நனவோடை (2)

சிட்டுக்குருவி மட்டுமில்லாம, எங்க வீட்டைச் சுத்தி சாம்பல் நிறத்துல நார்த்தங்குருவி, மைனா, மரங்கொத்திக்குருவி, தேன் சிட்டுன்னு இன்னும் சில பறவைகள் இருக்குதுங்க. கறுப்பு நிறத்துல வெள்ளை கோடு போட்டு ரொம்ப அழகா சின்னக்குருவி ஒன்னு இருக்கு. அதை போட்டோ எடுக்கணும்னு நானும் ரொம்ப நாளா முயற்சி பண்றேன். என் காமிராக்குள்ளே சிக்க மாட்டேன்னு போக்குக் காட்டுது அது. அதோட பேரு ராபின் குருவின்னு எதிர்வீட்டுப் பையன் சொன்னான். அதன் குரல் ரொம்ப இனிமையா இருக்குமாம். எங்க வீட்டுக்குப் பக்கத்தில எப்பவாவதுதான் வந்து உட்காரும். அப்ப வாயைத் திறந்து தன் குரலைக் காட்டாதான்னு நானும் எவ்ளோ நாளா ஆசையாக் காத்திருக்கேன். ஆனா ஒருநாள் கூட ஒனக்கு என் குரலைக் காட்ட மாட்டேன்னு, ரொம்பத்தான் பிகு பண்ணிக்குது அது!

அந்தப் பையன் கல்லூரிப் படிப்பை முடிச்சிட்டு இஞ்சீனியரா வெளியூர்ல வேலை பார்க்கிறான். இருபத்தைந்து வயசிருக்கும். இயற்கையைப் பாதுகாக்கிறதில, அவனுக்கிருக்கிற அக்கறையைப் பார்த்து நான் அசந்து போயிட்டேன். நண்பர்கள் புடை சூழ கடற்கரை, ஹோட்டல், சினிமான்னு சுத்தற வயசில, வீட்டுக்கு வர்ற வார விடுமுறை நாட்களில் கூட ஓய்வெடுக்காம, தெரு முழுக்க மரக்கன்று நடுறது, ஆடு மாடு திங்காம அதுக்கு முள்வேலி கட்டறது, அவங்க வீட்டைச் சுத்தி ஜன்னலுக்கு மேலே சுவரில மரத்தாலான பறவைக் கூடுகள் செஞ்சு வைக்கிறதுன்னு சத்தம் போடாம, விளம்பரம் ஏதும் பண்ணிக்காம சமுதாயத் தொண்டு செஞ்சிக்கிட்டிருக்கான் அவன்.

எங்கு பார்த்தாலும் காடுகள் அழிக்கப்பட்டு கான்கீரிட் காடுகளான பிறகு பறவைகள் கூடு கட்டுவதற்கு இது போல் நாமும் ஏதாவது செய்தால்தான் உண்டு. இல்லேன்னா எதிர்காலத்துல பறவையினமே சுத்தமா அழிஞ்சிடும். அந்தப் பையனைப் பார்த்த பிறகு, இளைஞர் சமுதாயத்தின் மீது எனக்குக் கொஞ்சமாக நம்பிக்கை ஏற்பட ஆரம்பிச்சிருக்கு.

காரில ஒரு முறை பயணம் போன போது வழியில மரத்துல தொங்கின தூக்கணாங்குருவி கூடு ஒண்ணு எடுத்துட்டு வந்து என் ஷோ கேசில வைச்சிருக்கேன். மனிதர்கள் படைக்கிற கலைப்பொருட்களை விட பல மடங்கு அதிக கலைத்திறமையோடு அற்புதமாக நெய்யப்பட்ட கூடு அது. தூக்கணாங்குருவி பற்றி ஒரு சுவையான செய்திய இப்போ சொல்றேன்.

ஆண் குருவிதான் கூட்டைக் கட்டுமாம். முக்கால்வாசி முடிஞ்சவுடனே பெண் குருவி உள்ளே வந்து உட்கார்ந்து பார்த்து ஓ.கே சொன்னால்தான் தொடர்ந்து கட்டி முடிக்குமாம். "ம்ஹூம்ம். வூடு கட்டியிருக்கிற லட்சணத்தைப் பாரு. ஒண்ணுத்துக்கு லாயக்கில்லே. நம்ம குழந்தைகளைப் பெத்து வளர்க்க இந்த இடம் எனக்குச் சரிப்படாது; நான் வரமாட்டேன் போ" என்று வீட்டு எஜமானி கோபித்துக்கொண்டு வெளியேறி விட்டால், அதை அப்படியே விட்டு விட்டுப் புதிதாகக் கட்டத் துவங்குமாம் ஆண் குருவி!

பாதியாகக் கட்டப்பட்ட நிலையில் பல கூடுகள் மரங்களில் தொங்குறதுக்கு இதுதான் காரணமாம்!
என் வீட்டுச் செடியில் ஒரு முறை டெய்லர் பறவை கட்டியிருந்த கூட்டைப் பார்த்தேன். ஓர் இலையைச் சுற்றி அழகாகப் பின்னப்பட்ட சிறிய கூடு. தையல்காரக் குருவி என்ற பெயர் அதற்கு சாலப் பொருத்தமே. ஊசி நூல் வைத்துக் கூட அவ்வளவு அழகாக நம்மால் பின்ன முடியாது!

இப்படி பலவகையான பறவைகளை அருகிலிருந்து உன்னிப்பாகக் கவனிக்கவும், அவற்றின் விநோத நடவடிக்கைகளைப் பற்றிப் படித்துத் தெரிந்து கொள்ளவும் எனக்குக் கொள்ளை ஆசை. ஆனால் அதற்கு அதிக நேரமும், பொறுமையும் தேவை!

அடுத்து, பயணம் போவதில் எனக்கு விருப்பம் அதிகம். பல நாடுகளுக்கும் பல ஊர்களுக்கும் சென்று புதுப்புது ஊர்களை, கட்டிடங்களைப் பார்த்து வர எனக்கு ஆசை அதிகம். இந்தியாவில் தெற்கே முழுவதுமாகச் சுற்றிவிட்டேன். வடக்கே டெல்லி வரை போய் வந்திருக்கிறேன். அதைத் தாண்டி பஞ்சாப், ஹரியானா, காஷ்மீர் போக ஆசை.

ஐரோப்பாவிற்கு 20 நாட்கள் சுற்றுப்பயணம் போய் வந்து விட்டேன். வாய்ப்பும் நேரமும் கிடைத்தால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, சிங்கப்பூர், மலேசியா இங்கெல்லாம் போய் வரவேண்டும்.

நம் தமிழகத்தில் ஊட்டியும், கொடைக்கானலும் எனக்குப் பிடித்த ஊர்கள். வணிகமயமாக்கல் என்ற பெயரில் ஊட்டியைச் சுற்றியிருந்த பெரும்பான்மை மரங்களை வெட்டி, அந்த இனிமையான இயற்கை சூழலைப் பெருமளவு மாசுபடுத்தி விட்டார்கள். ஏப்ரலில் ஊட்டியில் இருக்கும் போது நம்மூர் போல வெயில் சுள்ளென்று உடம்பில் உறைக்கிறது. கொடைக்கானலைக் கொஞ்சம் விட்டு வைத்திருக்கிறார்கள். ஊட்டியை முழுவதுமாகப் பாழ்படுத்தி வணிகமயமாக்கிய பிறகு கொடைக்கானலுக்கு வருவார்கள்.

நீலகிரி என்று பெயர் பெறக் காரணமாயிருந்த குறிஞ்சி மலர்களைக் காண வேண்டும் என நீண்ட நாட்களாக எனக்கு ஆசை. ஆனால் ஒரு முறை கூட அவை பூக்கும் ஆண்டுகளில் எனக்கு அங்கு போகும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அவற்றைத் தனியாக புகைப்படத்தில் பார்த்திருக்கிறேன். மலை முழுக்கப் பூத்து, நீலமலை போல் தோற்றமளிக்கும் காட்சியை நேரில் காண மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன். மனிதனின் வணிகமயமாக்கலில் இந்தக் குறிஞ்சி செடிகளும் பெருமளவு அழிந்து வருவதாகக் கேள்வி.

வெண்பனி மூடிய மலைப்பிரதேசம், அங்கு நிலவும் மிதமான குளிர், ஆங்காங்கே கண்ணுக்கும் மனதுக்கும் விருந்தளிக்கும் வெள்ளியருவிகள், சலசலக்கும் ஓடைகள், பசுமையான காடுகள், வித விதமான இசையை மீட்டி செவிகளைக் குளிர்விக்கும் பறவைகள், உடம்போடு ஒட்டி உறவாடி நம்மைத் தழுவிச் செல்லும் விண் மேகங்கள் என இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ எனக்கு மிகுந்த விருப்பம்.

அடுத்து, புத்தகங்கள் வாசிப்பதில் எனக்கு விருப்பம் அதிகம். கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என எதுவாக இருந்தாலும் படிப்பேன். சிறுகதை எழுத்தாளர்களில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், பிரபஞ்சன், அம்பை இவர்கள் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் சிலர்.

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ எனக்குப் பிடித்த சரித்திர நாவல். அதில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை எனக்கு ரொம்பப் பிடிக்கும். சா.கந்தசாமியின் ‘சாயாவனம்’ என்ற நாவலை சமீபத்தில் வாசித்தேன். மிகவும் நன்றாயிருந்தது. நேரம் கிடைத்தால் படிக்க வேண்டும் என ஒரு பெரிய லிஸ்ட் வைத்திருக்கிறேன். ஆங்கிலத்தில் சிலரது நாவல்களை மட்டுமே வாசித்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த அகதா கிறிஸ்டியின் மர்ம நாவல்கள் பலவற்றை வாசித்திருக்கிறேன்.

தமிழ் இலக்கியத்தில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. நிலாச்சாரலில் ‘சங்கம் காண்போம்’ என்ற தலைப்பில், சித்ரா பாலு அவர்கள் எழுதுவதை ரசித்துப் படிப்பேன். பாடலுக்கேற்ற சூழலை ஒரு கதை போல் விவரித்து, காட்சிகளைக் கண் முன் கொண்டுவந்து நிறுத்தி சங்கப் பாடல்களைச் சுவையாக விவரிப்பதில் கை தேர்ந்தவர் அவர்.
https://www.nilacharal.com/ocms/log/01241113.asp

நேரம் கிடைக்கும் போது பழந்தமிழ் இலக்கிய நூல்களைப் படித்து இன்பம் துய்க்க வேண்டும் என்று விருப்பம். புதுக் கவிதைகள் என்ற பெயரில் வாக்கியத்தை மடக்கி மடக்கி எழுதும் வசனக் கவிதைகளை எனக்குப் பிடிப்பதில்லை. ஒரு சில வரிகளில் சும்மா நச்சுன்னு மனசில படுற மாதிரி எழுதப்படும் கவிதைகளை நான் வெகுவாக ரசிப்பேன். குறியீட்டுக் கவிதைகள் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. ஏனெனில் எனக்கு ஒன்றும் புரியாது. வாசிப்புத் திறனுக்கேற்ப புரிந்தவர்கள் படித்து விட்டுப் போகட்டும் என்று விட்டுவிடுவேன்.

எனக்குப் பிடித்த ஒன்றிரண்டு கவிதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை.

"கந்தையானாலும் கசக்கிக் கட்டு’
சரி;
அது காயும் வரை எதைக் கட்டுவது?"

இதை எழுதியவர் பெயர் தெரியவில்லை. படித்தவுடன், உடுப்பதற்கு மாற்று உடை இல்லாதவனின் அவலம் எப்படி வெளிப்படுகிறது பார்த்தீர்களா?

கண்டவுடன் காதல் பற்றி ஒரு கவிதை:

"உன்னைக் கண்டேன்
என்னை மறந்தேன்
உன் தங்கையைக் கண்டேன்
உன்னை மறந்தேன்"

இதை எழுதியவர் பெயரும் தெரியவில்லை.

"அன்பு என்ற தலைப்பில்
மிகச்சிறிய கவிதை கேட்டார்கள்…
‘அம்மா’ என்றேன் உடனே!
கேட்டது அம்மாவாக இருந்தால்..?
இன்னும் சின்னதாகச் சொல்வேன்
‘நீ’ என்று."

விகடனில் முத்திரை கவிதையாக வெளிவந்தது இது. எழுதியவர் தாஜ்.

நிலா அவர்களின் கேள்வியைப் படித்தவுடன், மனதில் எனக்கே தெரியாமல் இதுவரை ஒளிந்திருந்த ஆசைகள், எண்ணங்கள் என்னை எழுது, உன்னை எழுது என்று போட்டி போட்டுக் கொண்டு வந்து வரிசையாக நின்றுவிட்டன. எனவே மனதில் சிறகடித்த ஆசைகள் எல்லாவற்றையும் எழுத ஆரம்பித்து இத்தனை பக்கங்களை நிரப்பி விட்டேன்.

இனி மேலும் தொடர்ந்தால் ‘தெரியாமல் இக்கேள்வியைத் கேட்டு தொலைத்தோமே,’ என்று நிலா அவர்கள் தம்மையே நொந்து கொள்ள நேரிடும் என்ற அச்சத்தால் இத்தோடு முடிக்கின்றேன். இதுவரை என் அறுவையைப் படித்த உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி ‘பொறுமையின் சிகரங்கள்’ என்ற பட்டத்தையும் வழங்கி விடைபெறுகின்றேன்.

நன்றி, வணக்கம்.

About The Author

2 Comments

  1. கீதா

    அற்புதம் கலையரசி அவர்களே… நீங்கள் எழுதியது எதுவும் அறுவை இல்லை. அத்தனையிலும் பிரதிபலிப்பது சமூக அக்கறையும் ஆதங்கமுமே.. உங்களைப் போலவும் நீங்கள் குறிப்பிட்ட அந்த இளைஞரைப் போலவும் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவு இயற்கையைப் பேண முன்வந்தால் போதுமே… ஜப்பானில் ஏற்பட்டுள்ள இயற்கைச் சீரழிவைப் பார்த்தபிறகும் உலக வெப்பமயமாதல் பற்றி கவலைப்படுவோர் எத்தனைப் பேர்? காடுகளை அழிப்பதையும் காற்றை மாசுபடுத்துவதையும் அக்க்றையுடன் தவிர்ப்பவர் எத்தனைப் பேர்?

    நல்ல சமுதாய அக்கறையுள்ள கட்டுரை படைத்தமைக்குப் பாராட்டுகள்.

  2. கலையரசி

    தங்களது மனம் நிறைந்த பாராட்டுக்கு மிகவும் நன்றி கீதா!

Comments are closed.