நீல நிற நிழல்கள் (11)

விட்டல் வியர்த்த முகமாக டாக்டர் சதுர்வேதியையே பார்க்க, அவர் ஆர்யாவை ஏறிட்டார்.

"கெஸ்ட்டை நான் உள்ளே கூட்டிட்டுப் போறேன். நீ போய் கூல்ட்ரிங்க்ஸுக்கு ஏற்பாடு பண்ணு ஆர்யா!"

ஆர்யா தலையசைத்துவிட்டு, இருட்டில் பழகிவிட்ட பார்வையோடு எதன் மீதும் மோதிக்கொள்ளாமால் லாபரட்டரியின் உட்புறத்தை நோக்கி நடக்க, சதுர்வேதி கையிலிருந்த ரிவால்வரை விட்டல் பக்கமாய்த் திருப்பினார்.

"ம்… வா!"

"ச… சார்!… எ… என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்க ச… சார்!…"

"பயப்படாதே வா!… நிஷாவைத்தானே நீ பார்க்க வந்தே? அவ உள்ளேதான் இருக்கா. வா பார்க்கலாம்!" சதுர்வேதி சிரித்துக்கொண்டே விட்டலை நோக்கி நகர முயன்ற விநாடி அவன் ‘திடும்’ என்று செயல்பட்டான்.

மேஜை மேல் இருந்த காலிக் கண்ணாடிக்குடுவை ஒன்றை எடுத்து டாக்டரின் தலையை நோக்கி எறிந்தான். விநாடிக்கும் குறைவான நேரத்தில் அதை உணர்ந்த சதுர்வேதி சட்டென்று குனிந்துகொள்ள, கண்ணாடிக்குடுவை ‘ச்சவிர்க்’ என்ற சத்தத்தோடு சுவரில் மோதிச் சில்லுச் சில்லாய்த் தரைபூராவும் பரவியது.

ஆர்யா ஓடி வந்தாள்.

"டா… டாக்டர்!…"

சதுர்வேதி சுதாரித்துக் கொள்வதற்குள் விட்டலின் கையில் ஒரு புன்சன் பர்னர் கிடைக்க, அதை எறிந்தான். புன்சன் பர்னர் தன் உலோக உடம்பால் சதுர்வேதியின் வலது தோள்பட்டையில் மோதிச் சின்னதாக ஒரு வலியை ஏற்படுத்திவிட்டுக் கீழே உருண்டது.

ஆர்யா கத்தினாள்.

"டாக்டர்! அவனை ஷூட் பண்ணுங்க!…"

"வேண்டாம் ஆர்யா!… எக்ஸ்பரிமெண்ட்டுக்கு அந்த எலி நமக்கு உயிரோடு வேணும்."

விட்டலின் கையில் இப்போது பூ ஜாடி மாதிரி ஏதோ ஒரு கனமான சங்கதி கிடைத்திருந்தது.

எறிந்தான்.

சதுர்வேதியும் ஆர்யாவும் நூலிழையில் ஒரு பெரிய பீரோவின் மறைவுக்குத் தாவ, அது ஒரு ஸ்டூலைச் சாய்த்துவிட்டு "புல்… புனார்" என்ற சத்தத்தோடு உருண்டது.

ஆர்யா இரைந்தாள். "டாக்டர்! இனி விட்டலைக் கட்டுப்படுத்த முடியாது. தப்பிக்கணுங்கிற மூர்க்க வெறி அவனுக்கு வந்துடுச்சு. இனியும் நீங்க ரிவால்வரைப் பயன்படுத்தாம இருந்தா இந்த இருட்டைப் பயன்படுத்தி அவனால தப்பிக்கவும் முடியும். அட்லீஸ்ட்  முழங்காலுக்குக் கீழேயாவது அவனை ஷூட் பண்ணுங்க!"

சதுர்வேதி வியர்வையில் வழுக்கிய ரிவால்வரைச் சரியானபடி ஏந்திக்கொண்டு இருட்டில் விட்டலைத் தேடினார்.

விட்டல் மூச்சிரைப்போடு, வீசியெறிவதற்கு வாகாய்ப் பொருட்களைத் தேடிக் கொண்டிருக்க, சதுர்வேதி அவனுடைய முழங்காலுக்குக் கீழே குறி பார்த்தார்.

ஒரு களிமண் ஜார் பறந்து வந்து நீளமேஜையின் மேல் விழுந்து நொறுங்கியது.

‘இனி இவனை விடக்கூடாது! முழங்காலுக்குக் கீழே தோட்டாவை அனுப்பியே ஆக வேண்டும்!’

ட்ரிக்கரை ஆட்காட்டி விரல் வளைத்தது.

விட்டலின் வலது முழங்கால் அந்த இருட்டில் வசமாகப் பார்வைக்குச் சிக்க, அ..ழு..த்..தி..னா..ர்.

சைலன்ஸர் பிஸ்டல் சத்தமில்லாமல் விசுவாசமாகத் தோட்டாவை அனுப்பிய விநாடி…

விட்டல் கீழே கிடந்த டெஸ்ட் ட்யூப் மர ஸ்டாண்டை எடுப்பதற்காகக் குனிய, முழங்காலுக்கு வைத்த குறி இதயத்தைத் தத்து எடுத்துக் கொண்டது.

"ஹச்!"

நெஞ்சில் கை வைத்து, வாய்பிளந்து பின்பக்கமாக மல்லாந்தான் விட்டல்.

"ஆர்யா! கெட்டது காரியம். தோட்டா மார்புல பாய்ஞ்சுடுச்சு!"

"டாக்டர்! டார்ச்சை என் கையில குடுங்க" டாக்டரின் கையிலிருந்த டார்ச்சை வாங்கி விட்டலின் பக்கமாய்த் திருப்பினாள்.

டார்ச் வெளிச்சம் ரத்தச் சகதியைக் காட்ட, விட்டல் கடைசி நிமிஷத் துடிப்புகளில் இருந்தான்.

"டாக்டர்! அவனைக் காப்பாற்ற முடியுமா?"

"பார்க்கலாம்."

வேக வேக நடையில் இருவரும் பக்கத்தில் போனார்கள். சதுர்வேதி மண்டியிட்டு உட்கார்ந்து விட்டலின் நாடித்துடிப்பை பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவன் தன் கடைசித் துடிப்பையும் நிறுத்திக் கொண்டு தலையை ஒரு பக்கமாய்ச் சாய்த்தான்.

சதுர்வேதி பெருமூச்சு விட்டார்.

"புவர் பாய்! இன்னிக்கு செத்தேயாகணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு வந்திருக்கான்."

"இப்ப என்ன பண்றது டாக்டர்?"

"பாடியை டிஸ்போஸ் பண்ணிட்டு நம் வேலையை நாம பார்க்க வேண்டியதுதான்."

"வெளியே இப்போ ராட்சஸ மழை டாக்டர். பாடியை எங்கே கொண்டுபோய் எப்படி டிஸ்போஸ் பண்றது?"

சதுர்வேதி சில விநாடிகள் யோசிப்பில் கரைத்துவிட்டுப் பின் ஆர்யாவிடம் நிமிர்ந்தார்.

"ஒரு காரியம் பண்ணு!"

"சொல்லுங்க டாக்டர்!"

"ஜோஷிக்கு போன் செய்து அவரோட காரை எடுத்துக்கிட்டு வரச்சொல்லு! பாடியை டிஸ்போஸ் பண்ற வேலையை அவர் தன்னோட ஆட்களை வெச்சுக் கச்சிதமாப் பண்ணிடுவார்."

ஆர்யா தலையசைத்துவிட்டு டார்ச்லைட் வெளிச்சத்தோடு டெலிபோன் இருந்த அறையை நோக்கிப் போனாள்.

சதுர்வேதி தன் உடம்பில் ததும்பிக் கொண்டிருந்த பதற்றத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்காக சிகரெட் பைப்பைப் பற்ற வைத்துக்கொண்டு அந்த இருட்டான அறையில் நடைபோட்டார்.

*******

டம்பின் அத்தனை அவயவங்களிலும் ஆச்சரியமும் சந்தோஷமும் கைகோத்துக் கொள்ள, இன்ஸ்பெக்டர் மல்ஹோத்ராவை ஒரு பரவசப் பார்வை பார்த்தான் ரமணி.

"இன்ஸ்பெக்டர்! நீங்க சொல்றது உண்மையா?"

"அது உண்மையா பொய்யான்னு நீங்க சொல்ற பதில்களை வெச்சுத்தான் முடிவு செய்ய முடியும். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்படி விபத்தில் இறந்துபோன நபருக்கு முன்வரிசைப் பற்களில் நாலு பற்கள், பொய்ப் பற்கள். உங்க பிரதர் ஹரிஹரனுக்குப் பொய்ப் பற்கள் உண்டா!"

"இல்லை சார்… அவனுக்கு நிஜப் பற்கள்தான்… பொய்ப் பற்கள் இல்லை."

"ஆர் யூ ஷ்யூர்?"

பக்கத்தில் இருந்த திவாகர் இப்போது குறுக்கிட்டுச் சொன்னான்: "ஐ ஷ்யூர் அபெளட் இட் சார்! ஹரிஹரன் எனக்கு பிரதர் இன் லாவாக இருந்தாலும் அந்த உறவுமுறையையும் மீறி எங்களுக்குள்ளே ஒரு நெருக்கமான சிநேகம் உண்டு. ஹரிஹரன் எந்த விஷயத்தையுமே என்கிட்டேயிருந்து மறைச்சதில்லை. ஹரிஹரனுக்குப் பொய்ப் பற்கள் இருக்க சாத்தியமே இல்லை. இறந்தது வேற யாரோ ஒரு நபராகத்தான் இருக்கணும்."

"என்னோட பார்வையும் இப்போ அந்தக் கோணத்துலதான் இருக்கு. லாரி விபத்தில் இறந்தது ஹரிஹரன் இல்லை என்கிற விஷயம் உறுதியானால், இன்னொரு சிக்கலான கேள்வி முளைக்கும்."

"இறந்தது யார் என்கிற கேள்விதானே சார்?"

"அது ரெண்டாம்பட்சக் கேள்வி. முதல் பட்சக் கேள்வி, இறந்தது ஹரிஹரன் இல்லையென்றால் அவர் இப்போது எங்கே?"

திவாகர் இன்ஸ்பெக்டரை ஏறிட்டான். "சார்! இந்த ஓட்டல் வாட்ச்மேன் ஸ்டேட்மெண்ட்படி ஹரிஹரன் ரோட்டை க்ராஸ் பண்ணும்போது லாரி மோதியிருக்கு… இல்லையா?"

"ஆமா…"

"அப்படீன்னா அந்த வாட்ச்மேனை விசாரிச்சுப் பார்த்தா ஏதாவது உண்மை தெரியலாமே!"

மையமாகத் தலையசைத்து ஆமோதித்த மல்ஹோத்ரா, ஓட்டல் ரிசப்ஷனிஸ்டிடம் விஷயத்தைச் சொல்ல, அடுத்த இரண்டாவது நிமிடம் மழைக்கோட்டு தரித்த வாட்ச்மேன் குழப்ப முகத்தோடு எதிரில் வந்து நின்றான். மல்ஹோத்ரா உற்றுப் பார்த்தபடிக் கேட்டார். இந்தியும் மராட்டியும் கலந்த பாஷை.

"நேத்து ராத்திரி ஓட்டலுக்கு முன்னாடி லாரி மோதி ஒருத்தர் இறந்துபோனபோது நீ ஸ்பாட்ல இருந்தியா?"

"ஆமா சார்!."

"விபத்தில் இறந்துபோன நபர் ஓட்டலிலிருந்து வெளியே வந்ததை நீ பார்த்தியா?"

"பார்த்தேன் சார்."

"முகம் ஞாபகம் இருக்கா?"

"இல்லே சார்."

"அந்த நபர் உன்கிட்ட என்ன கேட்டார்?"

"டாக்ஸி ஸ்டாண்டுக்கு எந்தப் பக்கம் வழின்னு கேட்டார். நான் கைகாட்டி வழி சொன்னதும் ரோட்டை க்ராஸ் பண்ணினார். ரோட்டை அவர் பாதி கடந்தபோது ஒரு லாரி வேகமா வந்தது. அவர் அலறிக்கிட்டே பின்பக்கம் ஓடி வர்றதுக்குள்ளே லாரி அவரைக் கீழே தள்ளி மேலே ஏறிடிச்சு."

ரமணி தன் கையில் வைத்திருந்த ஹரிஹரனின் ப்ரீஃப்கேஸைத் திறந்து பாஸ்போர்ட்டை எடுத்து அதில் ஒட்டப்பட்டிருந்த ஹரிஹரனின் போட்டோவை வாட்ச்மேனிடம் காட்டிக் கேட்டான்.

"நீ பார்த்தது இவரையா?"

வாட்ச்மேன் பார்த்துவிட்டு நெற்றியைச் சொறிந்தான்.

"ஞாபகம் இல்லே சார்!"

"போட்டோவை நல்லாப் பார்த்துட்டு சொல்லு!"

வாட்ச்மேன் தன் பார்வையை லேசராக்கிப் பார்த்து விட்டுத் தலையாட்டினான். "மன்னிக்கணும் சார்! எனக்கு முகம் ஞாபகத்துக்கு வரலை. அதுக்குக் காரணம், அந்த சமயத்துல மழை தூறிட்டிருந்தது. காம்பெளண்ட் கேட்ல ஒரு விளக்கு வேற எரியலை. ஆள் டிப்டாப்பா சஃபாரி டிரஸ்ல இருந்தது மட்டும் தெரிஞ்சது."

"உன்கிட்ட எந்த பாஷையில பேசினார்?"

"இந்தி."

மல்ஹோத்ரா ரமணியை ஏறிட்டார். "உங்க பிரதருக்கு இந்தி தெரியுமா?"

"தெரியும் சார்!"

இன்ஸ்பெக்டர் மேற்கொண்டு பேசும்முன் ஓட்டல் ரிசப்ஷனிஸ்ட் குரல் கொடுத்தார்.

"சார்! உங்களுக்கு போன். ஸ்டேஷனிலிருந்து எஸ்.ஐ மொபட்லால் பேசறார்."

போய் ரிஸீவரை வாங்கிப் பேசினார்.

"யெஸ்…"

மறுமுனையில் எஸ்.ஐ மோபட்லால் மராட்டியில் பேச ஆரம்பிக்க, மல்ஹோத்ராவின் முகம் விதவிதமாக ஆச்சரியப்பட்டது.

"ஈஸிட்…?!"

"…….."

"எப்போ…?"

"…….."

"ஆளை ஸ்டேஷனுக்குக் கொண்டு வந்திட்டீங்களா?"

"……."

"குட் ஜாப்! இப்ப புறப்பட்டு வர்றேன்" மல்ஹோத்ரா ரிஸீவரை வைத்துவிட்டு, ஒரு புன்னகையோடு ரமணியையும் திவாகரையும் ஏறிட்டார்.

"லாரி விபத்துல இறந்தது ஹரிஹரன் இல்லைங்கறது உறுதியாயிடுச்சு!"

"கடவுளே…!" சந்தோஷத்தில் கத்திய ரமணியின் கண்களில் நீர் கட்டிக் கொண்டது. இன்ஸ்பெக்டர் தொடர்ந்தார்:

"லாரி விபத்துல இறந்தவன் பேர் துவாரகநாத். இவன் ஒரு நூதனமான திருடன். கொஞ்சம் பணக்காரத்தனமா டிரஸ் பண்ணிக்கிட்டு உயர்தர ஓட்டல்களுக்குப் போய், யாரையோ பார்க்கிற மாதிரி பாவ்லா பண்ணி, ஓட்டல் சிப்பந்திகள் ஏமாந்த சமயமாகப் பார்த்துப் பூட்டியிருக்கிற அறையைக் கள்ளச்சாவி போட்டுத் திறந்து உள்ளே இருக்கிற காஸ்ட்லி சங்கதிகள் எல்லாத்தையும் அள்ளிட்டுப் போயிடறது வழக்கம். நேத்திக்கு ராத்திரி துவாரகநாத் தன் கூட்டாளியோட இந்த ஓட்டலுக்கு வந்திருக்கான். கூட்டாளி பேர் சீட்டல்.

பூட்டியிருந்த உங்க பிரதர் ஹரிஹரனோட ரூமை ரெண்டு பேரும் கள்ளச்சாவி போட்டுத் திறந்திருக்காங்க. அவங்க போட்டிருந்த டிரஸ் மழையில நனைஞ்சு அழுக்காயிட்டதாலே உங்க பிரதரோட டிரஸ்களை எடுத்து மாட்டிக்கிட்டு ரூம்ல இருந்த எல்லாத்தையும் சுருட்டிக்கிட்டு வெளியே வந்திருக்காங்க… சீட்டல்கிட்ட பழைய டிரஸ்ஸையும் கொஞ்சம் பணத்தையும் குடுத்து முன்னாடி அனுப்பிவிட்டுக் கொஞ்சநேரம் கழிச்சு துவாரகநாத் ப்ரீஃப்கேஸோடு வெளியே வந்திருக்கான். வாட்ச்மேன் சந்தேகப்பட்டுடக் கூடாதேங்கிறதுக்காக டாக்ஸி ஸ்டாண்டுக்கு வழி கேட்டு, ரோட்டை க்ராஸ் பண்ணும்போது லாரி மோதிச் செத்திருக்கான்."

மல்ஹோத்ரா சொல்லிக் கொண்டிருக்க, ரமணியின் இதயத்துக்குள் சந்தோஷம் ஸ்லோமோஷனில் அரும்பினாலும் ஒரு இம்சை உறுத்தியது.

"விபத்தில் இறந்தது துவாரகநாத் என்றால் ஹரிஹரன் இப்போது எங்கே? துவாரகநாத்தின் மணிக்கட்டில் அண்ணனின் வாட்ச் எப்படி வந்தது?"

(தொடரும்)

About The Author