நகைச்சுவை

மனிதனால் மட்டுமே சிரிக்க முடிகிறது. ‘சிரித்துப் பரு’ என்னும் பழமொழி, சிரித்தால் பருமன் ஆகலாம் என்று தெரிவிக்கிறது. பருப்போமோ மாட்டோமோ, சிரிப்புக்குக் காரணமான நகைச்சுவையுணர்ச்சி ஏமாற்றங்களையும், வாழ்க்கை இன்னல்களையும் மறக்க அல்லது மறைக்க, மன இறுக்கத்தைத் தளர்த்திக் கொள்ள உதவுதல் உறுதி. ஆனால் எப்போது சிரிப்பது, எதற்காகச் சிரிப்பது என்ற நல்லறிவு இல்லாமல் எதற்கெடுத்தாலும் சிரிப்பாய் சிரிக்கக் கூடாது!!

பிறருடைய துன்பங்கண்டு நகைப்பது பண்பாடன்று. தவறிக் கீழே விழுந்தவர், திருடரிடமோ, ஏமாற்றுக்காரரிடமோ பொருளையிழந்தவர், தமது முயற்சியில் தோற்றவர், மோசடிக்காரர்களின் பேச்சை நம்பி ஏமாந்தோர் முதலியவர்களைக் கண்டு எகத்தாளமாய் சிரிப்பவர்களுக்குப் பஞ்சமில்லை. விழுந்தவரைப் பார்த்து, "என்ன எடுத்தீங்க?" என்று கேட்டும், முழங்காலில் குருதி வழிதல் கண்டு, "முழங்கால் வெத்திலை போட்டிருக்கு!" என்று சொல்லியும் கிண்டல் செய்வோர் உண்டு. "இடுக்கண் வருங்கால் நகுக" என்பதற்குப் பொருள் "அடுத்தவர்க்குத் துன்பம் வந்தால் மகிழுங்கள்" என்பது அன்று.

கம்ப இராமாயணத்தில் (பால காண்டம் வரைக் காட்சிப் படலம்) ஒரு காட்சி :

பளிங்குக் கல் பதித்த இடமென்று தவறாய்க் கருதிய பெண்கள் விரைவாய் நடந்து சென்றார்கள். உண்மையில் அது ஒரு சுனை. அதில் அவர்கள் இறங்கி விடவே அவர்களுடைய ஆடைகள் நனைந்து விட்டன. அதைக் கண்ட வீரர்கள் சிரித்தார்கள்.

இது போன்ற நிலைமையில் துரியோதனனைக் கண்டு திரெளபதி சிரித்தமையால்தானே, அவளை அவன் அரசவையில் துகிலுரிந்து அவமானப்படுத்தினான்?

நம் மக்கள் பண்டைக்காலம் முதலே பரம்பரை பரம்பரையாய்ப் பிறரது இடர் கண்டு கேலி செய்து வருகிறார்கள் என்பதற்கு இந்த இரண்டு இதிகாசங்களும் ஆதாரம்.

தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவைக் காட்சி என்ற பெயரில் எதைக் காட்டுகிறார்கள்? ஒருவரை அடித்து உதைத்துக் கொடுமைப்படுத்துவதைத்தான். மக்கள் தாங்கள் பெருமகிழ்வுடன் ரசிக்கிற அந்தக் காட்சியை அடிக்கடி நினைவு கூர்ந்தும், மற்றவர்களிடம் எடுத்துக் கூறியும் ஆனந்தம் உறுகிறார்கள்.

இதைவிட மோசமான காட்சியையும் சினிமாவில் காணலாம். ஒரு பாத்திரத்தைக் காது கேளாதவர் அல்லது பேச இயலாதவர் அல்லது திக்கிப் பேசுபவர் எனப் படைத்து அவரை இழிவுபடுத்துகிறார்கள். அவரது செயல்களைப் பார்க்கிற மக்கள் சிரித்து மகிழ்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை அன்றாட வாழ்க்கையிலும் கேலிப் பொருளாகக் கருதுகிறார்கள். குறையுறுப்பினரை இழிவு படுத்துகிற பழமொழிகளும் உவமைகளும் தமிழில் பலவுண்டு. (ஆங்கிலத்தில் இல்லை என்பதை எண்ணிப் பாருங்கள்!)

உறுப்புக் குறையைக் காரணமாய் வைத்து நகைக்கும் இந்தப் பெருந்தவற்றைத் தமிழினம் பன்னெடுங்காலமாய்ச் செய்து வருகிறது என்பதை தொல்காப்பியத்தால் அறிகிறோம்.

சிரிப்பை, அது தோன்றுவதற்கான காரணங்களைக் கொண்டு நான்கு வகையாய்ப் பிரிக்கிறார் தொல்காப்பியர்.

எள்ளல் இளமை பேதைமை மடனென்று
உள்ளப் பட்ட நகைநான்கு என்ப.
(தொல். பொருள். 248)

எள்ளல் என்பது கிண்டல் செய்தல். கிண்டல் செய்து சிரிப்பதற்குப் பேராசிரியர் என்ற உரையாசிரியர், "குருடரும் முடவரும் செல்லும் செலவு" என எடுத்துக்காட்டு தந்துள்ளார். அதாவது பார்வை இல்லாதவரும், கால் ஊனம் உள்ளவரும் நடக்கிற நடை எள்ளலுக்குரியது என்பது அவர் கருத்து.

இப்படி ஏளனஞ் செய்து சிரித்தல், "கற்று நல்லொழுக்கம் உடைய அறிவுடையோரிடத்தில் தோன்றாது" என இளம்பூரணர் என்ற உரையாசிரியர் விளக்கியுள்ளார். ஆதலால், இத்தகைய எள்ளல் தவறு என்று அவர் கருதியுள்ளமை தெரிகிறது.

பிறரது மனத்தைப் புண்படுத்தும் வகையில் சிரிப்பது கூடாது. மற்றவர்களுடைய குறைபாட்டை அல்லது இன்னலைக் கண்டு இரங்குதலே அறிவுடைமை. முடிந்தால் அவர்களுக்கு உதவுதல் பேரறிவுடைமை.

"அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை?"

About The Author

7 Comments

  1. RV.Raji

    வணக்கம் ஞானசம்பந்தன்,
    நகைச்சுவை யென்பது நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்று. அதை இடம், காலம் அறிந்து செயல்படுத்த வேண்டுமென்று எடுத்துரைத்த விதம் பாராட்டுக்குரியது!
    நன்றி…..

  2. kalayarassy G

    பிறரது துன்பம் கண்டு சிரிப்பது சிறந்த பண்பாடன்று என்பதை மனதில் நன்கு பதியுமாறு எடுத்துரைத்தமைக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

  3. geetha

    இது போன்ற நல்ல கருத்துகளை வளரும் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லி அவர்களை நல்வழிப்படுத்துதல் பெற்றோரின் கடமையாகும். மிகவும் நன்று!

  4. Rishi

    சிறந்த கட்டுரை. ஒவ்வொரு பாயிண்ட்டும் பாடம்.
    ஞானசம்பந்தன் அவர்களுக்கு மிக்க நன்றி!

  5. gouthaman KG

    நான் ஒரு முட்டாள் என்று நான் கூறிக் கொண்டால் – நகைச்சுவை; மற்றவர் கூறினால் – இழிவு படுத்துதல்?

  6. joyce

    சிறந்த கட்டுரை. ஒவ்வொரு பாயிண்ட்டும் பாடம்.
    ஞானசம்பந்தன் அவர்களுக்கு மிக்க நன்றி!

  7. Dr.M.VALLIAMMAI

    எள்ளல் சிரிப்பு பின்னால் உனக்கே கேடு விளைக்கும் என்பதையே இதிகாசம் சுட்டுகிறது.இத்காசச் செய்திக்குப்பின் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்கவேண்டும்.
    உலகவழக்கில் இப்படிச்சிரிப்பவரும் உண்டு என்பதுதான் தொல்காப்பியம் ,உரையாசிரியர் கூற்று.இப்படியெல்லம் சிரிங்க என்று சொல்லவில்லை.

Comments are closed.