நிஜத்திற்கு ஒரே நிறம்

தற்செயலாகத்தான் கவனித்தேன். டாய்லட் கதவின் உள்பக்கம் பால்பாயிண்ட் பேனாவினால் கிறுக்கலான கையெழுத்து.

கல்பனா + ராமகிருஷ்ணன்… இன்னும் ஏதேதோ படங்கள்… வக்கிர மனதின் வெளிப்பாடுகள்.

குப்பென்று வியர்த்தது. என்ன இது… யாருடைய வேலை? எப்போது எழுதினான்? நல்லவேளை, அந்த நேரம் வேறு எவருமில்லை. இதை அழிக்க இயலுமா?

முயற்சித்தேன். முடியவில்லை, தொடரவும் தயக்கமாக இருந்தது. சட்டென்று கதவைத் திறந்து யாராவது வந்து விட்டால்…

வாய் கொப்பளித்தபோது மனதின் மொத்த எரிச்சலையும் நீருடன் உமிழ்ந்தேன்.

எத்தனை பேர் இதைப் பார்த்திருப்பார்கள்? எத்தனை நாட்களாய் இது இருக்கிறது?

சீட்டில் அமர்ந்தபோது நெஞ்சம் படபடத்தது.

"ஹாய்… ராம்!…" கல்பனாதான். சுவாதீனமாய் அறைக்குள் வந்தாள். பிற இருக்கைகளின் நபர்கள் என்மேல் விசேஷக் கவனம் செலுத்துவது போல ஒரு பிரமை.

"காலைலேர்ந்து ரெண்டு தடவை ஃபோன் பண்ணிட்டேன். எப்ப பார்… நீ ஸீட்டுல இல்லைன்னுதான் பதில்" எதிர் இருக்கையில் அமர்ந்தாள்.

இவளையா… எப்படி எழுத மனசு வந்தது! அவன் யாராக இருந்தாலும் மன்னிப்பே கிடையாது.

சோகையாய்ச் சிரித்தேன்.

"என்ன விஷயம்?"

"நத்திங்! எந்தப் பத்திரிகைக்கு அனுப்பலாம் அல்லது…"

கீழே குப்பைக் கூடையைக் காட்டி ‘விஷ்’ என்று சப்தித்தாள்.

"கொடுத்துட்டுப் போ… அப்புறம் சொல்றேன்."

"என்னது… ஜஸ்ட் எட்டே வரி… இப்பவே சொல்லு!"

"ஸாரி! அவசரமா ஒரு ரிப்போர்ட் ரெடி பண்ணனும். மத்தியானம் போர்டு மீட்டிங்."

_என் சமாளிப்பில் எனக்கே தடுமாறியது.

"ஓகே! அப்புறம் வரேன்."

"நான் ஃபோன் பண்றேனே…"

அப்ப என்ன சொல்றே… நான் இங்கே வர வேண்டாமா?"

"நோ… நோ… அதுக்காக இல்ல… இந்த ரிப்போர்ட் டீடெய்ல்ஸ்க்காக… ரெண்டு மூணு பேரைப் பார்க்கணும். அதர் டிபார்ட்மெண்ட் பீபிள்… ஸீட்ல இருக்க மாட்டேன். அதனாலதான்…"

குனிந்த தலை நிமிரவில்லை. என் மனத் தவிப்பு அவளுக்குப் புரிய நியாயமில்லை. சுற்றி எதிரே அமர்ந்திருக்கும் ஆண்களில் எத்தனை பேர் டாய்லட் கதவைப் பார்த்தவர்களோ அல்லது இதில் எவனோ ஒரு அற்பன்தான் அதை எழுதியவனோ… அவரவர் மனதில் என்ன மாதிரி நினைப்புகள் ஓடுகின்றதோ…

"ஹலோ! என்ன அப்படியே துங்கியாச்சு? டீப் திங்கிங்கா… வரட்டுமா?"

கல்பனா போய்விட்டாள்.

ராஸ்கல்! என் மனது பொருமியது. தூய்மையான ஒரு நட்பைக் கேவலமான எண்ணத்துடன் கொச்சைப்படுத்தி… தரம் தாழ்ந்து போய்விட்டானே!

என்ன நினைப்பாள்… இதைக் கேள்விப்பட்டால் எப்படித் துடித்துப் போவாள்!

இன்னொரு முறை முயற்சித்துப் பார்த்தேன். எப்போது டாய்லட் போனாலும் யாராவது இருந்தனர். அழுத்தமான கறை அது… அழிக்க முடியவில்லை.

எதிரே இருந்த கோப்பில் மனசு பதியவில்லை.

கல்பனாவுக்கும் எனக்கும் பனிரெண்டு வயது வித்தியாசம். அவள் அப்பா ரிடையர்ட் பேங்க் ஆபீசர். ஏதோ ஒரு வகையில் தூரத்து உறவு. ஒரு திருமணத்தில் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியதும், வீட்டிற்கு அழைத்தார். கல்பனாவை அறிமுகப்படுத்தினார்.

"உங்க கம்பெனிலதான் எக்சிகியூட்டிவ் போஸ்ட்டுக்கு டெஸ்ட் எழுதியிருக்கேன். இண்டர்வியூக்கு கார்டு வந்தது…"

"அப்படியா… என்னைக்கு இண்டர்வியூ?" என்றேன்.

சொன்னாள். இண்டர்வியூ போர்டில் ஒருவர் என் நண்பர். புகழ்ந்தார். நல்ல பர்ஃபாமன்ஸ். மெரிட்லயே கிடைச்சிடும்.

கிடைத்து விட்டது. வேறு செக்ஷன்.

என்னை எப்போதாவது ஒரு முறையாவது நேரில் பார்த்து விடுவாள். வீட்டில் மனைவியிடமும் அறிமுகப்படுத்தினேன். சுலபமாய் ஈஷிக் கொண்டாள். அரவிந்துக்கு அவள் ஸ்வீட் ஆண்ட்டி, எப்போதும் ஃபைவ் ஸ்டார் கொண்டு வருவதால்.

புதுக்கவிதைப் பைத்தியம். எதாவது கவிதைத் தொகுப்பு பேரைச் சொல்லி, படித்தேனா என்று தொணதொணப்பாள்.

ராமகிருஷ்ணர், விவேகானந்தர் என்று படித்துக் கொண்டிருந்தவன் அவளால் புதுக்கவிதைகளையும் ரசித்தேன்.

எங்கள் நட்பிற்கு இப்படி ஒரு களங்கம் பூசவும் சில ஆத்மாக்கள் இருக்கின்றன என்பதை உணரும்போது சுலபமாய் அதை ஜீரணிக்க முடியவில்லை.

இப்படிக் கூட மனிதர்கள் இருக்கிறார்களா… ஜுரமே வந்து விட்டது உள்ளூர.

"படிச்சுட்டியா…?"

கல்பனாதான். "நீங்க, வாங்க, போங்க" என்பதில் எனக்கும் நம்பிக்கையில்லை. அப்பாவையும் "வா, போ" என்றுதான் சொல்வேன் என்றாள், மிகச் சிறந்த நண்பராம்.

என்னையும் ஒருமையில் அழைக்கச் சம்மதித்தேன். வித்தியாசமாகவும் எனக்குத் தோன்றவில்லை. சராசரி மரியாதையை மீறி நிஜமான நேசம் வெளிப்படுகிற இடங்களில் வெறும் வார்த்தைகள் அர்த்தமிழந்து போகின்றன.

"இங்கேதானே வச்சேன்…?" என்று மேஜை அறையில் தேடினேன்.

"படிச்சியா?"

"இ… இல்லே… இதோ இப்ப படிச்சிட்டு உடனே சொல்றேன்."

"ஹேய் ராம்… என்னைப் பார்!"

நிமிர்ந்தேன். என்னைக் கூர்மையாய்ப் பார்த்தாள்.

"என்ன ஆச்சு உனக்கு? ஸம்திங் ராங் வித் யூ! ஏதாவது பொய் சொல்லாதே… எனக்கு நிஜம் மட்டும்தான் வேணும்."

குரலின் அழுத்தம் என்னைச் சொல்ல வைத்து விட்டது.

"என்னால தாங்க முடியலே… என்ன பேத்தல், யாரைப் போய்… யாரோட… ஷிட்!"
சிரித்தாள் கண்களில் நீர் கட்டிக்கொள்ள!

"இதுக்கா இப்படி அப்செட் ஆயிட்டே…?"

"என்ன சொல்றே… எவ்வளவு அபாண்டமா எழுதியிருக்கான்?"

"அதனால்தான் கேட்கறேன். இதுக்குப் போயா… உன்னோட ஒரு நாளை வீணாக்கினே, அர்த்தமற்ற மனக் குழப்பத்துல?"

என்னது சீரியஸ்னெஸ் புரியாமல் ஏதேதோ பேசுகிறாள். இளங்கன்று பயமறியாது போல… பின்விளைவுகள் உணராத தன்மையா?

"என்னம்மா இது அப்பா கேள்விப்பட்டா…?" என்று சொல்ல ஆரம்பித்தவனைத் தடுத்தாள்.

"அதுல… ஒரு பர்செண்ட்டாவது நிஜமிருக்கா?"

"இல்லே… ஆனா…"

"போதும்! துளிக்கூட உண்மையில்லாதது தானே அழிஞ்சுரும். நம் சிந்தனையால அதை வளர்க்க வேண்டிய அவசியமில்லே" என்றாள் திடமான குரலில்.

கவிதை மேஜை மீதே இருந்தது. அனிச்சையாய்ப் பிரித்தேன்.

கறுப்பு சிவப்பு
பச்சை மஞ்சள் என்று
பொய்களுக்குத்தான்
விதவிதமாய் வர்ணங்கள்.
நிஜத்திற்கு
ஒரே நிறம்தான்…
எப்போதும்
தூய வெண்மை.

About The Author

1 Comment

Comments are closed.