நடைப்பயிற்சி செய்பவனும் நீல நிறப் பூக்களும்

‘போ உள்ளே…’ என்று தேவையற்ற ஆக்ரோஷத்தோடு கத்தினான். மறு பேச்சு பேசாமல் விடுவிடுவென உள்ளே சென்றாள். அளவிற்கதிகமான கோபமும் கடுமையும் கலந்த வார்த்தைகளைச் சமீப காலமாக அடிக்கடி பயன்படுத்த ஆரம்பித்திருப்பது புரிந்தது. இன்னதென்று சொல்ல முடியாத ஒரு பிசாசு புகுந்து கொண்டிருப்பதை அறிந்து கலவரப்பட்டாள். இதெல்லாம் வழக்கத்திற்கு மாறான குணம் என்பதை அறிவாள். லட்சியம் செய்வதா அலட்சியப்படுத்துவதா என்று புரியாமல் குழம்பிப் போனாள். சாதாரண கம்பெனி எழுத்தருக்குள்ள குண விசேஷங்களோ? கொஞ்ச நாளில் இதற்கும் பழகிக் கொள்ள வேண்டியதுதான் என்ற முடிவிற்கும் வந்துவிட்டாள்.

இருக்கும் துளி இடத்தில் ஆசை ஆசையாய் மூன்று செடிகளை நட்டு வளர்த்து வந்தாள். சின்ன விரலளவிற்கு க்ஷணத்தில் உயிரை விட்டுவிடுவேன் என்பதுபோல் பரிதாபமாக மெலிந்து சோகையாய் இருந்த அவை, பத்தே நாட்களில் துளிர் விட்டன. கிடுகிடுவென்ற அவற்றின் வளர்ச்சி அபரிமிதமானது தான். ஒரு குழந்தையை விடவும் வாஞ்சையாய் அவைகளைப் பராமரித்தாள். நெடுநெடுவென வளர்ந்து மூன்றே மாதங்களில் ஏராளமான சின்னச் சின்னக் கிளைகளையும் அடர்த்தியான இலைகளையும் பரப்பி அந்தப் பிரதேசத்தையே குளிர்ச்சியாக்கி விட்டிருந்தன.

ஒரு விடியற்காலை வாசற்கோலம் போடுவதற்காக வந்தவள் பிரமித்து நின்றாள். "இந்தாங்க இங்கே வாங்களேன்… சீக்கிரம்" என்று உற்சாகமாகக் கூச்சலிட்டாள். "என்னம்மா" என்று இவனுக்கு முன்னே ஓடி வந்த மஞ்சு "அடேயப்பா" என்று ஆச்சரியப்பட்டாள்.

அடர்த்தியான நீலத்தில் ஏராளமான பூக்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. ஒரே இரவில் என்ன மாயமிது? எண்ணி மாளாது. நெருக்கமான இலைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு கொத்துக் கொத்தாய் காற்றிலாடின. இதிலெல்லாம் பெரிய ஈடுபாடில்லாத சராசரியான இவனுக்கே மனசின் ஓரத்தில் லேசாக குதூகலம் இழைந்தோடியது. வாசற்புறமே களை கட்டியிருந்தது. மென்மையான புதுவிதமான வாசனை வேறு. இன்ன பூ என்று அடையாளம் தெரியவில்லை. அழகிற்கு எதற்குப் பெயரும் அடையாளமும். "ப்பூ…. இதுக்குத்தானா இத்தனை ஆர்ப்பாட்டம். செடி பூக்கறது பெரிய அதிசயம் பாரு…." என்று வழக்கமான அலட்சியத்தோடு சொல்லிவிட்டு அவள் கோலம் போடுவதையும் அசுவாரசியமாகப் பார்த்துவிட்டு வராண்டாவிற்கு வந்தான்.
அப்போதுதான் அவன் தெருவில் வருவதைப் பார்த்தான். வெகு அலட்சியமாக நடந்து வந்து கொண்டிருந்தான். கைகளை அளவாக வீசிக் கொண்டு… தலையை ஒருவித நேர்த்தியோடு லேசாய் வலதுபுறம் சாய்த்துக் கொண்டு விடுவிடுவென்று கடந்து போனான்.

இவள், கோலம் போடுவதை ஒரு நிமிஷம் நிறுத்திவிட்டு அவனைப் பார்ப்பது போலிருந்தது. இவன் உடம்பில் சூடேறியது. "ஏங்க யாரு இது புதுசா இருக்கு…." என்று கேட்டாள் வெகுளியாய்.

நாலு புள்ளிய வச்சு நாலு கோடு போட்டு ஆச்சுன்னு போவாளா…. இப்படிப் பார்த்துப் பார்த்து அழித்து அழித்து திருப்தி தரும் வரை பொறுமையோடு மாக்கோடுகளை – இவளின் ரசனை எரிச்சலைத் தந்தது. இதில் யார் முந்தி என அம்மாவிற்கும் மகளுக்கும் போட்டி வேற… ச்சை… குடும்பமா இது? இப்போ இவர்களின் நேரத்தைக் கொல்ல பூக்களும் வந்தாச்சு….
இப்போது வீட்டைக் கடந்து கொண்டிருந்தான். நடைப் பயிற்சியோ! லேசாகப் புன்னகை செய்வது போலவுமிருந்தது. நல்ல கறுப்பு நிறத்தில் முழங்கால் வரை டிராயர் – பட்டையாக சிவப்புக் கோடுகள் போட்ட பனியன். கழுத்துவரை புரளும் தலை மயிர். நல்ல நிறம்….உசரம் நேர்த்தியான குறுந்தாடி… எதையும் அலட்சியமாகப் பார்க்கும் கம்பீரப் பார்வை சற்று சிவந்த விழிகள். புதிதாகக் குடிவந்திருக்கிறானோ அல்லது யார் வீட்டிற்காவது விருந்தாளியாய் வந்திருக்கிறானோ. பயிற்சிக் கூடத்திற்குப் போய் உடம்பின் ஒவ்வொரு பாகத்தையும் முறுக்கேற்றி வைத்திருப்பது புரிந்தது. கனத்த பூட்ஸுகள் சீராகச் சப்தமிட… அசர வைக்கும் தோற்றம்.

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த வீட்டு வாசலுக்கு வரும்போது மட்டும் சற்று நின்று போவதுபோலத் தோன்றியது. இவள் சிரத்தையாய்ப் புள்ளி வைத்துப் போடும் கோலத்தைப் பார்க்கிறானா… நீல நிறப் பூக்களை லேசாக வருடிக் கொண்டிருக்கும் மஞ்சுவைப் பார்க்கிறானா. இவன் பார்வையின் பொருளென்ன. சந்தேகமே இல்லை. கண்களில் கள்ளம் தெரிந்தது.

‘என்னய்யா வேணும்…’ என்று கோபமாய்க் கத்தவேண்டும் போலிருந்தது. வெளி மனுஷர்களிடம் கோபமும் உரத்த குரலும் நடுத்தர வர்க்கத்திற்கு சாத்தியமே இல்லை. "மஞ்சு.. புஸ்தகத்தைத் தொடறயா இல்லையா… படிச்சு உருப்படறதப்பாரு… இவளே உன்னைத்தான்… உள்ளே போய் வேலையப் பாரு… கம்பெனிக்குக் கிளம்பறதா இல்லையா… சீக்கிரமே வரச் சொல்லியிருக்கான். நேத்தே சொன்னேன்லே…."

பேப்பரில் மனம் செல்லவில்லை. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வெட்டு குத்து, கலவரம், ஆக்சிடெண்ட்லே ஏழு பேர் சாவு… மோசடி…. இதுதான். வேற சம்பவங்கள் நல்லதா எதுவுமே நடக்கலேங்கற மாதிரி… கெட்ட செய்திகளை மட்டுமே பொறுக்கித் தீனியாய்த் தின்னக் கொடுக்கும் பேப்பர்காரங்களை உதைக்க வேண்டும். நாளையிலிருந்து இதை நிறுத்திவிட வேண்டும் தண்டச் செலவு…

அவன் வீட்டைக் கடந்து போயிருந்தான். கைகளை நீள நீளமாக வீசிக் கொண்டு. பாதங்களின் வலிமையில் தார்ச் சாலையே அதிர்ந்தது. ஒரு சாயலில் குத்துச்சண்டை வீரனைப் போலிருந்தான். ஆபீசிலிருந்து எடுத்து வந்த ஏகப்பட்ட வேலைகள் இருந்தன. எட்டு மணிக்குள் முடித்தால்தான் சரியா இருக்கும். உள்ளே நுழைந்ததுமே ‘என்னய்யா ஆச்சு… என்னாச்சு..’. என்று மேனேஜர் கத்துவான். என்ன பிழைப்பு! இந்த தடவை எரிந்து விழுந்தால் மூஞ்சியிலே வீசியெறிந்துவிட்டு ‘போடா உத்யோகமும் புடலங்காயும்’ என்று பதிலுக்குக் கத்திவிட்டு வந்துவிட வேண்டும். இதைப்போல லட்சம் தடவையாவது சபதமேற்று ஓய்ந்தாகிவிட்டது. முடியுமோ? நடுத்தர வர்க்கத்துக்கு கனவுதான் தோதுபடும். மஞ்சுவைக் கரையேற்ற வேணும். கஞ்சியோ கூழோ பசியாறக் கிடைப்பது இந்த இளிவரல் உத்யோகம் தருவதுதான். எந்நேரமும் சுமப்பது விதி!

அவன் ஒரு ராஜகுமாரனைப் போல் திரும்பி வந்து கொண்டிருந்தான். முன்பெல்லாம் அவசர அவசரமாக ஏனோதானோவெனக் கோலம் என்று கசாமுசாவெனப் போட்டுவிட்டுப் போகும் இவள் சிரத்தையாய்ப் புள்ளி வைப்பதும் கோடிழுப்பதும் ஒரு வினாடி நின்று பார்த்துவிட்டு திருப்தியற்றவளாய் பரபரவென அழித்துவிட்டு திரும்பவும் திரும்பவும் போடுவதாகப்பட்டது. நாற்பது வயதிலும் உடம்பு கச்சிதம் இவளுக்கு. மலிவான நூல் புடவையை நாசூக்கற்று அள்ளிப் போட்டுக் கொண்டு அலட்சியமாக இருப்பதும் பேரழகுதான்.

"என்ன எவ்வளவு நேரமாக் கோலம் போடுவ…" என்று எரிச்சல்பட்டான். "இன்னிக்கு ஆடி வெள்ளிக் கிழமைங்க… செம்மண் வேற இடணும்…"

"அது ஒண்ணுதான் கொறச்சல்…"

லயம் நிரம்பிய வாழ்க்கை ஆரம்பத்திலிருந்தே இல்லையோ? மனசில் சோர்வு. சாதாரண எழுத்தர் எல்லோருக்குமா வாழ்க்கை இப்படி அமைகிறது? எல்லோரும் கலகலப்பாகத்தான் இருக்கிறார்கள். சந்திரன் இவனைவிட எந்தவிதத்தில் உசத்தி. நாற்பத்திமூணு வயசிலேயே மண்டை முழுதும் பொட்டல். முகம் முழுக்க குண்டும் குழியுமா கிராமத்து தார்ச்சாலை மாதிரி… ஒடிசலான உடம்பு. வத்சலா அவனிடம் என்னமாய்க் குழைகிறாள். ஆபீஸ் வேலை கால்வாசி, அரட்டை முக்கால். எந்த மேலதிகாரியும் கண்டு கொள்வதில்லை. தன் முறை வரும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். புதுசா வேலைக்குச் சேர்ந்திருக்கும் ரேணுகாவும் நாகசுந்தரமும் அடிக்கடி சினிமாவுக்குப் போவதாகக் கேள்வி. சேர்ந்து லீவு போட்டுவிட்டு ஊர் சுற்றுவதும் தெரிந்த விஷயம்தான். எங்கோ போய் ராத்தங்கிவிட்டு வருவதாகவும் கிசு கிசு… ஆயிரம் புடுங்கல்களோடு புழு மாதிரி சதா நெளிந்து கொண்டிருக்கும் உனக்கு இதெல்லாம் கனவுதான்டா என்று உள்ளுக்குள் ஒரு குரல் எட்டி உதைக்கும் அடிக்கடி. வீட்டில் மட்டும் என்ன வாழுகிறது. மஞ்சு வளர்ந்த பிறகு எதுவுமில்லாமல் போனது. பேச்சும் குறைந்து போனது. ஜாஸ்தியாய்க் கிடக்கும் செழுமை… இவள் பளீர்னு சிரிப்பாள்… இவளுடைய வாசனையே மறந்து போயிருந்தது. இவனும் கேட்பதில்லை. கொடுக்கும் மனநிலையும் இங்கில்லை. கொடுக்க முடியுமா என்ற சந்தேகம் வேறு.

அவன் கைகளை வீசியபடி நடந்து வந்தான். அடர்த்தியான நீல நிறப் பூக்களை எண்ணி முடிக்கும் உத்தேசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். "ஏங்க எப்படிப் பூத்திருக்கு பாத்தீங்களா, கொள்ளை அழகு…" என்று குதூகலித்தாள். என்ன மனுஷன் இவன். செடிப்பூக்களை ரசிக்காத நீயெல்லாம் ஒரு மனுஷனா….?

வலுவான உடம்புக்கு இன்னும் வலு சேர்க்க முயலுவதைப்போல கம்பீரமான நடை… கூர்மையான கண்களும் குறுந்தாடியும் மிடுக்கும் எரிச்சலைத் தந்தன. என்ன திமிர். இவளும் லேசாகத் தலைசாய்த்துப் பார்ப்பது போலிருந்தது. பூக்களைப் பார்க்கிறாளோ – இல்லை…?

"யோவ்… நடுத்தெருவிலே நின்னுகிட்டு கனாக் காணுறே… லேசா ஒரு இடி. சக்கையாய் போயிடுவே" என்று சகட்டுமேனிக்கு நிறைய கெட்டவார்த்தைகளைச் சொல்லித் திட்டிவிட்டுப் போனான் ஒரு கிழட்டு லாரியோட்டி. எல்லோருக்கும் இளக்காரமாகப் போய்விட்டேனோ.

"என்னங்க. நேரமாச்சு… லீவா… பிரமை பிடிச்ச மாதிரி வாசல்லேயே நிக்கறீங்க…" என்று இவள் குரல் கொடுக்கவும் பளிச்சென்று அலங்காரம் பண்ணிக் கொண்டு காற்றில் சுடிதார் துப்பட்டா பறக்க "நளினி வீட்டுக்குப் போயிட்டு வரேம்மா. அவளுக்கு பர்த்டே யாம்… அப்பாட்ட சொல்லிடு…" என்று பதிலுக்குக் காத்திராமல் தாண்டிப் போனாள் மஞ்சு. கொஞ்ச நாளா நடப்பதையே மறந்துவிட்டாள். ஓட்டமும் பறப்பும்தான்.

"பொண்ணை அதட்டி வைக்கறதில்லே. இஷ்டத்துக்குப் போறது இஷ்டத்துக்கு வரது… இதென்ன வீடா சத்திரமா…" மௌனமாக உள்ளே போனாள். இந்த நேரத்தில் பதில் பேசினால் எதிர் வார்த்தைகளின் சூட்டில் பொசுங்கிப் போய்விடுவோம் என்று புரிந்தவள், இப்போது இந்த வன்முறைகளை எதிர்கொள்ளப் பழகிப் போயிருந்தாள்.

புதிதாகக் கட்டி கும்பாபிஷேகம் நடந்த தெருக்கோடிப் பிள்ளையார் கோயிலிலிருந்து "ஞான விநாயகனே…" பேரிரைச்சலாகக் கேட்டது. இனிமே இந்த ஞான விநாயகனே… பாடக்கூடாதுன்னு தடை போடணும்… எந்த நிகழ்ச்சியானாலும் திரும்பத் திரும்ப இந்த ஞான விநாயகனே…" தானா. அலுத்துப்போச்சு. வேறு துதிப்பாடலே கிடையாதா புள்ளையாருக்கு. அதுவும் பேரிரைச்சலாய். விநாயகனின் நீண்ட காதுகள் செயலற்றுப் போய்விட வேண்டுமென்று சபதம் செய்து கொண்டாற்போல் கொடுமைடா சாமி.

அன்று ஒரு கனவு, "என்ன மாமா சௌக்யமா இருக்கீங்களா" என்று அவன் கேட்பது மாதிரி இருந்தது. நக்கல் பண்ணுகிறானோ, சட்டென விழித்துக் கொண்டு பார்த்தபோது தெருவில் சரக் சரக்கென்ற சப்தம் கேட்டது. இவள் நீலநிறப் பூக்களை எண்ணிக் கொண்டிருந்தாள். "மஞ்சு இன்னொரு வாளி தண்ணி கொண்டா லேசா வாடிப் போயிருக்கு…" அவன் புன்னகை செய்தவாறே தாண்டிப் போய்க் கொண்டிருந்தான். மஞ்சு உள்ளே எதற்காகவோ சிரிக்கும் சப்தம் கேட்டது.

இரவு முழுக்கத் தூங்காததால் கண்கள் நெருப்பாய் எரிந்தன. படுக்கையிலேயே படுத்துக் கொண்டு முகட்டுவளையை அக்கறையோடு பார்த்துக் கொண்டிருந்தபோது வெளியே சப்தம் கேட்டது. யாரோ கேட்டைத் திறப்பது தெரிந்தது. சட்டென்று எழுந்து பார்த்தபோது அவன் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நின்று கொண்டிருந்தான். இவனைப் பார்த்து லேசாகச் சிரித்தான். பேப்பர் பையன் விட்டெறிந்த செய்தித்தாள் முகத்தை உரசிக் கொண்டு ஜன்னலருகே விழுந்தது.

"என்ன வேணும்…? ஏன்டா கடன்காரா! காலங் கார்த்தாலே வந்து கழுத்தை அறுக்கறே…." என்று கத்த வேண்டும்போல் ஆத்திரம் வந்தது. அவன் உள்ளே நுழைந்துவிடாதவாறு மறித்துக் கொண்டு நின்றான். "என்னங்க சப்தம்…" என்றவாறே இவள் எட்டிப் பார்த்தாள்.

அவன் சிரித்தான். "எனக்கு ரெண்டு பூ வேணும். நீலப்பூ… ரெண்டே ரெண்டு பூ…" ஆஜானுபாகுவான தோற்றத்திற்கும் குரலின் கெஞ்சலுக்கும் சம்பந்தமே இல்லை.

"ரெண்டு பூ வேணும்… ரெண்டு பூ… யக்கா தருவியா… இங்க பாரு எவ்வளவு பூ வச்சிருக்கேன்…" கால்சராய்ப் பையிலிருந்து எடுத்தான். விதவிதமான பூக்கள். மஞ்சள் வெள்ளை சிவப்பு எனக் கலவையாய். நிறைய வாடிப்போன பூக்கள் வேறு. வலது பக்கப் பையிலிருந்தும் ஏகப்பட்ட குப்பைகள், பழைய காகிதங்கள், நசுங்கிய பிளாஸ்டிக் கப்கள், வீசியெறிந்த பேனா மூடிகள், உடைசல் பொருள்கள், துண்டு துண்டாய் கந்தைத் துணிகள் "… எவ்வளவு வச்சிருக்கேன் பார்த்தியா. நீலப்பூ… ரெண்டு குடு..". கீழே எறிந்தவைகளை அவசர அவசரமாக திரும்பவும் அள்ளிப் பைக்குள் திணித்துக் கொண்டான்.

– என்ன இவன்….

"சங்கரா… சங்கரா… இங்கேயாடா இருக்கே… வாக்கிங் போயிட்டு சமத்தா வருவியே… நாழியாச்சே காணும்னு ஓடி வந்தேன்" என்று பதறியபடியே ஒரு மூதாட்டி இவனைப் பிடித்து இழுத்தாள்… "பாட்டீ… நீலப்பூ வேணும்…" என்று முனகினான்.

"என்னது என்னது…" என்று மஞ்சு வெளியே வந்தாள். "கோவிச்சுக்காதீங்க… என் பேரன்தான். நாங்க இந்தத் தெருக்கோடிக்குக் குடி வந்து மூணு மாசமாச்சு… இவன் யாருக்கும் தொந்தரவு தரமாட்டான். உடம்புக்கு முடியாதவன். பிறந்ததிலிருந்தே மூளை வளர்ச்சியில்லே… ஆச்சு இருவத்தஞ்சு வருஷம். பாக்காத வைத்தியமில்லே… போகாத கோயிலில்லே. செய்யாத பரிகாரமில்லே… எல்லாம் விதி… ரெண்டு பூ பறிச்சுக்கட்டுமா கொழந்தை ஆசைப்படறான்."

ஒரு கூடைக்காரி அசந்தர்ப்பமாய், "கீரை வேணுமா…" என்று கூவினாள்.

"யம்மா… ரெண்டு பூம்மா… பாட்டி பறிச்சுத்தா…" கடைவாயிலிருந்து வழிந்த எச்சில் கோட்டை புடவைத் தலைப்பால் துடைத்துவிட்டாள். "ரெண்டு பூ பறிச்சுக்கறேன்..".

நிறைய நீல நிறப் பூக்கள் காற்றின் வேகத்தில் பொலபொலவென விழுந்தன.

About The Author