நினைவை இழந்தபோதும் தமிழை இழக்காதவன் (2)

பூட்டிய 
இரும்புக் கூட்டை உன் 
கவிதை தகர்த்தெறிந்தது… 
வெளியே பாய்ந்த 
வேங்கைகள் பார்வையில், பாய்ச்சலில் 
உன்னுடைய 
கோபம் இருந்தது!  
மாட்டியிருந்த 
தளைகள் சுதந்திரத்தின் 
நாட்டியச் சலங்கைகளாய் மாறின!

உள்ளே 
பால்களாய்க் குலுங்கின 
பகைமையின் பற்கள்! 
அசல் 
மனிதன் முகம் பார்த்தான்; 
நகலோ நான் என்று 
சூரியன் நினைத்தான்!  
புதியதோர் 
உலகின் பூபாள வேர்கள் 
பிரபஞ்சத்தைப் 
பிளந்து ஆழத்தில் இறங்கின.

என் 
தமிழனுக்குத் 
திருவிழாத் தேதிகள் நினைவிருக்கும்! 
திதி நாள், பிறந்த நாள்கள் நினைவிருக்கும்! 
திரும்பாத கடன்கள் 
நிச்சயம் நினைவிருக்கும்!  
தாய்மொழி தமிழ் மட்டும்தான் 
தவறியும் 
நினைவில் இருப்பதில்லை!

நீயோ 
நினைவை இழந்தபோதும் 
தமிழை இழக்காதவன்!  
உன் பாட்டாலும் 
ஒருவனுக்குத் தமிழ் உணர்ச்சி 
உண்டாக வில்லையெனில், அவன் 
சவப்பெட்டியின் 
சந்ததியாய்த்தான் இருப்பான்!  
நீ பாடினாய்… 
தமிழுக்கே தமிழ் உணர்ச்சி 
கொப்பளித்தது!

உள்ளங்கையில் 
நிலாவை வைத்துக்கொண்டு 
ஊரெல்லாம் திரிவான் தமிழன், 
நட்சத்திரப் பிச்சை கேட்டு! 
கதையில் எல்லாம் 
நகைப்பிற்கிடமான கதை, 
புதிய கலைகளைக் கற்பிக்கத் தமிழுக்கு 
அருகதை இல்லை என்னும் 
ஒரு கதைதான்!  
அரளி மொழிகள் எல்லாம் 
அறிவியல் அரங்கத்தில்  
தாமரைத் தமிழுக்குத் 
தாழடைக்கப்பட்ட தென்றால் 
உன் 
சினத்தால் அந்த 
நந்தவனமே வெந்துவிடாதா?

விரல்களை மடக்கிக் கொண்டவன் 
வீணையில் 
இசையில்லை என்கிறான்… 
விஞ்ஞானப் பிறப்புகள் 
வேண்டாம் என்றாளா தமிழ்த்தாய்?  
தமிழால் 
எல்லாம் முடியும்.. 
ஆனால் 
தமிழனால்தான் ஒன்றும் முடியாது! 
தமிழ் செய்த 
ஒரே ஒரு தவறு, 
அது 
தமிழனுக்குத் தாய் மொழியானதுதான்!

செந்தமிழைச்  
செழுந்தமிழாக்க வேண்டும் 
என்றவன் நீ!  
தமிழைப் பழித்தவள் தாய் என்றாலும் 
இமைப் போதும் 
தாழ்க்காது 
தமிழன்கை வேல் என்றாய்!  
தகுதியுள்ள 
தமிழனுக்குத் தாயின் மார்பு 
உன் கவிதைகள்!  
கங்கையை போல் 
காவிரியைப் போல் 
கருத்தூற வேண்டும் உள்ளத்தில் 
என்றாய்!  
கூவத்தின் இடுப்பில், ஒரு 
குழந்தையாய்! 
விரல் சூப்பிக் கொண்டிருந்தால் 
வெகுளாமல் என்ன செய்வாய்?

வெங்கொடுமைச் 
சாக்காட்டில் விளையாடட்டும் 
வெற்றித் தோள்கள் என்றாய் – 
அவற்றைப் 
படுத்துக் குறட்டைவிடச் 
சோம்பலுக்குப் 
பட்டாப் போட்டுக் கொடுத்தால் 
சூட்டுக் கோல் நீட்டாமல் 
சும்மாவா இருப்பாய்?

பூக்களுக்கு மணம் உண்டு; 
புனுகு சவ்வாதுக்கு மணம் உண்டு.. 
பூசு சந்தனம் பன்னீருக்கு 
மணம் உண்டு; 
அத்தர் கஸ்தூரிக்கும் மணம் உண்டு; 
ஆனால் 
தமிழுக்கு மணம் உண்டா? 
உண்டென்று சொன்னவன் நீ!  
வெங்குருதி மணம் 
எங்கள் தமிழ்மணம் என்றாய்!

விடுமுறை போடாது 
தொடரும் ஆற்றலுக்கு அல்லவா 
இரத்தம் என்று பெயர்? 
அழிந்த உயிர் அணுக்களை 
அகற்றிவிட்டுப் 
பிழிந்து புத்தணுக்களைப் 
பெய்வதல்லவா இரத்தம்? 
வீரியம் மிக்க 
இரத்தவாசம் – தமிழ்வாசம் 
என்று 
எவன் சொல்ல முடியும்.. உன்னைத் தவிர!

உன்  
இரத்தம் 
தமிழை உச்சரித்தது.. 
வீரம் செய்கின்ற மூச்சில் உன் 
கவிதைக் காடு கமழ்ந்தது! 
நாங்கள் 
உன்னை உச்சரிக்கிறோம்! 
எங்கள் 
வாழ்க்கை தமிழ் மணம் கமழட்டும்!

About The Author