நதிக்குப் பதிலாக நாய்களைக் கட்டவிழ்த்து விட்டபோது (1)

அந்தரங்கத்தில்
அணைகளை உடைக்க
ஆவேசித்தாள் காவேரி…

அவளைத்
தாங்க முடியுமா எனத்
தவித்த
மண்ணின் மார்புக் கூட்டின்மேல்
அரக்க இடிகள்…

கடிவாளத்தைக் கழற்றி எறிந்த காற்றுக் குதிரைகள்
காற்குளம்புகளால்
காயம் திறந்த திசைகள்…

கர்நாடகத்தின்
கர்ப்பப்பை கிழிபடக்
கைகளில்
தீவட்டியோடு
காலித்தனங்கள் பிறந்தன.

கொல்லேகாலில்
தமிழரின் சன்ன மூச்சுகளை
மேய்ந்து தீர்க்கக்
காட்டு மிராண்டிச் சூறாவளி
குறி வைத்துப் பாய்ந்தது!

வாழ்க்கை,
சத்தியமங்கலத்தில் கொடுத்த உதை,
கர்நாடகத்தின்
காலடியே போய் வீழ்ந்தாள்
காளியம்மாள்!

கட்டிட வேலையில்
சாரம் சரிந்து விழுந்த
கந்தப்பன்,
செல்லுபடியாகாத காசானான்!

காளியம்மாளின்
கந்தல் முடிச்சுகளில்
மூளியாகிவிட்ட கந்தப்பன்
முனகிக் கொண்டே
தொடர்ந்தான்.

பட்டுக் கொல்லேகாலில்
பட்ட சிரமங்களில்
காளியம்மாளின் பத்துவருட மிச்சம்
ஒத்தைக் குடிசை; அதுவும்
பொத்தலுக்குக் குத்தகை.

பவுர்ணமிகளை
அள்ளி முடியவா ஆசைப்பட்டாள்!
பாவம் அவள்!
மின்மினிகளைத் தான்
துரத்திக் கொண்டிருந்தாள்.

வேர்வை
வெள்ளமாக ஓடியபின்
வெற்று
மணல் திட்டாய்க் காளியம்மாள்.

வறுமை
உச்சரித்த வார்த்தை அவள்;
மரணம்
தயாரித்த வாழ்க்கை!

இருமல்களை
ஏந்திவரும் புலர்காலை!
அவள்
கனவுகளை
மென்று கொண்டே வரும் இரவு!

எந்தத் தலைவன்
எங்கிருந்து வருவான் என்று
எப்போதும்
கைகுலுக்க டெல்லி விமான நிலையத்தில்
காத்திருக்கும்
பாரதமாதா கண்ணுக்குக்
காளியம்மாள் தெரிவாளா?

அரசியல் வியாசர்கள்,
துரியோதனர் அரண்மனை நாய்களைக்
குளிப்பாட்டவே
போதவில்லை நேரம் என்று
போராடுகின்றனர்..

காளியம்மாள் கஷ்டத்திற்கு
வியாக்கியானம் செய்வார்களா?
பிள்ளையில்லாக்
காளியம்மாளுக்குக்
கந்தப்பனே கைக்குழந்தை!

நடக்கமாட்டாத அவனுக்கு அவளே
நடைவண்டி!
நரைத்துப்போன அவள்
தாலாட்டுகளில் – அவன்
கண்கள் உறங்கும்;
கவலை உறங்காது!

மனத்துக்குள் மயானம்!
ஈமத்திற்கு
எப்போதும் தயாராய்
இருவிழிக் கங்குகள்!

சப்பளித்து
நகருவது சாத்தியம், அவனுக்கு
அடுப்பைப் பற்றவைக்கத் தனது
கந்தகமனத்தில் குச்சியை
உரசுவது சாத்தியம்!

உலை நீரில்
அவர்கள் இருவரின்
துண்டாடப்பட்ட தினங்கள் வேகும்!

அவன் கண்ணில்
அவளுக்கு ஒளி! அவள் கண்ணில்
அவனுக்கு ஒளி!

எல்லாம் இருட்டு அனுமதித்த
எல்லைக்குள்
இரவுகளில்
குடிசைக்குள்… இவர்கள்
விட்டுவந்த சொந்தங்களை
விலக்கி வைத்த பந்தங்களைத்
தொட்டுவரும்
வார்த்தைகளில்
ஈரம் இருக்கும் – கோபக்
காரமும் இருக்கும்.

ஞாபகங்கள்
வந்து வந்து அவர்கள்
மனங்களைத் திறக்கும்!

சோக மூட்டத்துள்
சோபன முகூர்த்த நாள் வந்து
மேளம் கொட்டிவிட்டு
மவுனத்தில் –
ஓர் ஊமைப் புள்ளியாய்க்
கரையும்!

வந்து
வாஞ்சை செய்யும்
அந்த நாள் சொற்பச்
சிரிப்புகளை அப்பளத்தை
நொறுக்குவது போல்
பொடிப் பொடியாய் உதிர்த்துப்
போய்க் கூச்சல் போடும்
நிகழ் நாழிகை.

அம்மன் திருவிழா;
அஞ்சு நாள் கொண்டாட்டம்;
அவர்கள்
பேசும் பேச்சுக்குள் குடை
ராட்டினம் சுற்றும்!
வண்ண வண்ணக் காட்சிகள்
விரிக்கும்!
அத்தனையும் போச்சென்று
கூரைமேல்
மோதி வந்து
கர்நாடகக் காற்று சொல்லும்!

About The Author