நதிக்குப் பதிலாக நாய்களைக் கட்டவிழ்த்து விட்டபோது (2)

வாழ்க்கைப் பாடு
செதுக்கி வைத்த வானத்தில்
விரியத் துடிக்கும்
சிறகுகளுக்கு
வெட்டுகளின் எச்சரிக்கை!

காவேரிப் பிரச்சினை
விக்கல் முடிச்சுகளில்
சிக்கித் தவித்தது!

நதியைக்
கட்டவிழ்த்து விடச் சொன்னோம்;
நாய்களைக்
கட்டவிழ்த்து விட்டனர்!

தீர்வாயத்தின்
நேத்திரத்தில் நியாயம் பிறந்தபோது
ஆத்திரம் பிறந்தது
கர்நாடகத்தின் கண்களில்.

ஒவ்வொரு
வெறியன் கண்களிலிருந்தும்
நூறு நூறு விரியன் பாம்புகள்!
மதம்பிடித்த காற்று
குட்டைக்
குடிசைகளின் கதவுகள் மேல்!

அசையும்
சின்னச் சிம்னிப் பிழம்புகள்மேல்
யுகாந்தர இருட்டின்
அவசர நடவடிக்கை!

மீதமிருக்கும்
மூச்சுகளை மட்டுமே
சுமந்தபடி… தமிழர்
வேகமாய் இடத்தைக் காலி செய்து
வெளியேறத் தொடங்க…
வாளும் கையுமாய்
கல்லும் கையுமாய்,
கடப்பாறையும் கையுமாய்
வெறியெடுத்த கர்நாடக வெள்ளம்!

திடுக்கிட்ட
தீவுகளாய்த் தமிழர்
அக்கினி வளையத்தில்
அகப்பட்ட சருகுகளாய்த்
தமிழர்.

பங்காரப்பாவே
ஆயிரமாயிரம் பருந்துகளாய்
உருவெடுத்துச் சூழ,
பதைக்கும் சிட்டுப் பறவைகளாய்த்
தமிழர்.

அந்த ஞாயிறு,
சாவின் தூதாக வந்தது!
அன்றைய இரவு,
அச்சத்தில்
உறைந்து கிடந்தது!

காற்றில்
முனகலும் அழுகையும்
கொப்பளித்துக் கிடந்தன.
காளியம்மா
கணவன் கந்தப்பனை
இடுப்பில் இடுக்கியபடி
கட்டிய
துணியோடு புறப்பட்டாள்!

திறந்தபடி
கிடந்த குடிசைச் சின்னக்கதவைத்
திரும்பியவள் பார்க்கவில்லை!
மோப்பம்
பிடித்துத் தொடரும்
மூர்க்கத்துள்…
கால்களை ஊன்றினாள்!

தைரியம்,
தைரியத்தைக் கசாப்புச் செய்யும்
அச்சம்
இப்படி
இரண்டுபட்ட உள்ளத்தோடு
காளியம்மாள்…
பாரமாகிப் போனோமே
இவளுக்கென்று,
பாரமாகிப் போன
மனத்தோடு கந்தப்பன்…
பத்தடி தூரம்
கடக்கவில்லை…

"இடுப்பில் என்னடி
இவ்வளவு பெரிய குழந்தை!" –
போக்கிலிக் குரலோடு
அவள்
பார்வைக்குள் பாய்ந்தன
வேட்டை நாய்கள்…
கந்தப்பனை
இழுத்துக் கீழே எறிய
எத்தனித்தன.

அவள்
இடுப்பை இறுகப் பற்றிக் கொண்ட
கந்தப்பன்
வெடுக்கென்று – தனது
இடுப்பில் இருந்து
எடுத்த வெட்டரிவாளை வீசினான்.

நான்கு
நாய்த்தலைகள்
உதிர்ந்தன – ஒரு
சுற்றுச் சுற்றி நின்றாள்
காளியம்மாள்!

வீச,
வெட்டரிவாளை – மீண்டும்
ஓங்கியபோது – ஒரு
கர்நாடகத்தான்
கடப்பாறை கந்தப்பனைச்
சாய்த்தது மண்ணில்!

காளியம்மாளுக்காக
வைத்திருந்த அன்பை – தன்
திறந்து கிடக்கும்
விழிகளில் அப்படியே
நிறுத்திவிட்டுக் கிடந்தான்
கந்தப்பன்!

காளியம்மாள்..
அவளைச் சுற்றிக்
கடைவாயில்
காமம் வழியக்
கர்நாடகக் காடையர்கள்…

புழுதியில்
கிடந்த வெட்டரிவாளை
எடுக்கச்
சட்டென்று
குனிந்தவள்மேல்,
ஓநாய் விந்தில்
உற்பத்தியான அயோக்கியர்கள்!
நெருப்பின்
சதைகள் பிய்ந்தன..

இன்றும்
காவேரியின்
செத்த அலைகள்
கர்நாடக அணைக்கட்டுகளில்
மிதக்கின்றன!
காளியம்மாளின்
கடைசிக் கதறல் – தனது
கழுத்தை நெரிக்கும் என்று
கொல்லேகால் காற்று
தப்பித்து
ஓடுகிறது!

About The Author