நாணயம் – இசை விமர்சனம்

ஓஷன்ஸ் – 11 என்று ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதில் ஒரு ஆங்கில திரைப்படம் வந்தது. பார்த்திருக்கிறீர்களா? அதே படத்தை, 2001-ல் ஸ்டீவன் ஸோடன்பர்க் என்ற இயக்குனர் ஜார்ஜ் க்ளூனி, ப்ராட் பிட், மேட் டேமன் என்ற ஒரு கலக்கல் கூட்டணி கொண்டு ரீமேக் செய்தார். அதனைத் தொடர்ந்து, ஓஷன்ஸ் – 12, ஓஷன்ஸ் – 13 கூட வெளிவந்தன.

"தி இடாலியன் ஜாப்", "ரிஸர்வாயர் டாக்ஸ்" போன்ற பல படங்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள், பார்த்துமிருப்பீர்கள். இவையெல்லாம் தெரிந்ததென்றாலும், ஹிந்தியில் அமிதாப் நடித்து வெளிவந்த "ஆன்கேன்" என்ற அற்புதமான படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது சரி, இவற்றைப் பற்றி ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறேன்?

இவை எல்லாமே திருட்டைப் பற்றியும், திருடர்களைப் பற்றியும் எடுக்கப்பட்டப் படங்கள். ஹாலிவுட்டில் Heist திரைப்படங்கள் என்றொரு தனிப்பிரிவு கூட உண்டு. குரு, தர்மத்தின் தலைவன் போன்ற திரைப்படங்களில் பல அற்புதமான திருட்டுக் காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும், ஒரு முழு நீள "ஹீஸ்ட்" திரைப்படம் தமிழில் ஏனோ இன்னும் வரவில்லை. அந்தக் குறையைத் தீர்த்து வைப்பவதற்காகவே, எஸ்.பி.பாலசுப்ரமணியம், புதுமுகம் ஷக்தி எஸ். ராஜனின் இயக்கத்தில், "நாணயம்" என்னும் திரைப்படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். பிரசன்னா, சிபிராஜ், ராகினி, எஸ்.பி.பி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜேம்ஸ் வசந்தன். முதன் முறையாக ஒரு த்ரில்லர் படத்திற்கு இசையமைக்கின்றார், பாடல்கள் எப்படி அமைந்துள்ளன என்று பார்ப்போமா!

நாணயம்

அதிரடி எலெக்ட்ரிக் கிடார் மற்றும் ட்ரம்ஸோடு ஆரம்பிக்கிறது இப்பாடல். டாக்டர் கிருதயா வரிகளை எழுத, ரஞ்சித் மற்றும் குழுவினர் இப்பாடலைப் பாடியுள்ளார்கள். டைட்டில் ஸாங் போலிருக்கிறது, நாயகன் வெற்றி அடைந்த மகிழ்ச்சியில் பாடும் பாடல். மிகவும் சிறியதாக – இரண்டு நிமிடங்களுக்குள் முடிந்து விடுகின்றது.

நான் போகிறேன்

அழகிய புல்லாங்குழல் இசையுடன் ஆரம்பித்து, கே.எஸ். சித்ராவின் குரலோடு கலக்கின்றது இப்பாடல். ஜேம்ஸ் ஒரு அற்புதமான மெலடியைத் தந்திருக்கிறார், தாமரையின் அழகிய காதல் வரிகளில்! இது போன்ற எத்தனையோ மெட்டுகளை மனிதர் இத்தனை வருடங்களாக ஒளித்து வைத்திருக்கின்றார். சீக்கிரமே எஸ்.பி.பியும் சேர்ந்து கொள்ள, பாடலை கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது. மனிதருக்கு அறுபத்தைந்து வயதாம்! பொய்தானே! நாலைந்து வயது ஏற்றிச் சொல்லலாம், நாற்பது வயது அதிகமாக்கிச் சொல்கிறார்கள்!

ஆச ஆச

ரொம்பவும் வித்தியாசமான பாடல், மிகவும் வித்தியாசமான இசையமைப்பு, இன்னும் வித்தியாசமான வாத்தியங்களின் பிரயோகம். ஆனந்த விகடனோ, குமுதமோ "இப்பாடலில் எத்தனை முறை ஆசை என்ற வார்த்தை வருகின்றது?" என்று ஒரு போட்டி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கண்ணன், மேகா, ஷீபா, ரம்யா மற்றும் குழுவினர் பாடும் இப்பாடலை ஜேம்ஸ் வசந்தனே எழுதியுள்ளார். மனிதனுக்கு இருக்கும் அளவிலா ஆசைகளைப் புட்டு புட்டு வைக்கும் வரிகள். நீங்களும் கேளுங்கள் – வித்தியாசத்தை அனுபவியுங்கள்!

கா கா

மென்மையான ஸ்ட்ரிங்ஸ், அதனைத் தொடரும் ஆழமான செலோ என்று துடிப்பாக ஆரம்பிக்கிறது இந்தப் பாடல். பணம் கிடைத்த மகிழ்ச்சியில் நாயகன் பாடுகிறார். யார் யார் பாடுகிறார்கள் என்று கேட்க வேண்டாமோ? இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்தும், சிலம்பரசனும் இப்பாடலுக்கு குரல் கொடுத்திருக்கிறார்கள். வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிவர்மன். அதென்ன "கா கா"? பாடலுக்கு நடுவில் சந்தோஷத்தில் ஏதோ "கா கா" என்கிறார்கள், அவ்வளவுதான்!

கூட கூட

"ஆச ஆச", "கா கா" பாடல்களைத் தொடர்ந்து "கூட கூட" – எல்லாம் இரட்டை வார்த்தைகள்! இம்முறை நாயகி பாடும் ஸோலோ பாடல். யுகபாரதியின் வரிகளை சுனிதா சாரதி பாடியிருக்கின்றார். பாடலின் ஆரம்பத்திலேயே ஒரு ஜாஸ் வாசனை – பாடல் முழுவதும் அதே உணர்வு தொடர்கிறது. ட்ரம்பெட்டையும், கிடாரையும் அழகாக பயன்படுத்தியிருக்கிறார்கள். பாடலின் முடிவில் வயலினையும் பயன்படுத்தியிருக்கிறார் ஜேம்ஸ். நம் ரசிகர்களுக்கு இது போன்ற சப்தங்கள் புதிதாக இருக்கலாம்! இருந்தால் என்ன, கேட்போமே! பாடல் ஏதோ க்ளப் டான்ஸ் போல இருக்கிறது. இருந்தும் காதை அடைக்காமல், மிக மென்மையாகவே இருக்கிறது.

நாணயம் (மீண்டும்)

முதலில் கேட்ட அதே பாடல் இரண்டாம் முறை இசைத் தட்டில் இடம் பெறுகிறது. ஒரே வித்தியாசம், இம்முறை நாயகன் கொஞ்சம் சோகத்துடன் பாடுகின்றார். ஏதோ பிரச்சினை போல! மென்மையான கிடாருடன் துவங்கி, கொஞ்சம் கீஸ் சேர்த்து அதன் பிறகு பழைய எலெக்ட்ரிக் கிடாரையும், ட்ரம்ஸையும் வைத்தே பாட்டை அமைத்துவிட்டார் ஜேம்ஸ். இம்முறையும், டாக்டர் கிருதயா வரிகள் எழுத, ரஞ்சித் பாடியுள்ளார். "நாணயம் – அதனிடம் மானிடம்" – அது என்னவோ உண்மைதான்!

ஜேம்ஸ் வசந்தனிடமிருந்து மீண்டும் ஒரு நல்ல ஆல்பம். காதை அடைக்காத இசை, கேட்பதற்கினிக்கும் மெலடி மெட்டுகள். படத்திற்குத் தகுந்த பாடல்கள் அமைந்துவிட்டன. அடுத்து, அவரின் பின்னணி இசைத் திறனைப் பார்க்க வேண்டும்! இது ஒரு திரில்லர் படம் ஆயிற்றே – இசையால் படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கு டென்ஷன் ஏற்பட வேண்டுமே! அதிலும் கலக்குவாரா? படம் வெளிவந்த பிறகு திரையரங்கில் பார்த்துத் தெரிந்து கொள்வோம்!

About The Author