நங்கூரம்

கழுகுக் கண்கள்
காமாலை விளக்குகள்.
தினவு திமிரும்
விரல்படத் தெறிக்கும்
தபலாக்கள்….
விறைக்கும் நரம்புகள்
சப்தப் பிதுங்கல்கள்….

ஓர்
எலும்புக் கூடு
அசைகிறது….
சதை முடிச்சுக்களில்
‘வெறிநாய் நாக்குகள்’

ஓசை
உருவ உருவ
உதிரும் உடைகள்….
‘வெறிநாய் நாக்குகள்’
வேர்வையில் வேக வேகப்
பாயும்….
ஓரம் ததும்பும் நுரைகளில்
இமைப்
பிணங்கள்….
‘இதற்குத் தான்
எல்லாம்’ – இடுப்பிற்குமேல்
எழுதாத விளம்பரம் –
குலுங்கக் குலுங்க
நழுவி நழுவி
விழும் …. அந்த
விகார விழிகள்….

கீழே… அங்கே
நங்கூரம் ……
விளக்கின் வியாதி
விலக….
வெளிச்ச நாக்கில்
காட்சி கரைகிறது;
நகர முடியவில்லை – ஓ
நங்கூரம் கால்களில்!

About The Author