நாகதோஷம் விலக ஒரு கோயில்

மந்தாரமலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் வைத்து திருப்பாற்கடலைக் கடைந்த கதை பலருக்குத் தெரிந்திருக்கும். இந்த ஒரு சம்பவத்தினால் பல நல்ல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. திருமகள் உதயம், மஹாவிஷ்ணுவை மணந்து அவர் மார்பில் ஒன்றிப்போதல், தன்வந்திரி தோன்றி அமிருதகலசம் கொண்டுவருவது, அசுரன் ராகு, கேதுவாக மாறி நல்ல பதவியைஅடைவது போன்றவை ஏற்பட்டிருக்கின்றன.

மத்தால் கடையும் போது பாம்பு வலி தாங்காமல் விஷத்தைக் கக்கியது. அந்த விஷத்தின் தாக்கத்தினால் பலர் மடியாமலிருக்க பரமேஸ்வரன் ஆலகாலத்தை விழுங்குகிறார். பார்வதி தன் பதிக்கு விஷம் நெஞ்சின் கீழ் இறங்காமல் இருக்க அவர் நெஞ்சைப் பிடிக்கிறார். பரமேஸ்வரனும் நீலகண்டன் ஆகிறார்.

எப்போதும் தேவரும் அசுரரும் ஓரிடத்தில் சேர்ந்தால் அங்கு நிச்சயம் சண்டை வரும். இங்கும் வந்தது. தன்வந்திரி கொண்டுவந்த அமிருதத்தை உண்ணத்தான் இவர்களிடையே போட்டி. எல்லோரும் வரிசையாக அமர்ந்தால்தான் அமிருதம் கிடைக்கும் என தீர்மானிக்கப்பட்டு அதை வழங்க மஹாவிஷ்ணுவே மோகினி அவதாரமாக வந்து அமுதம் வழங்கப்போவதாக அறிவிக்கிறார். அந்த அமிருதம் உண்டவருக்கு அழிவே கிடையாது.

இங்குதான் வந்தது ஒரு மோசடி. விப்ரசித்தி, சிம்ஹிகை என்ற அசுர தம்பதிக்குப் பிறந்த ஸ்வர்பானு, தேவர்கள் வரிசைக்கு முதலில் அமிருதம் வழங்கத் தொடங்கியதைப் பார்த்து தானும் ஒரு தேவனாக மாறி மெள்ள சந்திரனுக்கும் சூரியனுக்கும் நடுவில் புகுந்தான். ஓசைப்படாமல் ஒரு கை அமிருதமும் வாங்கிக் உண்டான். இந்தக் கபட நாடகம் சூரிய – சந்திரனுக்குத் தெரிந்து மெள்ள கண்ஜாடையினால் அந்த அசுரனைக் காட்டிக் கொடுத்தனர். மோகினி உருவத்தில் இருந்த மஹாவிஷ்ணுவும் தன் கரண்டியினால் ஸ்வர்பானுவின் தலையில் ஒரு போடு போட்டார். அவன் உடல் துண்டிக்கப்பட்டது. ஆனால் அமிருதம் உண்டதால் சாகவில்லை. அவன் தலை பாம்பு உடல் கொண்ட ஒரு பாகமாகவும், உடல் ஐந்து தலை கொண்ட மற்றொரு பாகமாகவும் தோன்றி ராகு கேது ஆனது.

தனக்கு ஏற்பட்ட அவமானத்தினால் சினந்து வாசுகி நாகத்தைத் தூக்கி பூமியில் வீசி எறிந்து விட்டான். பின்னர் ராகுவும் கேதுவும் தாங்கள் செய்த முறையற்ற செயலுக்காக வருந்தி, ஈசனை நோக்கித் தவமிருந்து பின் கிரகப்பதவியும் பெற்றார்கள்.

பூலோகத்தில் விழுந்த வாசுகி தான் விஷம் கக்கியதால்தானே பரமேஸ்வரன் அதை விழுங்கும்படி ஆயிற்று என்று மனம் வருந்தி ஈசனை நோக்கி தவம் இருந்தது. சூரிய சந்திரர்கள் தாங்கள் அநாவசியமாக ஸ்வர்பானுவைக் காட்டிக் கொடுத்ததால்தானே அவன் இரண்டு பாகமாகப் பிரிந்தான் என்று வருந்தி, பூலோகத்தில் ஈசனை நோக்கி தவம் செய்ய நல்ல இடமொன்றைத் தேடி வந்தனர். இவர்கள் செய்த தவத்தில் மகிழ்ந்து ஈசன் தோன்றினார்.

வாசுகி ஈசனைக் கண்டு பரவசமாகி கைகூப்பி, "பரமேஸ்வரனே! நான் கக்கிய விஷத்தை விழுங்கும்படி தங்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்திவிட்டேன். என்னை மன்னியுங்கள்.. தயை புரியுங்கள்" என்றது.

"நான் உனக்கு அருள் புரிந்துவிட்டேன், என்ன வரம் வேண்டும் கேள், வாசுகி" என்று சிவன் வினவ, "நான் தவமிருந்த இந்த இடத்தில் நீங்கள் தங்கி கோயில் கொண்டு அருள்புரிந்து எல்லோருக்கும் சர்ப்ப தோஷத்தைப் போக்க யாசிக்கிறேன் ஈசனே" என்று வாசுகி கேட்டுக்கொண்டது. சிவனும் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார்.

சூரிய சந்திரனும் ஈசனைக் கண்டு வணங்கி தங்கள் செயலுக்குப் பிராயச்சித்தம் வேண்டினர். ஈசனும் மனம் மகிழ்ந்து அவர்கள் விருப்பங்களைக் கேட்டார்.

"பரமேசா! ஒருவர் ஜாதகத்தில் சூரியன் நீசமாகவோ அல்லது தோஷமாகவோ இருந்தால் இங்கு வந்து வணங்க அந்தத் தோஷங்கள் விலக வேண்டும்" என்றான் சூரியன்.

"பரமேஸ்வரனே! நான் ஸ்வர்னபானுவைக் காட்டிக் கொடுத்த தோஷம் விலக வேண்டும். தாங்கள் எங்களுக்குக் காட்சி கொடுத்த இந்த இடத்தில் கோயில் கொள்ளவேண்டும். தங்கள் பெயர் ‘சோமநாதேஸ்வரர்’ என்றும், அம்பாளின் பெயர் ‘சோமசுந்தரி’ எனவும் இருந்து இங்கு வருபவர்களுக்கெல்லாம் அருள் புரிய வேண்டும்" என்று சந்திரன் வேண்டிக்கொண்டான்.

"உங்கள் மூவரின் வேண்டுகோளையும் நான் பூர்த்தி செய்கிறேன். இங்கேயே கோயில் கொள்கிறேன்" என்று கூறியபடியே மறைகிறார் பரமேஸ்வரன்.

இந்த இடத்தின் பெயர் புட்டிரெட்டிப்பட்டி. தர்மபுரி கடத்தூர் வழியில் செல்ல சுமார் 5 கிமீ தூரத்தில் இந்தக் கோயில் உள்ளது. இங்கு வந்தால் சூரிய சந்திர தோஷம் நீங்குகிறது. சூரியனும், சந்திரனும் தனித்தனி சன்னதிகளில் அமர்ந்து அருள் புரிகின்றனர்.
ஒரு பெரிய பாம்புப் புற்றும் சிவலிங்கத்திற்கு அருகில் உள்ளது. இந்தப் புற்றில் பால் வார்த்து நாகபூஜை செய்ய, நாக தோஷங்கள் நீங்கி புத்திரபாக்கியம் உண்டாகிறது என்று மக்கள் நம்புகின்றனர்.

இங்கு அமர்ந்து அருள் புரியும் சோமநாதேஸ்வரரும் அன்னை சோமசுந்தரியும் எல்லோர் மனதையும் வசீகரிக்கின்றனர். இந்தக் கோயில் விஜயநகர் ஆட்சிக்காலத்தில் பெரிய ஆலயமாக எழுந்தது. முதலில் கணபதி இருக்க, பின் சூரியன், சந்திரன் இருந்து அருள்புரிகின்றனர். நவகிரங்கள் தம்பதி சமேதராக இருப்பது இங்கு விசேஷம். கால பைரவர் சன்னிதியும் உண்டு.

தேய்பிறை அஷ்டமியன்று விசேஷ பூஜை சிறப்பாக நடக்கும். ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி போன்ற நிகழ்வுகளை இங்கு மிகச்சிறப்பாக நடத்துகின்றனர்.

About The Author