நீல நிற நிழல்கள் (16)

மாசிலாமணியின் இதயம் ஒருமுறை உதைத்துக் கொண்டது. டெலிபோன் ஆபரேட்டர் பெண்ணைத் தவிப்பாய் ஏறிட்டார்.

"இதோ பாரம்மா! டாக்டரம்மாகிட்ட ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்திப் பேச வேண்டியிருக்கு. நீ ஏதாவது ஏற்பாடு பண்ணமுடியாதா?"

"ஸாரி சார்! நான் இந்த இடத்தை விட்டு அசையக் கூடாது. நீங்க லேபர் ரூமுக்குப் போய்க் கதவுக்கு முன்னாடி நில்லுங்க… ஏதாவது ஒரு காரணத்துக்காக நர்ஸ்கள் வெளியே வரலாம். அவங்ககிட்ட தகவலைச் சொல்லி அனுப்புங்க."

மாசிலாமணி வியர்த்த முகத்தைத் துடைத்துக் கொண்டே திலகத்திடம் வர… அவள் கலக்கமாய்க் கேட்டாள்.

"என்ன… டாக்டரம்மாகிட்ட பேசிட்டீங்களா?"

"இல்லை… லேபர் ரூம்லே இருக்கிற இன்டர்காம் ஏதோ ரிப்பேராம்."

"ஐயையோ! இப்ப என்னங்க பண்றது?"

"வா! லேபர் ரூமுக்கு முன்னாடி போய் நிப்போம். நர்ஸ் யாராவது வெளியே வந்தா தகவல் சொல்லி அனுப்புவோம்."

"ந… ந… நர்ஸ்… வ… வ… வரலைன்னா?"

"திலகம்! நீயும் பயப்பட்டு என்னையும் அதே பயத்துல சாகடிக்காதே… கீதாம்பரியோட உயிருக்குத்தான் டாக்டரம்மா முக்கியத்துவம் கொடுப்பாங்க."

"அது… ‘பெரிய உயிர் போனா பரவாயில்லை’ன்னு நீங்க உங்க அபிப்பிராயத்தைச் சொல்லாம இருந்திருந்தா, டாக்டரம்மா அந்த முடிவுக்குத்தான் போயிருப்பாங்க. ஹரிஹரன் உயிரோடு இல்லைங்கற விஷயம் டாக்டரம்மாவுக்குத் தெரிஞ்சுட்ட இந்த நிலைமையில் அவங்க முடிவு எப்படி வேணும்னாலும் திசை திரும்பலாமே?"

மாசிலாமணியின் இதயச் சுவர்களைப் பிடித்துக் கொண்டு ஒரு பய நண்டு ஊர்ந்தது.

"ஸாப்! அங்க பாருங்க…!" என்று பேரர் யாதவ் சொல்லிக் கைகாட்டிய பக்கம் மல்ஹோத்ரா, ரமணி, திவாகர் மூன்று பேருமே பார்வைகளைத் திருப்பினார்கள். யாதவின் கை, டிரஸ்ஸிங் டேபிளில் பொருத்தப்பட்டிருந்த நிலைக்கண்ணாடியைக் காட்டியது.

"கண்ணாடியில பாருங்க ஸாப்!"

மல்ஹோத்ரா பார்த்தார்.

ஒன்றும் புலப்படவில்லை. நெற்றியைச் சுருக்கிக்கொண்டு பேரரை ஏறிட்டார். "கண்ணாடியில் என்ன?"

"கண்ணாடியோட வலது பக்க ஓரத்தைப் பாருங்க ஸாப்! பேனாவால எழுதப்பட்ட ஏதோ நம்பர்ஸ் தெரியுது."

மல்ஹோத்ரா பார்த்துவிட்டுத் தலையசைத்தார்.

"எனக்குத் தெரியலையே!"

"இந்த இடத்துல நின்னு பாருங்க சார்! நீங்க நிக்கிற இடத்திலேருந்து ‘க்ளேர்’னாலே தெரியலை."

மல்ஹோத்ரா நகர்ந்து வந்து யாதவ் நின்ற இடத்திலிருந்து அந்த நிலைக்கண்ணாடியைப் பார்த்தார். அவருடைய புருவங்கள் முடிச்சிட்டுக் கொண்டன.

கண்ணாடியின் வலதுபக்கம், ஓரத்தில் பேனாவால் எழுதப்பட்ட அந்த எண்கள் கிறுக்கலாய்த் தெரிந்தன. நின்ற கோணத்தை மாற்றாமல் அப்படியே முன்நோக்கி நகர்ந்து போய் எண்களைப் பார்த்தார்.

மொத்தம் ஏழு எண்கள்.

3536759

ஆர்வத்தோடு ரமணியும் திவாகரும் பக்கத்தில் வந்தார்கள்.

"இது ஹரிஹரனோட கையெழுத்துதானான்னு பாருங்க ரமணி!"

ரமணி பார்த்துவிட்டுத் தலையாட்டினான்.

"ஆமாம் சார்! ஹரிஹரன் எழுதின மாதிரிதான் தெரியுது."

மல்ஹோத்ரா நாற்காலியில் உட்கார்ந்து பார்த்தார். நிலைக்கண்ணாடிக்கு எட்டும் தூரத்தில்தான் கை இருந்தது.

"ஸோ… உங்க ப்ரதர் ஹரிஹரன் இந்த போன் நம்பரை வாங்கத்தான் டைரக்டரி என்கொய்ரியில் ட்ரை பண்ணியிருக்கணும். இது யாரோட நம்பர்னு தெரிஞ்சா… கேஸ்ல வெளிச்சம் கிடைக்கும்."

ரமணியும் திவாகரும் அந்த டெலிபோன் எண்களை உச்சரித்துப் பார்த்துவிட்டுத் தலைகளை அசைத்தார்கள். ரமணி சொன்னான்:

"சார்! பம்பாய்ல எங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிளோ, ரிலேடிவ்ஸ் சர்க்கிளோ கிடையாதுன்னு ஏற்கனவே சொல்லிட்டோம். ஆனா, ஹரிஹரனுக்கு தனிப்பட்ட முறையில் ஃப்ரெண்ட்ஸ் இருந்திருக்கலாம்னு இப்போ தோணுது. எக்ஸ்சேஞ்சுக்கு போன் பண்ணிக் கேட்டா இந்த டெலிபோன் எண்ணுக்குரிய நபர் யார்னு தெரிஞ்சுடும். ஒருவேளை ஹரிஹரன் அந்த நபர் வீட்டுக்குப் போயிருக்கலாம்."

"இந்த மழையினால பம்பாய் டெலிபோன் நிர்வாகம் முடமாகியிருக்கு. இங்கிருந்து போன் பண்ண முடியாது. நேரடியா எக்ஸ்சேஞ்சுக்குப் போய்த் தகவலை வாங்கிக்கிட்டுச் செயல்படறது உத்தமம்."

அறையைப் பூட்டிக்கொண்டு வெளியே வந்தார்கள். மழை தன் கோபத்தைக் குறைத்துக் கொண்டு சிறு தூறலாக மாறியிருந்தது. ரிசப்ஷன் கெளண்ட்டரில் இருந்த பெண்ணிடம் மல்ஹோத்ரா கேட்டார்:

"டெலிபோன் லைன் வேலை செய்கிறதா?"

"இன்னும் இல்லை சார்!"

மூன்று பேரும் வேகநடை போட்டு போர்டிகோவில் காத்திருந்த போலீஸ் ஜீப்புக்கு வந்தார்கள்.

டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்.

டெலிகாம் செக்ஷன் சூப்பர்வைஸர் ஒருவர் தன் வழுக்கை மண்டையை இடதுகை விரல்களால் தடவிக் கொண்டே மல்ஹோத்ரா ஒரு துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்த எண்களை உதட்டுக்குள் முனகிவிட்டு, எதிரில் இருந்த இன்டர்காம் ரீஸீவரை எடுத்துக் காதுக்குக் கொடுத்து, ஒரு பட்டனைத் தட்டிவிட்டு மராட்டியில் யாரிடமோ விஷயத்தைச் சொல்ல… ஐந்து நிமிடத்துக்குள் விவரம் சூடாய்க் கிடைத்தது.

"நீங்க குறிச்சுக் கொடுத்த டெலிபோன் எண்ணுக்கு உரியவர் ஒரு லாயர். பேர் லட்சுமண்தாஸ். நந்தாநகர் எக்ஸ்டன்ஷன், செவன்த் க்ராஸ்ல வீடு. கதவு எண் 1529."

மல்ஹோத்ரா தன் சிறிய பாக்கெட் டைரியில் அந்த விவரங்களைக் குறித்துக் கொண்டு செக்ஷன் சூப்பர்வைஸரிடம் நிமிர்ந்தார்.

"இந்த டெலிபோன் எண்ணை உடனே தொடர்பு கொள்ளணும்… இங்கே வசதிப்படுமா?"

"மழை காரணமா இறந்து போயிருக்கு டெலிபோன் கனெக்ஷன். இப்போ கொஞ்சங்கொஞ்சமா உயிர் பிடிச்சிட்டிருக்கு. நீங்க இந்த டெலிபோனில் முயற்சி பண்ணிப் பாருங்க!" மேஜைமேல் நிறம் நிறமாய் இருந்த நான்கைந்து டெலிபோன்களில் ஒன்றைச் சுட்டிக் காட்டினார் செக்ஷன் சூப்பர்வைஸர்.

"தாங்க் யூ வெரிமச்!" மல்ஹோத்ரா அந்த போனைத் தொட்டு ரிஸீவரை எடுத்துக் காதுக்குத் தர, லைன் உயிரோடு இருப்பது தெரிந்தது.

டயலில் 3536759 எண்களைத் தட்ட, மறுமுனையில் உற்சாகமாய் ரிங் போயிற்று.

ரிஸீவர் எடுக்கப்படக் காத்திருந்தார்.

ஐந்தாவது கதறலில் எடுக்கப்பட்டது.

"ஹலோ…!" ஓர் ஆண்குரல்.

"ஹலோ!… லாயர் லட்சுமண்தாஸ்?"

"ஹோல்டிங்…"

மல்ஹோத்ரா ஆங்கிலத்தில் சம்பாஷணையைத் தொடர்ந்தார். "நான் போலீஸ் இன்ஸ்பெக்டர் மல்ஹோத்ரா. ஒரு கேஸ் சம்பந்தமாய் உங்களை விசாரிக்க வேண்டியுள்ளது…"

"எது சம்பந்தமாய்…?"

"உங்களுக்கு ஹரிஹரன் என்பவரைத் தெரியுமா?"

"ஹரிஹரன்…?"

"ஆமாம். சென்னையைச் சேர்ந்தவர்."

"அப்படி யாரையும் எனக்குத் தெரியாதே!"

"நன்றாக யோசித்துப் பாருங்கள் மிஸ்டர் லட்சுமண்தாஸ்! நேற்றைக்கு இரவு ஒன்பது மணிக்குமேல் உங்களுக்கு அவர் டெலிபோன் செய்து பேசியிருக்கிறார்."

"ஒரு நிமிஷம்! என் டைரியைப் பார்த்து விடுகிறேன். எனக்குத் தினசரி வரும் போன்கால்களை டைரியில் குறித்து வைப்பது என் வழக்கம். டைரியைப் பார்த்தால் புரிந்து விடும்."

மல்ஹோத்ரா லைனில் காத்திருக்க… முழுதாய் ஒரு நிமிஷம் கரைந்தபின் லட்சுமண்தாஸின் குரல் கேட்டது.

"நீங்கள் சொல்வது சரி இன்ஸ்பெக்டர். சென்னையைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் நேற்று இரவு டெலிபோனில் என்னிடம் பேசினார். அவருடைய கம்பெனியின் ப்ராடக்ட் மாதிரியே ஃபோகஸ் ப்ராடக்ட் ஒன்றை யாரோ தயாரித்து மார்க்கெட்டிங் செய்வதாகவும் அவர்மேல் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு என்னுடைய ஆலோசனையை விரும்புவதாகவும் சொன்னார். நான் அதற்கு ‘சட்டப்பூர்வமான நடவடிக்கை இது மாதிரியான காரியங்களுக்கு உபயோகப்படாது. கேஸ் கோர்ட் என்று போனால் நியாயம் கிடைக்கப் பத்துப் பதினைந்து வருஷகாலம் ஆகலாம். எனவே, மேற்படி பார்ட்டியை நேரில் பார்த்துப் பேசி, இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். பார்ட்டி வழிக்கு வராதபட்சத்தில், போலீஸுக்கு போய்ப் புகாரையும் பணத்தையும் கொடுத்துக் காரியத்தை முடித்துக்கொள்வது புத்திசாலித்தனம்’ என்று சொன்னேன். நான் சொன்னதை ஏற்றுக்கொண்டு அப்படியே செய்து பார்ப்பதாகச் சொன்னார்."

"அந்த ஃபோகஸ் பார்ட்டி யார் என்பதை உங்களிடம் சொன்னாரா?"

"சொல்லவில்லை."

"நீங்களும் கேட்கவில்லையா?"

"இல்லை."

"இந்த பம்பாயில் எவ்வளவோ லாயர்கள் இருக்கும்போது குறிப்பாக உங்களுக்கு போன் பண்ணவேண்டிய அவசியம் என்ன?"

"பொதுவாக ட்ரேட்மார்க் மோசடி, ஃபோகஸ் ப்ராடக்டர், போர்ஜரி… இது மாதிரியான கேஸ்களை எடுத்து நடத்துவது நான்தான். என்னுடைய பெயரை வேறு யாராவது அவருக்கு சிபாரிசு செய்திருக்கலாம். பை த பை… இப்போது அந்த ஹரிஹரனுக்கு என்ன பிரச்சனை? என்னிடம் எதற்காக விசாரணை?"

"ஹரிஹரனை நேற்று இரவிலிருந்து காணவில்லை. சென்னையிலிருந்து ஹரிஹரனைத் தேடி அவருடைய ப்ரதர் ரமணியும் ப்ரதர் இன் லா திவாகரும் இது சம்பந்தமாய் பம்பாய்க்கு வந்திருக்கிறார்கள். ஹரிஹரனைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் இப்போது நாங்கள் மூன்று பேரும் ஈடுபட்டிருக்கிறோம்."

"மை குட்னஸ்!"

"நீங்கள் சொன்னதை வைத்துப் பார்க்கும்போது, ஹரிஹரன் அந்த ஃபோகஸ் ப்ராடக்ட் பார்ட்டியைப் பார்ப்பதற்காகப் போயிருக்க வேண்டும். போன இடத்தில் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்திருக்க வேண்டும்."

"அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது."

"யோசித்துப் பாருங்கள் லாயர் சார்! ஹரிஹரன் உங்களுடன் போனில் பேசும்போது அந்த ஃபோகஸ் ப்ராடக்ட் பார்ட்டியின் பெயரைச் சொன்னாரா?"

"சொல்லவில்லை."

"சொல்லவில்லையென்று நிச்சயமாகத் தெரியுமா?"

"எனக்கு நன்றாய் ஞாபகம் இருக்கிறது. அவர் அந்தப் பார்ட்டியின் பெயரைக் கடைசிவரைக்கும் சொல்லவேயில்லை."

"உங்களை நாளைக்குக் காலையில் வந்து வீட்டில் பார்க்கலாமா?"

"தாராளமாக…"

மல்ஹோத்ரா ரிஸீவரை வைத்துவிட்டு ரமணியையும் திவாகரையும் ஏறிட்டபடி, ஹரிஹரனைப் பற்றி லட்சுமண்தாஸ் சொன்னதைச் சொல்லிவிட்டுக் கேட்டார்:

"மிஸ்டர் ரமணி! அந்த ஃபோகஸ் ப்ராடக்ட் பார்ட்டி யார்னு உங்களுக்குத் தெரியுமா?"

ரமணியின் விழிகள் வியப்புக்குப் போயின.

"சார்… இந்த விஷயம் எனக்குப் புதுசா இருக்கு! இந்த ஃபோகஸ் ப்ராடக்ட் விவாகாரத்தைப் பத்தி மெட்ராஸ்ல இருக்கிறவரை ஹரிஹரன் என்கிட்ட பேசவேயில்லை."

"அது என்ன ப்ராடக்ட்?"

"எலக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட காம்பனண்ட்ஸை நிறையத் தயாரிக்கிறோம். அதுல எதுன்னு தெரியலை சார்!"

"ஒருவேளை உங்க ஃபாதருக்கு இந்த ஃபோகஸ் ப்ராடக்ட் விவகாரம் தெரிஞ்சு இருக்கக்கூடும். போன் பண்ணிக் கேட்டுப் பாருங்களேன்!" ரமணியிடம் சொன்ன மல்ஹோத்ரா, செக்ஷன் சூப்பர்வைஸரிடம் திரும்பினார். பவ்யமான குரலில் கேட்டார்:

"மெட்ராஸுக்கு எஸ்.டீ.டி லைன் கிடைக்குமா? இது உடனடியாகப் பேசியாக வேண்டிய விஷயம். வெளியே டெலிபோன்ஸ் சரியில்லை."

"நோ ப்ராப்ளம்…"

பக்கத்து அறைக்குக் கூட்டிப்போய் மேஜையின்மேல் இருந்த டெலிபோனைக் காட்டினார். ரமணி ரிஸீவரை அள்ளி எடுத்துக்கொண்டு டயலில் எண்களைத் தட்டினான். விரல்களில் மெலிதாய் நடுக்கம்.

"பீப்… பீப்… பீப்…"

எஸ்.டீ.டி லைன் உயிர் பிடித்துக்கொள்ள…

மறுமுனையில் ரிங் போக ஆரம்பித்தது. ரமணியின் உடம்பு முழுவதும் பதற்ற ரத்தம் தறிகெட்டுப் பாய்ந்தது. ‘கடவுளே! உனக்கு நன்றி!’

‘அப்பா ரிஸீவரை எடுத்ததும் முதலில், லாரி விபத்தில் இறந்துபோனது ஹரிஹரன் இல்லை என்பதைச் சொல்ல வேண்டும். அம்மாவும் அப்பாவும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போவார்கள்.’

ரிங் போய்க்கொண்டே இருந்தது.

‘ரிஸீவரை எடுக்க ஏன் இவ்வளவு நேரம்?’

ரமணி காத்திருந்தான்.

மறுமுனையில் டெலிபோன் வாய் மூடாமல் அலறிக் கொண்டே இருக்க… ரமணியின் நெற்றிமேட்டில் ஒரு வியர்வைச் சரமும் மனசுக்குள் ஒரு கொத்து பயமும் முளைத்தது.

ர்யா காரை மிதமான வேகத்தில் விரட்டிக்கொண்டு போய் டாக்டர் சதுர்வேதியின் பங்களாவைத் தொட்டபோது மழை சுத்தமாய் நின்றிருந்தது. வானம் யாருக்கோ கட்டுப்பட்ட மாதிரி வாயைப் பொத்திக்கொள்ள… இடி முணுமுணுத்தது. மின்னல் ஜீரோவாட்ஸ் வெளிச்சம் காட்டிச் சோகையாய் வெட்டியது.

உட்பக்கமாய்ப் பூட்டியிருந்த காம்பெளண்ட் கேட்டுக்கு வெளியே காரை நிறுத்தி நீண்ட ஹார்ன் கொடுத்தாள் ஆர்யா.

பங்களா கரி இருட்டில் புதைந்து போயிருக்க… எல்லாத் திசைகளிலும் செதுக்கிய மாதிரி நிசப்தம். மின்சாரத்துக்கு இன்னமும் உயிர் வரவில்லை.

நிமிஷ நேரம் வரை பொறுத்திருந்து பார்த்துவிட்டு மீண்டும் கார் ஹாரனை அழுத்தினாள். அது நீளமாய்ப் பிளிறிவிட்டு ஓய்ந்தது.

விநாடிகள் வீழ்ந்துகொண்டிருக்க… எந்தவிதமான சலனத்தையும் காட்டாமல் பங்களா ஊமையாய் இருந்தது.

(தொடரும்)”

About The Author