நிலை திரும்பும் தேர் (1)

தெரு முட்டும் இடத்தில் இருக்கும் டீக் கடையை நோக்கியதுமே அங்கு நிற்பது கோகுல் நாயுடுதான் என்பது துல்லியமாகத் தெரிந்து போனது.

"சித்திரை மாசமில்ல, அதான்…" என்றான் ராமசாமி.

"அதுக்கின்னும் பத்து பன்னெண்டு நாள் கிடக்கே…?" என்றேன் நான்.

"ஆனாலும் மாசம் பொறந்தா கூட்டமும் கொண்டாட்டமும் ஆரம்பிச்சிடுமில்லே… இந்த சமயத்துலே நாலு காசு பார்த்தாத்தானே ஆச்சு…? அட்வான்சாப் புறப்பட்டு வந்திட்டாரு போலிருக்கு…"

டீக் கடையை நோக்கி நடந்தேன் நான்.

பராக்குப் பார்த்துக்கொண்டே டீ குடித்துக் கொண்டிருந்தார். எத்தனை தூரத்திலிருந்தாலும் அடையாளம் காட்டுவது அவரது மீசை. கொடுவாள் போன்று படர நீண்டு, பின் வளைந்து, இரு காதுப்புறமுள்ள கிருதாவோடு போய் அனாயாசமாய் சேர்ந்து நிற்கும் சற்றே கவனமின்றி சாதாரணமாய் நோக்கினோமெனில், மீசையும் கிருஷாவும் இணைந்தே வளர்ந்திருக்கிறதோ என்று தொன்றும். மூக்குக்கும், உதட்டுக்குமான இடைவெளி சற்று அதிகம். அதை மறைப்பதற்கும், அதனால் குறையும் பர்சனாலிட்டியை சமன் செய்வதற்கும் இப்படி வளர்த்திருந்தார் மீசையை. அறுப்பாரின்றி, மேச்சல் இல்லாமல் தன்னிச்சையாய் வளர்ந்து கிடக்கும் செழுமையான அருகம்புல் போல அங்கங்கே கம்பி கம்பியாய்ச் சுருண்டு கொண்டி கருகருவென்று மண்டிக் கிடக்கும்.

"நம்ம மீசை நாயுடு இருக்காரே…" என்றுதான் ஆரம்பிப்பார்கள் எல்லாரும். இரண்டு விதத்திலான அவரது தொழிலுக்கு வெவ்வேறு காலகட்டங்களில் அது ரொம்பவும் புயோகப்பட்டுப் போனது.

இந்தத் தொழிலுக்கான வேஷம் இதுதான் என்று நினைத்து வளர்த்தாரா அல்லது காலப்போக்கில் அவருக்கு இதுவே உருவ ஆகு பொருளாக நிலைத்துவிட்டதா என்று தெரியவில்லை.

நாயுடுவின் குலத்தொழில் வளையல் வியாபாரம். சிறு பிராயத்தில் சரஸ்வதி கடாக்ஷ்ம் சுத்தமாய் கிடைக்காமல் போக "கழுதை கிடக்கு விட்டுத்தள்ளு… இந்தா பிடி இந்த ஜதையை…" என்று இவர் கையில் வளையல் தொட்டிலை சர்ம்சர்மாய் மாட்டிவிட்டார் நாயுடுவின் தந்தை.

"நட பின்னாடி…" என்றார். அன்று பாதம் பின்பற்றியவர்தான். இன்று வரையும் தொடரத்தான் செய்கிறது. அண்டை அசலில் பூச்சூடல், வளைகாப்பு, சீமந்தம், கோயில் விழாக்கள் என்று வியாபாரம் ஆரம்பித்து, பக்கத்து ஊர் கோயில் திருவிழா, சந்தை என்று படிப்படியாக நீள ஆரம்பித்தது.

படிப்பில் உதவாக்கரை என்று பெயரெடுத்த நாயுடு அதற்கு நேர் மாறாக ரொம்பவும் புத்திசாலித்தனமாக வியாபாரத்தில் ஜெயித்து நின்றபோது தந்தை பெருமிதப்பட்டுப் போனார்.

தனக்கு இல்லாத சாமர்த்தியமும், ஆட்களை (பெண்டுகளை) வளைத்துப் போடும் வாய்ச் சாதுர்யமும், தன் பையனிடமிருப்பதை அறுதியிட்டு உணரத்தான் செய்தார். ஆரம்பத்தில் இப்படியெல்லாம் பேசக்கூடாது, நடந்து கொள்ளக்கூடாது என்றும் குலத் தொழிலை வளர்ப்பதோடு, குல தர்மத்தையும் மேம்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை கூறிய அவர் நாளாக ஆக அந்த மாதிரியான பேச்சும் நடவடிக்கைகளும் எதிராளிகளுக்கும் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்து கொண்டார்.
கோகுல் நாயுடு கோகுலத்தில் விளையாண்ட கிருஷ்ண பரமாத்மாவைப் போல் இல்லாவிட்டாலும், வயதும் அனுபவ முதிர்ச்சியும் ஒருங்கே சேர்ந்த வேளையில், ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து பெண்களுக்கு வளையல் விற்பதும், சூட்டி மகிழ்வதும் மற்ற எவராலும் ஈடு செய்ய முடியாத ஒன்று.

கல்யாணமாகாத பெண்களைப் பார்த்து, "உனக்கு என்னைக்கு தாயி நான் கங்கணங் கட்டி விட்ப்போறேன்…?" என்பார்.
"போங்க நயினா…" என்று வயசுப் பெண்கள் நாணிக் கோணுவது அவருக்கு ரொம்பவும் பிடித்தமான ஒன்று.

பட்டு வளையல், ஜரிகை வளையல், அரக்கு வளையல், ஸ்பிரிட் வளையல் என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் சொல்லி, பெண்களின் மனசைத் தட்டிப் பார்ப்பார். காலத்துக்கேத்த மாதிரியான ரசனையை திறம்பட உணருவதிலும், பெண்டுகளின் தேவைகளை நாடி பிடித்துப் பார்ப்பதிலும், ரொம்பவும் சமர்த்தர் நாயுடு.

ஸ்ரீதேவ், சிம்ரன், த்ரிஷா, நமீதா என்று பலவிதத்தில் நடிகைகளின் பெயர்களைச் சேர்த்தும், கில்லி, சந்திரமுகி, கஜினி என்று மயூரி, ஆராதனா, பாபி என்று பழைய பெயர்களையும் விடாமல் அவரது வளையல்களுக்குச் சொல்லி, அவற்றினைத் தனியே ஒன்றோடொன்று சேர்த்து ஜோடித்து, பெண்களின் கைக்கு அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வலிய இழுத்துப் போட்டுவிட்டு அழகு பார்ப்பார் நாயுடு. அவரது இத்தனை வருஷ சர்வீசில் ஒருமுறைகூட அவரை யாரும் தப்பாய்ப் பார்த்ததுமில்லை, கேட்டதுமில்லை. அவரது செயல்கள் ஒவ்வொன்றிலும் பாசமும், நேசமும் பொழியும் அப்படியே!

"இத்தோட உன்னை உன் மாமன் பார்த்தான்னா கையோட உன்னை அப்படியே கொத்திக்கிட்டுப் போயிடுவான்…." என்று கிளுகிளுப்பூட்டி, வளையல்களைச் சரம் சர்மாகத் தள்ளிவிட்டுவிடுவார் நாயுடு. பெண்டுகளின் கனவுகளையும், கற்பனைகளையும் பகுத்தறிந்து, அதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளுவதில் படு சமர்த்தர் அவர்.

ரொம்பவும் செழிப்பாகத்தான் திரிந்தார். காலம் ஒரு மனிதனை ஒரே மாதிரியாகவா விட்டு வைக்கிறது, சீராக ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கை திசை மாற ஆரம்பித்தது. கோணல் புத்திதான் அதற்குக் காரணம்.

சிறு வயது முதலே சினிமா என்றால் நாயுடுவுக்குத் தனி பாசம். காலில் கட்டிய சக்கரமாய் ஊர் சுற்றிக் கொண்டிருந்த காலத்தில் பக்கத்து ஊர்த் திருவிழா, வாராந்திரச் சந்தை என்று போன இடங்களில், அந்தந்த ஊரில் என்ன படம் ஓடுகிறது என்று முதலில் பார்த்து வைத்துக்கொள்வார். அதற்குத் தகுந்தாற்போல் வியாபாரத்தை ஜரூராக்கி பொழுது சாயும் வேளையிலேயே முடித்துக்கொண்டு, தியேட்டரில் போய் கொண்டரில் அமர்ந்து கொள்வார். பழகிய தியேட்டர்களில் காண்டீன் ஆட்களைச் சினேகம் பண்ணிக்கொண்டு படம் பார்ப்புக்கு இடையில் அவர்களோடு அளவளாவிக் களிப்பதும், மனதில் அன்று பார்த்த லாபத்தோடு பொழுதை நகர்த்துவதும் ஆன நிகழ்வுகளெல்லாம் சுகமான ராகங்கள் அவருக்கு.

கடைசி வண்டியை தவறவிட்டு ராத்திரி ரெண்டாம் ஆட்டமும் சேர்த்துப் பார்த்துவிட்டு விடிகாலை நாலு நாலரை வரை பஸ் ஸ்டாண்டிலேயே குந்தியிருந்து, பின் புறப்பட்டு ஊர் வந்த காலமும் உண்டு. உடம்பும், மனமும், எதற்கும் ஈடு கொடுத்த காலம் அது.

"நம்மூரிலே இல்லாத சினிமாவா? அதான் ரெண்டு கீத்துக் கொட்டகையை மேய்ஞ்சு விட்டிருக்கானே உங்களை மாதிரிச் சினிமாப் பைத்தியங்களுக்குன்னு…?

(தொடரும்)

(‘திரை விலகல்’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author