையும் மாடங்களும் மறைந்து அந்த இடத்தில் ஒரு ஏரி உருவானது. பணியாட்கள் மீன்களாகவும் இசைஞர்களும் விருந்தினர்களும் தவளைகளாகவும் மாறியிருந்தனர். இரவெல்லாம் கத்தினர்."

"கேளுங்க செல்லங்களா, நம் குளத்தில் கூட மீன்களும் தவளைகளும் ‘சாப்பாடு தயார், சாப்பாடு தயார்’னு கத்தற மாதிரி இருக்கா இல்லையா?"

"ஸிங் வூவுக்கும் நட்சத்திர இளவரசிக்கும் என்ன ஆச்சு?"

"ஓ, அவள் மேலுலகிற்குப் போய் விட்டாள். ஆனால், அவளின் சகோதரிகளுடன் அவளால் இருக்க முடியவில்லை. பூமியின் மனிதராய் இருந்த ஒருவருடன் ஒரு மனிதப் பெண்ணாகவே கொஞ்ச காலம் வாழ்ந்து விட்டிருந்ததால் நீ மாறிப் போனாய் என்றார் ஜேட் மாமன்னர். நீ உன் வேலையை மிகச் சிறப்பாகச் செய்து முடித்து விட்டதால் சொர்க்கத்தில் நான் உனக்கு ஒரு சிறந்த இடத்தைத் தருவேன். முன்பை விட, உன் சகோதரிகளை விட பளீரென்று மின்னுவாய். எல்லோரும் உன்னைப் போற்றுவர்."

"அதோ தெரிகிறதா? ஆறு நட்சத்திரங்களுக்குக் கீழே ஒரு பிரகாச நட்சத்திரம்! ஒவ்வொரு தெளிந்த இரவிலும் அவள் தன் பிரகாச ஒளியை பூமியின் மீது பாய்ச்சுவாள். கதிர்களைச் செழிக்கச் செய்வாள். ஸிங் வூவைப் போன்ற நல்லவர்களுக்கு அதிருஷ்டமும் கொடுப்பாள்."

(முடிந்தது)

(‘மீன்குளம்’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author